Friday, March 13, 2009

பிரிந்து போன தோழிக்கு...

வெயிலுக்கு ஒதுங்கி நின்ற
பேருந்து குடையொன்றின் நிழலில்தான்
உன்னைக் கண்டேன்
கிளைகளற்ற மரத்தினைப்போல்
இரு தூண்களைக் கொண்டிருந்த
அந்தக் குடையின் கூரை
ஆங்காங்கே உடைந்து
வெயில் இலேசாக
வழிந்தபடியிருந்தது உன் மீது
நிற்க வைத்து விட்டுப்போன
நண்பனுக்காய் நானும்,
வெகுநேரமாக வராத
பேருந்திற்காக நீயும் காத்திருந்தோம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு
எனக்கொரு பெண்ணின் அருகாமையை
அறிமுகப்படுத்தி வைத்தாய் நீ
எனக்கென் பிரிந்து போன
தோழியின் நினைவு...
அறியாத தாய்மையை
சிலகாலம் உணர்த்திப்
பிரிந்த அவளும்
நின்றிருக்கக்கூடும் எங்கேனும்
இன்னமும் வரவில்லை நண்பன்
நின்று கொண்டிருக்கிறேன்
உனக்கான பேருந்தொன்றில்
நீ செல்வதைப் பார்த்து.



-பொன். வாசுதேவன்

"மவ்னம்" ஜூன் 1997 இதழில் வெளியானது.

3 comments:

  1. //எனக்கென் பிரிந்து போன
    தோழியின் நினைவு...
    அறியாத தாய்மையை
    சிலகாலம் உணர்த்திப்
    பிரிந்த அவளும்
    நின்றிருக்கக்கூடும் எங்கேனும்//

    ஒரே வார்த்தையில் சொல்வதானால்.. அற்புதம் நண்பா.. நட்பை உணர்ந்த யாருக்கும் இந்த கவிதை பிடிக்கும்.. எனக்கு என் தோழர்களின் நினைவை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்.. ரொம்ப நன்றி...

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, கார்த்தி & அப்பாவித்தமிழன்.

    ReplyDelete
  3. Hi,

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

    இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    nTamil குழுவிநர்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname