பல்வேறு மதங்கள் மனித மனங்களை ஆளுகையில் வைத்திருந்தாலும் மதப்புனைவுகளுக்கிடையேயான ஒற்றுமை விசித்திரமானது... வியப்புக்குரியதும்கூட. சமுக மானுடவியல் ஆய்வாளர்கள் மதங்களை ஒப்பு நோக்கி ஆய்வு செய்து, ஒரே வித நிகழ்வுகள் பரவலாகவும், பொதுவாகவும் மதங்களில் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். கி.பி.1783-ம் ஆண்டு சியாம் (இன்றைய தாய்லாந்து) நாட்டினை ஆண்ட மன்னர் முதலாவது ராமா என்றழைக்கப்பட்டார். தாய்லாந்தில் ஆளும் மன்னரின் பெயர் ராமா -1, 2, 3, என தொடர்கிறது. பெரும்பான்மை மக்களள் லிங்கம் போன்ற வடிவை கடவுளாக இன்றும் வழிபட்டு வருவதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். தாய்லாந்தின் அண்மையில் உள்ள கம்போடியாவின் கட்டிடக்கலை உன்னதங்களாக விளங்கும் கோயில்கள் இந்து மதம் சார்ந்து கட்டப்பட்டு, மதங்களின் எல்லை அளப்பிட முடியாத தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. அக்காலத்தில் ‘பௌங் பேங் பெஃய்‘ என்ற பௌத்த வேளாண் பண்டிகையின் போது நம் தீபாவளி பண்டிகை போல வாண வேடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்பட்டுள்ளது.
1854-ல் நைல் நதிப்படுகையில் கண்டெடுக்கப்பட்ட சிலை இரண்டாம் ராம்செஸ் என்ற மன்னருடையது என அறியப்பட்டுள்ளது. ஆதி நாட்களில் ‘ராமபிதிகஸ்‘ என்றொரு மனிதக் குரங்கினம் இருந்துள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருந்த இக்குரங்கினத்தின் படிவங்கள் வட இந்தியாவில் சிவாலிக் என்ற இடத்தில் 1910-ல் கண்டறியப்பட்டுள்ளது. மதங்களுக்கென உருவாக்கப்பட்ட வேதங்கள் பலவானாலும் அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
மொழியியல் ஆய்வாளர் கருத்துப்படி, ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்று தெரிகிறது. ‘ஆர்ய‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு இந்து மற்றும் ஈரானிய மக்கள் என்ற பொருள் உண்டு. ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், (ஆய்வுச்செய்தி – துருக்கியில் வேதகால நாகரீகம்)
ஆபிரகாம் – இப்ராகிம், யாகோப் – யூசூப் என கிறித்தவ, முஸ்லிம் மதங்களின் பெயர்களின் ஒற்றுமை நாம் அறிந்ததுதான்.
அதே போல ஏசுவிற்கும், கிருஷ்ணருக்கும் பல வியப்பான ஒற்றுமைகள் உண்டு. ஏசுநாதர் – கிருஷ்ணர் இருவருமே ஆட்டிடையர் குலத்தில் தோன்றியவர்கள். இவர்கள் இருவரின் பிறப்பின் போதும் வானத்தில் நட்சத்திரம் விசேஷமாக தோன்றியுள்ளன. ஏசுவும், வாசுதேவனும் இளமையில் தர்க்க சாஸ்திரத்தில் சிறந்து இருந்திருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக கம்சன் வாசுதேவனை கொல்ல முயற்சித்தது போலவே, ஏரோது மன்னன் முன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொல்ல கட்டளையிட்டான். யமுனை நதி இரண்டாகப் பிரிந்து வாசுதேவனுக்கு வழி விட்டது போலவே, செங்கடல் பிளந்து மோசேயிற்கு வழிவிட்டது. ஒரு பருக்கை சோறுண்டு பல முனிவர்களின் பசியாற்றிய கண்ணனின் லீலை போல, ஒரு அப்பத்தை ஆயிரமாக பல்கச் செய்து வழங்கிய அற்புதத்தை ஏசுநாதரும் செய்துள்ளார்.
இதெல்லாம் சரி... பெண்களிடம் கண்ணன் குறும்பு செய்ததை போல ஏசுநாதர் செய்திருக்கிறாரா..? என்று கேள்வியெழுப்புபவர்களுக்கும் பதில் உள்ளது. ஏசுநாதரின் இளம் பருவ வரலாறு நமக்கு கிடைக்கவில்லை என்பதுதான் அது. வீட்டை விட்டு மலை வனப்பகுதிக்கு வெளியேறும் ஏசுநாதர் அதன் பிறகு என்னவானார் என்ற தகவல் இன்றி, தேவகுமாரனாக மட்டுமே நமக்கு அறியக் கிடைக்கிறார்.
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தாவரங்களின் உரையாடல்‘ தொகுப்பில் வெளியாகியிருக்கும் ‘நட்சத்திரங்களோடு சூதாடுபவர்கள்‘ மிக அருமையான ஒரு கதை. தற்போது அதை மீண்டும் படித்த போது தோன்றிய எண்ணம்தான் இந்தப் பதிவு.
இது பல சிறு குறிப்புகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. மேலதிக தகவல்கள் இருப்பின் நீங்களும் விரிவான பதிவிடலாம்.
- பொன். வாசுதேவன்