
நீ புறப்பட்டுப் போன பிறகு...
ஒன்றுக்கும் மேற்பட்ட
முகங்கள் வைத்திருக்கும்
உன்னை
அப்பொழுதுதான் கண்டேன்
ஒவ்வொரு அசைவிலும்
கசியும் நினைவுகளாய்
நம் பழைய சந்திப்புகளில்
வேறொரு விதமாய் கூட்டத்தில்
இறுதியாகத்தான்
பேச வேண்டியிருக்கிறது
நிறைய உன்னோடு
என்னை மறுமுறை எதிர்கொள்ளும்
அத்தருணம்
எந்த முகத்தை
தரிசிக்கத் தருவாய் எனக்கு.
(‘வடக்கு வாசல்‘ அக்டோபர் 2007 இதழில் வெளியானது)
என் மௌனம் முழுவதும்
இனியும் என்ன பதிலைத் தரப்போகிறேன்
உச்சியில் பறக்கும்
ஒற்றைப் புறாவின்
மௌனத்தை
சற்றேனும் பிய்த்தெடுத்து
தர இயன்றால் பரவாயில்லை
யோசித்திருக்கும் இவ்வேளையில்
துளிர்த்த சிறு மௌனத்தை
சேமித்து வைத்திருக்கிறேன்
மறக்காமல் பெற்றுக்கொள்
ஏன் சிரிக்கிறாய் புகைப்படமாய்
என்னைப் பார்த்து.
(‘வடக்கு வாசல்‘ மார்ச் 2008 இதழில் வெளியானது)
- பொன். வாசுதேவன்

