ஏழாவது முறையாக நீங்கள் காதலிக்கத்
தொடங்குகிறீர்கள்
கடந்த முறைகளில் உங்கள் காதலின்
இறுதி ஊர்வலம் சிறப்பாகவே நடந்திருக்கிறது
இது ஒன்றும் புதிதல்ல
சக மனிதர்களுக்கும் நடப்பதுதான்
அங்க அசைவுகளில் லயிப்பதில்லை
மனசின் ஆழம்தான் எப்போதும் உங்களை
உள்ளிழுத்துக் கொண்டேயிருக்கிறது
சிறு நீரைத் தேக்கியிருக்கிற கிணறுகளில்
அதற்காகவே விழுந்து தடுமாறி எழுகிறீர்கள்
நொடிக்கொருமுறை காட்சியொடிக்கும்
இமை மூடி திறந்து விழிக்குஞ்சுகளில்
பிரியம் தளும்ப பேசுகிறீர்கள்
பிரபஞ்ச கண்டமாய் குரலில் ஆவல் மிதக்க
ஆகாச கங்கையாய்ப் பொழிகிறீர்கள்
மௌனத்தைப்பூசியபடி
பேச வார்த்தைளற்றுப் போகிறது
உங்களுக்கு ஒரு நேரத்தில்
பாசாங்கின் நுனியைக்
கையிலெடுத்துக் கொள்கிறீர்கள்
வெற்று வார்த்தைகள்
வறண்ட பிரியங்கள்
வேலைகளால் நிறைகிறது
உங்கள் வாழ்க்கை
தேங்கிய நீரில்
தன்னைப் பருக முயற்சித்து
இயலாமல் சலித்துக் கொண்டிருக்கும்
சிறு குருவியாய் திரிகிற உங்களை
அதீத யோசனையுடன்
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது காதல்.
- பொன்.வாசுதேவன்
