நேரில் கண்டறியாதவை மீதான ஆர்வமும், வசீகரமும் எப்போதும் மனித மனங்களை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. தனி மனவோட்டங்களின் போக்கு குறித்த ஆர்வத்தையே வரலாற்றுப் நிஜங்களும், புனைவுகளும் ஏற்படுத்துகின்றன.
கடந்து சென்ற வாழ்வையும், அதன் வேதனைகளையும், சந்தோஷங்களையும் உணர்கின்ற வாய்ப்பினை தருகின்றன தொன்மை சார்ந்த வரலாற்றுப் பதிவுகள். இப்பதிவுகளில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று ஆராய விருப்பமற்று அதன் யதார்த்தப் புள்ளிகளை தாங்கிச்செல்லும் நம் மனது அதன் மீதான லயிப்பில் தன்னையிழக்கிறது. புனைவுகளும், புராணங்களும் நம்முள் நிகழ்த்தும் உளமாற்றங்கள் ஏராளம்.
எளிய மக்களிடையே பிறந்தவராகவும், சமகாலத்து மக்களிடையே புழங்கி மதத்தின் மீதான கேள்விகளை எழுப்பி, மக்களுக்கெதிரான அதே சமயம் வழக்கத்திலிருந்த பொதுப்போக்கினை மறுதலித்து ஒரு புரட்சியாளராகவும், புதிரானவராகவும் கருதப்பட்ட இயேசு என்பரின் வாழ்வைக் குறித்தான ஒரு அறிமுக நூலாக ‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்‘ புத்தகம் வெளியாகியுள்ளது.
நம்மில் பலருக்கும் இயேசு என்றால் கிறித்தவ மதமும், அவர்களின் விடாமுயற்சியுடனான மதப்பிரசாரமும், கல்வி சார்ந்த் அவர்களின் சீரிய பணிகளும், கிறித்தவத்தின் உலகளாவிய பரவலாக்கமும்தான் முதல் நினைவுக்கு வருகிறது.
புதியதாக எந்த மதத்தையும் உருவாக்கியவர் அல்லர், எந்த மதத்தையும் ஸ்தாபிக்கவில்லை இயேசு. தான் வாழ்ந்த காலத்தில் மத ரீதியாக வழக்கத்தில் இருந்த பல நிகழ்வுகளின் மீதான தனது மாற்றுக்கருத்தை வெளிப்படையாக தெரிவித்து மதகுருக்களிடம் எதிர்ப்பையும், விரோதத்தையும் பலனாகப் பெற்றவர்தான் இயேசு.
வரலாற்றின் ஏடுகளில் சமய சீர்திருத்தவாதியாக பதிவு செய்யப்பட வேண்டிய இயேசு அவர் மீது பெரும்பான்மை யூத மக்களுக்கு ஏற்பட்ட அன்புணர்வின் காரணமாக அவரே கடவுளாகவும், மதத்தலைவராகவும், வழிபாட்டு நாயகனாகவும் ஆக்கப்பட்டார்.
யூத மதத்தில் அக்காலத்தில் நிலவிய மூடப்பழக்கங்கள் குறித்த தனது கருத்துக்களை எதிர்த்தவர் இயேசு. ‘மனிதர்கள் மீதான அன்பும் நேசமும் மட்டுமே உண்மையான இறையியல்‘ என்று கூறிய இயேசுவுக்கு கிடைத்த பரிசே சிலுவையில் அறையப்பட்டு உயிரை இழக்கச் செய்தது.
கிறித்தவ மதத்திற்கே உரியவராகவும், மதத்தலைவராகவும், நம்மால் அறியப்பட்ட இயேசுவின் வாழ்க்கை பற்றிய எளிமையான புரிதலை இந்நூல் அளிக்கிறது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. இயேசுவின் போதனைகளின்பால் ஏற்பட்ட ஈர்ப்பினால் அவரது வழித்தோன்றல்கள் காலம் காலமாக மேன்மேலும் உருகி, புனைந்து வந்த கருத்துக்களே இன்று நாம் காண்பவை.
இயேசு என்றொருவர் இருந்தார் என்பதும், அவரது வாழ்நாளில் தான் சார்ந்திருந்த மதத்தின் மீதான புதிய கருத்தாக்கங்களை உருவாக்கிய மதச்சீரமைப்பாளர் என்பதும் மறுக்கவியலா உண்மை. இயேசு என்ற மனிதரை மதம் சார்ந்த ஒருவராக அறிந்து கொள்ளாமல் மனிதர்களிடையே பிறந்து மனிதத்திற்காக உயிர் நீத்த ஒரு மனிதர் என்பதை இப்புத்தகம் அறியச்செய்கிறது.
‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்‘
ஆசிரியர் : சேவியர்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரு.100/-