ஆகச்சிறந்த துயரங்களால்
புனையப்பட்டிருக்கிறான் அவன்
பூனைச்சீற்ற வேகமும்
மண்புழுவினையொத்த
சுயமற்ற நெளிதலும்
புரளச்செய்கிறது அவன் உலகை
அவன் அனாதை
அயோக்கியனும்கூட
கள்ளத்தனத்தை விரும்பிப் பயின்றவன்
காதல் துரோகி
இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்
அவனுக்கான சிலுவைகள்
ஏராளமாக இருக்கிறது
எதைத் தேர்வது
எதில் அறைந்து கொள்வது
என்ற குழப்பத்தில் இருக்கிறான்
அவன் கைகளை
மரப்பலகையின் மேல் பரத்தி
உள்ளங்கைகளுக்குள் ஆணியை
இறக்கும்போது வழிவது
அவன் பாவங்கள்தான்
அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்
எனவே
அவனை யாரும்
துன்புறுத்த வேண்டாம்
தண்டிக்கவும் வேண்டாம்
அவனாகவே
அவன் உயிரை
பறித்துக் கொள்ளட்டும்
தயைகூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள்
அவன் மீண்டும் உயிர்த்தெழவும் கூடும்
அப்போது வந்து கொண்டாடாதீர்கள்
தேவகுமாரன் அவன் என்று.
- பொன்.வாசுதேவன்
