பொன்.வாசுதேவன் கவிதைகள்

பொம்மை விளையாட்டு
பிசைந்தெடுத்து வழியவிடுவாய்
அன்பற்ற இறுக்கத்தை
இரைச்சல்களற்று
எல்லாம் உறங்கும்
இரவின் விளிம்பில் அமர்ந்து
காத்திருந்த நீ
என் மேல்
இப்போதும் ஒரு கணம்
படரும் ஓசையெனக்கு
கேட்கிறது சுவாசமாய்
சருமம் கருக
நிரப்பவியலா பள்ளத்தாக்கில்
உருகி வழிந்து ஓயும் ஊற்றாய்
களைத்துறங்குகிறாய்
ஒரு சொல் இல்லை
மொழிகளுக்கப்பாற்பட்டு அதிரும் ஓசை
உள் பேசும் நான்
மின்னலாய்த் தோன்றுமொரு யோசனை
பாய்ந்து வெளிப்பட்டாலென்ன
அறுந்து சுருண்டு
கவிழ்ந்து படுக்கும் நான்
களைத்துக் குழந்தையாகியுறங்கும்
உன் முதுகு பார்த்து.

மிதந்து கொண்டேயிருக்கும் வலை
அடர்மழை மௌனமாய்
யாருக்கும் தெரியாமல்
இறங்கும் வேளையில்
உயிர்ச்சுழி தேடிப்பரவுகிறது
நீ வீசிய வலை
விழி தீண்டும் தூரம் அறியாது
அப்பிக்கிடக்கிறது இருள்
வெடிக்காத இசையின்
அரூப ஒலியாய்
காத்திருக்கிறது
வலை வருடிய கைகள்
தனியுச்சியில் புதையுண்டு
தருணம் நோக்கி
காத்திருக்கிறேன்
வலைக்குள் உன்னை இருத்த.

முலைச்சூடு
உள்நோக்கிப் பீறிடும்
ஊற்றாய்
பெருகி வழிகிறதுன் வாசனை
மழை பிசைந்த
உன் தலையினூடாக
பரவுகிறதென் முத்தங்கள்
மூச்சுக் காற்றின் வெப்பம் விரிய
ஓசையின்றிப் பிரிந்திருந்த
உன் இரவிக்கையின்
தையல் இடைவெளியில்
கசிந்து வழிகிறது
உன் வெளிர் மார்பு
கண் மூடி வாய் புதைந்து
தாழ்மையோடு யாசிக்கிறேன்
உன் முலைகளின் வாசலில்
வேண்டி வேண்டி
அழுதும் ஆனந்தமாயும்
என் வாயுறுஞ்சிய
தாயின் முலைச்சூடுகளை
மீட்டுப்பெற வேண்டி.

வலைவீசி தேவதை
கண் முன் ஒரு தேவதை
அலைகளை
சேகரித்து வீசுகிறாள்
முகத்தின் மீது
கழுவிச் சலிக்கின்றன அலைகள்
அலை சூடிய முகத்தோடு
கடற்கரையில் செல்கிறேன்
இப்போது
வேறொரு தேவதை
கடற்காற்றில் வலை படபடக்க
வீசுகிறாள்
தப்பி ஒளிகிறேன் கடலுக்குள்
அலையையும்
வலையையும்
கடந்து முழ்கித் தேடுகிறேன்
மற்றுமொரு தேவதையை.
(காயத்ரிக்கு)
‘புதிய பார்வை‘ ஆகஸ்ட் 16-31, 2007 இதழில் வெளியானது.