Wednesday, October 7, 2009

ஈரான் : தொடரும் தூக்கு தண்டனைகள்

ஈரான் தொடரும் தூக்கு தண்டனைகள்………………………………………………………. பொன்.வாசுதேவன்

‘உன்னதம்‘ (செப்டம்பர் 2009) இதழில் வெளியான கட்டுரை

unnatham SEP issue copy

ரான் முன்னாள் அதிபர் மஹ்மத் அகமதிநெஜத் (Mahmoud Ahmadinejad) 62% அதிகப்படியான வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றிவாகை சூடியதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஈரானில் தேர்தல் முடிவினை எதிர்த்து தொடர்ந்து ஆட்சேபணைகளும், ஆர்ப்பாட்ட பேரணிகளும் நடைபெற்று வருகின்றது. தேர்தல் முறையற்று நடந்ததாலேயே தான் தோற்கடிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி வேட்பாளர் மிர் உசேன் மௌசவி (Mir Hossein Mousavi) கூறியிருக்கிறார். இதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

தேர்தல் முடிவை எதிர்த்து தொடரும் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டுவர மௌசவி ஆதரவாளர்களை பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி வந்த ஆளும் அகமதிநெஜத் தரப்பு இதன் உச்ச கட்டமாக மௌசவி ஆதரவாளர்கள் ஆறு பேரை தூக்கிலிட்டு கொன்றுள்ளனர்.

ல நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஈரானின் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு இருந்த ஈடுபாட்டை வாக்குப்பதிவின் விழுக்காடுகளில் உணரமுடிந்தது. போட்டியிட்ட அகமதிநெஜத் மற்றும் மௌசவி இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. வாக்களிப்பின் போது பல முறைகேடுகள் நடைபெற்றதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும், ஈரானின் தேர்தல் கமிட்டி இதில் சற்றும் உண்மையில்லை என்று முற்றிலும் மறுத்திருக்கிறது.

mir6தேர்தலின்போது நிகழ்ந்த ஒழுங்கீனங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் எதிராக ஒன்று கூடுவது உங்கள் உரிமை. இந்த உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என நம்புங்கள். இந்நம்பிக்கைகளை குலைக்கும் எண்ணத்திலோ உங்களை பயப்படுத்தும் நோக்கத்திலோ உள்ளே நுழைபவர்கள் யாரையும் இதற்குள் அனுமதிக்காதீர்கள்” என்று தனது வலைத்தளத்தில் மௌசவி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தேர்தலுக்குப் பிறகு அகமதிநெஜத் ஆதரவாளர்களுக்கும், மௌசவி ஆதவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மௌசவி ஆதரவாளர்களையும், ஆர்ப்பாட்டக்காரர்கள் என்று கூறி பொதுமக்கள் பலரும் கலகத்தடுப்பு காவல் படையினரால் கைது செய்யப்பட்டு உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களுக்கெதிரான பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்கிறது. பயமுறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் மூலம் தனது ஆதரவாளர்களை அமைதியாகக் முடியாது என்று மௌசவி தெரிவித்துள்ளார். அகமதிநெஜெத்தின் ஆதவராளராக கருதப்படும் ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி ஆர்ப்பாட்டக்காரர்களை முற்றிலும் ஒடுக்குவதில் இசைவு தெரிவிக்காததின் வாயிலாக மௌசவியிடம் சமரசப்போக்குடன் செல்வதை விரும்புவது புலனாகிறது.

mir5ர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புகளையும் அடக்கி ஒடுக்கிவிட்ட பின்னர் “எனக்கு கிடைத்த வெற்றி நியாயமானது. மக்கள் உண்மையான ஆதரவு காரணமாகவே மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளேன்” என்று தனது வெற்றிக்குப் பிறகு அகமதிநெஜத் மறுஉறுதிப்படுத்தியிருந்தார். நான்காண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கும் இந்த தேர்தலில் ஒழுங்கீனங்கள் நடைபெற்றிருப்பதாக குறிப்பிடுவதை முற்றிலும் நிராகரித்துள்ளார். மேற்கு நாடுகளின் விரோத போக்கிற்கு எதிராக மக்கள் அளித்த மகத்தான சாதனை முடிவு இது என்றும் அகமதிநெஜத் கூறினார்.

ளவுக்கதிகமான முறைகேடுகள் இந்த தேர்தலில் நடைபெற்றுள்ளது, தேர்தல் முடிவுகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிகார பலமிக்க பாதுகாப்பு மன்றத்திடம் முறையிட்டுள்ளதாக மிதவாதப் போக்கினையுடைய மௌசவி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். மேற்கு நாடுகளும் அகமதிநெஜத்தின் வெற்றி முறைகேடானது என்று தங்கள் அதிருப்தியை வெறியிட்டுள்ளன. ஈரான் தேர்தலில் மோசடிகள் நடந்திருப்பதாகவும், எதிர்ப்பாளர்களும், அதிருப்தியாளர்களும் அடக்குமுறையை பிரயோகித்து ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

mir3 தேர்தல் முடிவுகளை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்ட மௌசவி ஆதரவாளர்களுக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் இமாம் கோமேனி சதுக்கத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உயர் மத்தியதர மட்டத்தின் ஆதரவே மௌசவிக்கு உள்ளது என்ற தோற்றத்தை அகற்றும்படியாக, தொழிலாள வர்க்கம் இருக்கும் பகுதியும், அகமதிநெஜத் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள தலைநகரத்தின் தெற்கு பகுதியான கோமேனி சதுக்கத்தில் நடைபெற்றது. வெளிநாட்டு செய்தியாளர்கள் மீது ஈரான் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் இதுகுறித்த செய்திகள் பரவலாக அறியப்படவில்லை.

மெரிக்க அதிபர் ஒபாமா, “தேர்தல் முடிவினை தொடர்ந்து வரும் சம்பவங்களை தொடர்ந்து தான் பார்வையிட்டு வருவதாகவும் அங்கு ஒலிக்கும் பொதுமக்களின் ஆட்சேபக் குரல்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், ஜனநாயக செயற்பாடுகள், சுதந்திரமான பேச்சு அமைதியான முறையில் நம் கோரிக்கைகளை முன் வைத்தல் ஆகியன உலகளாவிய பொதுப்பண்புகள் எனவே இவை மதிக்கப்பட வேண்டியது முக்கியமானது“ என்று தெரிவித்துள்ளார்.

ரானின் தேர்தல் முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரித்த பின்னரே அதன் முடிவினை அறிவிக்க இயலும் என்று பாதுகாப்பு மன்ற பேச்சாளர் அபாஸ் அலி காட்கோடாய் குறிப்பிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வாக்களிப்பு முறையில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள் ஏற்க முடியாதவை என்று ஜெர்மனியும் பல ஐரோப்பிய நாடுகளும் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்துள்ளன.

mir4ரானில் மக்கள் புரட்சி நடைபெற்ற 1979-க்குப் பிறகு முதல் முறையாக மக்கள் டெஃஹ்ரானில் ஒன்று திரண்டு அமைதியாக தங்கள் தேர்தல் முடிவு பற்றிய ஆட்சேபங்களையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர். மௌசவியும் இப்பேரணியில் கலந்து கொண்டு தன் தரப்பு நியாங்களை முன்வைத்தார். இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த அமைதிப் பேரணியின் முடிவில் ஈரானின் வாக்குப்பதிவுகளை எண்ணும் 12 பேர் கொண்ட Guardian Council எனப்படும் ஈரான் தேர்தல் கமிட்டி அமைப்பின் மீது புகார் செய்யப்பட்டது. இதன்படி 10 நாட்களுக்குள் தேர்தலின் போது நடைபெற்ற உண்மை என்ன என்பது பற்றி இக்கமிட்டி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

ளும் உயரடுக்குகளுக்குள்ளான இப்போராட்டத்தில் மௌசவி தரப்பு ஆதரவாளர்களின் தரப்பு தீவிரமாக உள்ளது. ஈரானின் பழமைவாத மதகுருமார் சார்பு ஆட்சிக்குள்ளும் பலத்த உட்பூசல்களும் அதிகரித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத ஆர்ப்பாட்டங்களுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய தளத்திலும் செய்தி ஊடகத்திலும் தடைகள் போடப்பட்டுள்ளன. அகமதிநெஜத்தின் தீவிர ஆதரவு அமைப்பான பஸ்ஜிஸ் போராளிகள் தெஹ்ரான் பல்கழகத்தைச் சேர்ந்த சோதனைக்கு உட்படுத்துகிறோம் என்ற பெயரில் ஐந்து மாணவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். எதிர்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக்கு உள்துறை அமைச்சரகம்தான் காரணம் என்று காமேனிக்கு நெருக்கமானவராக அறியப்படும் பாராளுமன்றத்தலைவர் அலி லரிஜனி தாக்குதல் குறித்து தனது பகிரங்க எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

தேர்தல் குழுவின் வாயிலாக கோமேனி சில சமரச முயற்சிகளுக்கான அடையாளங்களையும் மௌசவிக்கு கோடிட்டுக் காட்டியுள்ளார். தேர்ந்தெடுக்கப் படாத ஒரு அமைப்பான ஈரான் தேர்தல் குழு வாக்குப்பெட்டிகளை குறைந்த அளவிலேயே மறு எண்ணிக்கை செய்வதாக ஒப்புக் கொள்டுள்ளது. தேர்தல் ஓழுங்கீனங்கள் பற்றிய புகார்களை ஜனாதிபதி போட்டி வேட்பாளர்களான மௌசவி, மெஹ்தி கரோபி மற்றும் மோசேன் ரெசேய் ஆகியோர் ஏற்கனவே அளித்துள்ளனர்.

டைம்ஸ் பத்திரிகை நிருபர் ஜோ க்ளின் தயாரித்த நீண்ட நேரடி அறிக்கையில், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்றாலும், அகமதிநெஜத் வெற்றி பெற்றிருப்பது நிச்சயமான ஒன்றுதான். ஒருவேளை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவரது வெற்றி அமைந்திருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வந்த நிலையில் அதிகாரத்தையும், அடக்கு முறையையும் பிரயோகித்து எதிர்ப்பாளர்கள் மந்தநிலையில் உள்ளது போன்ற போலியான தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அகமதிநெஜத். தொடரும் எதிர்ப்புகள் அடிப்படையான ஜனநாயக உரிமைகள் இல்லாதது என்றும், தொடர்ந்து பெருகி வருகின்ற வேலையின்மை, வாழ்க்கைத் தரங்கள் பற்றிய இம்மாதிரியான சீற்றங்கள் அதிகரித்து விடக்கூடும் என தலைமையில் உள்ள ஆளும் வர்க்கத்தினரின் அனைத்துப் பிரிவினரும் அஞ்சுகின்றனர்.

mir7 மௌசவி மற்றும் அகமதிநெஜத் ஆதரவாளர்களுக்கிடையேயான அரசியல் வேறுபாடுகள் பல்வேறு விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கியவை. வெளியுறவு, பொருளாதாரம் ஆகியவற்றில் மௌசவி கொண்டுவர நினைக்கும் மாற்றங்களை விரும்புவதாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹ்மம் கடாமி ஆகியோர் மௌசவியின் ஆதரவாளர்களாக உள்ளனர். குறிப்பாக அகமதிநெஜத்தின் அமெரிக்க எதிர்ப்பு கருத்துகள் எல்லோராலும் குறையாகக் கருதப்படுகிறது. நாட்டின் பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளுக்கு சற்றும் பொருந்திப் போகாதவை என்பதாலேயே இக்கருத்தை கொண்டுள்ளனர். ஒபாமா அதிபராக வந்துள்ளதையடுத்து அமெரிக்கா உடனான பதட்டங்களை குறைத்து, தடையற்ற சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி வெளி முதலீடுகளை கொண்டு வருவதன் வாயிலாக பொருளாதார உயர்வு நிலையினை அடையலாம் என்பது இவர்களது எண்ணம்.

தேர்தல் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்டு விட்டது போன்ற மேலோட்டமான தோற்றம் இருந்தாலும் தொடர்ந்து மௌசவியின் ஆதரவாளர்கள் அடையாளங் காணப்பட்டு தீவிர தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், கண்காணித்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவது தொடர்கிறது. மௌசவிக்கு ஆதரவாளர்களை முடக்குவதன் வாயிலாக தொடர் ஆர்ப்பாட்டங்களை முறியடிக்க இயலும் என்பது அகமதிநெஜத் ஆதரவாளர்களின் எண்ணமாக உள்ளது.

mir2ஸ்ஜிஸ் போராளிகள் மாணவர்களை தாக்கி சுட்டுக் கொன்றது, 170க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை காவலில் வைத்துள்ளது, போராட்டத்தில் காயமடைந்த பொதுமக்களை கைது செய்திருப்பது போன்ற அகமதிநெஜத்தின் அடக்குமுறை செயல்கள் மௌசவி ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்துள்ளது. இதற்கிடையில் மௌசவி ஆதரவாளர்கள் ஆறு பேரை புனித நகரான மஷாத்தில் தூக்கிலடப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையான முறையில் எச்சரிக்கப்பட்டும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியமைக்காக அச்சுறுத்தல் நடவடிக்கையாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சைனப் சகோதரிகள் எனப்படும் பெண் கமேண்டோக்களும் மௌசவி ஆதரவாளர்களை ஒடுக்கும் பணியை மேற்கொள்ள முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

கமதிநெஜத் மற்றும் மௌசவிக்கும் இடையேயான இந்தப் பூசலில் உயர் மக்கள் பிரிவினர் மற்றும் தொழிலாள வர்க்கத்தினர் இரு பிரிவினரும் தங்களுக்கு சாதகமானவரின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். சுதந்திரமான வாழ்க்கை, தடையற்ற வசதிகள், அடிப்படைத் தேவைகளின் பூர்த்தி, ஜனநாயக உரிமைகள், கௌரவமான வாழ்க்கைத்தரம் பற்றிய கவலைகள் இருதரப்பு ஆதரவாளர்களிடமும் மேலோங்கியிருக்கிறது. எதிர்ப்போ அல்லது ஆதரவோ புதிய சுமைகளை நாட்டின் மீது திணித்து விடக்கூடாது என்பதே ஈரானின் மக்கள் விருப்பமாக இருக்கிறது.

000

மிர் உசேன் மௌசவி (1941)

mir1

ஈரானின் கிழக்கு அசர்பைஜன் பகுதியைச் சேர்ந்த காமனே பகுதியைச் சேர்ந்த தேயிலை வியாபாரிக்கு மகனாகப் பிறந்த மௌசவி தனது உயர்நிலை படிப்புகளின் போதே தலைநகர் டெஹரானிற்கு குடியேறியவர். இவர் உசுலி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். ஈரானின் உயர் தலைவர்களில் ஒருவரான அலி காமேனியின் உறவினரும் கூட. கட்டிடவியலில் பட்டம் பெற்ற மௌசவி ஒரு ஓவியரும்கூட. இளம் வயதில் மதவாத தேசிய கட்சியான ஈரான் விடுதலை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவராகவும், இஸ்லாம் மாணவர் சங்கத்தில் தீவிர உறுப்பினராகவும் இருந்தவர். தனது அரசியல் நாயகனாக சே குவேராவை குறிப்பிடும் மௌசவி 1981-ல் ஈரானின் 79/வது பிரதமராகி 1989 வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் நீடித்தார்.

6 comments:

  1. சென்ற மாதத்திலியே படித்தேன்
    நெஞ்சை உறையவைக்கும் கட்டுரை.

    ReplyDelete
  2. இங்கும் இதைப் போல அராஜகங்கள் நடக்கத்தான் செய்கிறது,ஒரே ஆறுதல் இன்னும் நம்மூர்க்காரர்கள் இந்த அளவுக்குத் துணியவில்லை.:-((((

    ReplyDelete
  3. அதே புத்தகத்தில் மலேசியாவில் ஒரு பெண்ணுக்கும், சூடானில் ஒரு பெண்ணுக்கும் நடந்த கொடுமைகளை பார்த்தீர்களா!?

    ReplyDelete
  4. ஈரான் இப்போதென்ன பிச்சைக்கார நாடுகளின் பட்டியலிலா இருக்கிறது?
    அந்த கிழட்டு கோமாளி அமெரிக்க அடிவருடி.
    இந்த தேர்தலுக்குப்பின் நிறைய எதிர்ப்பார்ப்புகளோடு நாக்கை தொங்கப்போட்டு காத்திருந்த அமெரிக்காவின் டவுசர் கிழிந்ததுதான் மிச்சம்.

    ReplyDelete
  5. வணக்கம் வாசு,... உறைய வைக்கும் கட்டுரை...

    ReplyDelete
  6. வெள்ளி கிழமை வார‌ இறுதி ஆனால் ம‌ன‌ம் இறுக்க‌மாக‌ உண‌ர்க்கிறேன் இந்த‌ க‌ட்டுரையை ப‌டித்து. உன்ன‌த்த‌த்தில் க‌விதை வ‌ந்த‌மைக்கு வாழ்த்துக‌ள்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname