Monday, October 22, 2012

சுயம்

மிஞ்சிய வலையில்
விழிக்கூர் நிலைநிறுத்தி நோக்கியபடி
உலர்ந்து மினுக்கும் அறுந்த இழையில்
மீண்டேற ஒட்டி ஊசலாடும் சிலந்தி

சுழன்றாடும் சிலந்தியை
விரல் நீட்டி தட்டிவிடவென 
பற்றியெடுத்து வலையிறுத்த
கை பதித்து வலை கிழிக்க
கணத்திற்கொரு சுயநிலை
நீயூஸ் பேப்பர் ஒட்டிச் சுற்றி
நீள் கண்ணாடிக் குடுவையுள்
உடைந்த வளையலிட்டு
சுழன்றாடுகிறது வண்ண வடிவங்களாய்

கீழுதடு விரலழுந்த
விழிமலர்த்தி யோசிக்கையில் 
சிலந்தியை விடுவித்து
எனக்குள் பின்னிக் கொண்டேன்

இன்றின் உடுப்புகளைக் 
களைந்து கொண்டிருக்கின்ற 
பகல் பொழுது வேளையில்
மனைவியற்றவளுடனான 
புணர்தலுக்கு ஆயத்தமாகிறவனின் 
பக்குவமான பதட்டங்களோடு
சிதறிக் கிடக்கின்ற நுண்ணுணர்வுகளை
சேகரித்து ஒவ்வொரு பருக்கையாக
ருசிக்கத் தொடங்குகிறேன்.


பொன்.வாசுதேவன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname