சமீபத்தில் மதுரையில் நடந்த ‘உயிர்மை புத்தக வெளியீட்டு விழா மற்றும் உயிரோசை இணைய இதழின் ஓராண்டு நிறைவு விழா‘ நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அங்கு இணைய எழுத்துக்களைப் பற்றி பேசும் போது பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. சாருநிவேதா தான் இணைய எழுத்துக்களையே வாசிப்பதில்லை என்றும், இணையத்தில் வெறும் குப்பைகள்தான் எழுத்தாக்கப்படுவதாகவும், இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் அல்ல என்றும் தனது கருத்தை கூறினார். எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில் இதற்கு நேரெதிர் கருத்தை முன் வைத்தார். இணைய எழுத்தில் பலர் நன்றாக எழுதுவதாகவும், அவர் தொடர்ந்து பல நல்ல பதிவுகளை வாசித்து வருவதாகவும் கூறினார். இரு வேறு பல தளங்களில் பதியப்பட்ட இந்த கருத்துக்கள் யோசிக்க வேண்டியவை.
எழுத்தார்வம் உள்ளவர்கள் எல்லோருமே எழுதுகிறார்கள். அச்சு ஊடகமானாலும், இணைய எழுத்து என்றாலும் யார் எழுதுவது சரி ? எது நல்ல எழுத்து என்பதை தீர்மானிப்பது யார் ? வேறு யாருமல்ல… வாசிப்பவர்கள்தான். ஒருவர் எழுதுவதை வாசிக்கும் நபர்தான் அதை நல்ல எழுத்தா, ரசனையானதா என்பதை தீர்மானிக்கிறார்,
ஆக ஒரு படைப்பின் தரத்தை தீர்மானம் செய்வது வாசகனின் மனம்தான். வாசிப்பதற்கு முன்பே இவர் இப்படித்தான் எழுதுவார் என்ற முற்சாய்வு மனோநிலையுடன் ஒரு படைப்பை அணுகும்போது, படைப்பின் தரம் குறித்து முன்கூட்டியே தீர்மானித்து பிரதி அணுகப்படுகிறது. ஒரு படைப்பை பணம் கொடுத்து வாங்கி வாசிக்க எண்ணுபவர்கள் அதை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே வாங்குகிறார்கள். அல்லது குறைந்தபட்சம், இந்த எழுத்தாளர் நன்றாக எழுதியிருப்பார் என்ற முந்தைய வாசிப்பு அனுபவத்தை வைத்து முடிவு செய்கிறார்.
ஆனால், இணையத்தில் வாசிப்பிற்கும், நிராகரிப்பிற்கும் பெரிய ஊடக சுதந்திரம் இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கப்படும் திரைப்படங்களை நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று சொல்லி கருத்து ஏற்படுத்துவது எளிதாக உள்ளது. அவர் செய்தது சரி, இல்லை இவர் செய்ததுதான் சரி என்று காத்திரமான உரையாடல்களையும் அதையொட்டிய கருத்து முற்சாய்வு ஏற்படுத்துவதும் மிக எளிதாக இருக்கிறது. இது குழு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது.
சரி, இணையத்தில் எழுதுபவர்களை எழுத்தாளர்கள் என்று சொல்லலாமா...? நிச்சயம் சொல்லலாம். காரணம், எழுதுபவர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள்தானே… எது தகுதியான எழுத்து, எது மொக்கையான எழுத்து என்பதையெல்லாம் வாசிப்பவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும். காலம்தான் படைப்பின் தகுதியையும் தகுதியின்மையையும் தீர்மானம் செய்கிறது. லட்சக்கணக்கான ஆட்கள் எழுதுகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் வாசிக்கிறார்கள். எழுத்தும் வாசிப்பும் ஒரு இயக்கம். அது தொடர்ந்து கொண்டேயிருக்கும். நான் எழுதினாலும் எழுதாவிட்டாலும் வேறு யாராவது எழுதிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அதை வாசிக்கவும் மக்கள் இருக்கத்தான் போகிறார்கள். எனவே இணையத்தில் எழுதுபவர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
தற்போது இணையத்தில் எழுதுபவர்களை பிற ஊடகங்களும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இணைய பிரதிகளை உருவாக்குபவர்களை பொறுத்தவரையில் இது வளர்ச்சிக்கான அடுத்த கட்டம். ஒரு படைப்பை வேறு எங்கும் தேடியலையாமல் தன்னறையிலோ அலுவலகத்திலோ வாசிக்க முடிகிற கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால் இணைய எழுத்தாளர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.
இணைய எழுத்தாளர்கள் ஒன்றுகூடி பேசுவது இணைய எழுத்தின் வளர்ச்சியினை அதிகரிக்கும். மேலும், மனங்களின் சந்திப்பு (Meeting of Minds) நிகழும் போது ஒருமித்த கருத்து ஏற்பட்டு ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் ஏற்படலாம். இதற்கு பதிவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சந்திப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட வேண்டும்.
வழக்கமாக திறந்த வெளியில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த இணைய எழுத்தாளர்கள் சந்திப்பு ஒரு முயற்சியாக அரங்கத்தினுள் நடத்தப்பட உள்ளது. இந்த சந்திப்பு ‘நமக்கு நாமே‘ நடத்திக் கொள்வது என்பதால் இதில் குழுவோ, நிர்வாகிகளோ கிடையாது. அனைவரும் ஒருங்கிணைப்பாளர்கள்தான்.
இந்நிகழ்வு நடத்தப்பட இருக்கும் இடமான டிஸ்கவரி புத்தக மாளிகை புதிதாக திறக்கப்பட்டுள்ள புத்தகக்கடை. இங்கு அனைத்து பதிப்பக புத்தகங்களும் கிடைக்கிறது. இணைய எழுத்தாளர்களுக்கு புத்தக விலையில் கழிவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் இதன் பொறுப்பாளர் நண்பர் வேடியப்பன்.
இணைய எழுத்தாளர்கள் சந்திப்பு
இடம் : DISCOVERY BOOK PALACE No. 6. Mahaveer Complex, 1st Floor, Munusamy salai, West K.K. Nagar, Chennai-78. Ph; 65157525 (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
நாள் : 7.11.2009 மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை.
திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களை நம்முடன் பகிர இசைந்திருக்கிறார்.
நம்முடைய கலந்துரையாடல் நிகழ்வும் இருக்கிறது.
புதிய, பழைய என்றில்லாமல் இணைய எழுத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்
பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே..
- பொன்.வாசுதேவன் (பேச : 999 454 1010)
இந்த கட்டுரை “உலகத்தமிழ் ஊடகம்“ என்ற வலைக்குழுமத்தில் எழுதப்பட்டது.
தொடர்புகளுக்கு :
பாலபாரதி : 9940203132
கேபிள் சங்கர் : 9840332666
தண்டோரா : 9340089989
நர்சிம் : 9841888663
முரளிகண்ணன் : 9444884964