Monday, February 6, 2012

பின்னற் சுழல்



மஞ்சள் நிற குறுவாழைப்பழங்களாய் பழுத்திருந்த பஞ்சு மர இலைகள்
சற்றே வேகமாய் வீசிய காற்றை இறுகப் பற்றியபடி
அலைபாய்ந்து கொண்டிருந்ததைக் கண்டேன்
சிலந்தியைப் போல் பின்னிச் சுழல்கிறது நினைவு

நீருக்குள் முழ்கிக் கொண்டிருப்பவனின் பற்றுதல் தேடும் அபயக்கரம்
விரி தோகையுடன் மருண்டு விழிக்கும் தோகைக் கண்
சற்றைக்கு முன் இறந்த பூனையின் காற்றிலசையும் ரோமக்கற்றை
படகை உந்திச் செல்ல நீராழத்தில் விசையூட்டும் துடுப்பு
இரையடைய வழியற்று குறுகுறுக்கும் மழை நேரப்பறவை
பாசி வாசம் வீசும் ஊர் எல்லை ஆத்திக் குட்டை
ஏழு புரவியேறிப் பறக்கிற நிலைக்காட்சி
அடர் காட்டில் பிரசவித்துக் கொண்டிருக்கிற யானை
நிரம்பிக் கொண்டிருக்கிற பாத்திரம்
சூன்யத்தில் உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கும் சுவாச ஒலி
அடக்கிய சிறுநீர் பிரியும் சுகம்
கம்பி வளையத்துள் கழுத்திறுக கழியில் சொருகப்பட்டு தலைகீழாய் 
தொங்கிக் கொண்டிருக்கும் ரோஜா நிற உதடு கொண்ட பன்றிக்குட்டி
திரி நுனியில் படர்ந்தொளிரும் சுடர்
பிச்சாண்டியின் தாழ் திறக்கயியலா கடுந்துயர்
உதட்டருகில் குழந்தையின் பிஞ்சுப் பாதம்
அதிராமல் நிலைத்திருக்கும் அந்தரங்கம்
மலர்ந்த உன் ஒற்றைப் பெரு விழி
கைகளில் நெளியும் ரேகையோட்டம்
தூங்காத காற்று
சூன்யம்
சுவை
கடவுள்
துயரம்
காதல்
பிரிவு

பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உச்சிக் கூரான ஓங்கி உயர்ந்த அடி பருத்த அப் பஞ்சு மரமும்
தன்னைச் சுற்றிலும் மிதந்து கொண்டிருக்கும்
இலைகளை சலனமற்று பார்த்துக் கொண்டேயிருக்கிறது.




பொன்.வாசுதேவன்

5 comments:

  1. ஒவ்வொரு நினைவுகளும் மைல்கல் நீளத்துக்கு கொண்டு செல்கிறது காட்சியையும் பொருளையும்..

    //இலைகள் வேகமாய் வீசிய காற்றை இறுகப் பற்றியபடி // மிகவும் ரசித்த வரி..

    ReplyDelete
  2. பிரமாதம் அண்ணே...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname