Monday, October 22, 2012

பழக்கமும் வழக்கமும் - நிச்சித்தம்


அலைபேசியில் யாருடனாவது தனியாக உரையாடும் போது பேனாவைத் திறந்து வைத்துக் கொண்டு    கிடைக்கிற தாளில் எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பது எனது வழக்கம். அது எனது பெயரின் முதலெழுத்துகளின் சுருக்கமாகவோ, முழுப் பெயராகவோ, படமாகவோ அல்லது முன்னும் பின்னுமாக இழுக்கப்பட்ட, நெருங்கிய வட்டச் சுழியங்களாவோ இருக்கக்கூடும். இது என்ன அர்த்தமற்ற செய்கை என பலமுறை எனக்கே தோன்றினாலும் பேசுகின்ற போது ஒருமுகப்படுத்தி உள்வாங்கிக் கொள்வதற்கான செய்கையே அது. இப்பழக்கத்தில் இருந்து இன்று வரை என்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு பாதகமும் இல்லை என்பதால் இருந்துட்டுப் போகட்டுமே என்று விட்டு விட்டேன். இதுபோல பழக்கங்கள் எனக்கு இருக்கிறது. வலது கையில் கைக்கடிகாரம் கட்டுவது (இப்போது கைக்கடிகாரமே கட்டுவதில்லை), தயிர் சாதத்தில் ரசம் ஊற்றி சாப்பிடுவது, நகம் கடிப்பது, பாடல் கேட்டுக்கொண்டே படிப்பது, எழுதுவது,  இத்யாதி.. பழக்கங்கள்.. எழுதிக் கொண்டே போகலாம். யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் பல அர்த்தமற்ற பழக்கங்களை நாம் எல்லோருமே வழக்கமாக கொண்டிருக்கிறோம். 

ஆனால் பழக்க வழக்கங்கள் என்பது வாழ்வியல் ஒழுக்கத்தின் ஒரு முக்கியமான பகுதியாக நம்மோடு இருந்து வந்திருக்கிறது. சட்டத்திலும் பழக்க வழக்கங்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பழக்கம் எப்போது வழக்கமாகிறது? ஒரு குறிப்பிட்ட இன மக்களால் தொடர்ந்து செய்யப்படுகிற பழக்கம் அவர்களின் வழக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுகிறது. குல தெய்வ வழிபாடு சடங்கு முறையை இதற்கு சரியான உதாரணமாகச் சொல்லலாம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பழக்க வழக்கங்களை திணை சார்ந்து நெறிப் படுத்தியிருக்கிறார்கள். சங்க இலக்கியம் காட்டுகின்ற வாழ்வியல் முறைமைகளின் வழியாக நாம் இதை அறியலாம். 

நிகழ்த்து கலையான கூத்து அகக்கூத்து, புறக்கூத்து என இரண்டு வகைகளில் நிகழ்த்தப் படுகிறது. இது கூத்து இலக்கணத்தின்படி வேத்தியல், பொதுவியல் எனப்படும். தனிப்பட்ட இனக் குழுவிற்குள் நிகழ்த்தப்படுகிற அல்லது அரசனின் முன் நிகழ்த்தப்படுகிற கூத்து வேத்தியல் என்றும், பொதுமக்களுக்காக நிகழ்த்தப்படுகிற கூத்து பொதுவியல் என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறே ஒவ்வொரு நிலப்பரப்புக்கென உருவாக்கப்பட்ட தனித்த பழக்க வழக்கங்கள் வேத்தியல் சார்ந்தும், பொதுவியல் சார்ந்தும் இருந்துள்ளது. ஆடல், பாடல், தாளங்கள், உணவு முறை, திருமணம், கூடல், தொழில், வழிபாடு, சடங்குகள் விழாக்களுக்கான நெறிமுறைகள் வகுத்தல் என்று திட்டமிடுதலுடன் எல்லா பழக்க வழக்கங்களும் ஏற்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டுள்ளன.  வாய்மொழி இலக்கியங்கள் கூட வழிவழியாகப் பாடப்பட்டு வழக்கமானவைதான். அவ்வாறே, பூசைக்கு மலர்களைப் பயன் படுத்துதல், உணவு படைத்தல் என மரபு, மதம், இனம் சார்ந்த பல்வேறு பழக்க வழக்கங்கள் நம் வாழ்க்கையில் உபயோகத்தில் இருந்துள்ளது.

பழக்க வழக்கம் பற்றி இப்போது பேச வந்தது எதற்காக என்றால், தற்போது நாம் வாழ்கிற வாழ்க்கை முறையில் தனித்துவமான பழக்க வழக்கமென்று ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேண்டுமானால், மின்னஞ்சல் பார்ப்பது, நிலைத்தகவல் பகிர்வது என்பதை சொல்லிக் கொள்ளலாம். எல்லாரும் செய்வதை நாமும் செய்கிறோம். பெரும்பான்மையினர் வாங்குவதை நாமும் வாங்குகிறோம். கண்டதே கோலம். கொண்டதே காட்சி. இதுதான் இன்றைய நம் வாழ்க்கை பழக்க வழக்கம்.

தமிழர் வாழ்வியலில் ஆதி காலம் தொட்டு பழக்க வழக்கங்கள் முக்கியமானவையாகவே இருந்து வந்துள்ளது. தொல் பழங்காலம் தொடங்கி, தலை, இடை, கடை சங்க காலத்திலும், அதன் பிற்பாடு சேரர், முற்கால சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர், பிற்கால சோழர், பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் என பல்வேறு தரப்பினரின் ஆளுகைக்கும் உட்பட்ட தொன்மையுடைய தமிழினத்திற்கென தனித்துவ பழக்க வழக்கங்கள் நிறைய உண்டு. எல்லாமே ஒவ்வொரு ஆட்சி முறையின் போதும் சிதைந்தும், வழக்கங்கள் மாறியும், மாற்றப்பட்டும் தற்போது சிதைந்தும் நமக்கென ஒரு பழக்க வழக்க அடையாளமற்று விநாயகர் சதுர்த்தி, தீபாவளி முதலான பொதுமைப் படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களையே நாம் தொடர்ந்து வருகிறோம். இதுதான் நம்முடைய பழக்க வழக்கம் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு மந்தைகளாக பழக்கப்பட்டிருக்கிறோம். ஊடகம் சார்ந்த கருத்தாக்கங்களில் மயங்கி, இந்த ஆடையை அணி, இந்த பண்டிகையைக் கொண்டாடு, இந்த பற்பசையை உபயோகி, இந்த குளிர்பானத்தை அருந்து என்பதான மனோபாவத்திற்கு பழக்க அடிமைகளாகி, உயிருள்ள இயந்திர மிருகங்களாகத்தான் நமது வாழ்க்கை அமைந்திருக்கிறது.

பழக்க வழக்கம் சார்ந்து வாசிக்கவும், அறிந்து கொள்ளவும் நிறைய இருக்கிறது. எந்த ஒரு இனத்தின் மக்கள் தனது தொன்மை சார்ந்த விஷயங்களில் ஆர்வமிழக்கிறார்களோ அந்த இனத்தின் தனித்தன்மை இழந்து சிதைந்து உருத்தெரியாமல், கலப்படமாகிப் போவது நிச்சயம். பழக்க வழக்கம் சார்ந்து எழுதப்பட்டிருக்கிற எனது இந்தப் பதிவு முழுமையானது அல்ல. இது ஒரு கீறல்தான். ஆர்வமிருக்கிறவர்கள் மேலும் வாசிக்கவும், பகிர்ந்து கொள்ளவுமான உத்வேகத்தை இது தந்தால் மகிழ்ச்சி.


பொன்.வாசுதேவன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname