Sunday, January 29, 2012

சொலவடை


கிராமங்களில் பேச்சு வாக்கில் பொசுக்கு பொசுக்கென சில வார்த்தைகள் சொல்வாங்க. எல்லாம் அவங்க வாழ்ந்த அனுபவத்திலயும், மூத்தோரை சொல்கேட்டு வழிவழியா புழங்கின வார்த்தைங்கதான். ஆனா நறுக்குன்னு இருக்கும். அதைத்தான் சொலவடைன்னு சொல்வாங்க.. கிட்டத்தட்ட பழமொழிகள் போலத்தான். எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன். தெரிஞ்சதுன்னா படிச்சது, கேட்டதுதான். உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லுங்க.. வேறென்னத்த கண்டோம்.

சொலவடை சிலத படிப்போமா..

• படுத்துகிட்டு தூங்குமாம் நாயிநின்னுகிட்டு தூங்குமாம் பேயி..

• கோவணத்துல காசிருந்தாகோழிய கூப்பிட பாட்டு வரும்

• கூந்தலிருக்கற சீமாட்டி கொண்டையும் முடிவா.. அள்ளியும் போட்டுக்குவா..

• வௌக்கு மாத்த கட்டி வெக்கலன்னா அது வேலைக்காகாம போயிரும்.

• உடுத்த சீலையில்லன்னு சின்னாத்தா வூட்டுக்க போனாஅவ ஈச்சம்பாய சுத்திகிட்டு எதுக்க வந்தாளாம்..

• அரிசின்னு அள்ளி பாப்பாரும் இல்ல. உமின்னு ஊதிப் பாப்பாரும் இல்ல.

• ஊசிப் போன மொச்சைய ஒழக்கு வாங்காதவன் பால்கோவா குடு பத்து ரூவாக்கின்னானாம்

• எள்ளு எண்ணைக்குகாயிது, எலிப் புழுக்கை எதுக்கு காயிது.

• புள்ள வேணுங்குறவ வாயக் கட்டணும்; புருசன் வேணுங்குறவ வயத்தக் கட்டணும்.

• ஓடை மரத்துல ஓநாய் ஏறலாம். பனை மரத்துல பன்னி ஏற முடியுமா?

• கொண்டவனை அறிஞ்சுதான் கூரை ஏறி சண்டை போடணும்

•  அக்கப்போரு பிடிச்ச நாயிவைக்கப் போர்ல படுத்துக்கிட்டுதானும் திங்காதாம்திங்கிற கழுதையவும் திங்க விடாதாம்

• மேஞ்ச மாட்டக் கெடுத்துச்சாம் மெனக்கெட்ட மாடு.

• காய்ச்சுவார் காய்ச்சினால்கழுத மூத்திரம் கூட நல்லாயிருக்கும்.

• மக வரமுன்ன பூட்டிக்க கழத்திக்க; மருமக வரமுன்ன உண்டுக்க திண்டுக்க.

• வெல்லந் தின்னவனை விட்டுட்டு வெரல் சூப்பினவனை புடிச்சிட்டு போனா எப்படி?

• பார்த்துக் கெட்டது புள்ள;பாராமக் கெட்டது பயிறு.

• பேச்சுப் பிடிச்ச நாயிவேட்டைக்கு உதவாது .

• குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டேன். மலடுன்னு இல்லாம பிள்ளப் பெத்துக்கிட்டேன். அதுக்கு மேல ஒண்ணுமில்ல

• எட்டி எட்டிப் பாத்தவளுக்கு எட்டுப் பணியாரம். முட்டுத் தேயச் சுட்டவளுக்கு மூணு பணியாரம்.

• வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம்அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்

• கழுத கோவம் கத்துனா தீரும்.

• நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா சிவலிங்கம்னு தெரியுமா.

• வந்தன்னைக்கு வாழையில. மறுநா தைய இல. மூணாம் நா கையில.

• அம்மி அடிச்சன்னைக்கே, குழவியும் அடிச்சு இருப்பான்.

• தட்டிபோட்ட ரொட்டிய பெரட்டிப் போட நாதியில்ல.

• நுங்கு வெட்டினவன் ஒருத்தன். நோண்டித் திங்கினவன் இன்னொருத்தன்.

• விதை ஒண்ணு போட சுரை ஒண்ணா மொளைக்கும்.

இப்போதைக்கு இம்புட்டுதான்.. மிச்சம் மீதிய நீங்க சொல்லுங்க..நன்றி : பழமைபேசி, மாதவராஜ், சகோதரன், வாசித்த புத்தகங்கள் மற்றும் கூகுளாண்டவர்.

1 comment:

 1. vayithup pillaiyoda malaiyeridalaam,
  aana,kaip pillaiyoda varappera mudiyaathaam.


  avasarathula andaakkulla kooda kai pokaathaam.

  vaithiyanukku kodukirathai vaaniyanukku koduthiralaam.  neenga yezhuthiyirunthavai yellaame rasithen.
  :)

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname