Tuesday, October 30, 2012

மௌனி இன்ன பிற - நிச்சித்தம்




மௌனியைப் புரிந்து கொள்ள நாம் மௌனியாக வேண்டும். அப்படியெனில் மட்டுமே அவரது எழுத்துக்களை சலிப்பற்று நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும். நான் கடந்த மாதம் மௌனி சிறுகதைகளை (எத்தனையாவது முறையாகவோ) மறுபடி படித்தேன். காலச்சுவடு வெளியிட்ட Classic வரிசை புத்தகம் அல்ல. 1969ல் வெளியான பதிப்பு. ஒரு கதையை வாசிக்கும்போதே அதன் இண்டுஇடுக்குகளில் சிக்கிச் சுழன்றாடுகிற மனதைத் தரவல்லமை படைத்தவை மௌனியின் கதைகள். நுணுக்கம
், வெளிப்பாடு, விவரணை இல்லையென்றால் எத்துணை முக்கியமான கதையும் வாசிக்க ஒப்பாது. ஆகவே கதைகளில்.. கதைகளில் ஏன்.. படைப்பில் கலைநுட்பம் Craft அவசியம்தான். அழியாச்சுடர், மனக்கோலம், உறவு பந்தம் பாசம், அத்துவான வெளி போன்ற கதைகள் மிகவும் பிடித்தமானவை.. மீண்டும் மீண்டும் வாசிக்கவும், இப்படியான கதைகளில் ஆழ்ந்திருப்பதிலுமே நேரங்கழித்து, சொட்டுச் சொட்டாய் வாழ்வை ரசித்துக் கொண்டிருக்க தோன்றுகிறது.



•••


எனக்கு வந்த மின்னஞ்சல் செய்தி

*பிரதிகள்/காலம் மீதான வாசிப்பு*

முழு நாள் உரையாடல் அரங்கு!

25 நவம்பர் 2012 (ஞாயிறு) - லண்டன்

தோழமை மிகு நண்பர்களே!

இரண்டு விரிந்த தலைப்புகளில் இந்த உரையாடல் அரங்கினை நடாத்த ஆலோசிக்கிறோம்.

1. இலங்கை இனப்பிரச்சினை பின்புலத் தளத்தில் ஆயுதப் போராட்ட காலகட்டத்தினையொட்டி வெளிவந்துள்ள சிறுகதை, நாவல் தொகுதிகள், அனுபவக் குறிப்புகள்,வரலாற்றுப்பதிவுகளை,முன்னிறுத்தி, இதுவரை அச்சில் பதிவான பிரதிகள் மீதான பன்முக வாசிப்பினைக் கோரும் உரையாடலாகவும்...

புனைவுகள்

1. லங்கா ராணி - அருளர்
2. புதியதோர் உலகம் - கோவிந்தன்
3. ம், கொரில்லா - ஷோபாசக்தி
4. யுத்தத்தின் இரண்டாம் பாகம் - சக்கரவர்த்தி
5. கசகறணம் - விமல் குழந்தை வேல்
6. ஆறாவடு - சயந்தன்
7. யுத்தத்தின் முதலாம் அதிகாரம்- தேவகாந்தன்
8. ஓட்டமாவடி அரபாத்தின் சிறுகதைகள்
9. யோ.கர்ணனின் இரு தொகுதிகள்

வரலாற்றுப் பதிவு / ஆய்வுகள்

1. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - புஸ்பராசா
2. வானத்தைப் பிளந்த கதை - செழியன்
3. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் - கணேச ஐயர்
4. அகாலம் - புஷ்பராணி
5. முறிந்தபனை
6. சுதந்திர வேட்கை- அடேல் பாலசிங்கம்
7. போருலா - மலரவன்
8. வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை-ஜீவமுரளி

ஆங்கிலப் பதிவுகள்
1. Funny Boy - Shyam Selvadurai
2. When Memory Dies - A. Sivanandan
3. Love Marriage - Vasuki Ganeshananthan
4. Whirl Wind - A. Santhan

*(மேற்காணும் பட்டியல் முழுமையானது அல்ல)மேற்கூறப்பட்ட பட்டியலில் விடுபட்ட அச்சில் இதுவரை வெளிவந்தபிரதிகளை முன்வைத்தும் முதலாவது தலைப்பிற்கான கட்டுரையை முன்வைக்க முடியும். பிரதிகள் மீதானஒப்பிட்டு பார்வையாகவோ, தனித்தனி ஆய்வாகவோ கட்டுரைகள் இருக்கலாம்.

௦௦௦

2.போருக்குப்பிந்திய இலங்கையில் ஏட்டுள்ள அரசியல்,சமூக மாற்றங்களும் விளைவுகளும் தொடர்பான பல்வேறுபட்ட பார்வைகளைப் பேசுவதற்கான காலம் மீதான உரையாடலாகவும்....

மேலே கூறப்பட்ட இரு தலைப்பு பேசு பொருளில் இந்த அரங்கு இருப்பது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.

* எழுத்தாளர்கள்,ஆய்வாளர்கள்,கருத்தாளர்களிடமிருந்து இவ்விரு தலைப்பிற்குற்பட்ட கட்டுரைகளை எழுத்து மூலம் கோருவதுடன்,புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றவர்கள் அமர்வுக்கு நேரடியாக சமூகம் தந்து தங்களது கருத்தினை முன் வைத்து பேச அழைக்கிறோம்.

கலை இலக்கிய முயற்சிகளில் தேசிய இன அடையாளங்கள்- எனும் தலைப்பில்ஆய்வாளர், அ,ராமசாமி ( பேராசிரியர்,வார்சா பல்கலைக்கழகம்) சிறப்புரை ஆற்ற உள்ளார்.

கலந்துகொள்ள விரும்புவோர்கள், கட்டுரைகளை முன்வைக்க விரும்புபவர்கள் , கருத்துக்கள்,ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புவோர்கள் எதிர்வரும் நவம்பர் 10ம் திகதிக்குமுன் தெரியப்படுத்துமாறு கேட்கிறோம்.

ஏற்பாடு - தமிழ் மொழிச் சமூகங்களின் செயட்பாட்டகம்

தொடர்புகளுக்கு-
மின்னஞ்சல் - eathuvarai@gmail.com
தொலைபேசி - ( 0044 7817262980)

•••

• தொலைவான ஓரிரவு •

என் அம்மா...
உன் ஒரு முலையிலிருந்து மறுமுலைக்கு
என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது
பிரிவென்று கருதாதே.
என் தமக்கையே நெடுவழியில் நான்
உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல்
பற்றிக்கொள்ளும் பொழுது இது.
தீண்டலற்ற இடைநொடி

தனிமையோ என்று திகைக்காதே
என் தங்கையே உன்னைத் தியானிக்கும்
என் மனம் இமைக்கும் தருணமிது.
அச்சமய இருட்டில் நீ மிரளாதிரு.
உறங்கு என் மகளே
தோள் மாற்றிச் சுமக்கவே உன்னை
என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன்.
ஐயோ இது விலகலோ என்று
திடுக்கிட்டு விழித்துவிடாதே.
சகலமுமான என் பிரியமே
இன்று நாளெல்லாம் உன் நினைவால்
எத்தனை முறை மனம் ததும்பி
கண்ணீர் வரப் பார்த்தது..

• யூமா வாசுகி




•••

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname