Tuesday, October 23, 2012

நான் ஒரு சாமானியன் - லோகி

நான் ஒரு சாமானியன். பசியும் தாகமும் அன்பும் வெறுப்பும் துரோகமும் புறக்கணிப்பும் என் வாழ்க்கையில் அனுபவங்களாக ஆகியுள்ளன. என்னைச் சுற்றி இரையும் வாழ்க்கைக் கடல். நான் அதில் ஒரு துளி. இந்தக் கரையிலாக் கடலில் எத்தனை முத்துக்கள். எத்தனை மீன்கள்.. எனக்குப் பிடித்தமானவற்றை தொட்டு எடுத்தால் போதும். தேடக்கூட வேண்டியதில்லை. எல்லாரும் தேடுவது அபூர்வமான ஒரு முத்தை. அது அவனடைய அதிர்ஷ்டத்தைச் சார்ந்தது.  
         
பிறருக்கு சர்வ சாதாரணம் என்று தோன்றக்கூடியவற்றில் கூட கலையைக் கண்டு பிடிப்பவனே மேலான கலைஞன். எனக்கு அற்பமான விஷயங்கள் கூட ஆழமான மனத்தூண்டலை அளித்து உள்ளன. ஒரு நாய் இரவில் பரிதாபமாக ஊளையிட்டதைக் கேட்டு நான் ஆழமான உணர்வெழுச்சியை அடைந்து எழுதியிருக்கிறேன். ஒரு சொல், ஒரு முகம், ஒரு காட்சி கூட ஒரு கதைக்கான தொடக்கமாக மாறக்கூடும்.

ஆறாம் வகுப்பில் படிக்கும்போது  நான் ஒரு எலிக்குஞ்சைக் கொன்றேன். அந்தத் துயரமே என்னை என் முதல் படைப்பை எழுத வைத்தது. பிற்பாடு எத்தனை கதைகள். எத்தனை நாடகங்கள், சினிமாக்கள். ஆனால் அடிப்படையில் நான் ஒரு சிறுகதைக்காரன் என்று படுகிறது. சிறுகதையின் உத்தியும், வடிவமும்தான் என் திரைக்கதைகளிலும் கடைப்பிடிக்கப் பட்டுள்ளது.

• லோகிததாஸ்


தனது நண்பரும், நல்லாசிரியருமாக இருந்தவரைப் பற்றிய நினைவுகளும், மதிப்பீடுகளும் என்ற அடங்கிய நூல் இது என்ற குறிப்புரையோடு, மலையாள இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான லோகிததாஸ் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் ‘லோகி - நினைவுகள் - மதிப்பீடுகள்‘ என்ற புத்தகத்தை நேற்று வாசித்து முடித்தேன். 2009ல் வாங்கிய புத்தகம். இப்போதுதான் என்னால் வாசிக்கப்பட்டு சாபல்யம் அடைந்தது

2009 இறுதியில் என்று நினைக்கிறேன். ‘அவள்  பெயர்  தமிழரசி‘  படத்தின்  முன்னோட்டக்  காட்சி திரையிடலை  முன்னிட்டு  இயக்குநர்  மீரா  கதிரவன்,  சென்னை  அருணா  இன்  குடிமையத்தில்  நண்பர்களுடனான  சிறு  ஒன்று  கூடலுக்கு  ஏற்பாடு  செய்திருந்தார்.  அன்றைய  தினம்  நண்பர்கள்  உரையாடல்  இரவு  வெகுநேரம்  நீடித்தது.  மீரா  கதிரவனுடன்  நீண்ட  நேரம்  பேசிக்  கொண்டிருந்தேன்அவர் வழியாகத்தான் லோகிததா பற்றி  அறிய முடிந்தது. (2009  ஜீன்  மாதத்தில்  லோஹி  காலமானார்).  அதற்கு  முன்பாக  நடிகை  மீரா  ஜாஸ்மின் – லோகி  இருவரின்  அந்தரங்க  தோழமை  பற்றிய  செய்திகளின்  வழியாக மட்டுமே அவரை கேள்விப்பட்டிருக்கிறேன்

மலையாள  திரைப்பட  உலகின்  திரைக்கதையாசிரியர்களின்  பட்டியலில்  தவிர்க்க  இயலாத  பெயர்  லோகி.  ஆரம்பத்தில்  சிறுகதையாசிரியராக  அறியப்பட்ட   லோகி  ‘சிந்து சாந்தமாய் ஒழுகுந்து‘  என்ற  நாடகத்தின்  மூலமாக  பரவலாக   அறியப்பட்டார்.   நடிகர்  திலகன்தான்  லோகிததாசை  திரைத்துறையில் கொண்டு  வந்தார்சிபி  மலையில்  இயக்கிய  ‘தனியாவர்த்தனம்‘  தான்  லோகி திரைக்கதை  எழுதிய  முதல்  படம்.  சிறந்த  திரைக்கதைக்கான  கேரள அரசின் விருதைப் பெற்றது அப்படம். தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய லோகி 1997 ல்பூதக்கண்ணாடிஎன்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, அப்படத்திற்காக மிகச்சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார்.

ஒரு சிறுகதையாசிரியாக ஆரம்பித்த லோகியின் படைப்பூக்கம் என்பது அவருடைய ஆளுமை சார்ந்தது. எளிமையான நேரடியான மனிதர். கனிவையே தன்னியல்பாக கொண்டவர். விசித்திரமான பெண்மைச் சாயல் அவரது எல்லா செயல்பாடுகளிலும் இருந்தது என்கிறார் ஜெயமோகன்.

கதையுடெ காணாப்புறங்கள்‘ (கதையின் காணப்படாத பக்கங்கள்) என்கிற லோகியின் கட்டுரையுடன் ஆரம்பிக்கிறது இப்புத்தகம். ஒரு சினிமா எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி சாதாரண ரசிகர்களுக்கு இப்போது கூட பெரிய புரிதல் ஏதுமில்லை. பல சமயம் ஒரு நடிகர் அல்லது இயக்குநருடன் தொடர்புபடுத்தி அவர்கள் அந்தப் படத்தைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். சினிமா ஒரு கூட்டு முயற்சி. சினிமாவில் எழுத்தாளனின் பங்கு குறித்து பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை என்னும் லோகி, சினிமாவில் திரைக்கதையாசிரியனின் பங்கு குறித்து இக்கட்டுரையில் விரிவாகப் பேசியிருக்கிறார். இந்த கட்டுரைகள் மலையாள மொழியில் புத்தகமாகவும் தொகுக்கப்பட்டிருக்கிறது.

அவருடைய திரைக்கதையில் வெளியான படங்களைக் குறித்த கருத்துகளும்காதலன், கலைஞன், ரசிகன், தனியன் என தலைப்பிட்டு லோகியின் வாழ்க்கை பற்றியும், அவரது ஆளுமை குறித்தும் இப்புத்தகத்தில் சுருக்கமாக எழுதியிருக்கிறார் ஜெயமோகன். ‘திரைஇதழுக்காக ஜெயமோகனால் லோகியுடன் நிகழ்த்தப்பட்டஒரு நீண்ட உரையாடல்என்ற தலைப்பிலான விரிவான நேர்காணலும் இருக்கிறது.


லோகி - நினைவுகள் - மதிப்பீடுகள்‘  என்ற இந்தப் புத்தகத்தில் லோகியுடனான தனது அறிமுகம், அவருடனான நினைவுகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகளைமிக எளிமையான நடையில்,  ஜெயமோகன் பகிர்ந்துள்ளார். இப்புத்தகத்தின் வழியாக லோகிததாஸ் என்ற ஆளுமையைப் பற்றி நாம் அறிய முடிவதுடன், மலையாள திரைப்படச் சூழல் பற்றிய அறிமுகத்தையும், பார்க்கத் தவறிய பல மலையாள திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.

லோகிததாஸ் இயக்கிய திரைப்படங்கள்

பூதக்கண்ணாடி - காருண்யம் - .ஒர்மச் செப்பு - கன்மதம் - அரயன்னங்களோட வீடு - ஜோக்கர் - சூத்ரதாரன் - கஸ்தூரி மான் (மலையாளம் & தமிழ்) - சக்ரம் - சக்கரமுத்து - நிவேத்யம்




‘லோகி’ நினைவுகள் - மதிப்பீடுகள்
ஆசிரியர் :  ஜெயமோகன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
128 பக்கங்கள் விலை ரூ.75/-


1 comment:

  1. அருமையான கட்டுரை + லோகிதாஸ் அவர்கள் நினைவுகள் மதிப்பீடுகளை அழகாக மதிப்பிட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname