Monday, September 7, 2009

திசநாயகம் : நெறிபடும் ஊடகவியலாளர் குரல்வளைகள்



இக்கட்டுரையை வெளியிட்ட ‘உயிரோசை‘ இணைய இதழிற்கு நன்றி.

நெறிக்கப்படும் குரல்வளைகள்................................................. ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

press 2 ஒடுக்குமுறைகளின் உச்சகட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இலங்கை ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் கொடுஞ்சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையில் கட்டுரை எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 26 ஆண்டு கால இன உரிமைப் போராட்டத்தை, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை கொன்று குவித்து வெற்றியைப் பறித்துவிட்டதாக குதூகலம் கொண்டிருக்கும் இலங்கை அரசு ஊடகங்களின்பால் கொண்ட பயஉணர்வு காரணமாக அவர்களை தொடர் அச்சுறுத்தல்களுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கி வருகிறது. ஊடகவியல் ஒழுங்குணர்வுடன் நேர்மையாக செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்களை கொடுஞ்சட்டங்களால் ஒடுக்கி, சிறையில் அடைத்து மூலம் உளச்சிக்கலுக்கு உள்ளாக்குவதும், உயிரிழப்பு ஏற்படுத்துவதும் இலங்கையைப் பொறுத்தவரையில் சமகால யதார்த்த நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

tiss2 ‘North Eastern’ ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டு, இதழின் பத்தி எழுத்தாளராகவும் இருந்த திசநாயகம் தமிழ்த் தேசிய பிரச்சனைகளில் ஆர்வம் கொண்டவராயிருந்தார். கொழும்பிலிருந்து வெளியான ஆங்கிலப் பத்திரிகை என்பதால் திசநாயகத்தின் கட்டுரைகள் உடனடியாக வெளிநாட்டுத் தூதரகங்கள் வாசித்தறிய ஏதுவாய் இருந்ததே இலங்கை அரசுக்கு பல சிக்கல்களை உருவாக்குவதாய் இருந்தது. திசநாயகம் 2006-ம் ஆண்டு தனது ‘North Eastern’ ஆங்கிலப் பத்திரிகையில் விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, பயங்கரவாதத்தை தூண்டும் கட்டுரை எழுதியதாகவும், சமூக உணர்வுகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பத்திரிகை நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப் பெற்றிருக்கிறார்.

‘சண்டே டைம்ஸ்‘ பத்திரிகையின் பத்தி எழுத்தாளரான திசநாயகம் ‘North Eastern’ ஆங்கில சஞ்சிகை மற்றும் ‘Outreach’ என்ற இணைய இதழ் இரண்டின் ஆசிரியப் செயல்பட்டார். அரசியல் நுண்விமர்சனங்களையும், கருத்தாடல்களையும் கொண்ட தரமான ஒரு தமிழ்த் தேசிய ஆதரவு இதழாக ‘North Eastern’ வெளிவந்தது. தமிழ் மக்களையும், உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து தொடர் விழிப்பு நிலையில் வைத்திருந்த ஊடகவியலாளர் திசநாயகத்தின் கைது செய்து, 20 ஆண்டு கொடுஞ்சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

IFJ 10 கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி இலங்கை பயங்கரவாத புலனாய்வு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் கட்டுரை வெளியிட்டதற்காக ஐந்து ஆண்டுகளும், பயங்கரவாதத்தை ஆதரித்து பணம் பெற்றுக்கொண்டு இதழ் நடத்தியதற்கான ஐந்து ஆண்டுகளும், பத்திரிகையை வெளியிட்டதன் வாயிலாக சமூக உணர்விற்கு களங்கம் விளைவித்தற்காக பத்து ஆண்டுகளும் கொழும்பு நீதிமன்றத்தின் தீர்ப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டிருக்கிறது.

2006-ல் ‘North Eastern’ பத்திரிகையின் தலையங்கத்தில், “வடக்கு மக்களுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு ஏதும் வழங்காது என்பது வெளிப்படையானது. காரணம், மக்கள் மீதான நிகழ்த்தப்படும் உயிர்ப்பலிகளின் முக்கியப் பிரதிநிதிகளே இலங்கை அரசின் ராணுவம்தான்“ என்று திசநாயகம் எழுதினார். அதே ஆண்டில் கிழக்கு வாகரல் பகுதி நிவாரணப் பணிகளை குறித்து “அப்பாவித் தமிழ் மக்கள் தொகையை குறைப்பதையே நோக்கமாகக் கொண்டு, இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை வழங்காமலும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யாமலும், செய்யாமலுமிருக்கிறது“ என்று திசநாயகம் விமர்சித்தார். திசநாயகம் எழுதிய இரண்டு கருத்தாக்கங்களின் பேரில், பயங்கரவாதத்தை ஆதரித்து எழுத நிதி பெற்றுக் கொண்டு பத்திரிகை நடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

tiss1 சர்வதேச அளவில் இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலையை உணரச்செய்யும் விதத்தில் திசநாயகத்தின் கட்டுரைகள் அமைந்ததன் பொருட்டு, சுமார் 425 நாட்கள் சிறையிலிருத்தப்பட்டு உடல், மனரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு தற்போது 20 ஆண்டுகள் கொடுஞ்சிறை வழங்கப்பெற்றிருக்கிறார். நீதித்துறையினை தனது சுயலாபத்திற்காக சாதகப்போக்கில் பயன்படுத்திக் கொண்ட இலங்கை அரசு எதிர்ப்புக்குரல்களுக்கு செவிமடுக்காமல் திசநாயகத்தினை தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு ஆதரவாக, பன்னாட்டு ஊடகக்குழுக்கள் சார்பில் எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து எழுந்தன.

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு 30 வருட காலத்தில் அச்சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட முதல் ஊடகவியலாளர் திசநாயகம் ஒருவர் மட்டுமே. இதற்கு பின்புலமாக கருதப்படுவது யாதெனில், கடந்த மே மாதம் 9-ம் தேதி நிகழ்ந்த உலக ஊடக சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பாரக் ஒபாமா “உண்மையான செய்திகளை வெளியிடுவதில் சமூக உணர்வு ஆர்வத்தோடு செயலாற்றியது தவிர திசநாயகம் போன்ற ஊடகவியலாளர்கள் வேறு குற்றம் ஏதும் செய்யவில்லை“ என்று குறிப்பிட்டு பேசினார்.

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் இதுவரை எட்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல்களின் காரணமாக அதிகம்பேர் வெளியேறியுள்ளனர். தற்போது திசநாயகத்திற்கு 20 ஆண்டுகள் கொடுஞ்சிறை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஊடக சுதந்திரம் என்பதும், ஊடகங்களின் சமூக உணர்வு என்பதும் கேள்விக்குறியான நிலையில் உள்ளது என்பதே உண்மை

tiss12 சமூக அரசியலில் பட்டமும், பன்னாட்டு தொடர்பியலில் முதுகலைப் பட்டமும் பயின்ற 45 வயதாகும் ஜே.எஸ்.திசநாயகம், வைஜயா நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தில் ‘சண்டே டைம்ஸ்‘ மற்றும் ‘டெய்லி மிரர்‘ பத்திரிகைகளில் ஊடகவியல் துறையில் தடம் பதித்தார். ‘North Eastern’ ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும், 2007-ம் ஆண்டு வரை ‘சண்டே டைம்ஸ்‘ பத்தி எழுத்தாளராகவும் நீடித்தார். 2007-ல் ஜெர்மனைச் சேர்ந்த ‘FLICT’ என்ற அமைப்பின் நிதியுதவியுடன் ‘Outreach’ என்ற இணைய தளத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

நியூயார்க்கைச் சேர்ந்த ‘பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு‘ என்ற அமைப்பு திசநாயகத்திற்கு 2009ம் ஆண்டிற்கான ‘பன்னாட்டு ஊடக சுதந்திர விருது‘ அளித்திருக்கிறது.

“பயங்கரவாதத்தின் ஒடுக்குமுறை எந்த அளவிற்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகிறது என்பதை உலகளாவிய கவனத்திற்கு உட்படுத்தவே திசநாயகத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது“ என்று இவ்வமைப்பின் இயக்குநர் ஜோல் சைமன் தெரிவித்திருக்கிறார்.

“பழிவாங்குவதையும், நீதி வழங்குவதையும் ஒரே கண்ணோட்டத்துடன் கொண்டு திசநாயகம் வழக்கில் இலங்கை நீதிபதிகள் செயல்பட்டிருக்கிறார்கள்“ என பிரான்சின் ‘எல்லைகளற்ற ஊடகவியலாளர்‘ என்ற சர்வதேச பத்திரிகையாளர் விழிப்புணர்வு குழு கருத்து தெரிவித்துள்ளது. ஊடக ஒழுக்கவியலுக்காகவும், அர்ப்பணிப்பிற்காகவும் இந்த அமைப்பின் சார்பில் திசநாயகம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

press 1 பன்னாட்டு ஊடக சுதந்திர கூட்டமைப்பு சார்பிலும், பல்வேறு பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் திசநாயகத்தை நிபந்தனையற்ற விடுதலை செய்யவும், பொது மன்னிப்பு வழங்கவும் கோரியுள்ளன. திசநாயகத்திற்கு உடனடியாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது இயலாதது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும் திசநாயகத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டப்பட்டுள்ளது. இனப் படுகொலையின் தொடர்ச்சியாக நீளும் இலங்கை அரசின் கொடுங்கரங்கள் ஊடகவியலாளர்களின் குரல்வளைகளை நெறித்து ஒடுக்குவது நிறுத்தப்பட வேண்டும்.

-00000-

8 comments:

  1. இனப் படுகொலையின் தொடர்ச்சியாக நீளும் இலங்கை அரசின் கொடுங்கரங்கள் ஊடகவியலாளர்களின் குரல்வளைகளை நெறித்து ஒடுக்குவது நிறுத்தப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. பத்திரிகை சுதந்திரம் என்பதை ஆழக் குழிதோண்டி புதைத்துவிட்டார்கள். இந்த மாதிரி யாரும் எழுதிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பத்திரிகையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் போலும். இதையெல்லாம் கேட்பதற்கு உலகநாடுகள் வக்கற்று இருப்பதை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  3. வேதனைப் பெருமிதம்
    வலி நிரப்பி போகும் கண்ணீரின் உப்பு

    ReplyDelete
  4. இலங்கை அரசின் இதுபோன்ற கொட்டங்களை அடக்கவேண்டும். (ராஜ)பக்சேவின் (ராஜ என்று எழுதுவத்றகே கேவலமாக உள்ளது) கொடுங்கோலாட்சியை நிறைவுக்குக் கொண்டுவரும் நாள் விரைவில் வரட்டும். திசநாயகம் போற்றுதலுக்குரிய பணி வணங்கக்கூடியதே!

    ReplyDelete
  5. //பன்னாட்டு ஊடக சுதந்திர கூட்டமைப்பு சார்பிலும், பல்வேறு பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் திசநாயகத்தை நிபந்தனையற்ற விடுதலை செய்யவும், பொது மன்னிப்பு வழங்கவும் கோரியுள்ளன. திசநாயகத்திற்கு உடனடியாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது இயலாதது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும் திசநாயகத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டப்பட்டுள்ளது. இனப் படுகொலையின் தொடர்ச்சியாக நீளும் இலங்கை அரசின் கொடுங்கரங்கள் ஊடகவியலாளர்களின் குரல்வளைகளை நெறித்து ஒடுக்குவது நிறுத்தப்பட வேண்டும்.//

    இலங்கை அரசு பத்திரிக்கையாளர்களிடம் காட்டும் அடக்குமுறைக்கு ஏன் இன்னும் உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது புரியவில்லை

    ReplyDelete
  6. வாசு அண்ணா நிறைவான காலத்திற்கேற்ப தேவையான பதிவும் கூட.பாருங்கள் செய்திகளை.எங்கள் நாட்டின் நீதியும் நேர்மையும் இப்படித்தான் இருக்கு.

    தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வழிகாட்டிய அமைச்சர் முரளிதரன் தேசிய வீரராக கருதப்படு வேண்டும் என ஆளும் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

    சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
    இன்று ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க நினைவு கேட்போர் கூடத்தில் வைத்து இவர்களுக்கான பட்டமளிப்பை கொழும்புப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

    நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்மைபாட்டையும், சமூகங்களிடையே அமைதியையும் ஏற்படுத்தியதற்காகவே இவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சட்டம் தொடர்பில் கௌரவ கலாநிதி பட்டமும் ,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு தர்ஷன சூரி என்ற கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டன.

    ReplyDelete
  7. கடந்த சிலவருடங்களாகவே இலங்கையில் ஊடகத்துறையில் இருப்பவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் அதிகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அடக்குமுறை மிக அதிகம் என்றே தோன்றுகிறது. திச நாயகம் விரைவில் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname