கையில் வைத்திருந்த
எரிந்து கொண்டிருக்கும் வெண் சுருட்டை
வடிகட்டிப் பொருத்தி தரையில் படும்படியாக
நெடுக்கு வாக்கில் சுவரில் வைத்தான்
வெண்சுருட்டின் வாய்
நெருப்பினோடு புகைந்தபடியிருந்தது
புகை எழுதலில் மங்கிப்போன அறை
அவனுக்கு ஒரு மாயச் சித்திரத்தைத் தந்தது
அச்சித்திரத்தின் உருவங்களுக்கு
வணக்கம் கூறியபடியே அவற்றோடு நட்பு பாராட்டினான்
இது மிகவும் முக்கியமானது என்று தோன்றுகிறது
வணங்குதலில் இருந்துதான் வாழ்க்கை கழிகிறது
தெளிவற்ற சித்திரங்களின் மனவறைக்குள்
பிரவேசிக்க அவனுக்கு சிறு தயக்கம் இருந்தது
காற்றின் வீச்சு இல்லாத அமைதியான அறை
அவனுக்கு சாதகமாயிருந்தது
குழைந்தபடியிருந்த புகைச் சித்திரங்களுடன்
மெல்ல உரையாடத் துவங்கினான்
பரிச்சயமில்லாத ஒரு இருட்பிரகாசத்திற்கு
அவனை அவை அழைத்துச் சென்றன
அவ்வுலகம் அவனைச் சுண்டியிழுக்கும்
கவர்ச்சி கொண்டதாய் இருந்தது
அதில் அவன் தன்னையிழந்தான்
அவனது பாவங்களுக்கான மன்னிப்பை
அங்கே கண்டடைந்ததான்
ஒற்றைப்புள்ளியாய் நெருப்பு
உற்றுப்பார்த்தபடியிருந்தது அவனை
முட்டாள்தனமானதும்
கட்டுப்பாடற்றதுமான வெறித்தனத்தோடு
மங்கலான தெளிவற்ற முகங்கொண்ட
அச்சித்திர உருவங்களோடு
வாழ்க்கை முழுதும் கழிக்க விரும்பினான்
உருவமற்ற கனத்த தன்னுடலைக் கொண்டு
சன்னல் வழியாக உள் நுழைகிறது காற்று
சன்னலோரத்தில் வெளியேறத் தொடங்கின
புகைச் சித்திர உருவங்கள்
அறை தெளிகிறது
எரிந்து முடிந்து சாம்பலாகியிருந்தது வெண் சுருட்டு.
அவன் உறங்கிப்போயிருந்தான்.
*
பொன்.வாசுதேவன்
பொன்.வாசுதேவன்
