பூக்காத செடிகள்
ஏதாவது பேசு,
துவைக்காத சட்டை, சுவைக்காத குழம்பு
இவற்றோடு இன்னும்
இலக்கியம், சினிமா என்றில்லாவிடினும்
இன்று கண்ட புதியமுகம், எதிர்பாராத
சம்பவம், வாகன நகர்தலில்
வடிவழகு கெடாத கோலம்,
வந்து போன வியாபாரத் தந்திரம்,
பூக்காத செடியின் யோசனை,
புதிரான புத்தக வாசனை என்று
சொல்லேன் எதையாவது.
தினங்களின் கனத்தில்
நசுங்கிய ஞாபகங்களுக்கு
மூச்சுத் தா.
ஜன்னல் வெயிலின் பொன்தூசியையும்
நீர்க்கிண்ணத்திலாடும் நிலவையும்
அள்ள முனையும் எனை நோக்கி
முறுவல் செய்;
அல்லது முட்டாளென்று சொல்.
அடிவயிற்றுக் கருவின் அசைவை
அறிவிக்க உன்கை பற்றிப் பதித்தபோது
அவசரமாய் உதறிப் போனாயே,
அதற்கு வருத்தம் தெரிவி உடனடியாக.
அவிழ்த்து எறியுமுன்,
புடவையடுக்குள் புதைந்த பூக்களையாவது
ரசித்துக் கவனி.
அடுத்தமுறை எனை நீ
அழுத்தும் இரவுகளில்
வெளியிலசையும் தென்னையை
வெறிப்பதையாவது
விசாரி ஏன் என்று எப்போதாவது.
•
உமா மகேஸ்வரி