Saturday, October 24, 2009

‘அகம்‘ லயித்த ‘நாழிகை‘கள்

எனது 50-வது பதிவும் நான் கண்ட பதிவுலகமும் என்ற பதிவின் வாயிலாக நண்பர் குளோபன் அவர்கள் அறிமுகமானார்.  பதிவுலகம் பற்றிய அவரது நுட்பமான ஆய்வுப்பார்வை என்னை ஈர்த்தது.  எப்போதாவது மட்டுமே எழுதும் அவரது படைப்புகளை தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். இருமுறை நேரிலும் சந்தித்ததுண்டு. அகநாழிகை இதழைப் பற்றி குளோபன் எழுதியிருக்கும்  ‘அகம்‘ லயித்த ‘நாழிகை‘கள் என்ற பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குளோபனுக்கு நன்றி.

‘அகம்‘ லயித்த ‘நாழிகை‘கள்

‘அகநாழிகை’ என்ற சமூக கலை இலக்கிய இதழை வாசித்த கணங்களில் ஏற்பட்ட அனுபவம் தான் இந்தப் பதிவின் தலைப்பு.

தொடர்ந்து ஊடகம் பயிலும் மாணவனான எனக்கு, சிற்றிதழ்கள் வாசிக்கும் முனைப்பு இருந்ததில்லை. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று… எனக்கு சிற்றிதழ்களின் எழுத்துகளை உள்வாங்கும் திறனில்லை என்ற நினைப்பு. மற்றொன்று… அத்தகைய எழுத்துகளை வாசிப்பதால், எனது கிறுக்கல்களும் எளிமை என்ற அடையாளத்தில் இருந்து விலகிப்போய்விடுமோ என்ற அச்சம்.

அண்மைக்காலமாக சிற்றிதழ்கள் பக்கம் வலம் வராத காரணத்தால், ‘அகநாழிகை’ இதழை வாசித்ததால் உண்டான அனுபவத்தைப் பதிவதில் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது.

அந்த இதழை வாசித்ததால் உண்டான அனுபவத்தைப் பதிவு செய்யப் போக, அதனை ‘விமர்சனம்’ என்கிற ரீதியில் சிலர் எடுத்துக்கொள்ளக் கூடுமோ என்ற சந்தேகமே, எனது தயக்கத்துக்குக் காரணம்.

எனவே, அகநாழிகை குறித்த இந்தப் பதிவை, அந்த இதழின் வாசகனுடையை அனுபவம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்க வேண்டுமே தவிர, விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

aga

*

மாலை 5 மணி. கேரளாவுக்கான ஜன்னலோர ரயில் பயணம். நான் என்றும் விரும்பும் நகர சப்தங்கள் குறையத் தொடங்கி, எப்போதாவது விரும்புகின்ற தனிமையையும் அமைதியும் சூழ்ந்தபோது, அகநாழிகையை புரட்டத் தொடங்கினேன்.

*

முதற்பக்கம்…

இதழின் முதற்பக்கமே நெருக்கத்தை மிகுதியாக்கியது. பதிவுலகில் அவ்வப்போது வாசிக்கும் எழுத்துகளின் சொந்தக்காரர்கள் சிலரது பெயர்களைக் கண்டு ஆர்வத்துடன் புரட்டத் தொடங்கினேன்.

*

முதலில் வாசித்தது, அஜயன்பாலா சித்தார்த்தனின் ‘தமிழ்சினிமாவும், தமிழனும், சில மசால்வடைகளும்’. நான்கே முக்கால் பக்கங்களில் 500 பக்கங்களில் எழுதப்பட்ட தமிழ் சினிமா ஆய்வுக்கட்டுரையை படித்த அனுபவம். மிகச் சுருக்கமானதும் எளிமையானதுமான விவரிப்பாக இருந்தாலும், அதில் பொதிந்திருந்த தகவல்களைத் திரட்ட பல காலம் ஹோம்வொர்க் செய்திருக்க வேண்டும். ஆனால், பத்து ஆண்டு கால தமிழ் சினிமாவில் சிறந்தவையாக 18 படங்களை மட்டும் தேர்வு செய்திருந்த ‘சுருக்கம்’ மட்டும் ஏமாற்றமளித்தது.

*

கதைகள், கட்டுரைகளுக்கு இடையிடையே கவிதைகளை வாசித்தேன். தமிழ்நதி தொடங்கி முத்துசாமி பழனியப்பன் வரை (முதல் பக்கத்தில் இருந்த வரிசையின் படி) 30 கவிதைகள். ‘இனிய கீதம் சோகமுடைத்து,’ என்பதைப் போல் சில கவிதைகள் மனத்தை கணமாக்கின; படித்த முடித்த போதுதான் பல கவிதைகள் துவங்கின. அதாவது, கவிதையைப் படித்து முடித்தவுடன், அது சார்ந்து சிந்திக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இதுவே, இலக்கியத்தின் முக்கிய நோக்கமென கருதுகிறேன்.

ஒவ்வொரு கவிதையும் தந்த அனுபவத்தை பிசிறின்றி வெளிப்படுத்த இயலாதவன் என்பதால் இங்கு சுருக்கம் என்பது அவசியமாகிறது.

*

எனக்கு அருகாமை உணர்வை ஏற்படுத்திய இன்னொரு விஷயம், குறுப்பட பகிர்வுகள். ‘சியர்ஸ்’ குறும்படத்தின் இசையை, நண்பர் அனில் அமைத்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த தருணத்தை நினைவுகூரும் வாய்ப்பு ஏற்பட்டது மகிழ்வுக்குரியது. மறைபொருள், விபத்து ஆகிய படங்களையும் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் உண்டானது.

*

வெ.சித்தார்த்தின் ‘அலகிலா சாத்தியங்களினூடே’ கட்டுரை, இலக்கியத்தை வாசித்தல் குறித்த புரிதலை அதிகப்படுத்தியது. வளர்மதியின் ‘பரமார்த்த குருவும்…’ கட்டுரையை ஏனோ இன்னும் படிக்கவில்லை. காரணத்தை ஆராயவும் மனமில்லை. இன்னொரு தனிமைச் சூழலில் படிப்பேன் என்று நம்புகிறேன்.

நதியலையின் ‘பிரிவில் கிளர்ந்தெழும் நெருக்கம்’ உண்மையில் நெருக்கத்தை உண்டாக்கியது. ‘மகோனியா’ என்ற டச்சுத் திரைப்படத்தைப் பற்றியது அக்கட்டுரை. அந்தப் படத்தை அண்மையில் தான் பார்த்தேன். இந்நேரத்தில், தற்காலிகமாக ‘வோர்ல்ட் மூவீஸ்’ சேனலை நல்கிய எங்கள் ஏரியா கேபிள் ஆபரேட்டருக்கும், அந்த நேரத்தில் ‘மகோனியா’ படத்தை இட்ட ‘வோர்ல்ட் மூவீஸ்’ சேனக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அற்புதமான நெகிழவைத்தப் படைப்பு. அந்தப் படத்தில் உள்ள மூன்றாவது கதை ஏனோ இந்தக் குறுக்குப் புத்திக்காரனுக்கு “இயற்கை” படத்தை நினைவூட்டியது. மகோனியா பற்றிய நதியலையின் விவரிப்பு, அந்தப் படத்தைப் பார்க்காதவருக்குக் கூட நெருக்கத்தைத் தரக்கூடும். அந்தக் கட்டுரையை வாசிக்க…http://nathiyalai.wordpress.com/2009/10/14/magonia/

*

“ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரலை” கேட்க வாய்ப்பளித்த வெ.அலெக்ஸ் மற்றும் அகநாழிகை ஆசிரியருக்கு சிறப்பு நன்றியை உரித்தாக்குகிறேன்.

*

ஆதிமூல கிருஷ்ணனின் அனுபவத்தை உணர முடிந்தது, வலையுலகம் பற்றிய அறிமுகம் இருந்ததால்.

*

கெளதம சித்தார்த்தன், யுவன்சந்திரசேகர், எஸ்.செந்தில்குமார், விஜயமகேந்திரன். ஜ்யோவ்ராம் சுந்தர், யுவகிருஷ்ணா, ரா.கிரிதரன் ஆகியோரது சிறுகதைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட களத்தை வெளிப்படுத்தியதே தனி அனுபவம் தான்.

யுவகிருஷ்ணாவின் கிளிஜோசியத்தைப் பார்க்க.. அல்ல, படிக்க…http://www.luckylookonline.com/2009/09/blog-post_08.html

*

தெரிந்தோ தெரியாமலோ அது நிகழ்ந்தது. அந்த ரயில் பயணத்தில் நான் கடைசியாகப் படித்தது, பாவண்ணனின் ‘பூனைக்குட்டி’ சிறுகதை. கதையைப் படித்த முடித்த பிறகு… …………….. ………….. ………………. …………………. (ஆம், செயலற்றுப்போக நேர்ந்தது).

ஒருவேளை ‘பூனைக்குட்டி’யை முதலில் படித்திருந்தால், அந்த ரயில் பயணத்தில் அகநாழிகையின் மற்ற படைப்புகளைப் படிக்காமல் போயிருப்பேனோ?

*

வாசிக்க சில இதழ்கள் பக்கத்தில் சக இதழ்களின் விவரங்களை அளித்திருப்பது, என்னைப் போன்ற பலருக்கும் பயன் தரக்கூடும்.

*

அகநாழிகை தந்த அனுபவம், டிசம்பர் மாதமும் கேரளாவுக்கு ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையை உண்டாக்கியிருக்கிறது.

அகநாழிகை இதழ் குறித்து அறிய…http://www.aganazhigai.com/2009/10/2009.html

*

என் எண்ணம் சரியானதா? தவறானதா? என்று தெரியவில்லை. இருந்தாலும் பதிந்துவிடுகிறேன்…

சிற்றிதழ்களைப் பொறுத்தவரையில், எழுத்துகள் எளிமையாக இருக்கும்பட்சத்தில் இலக்கியம் வாசிப்போரின் எண்ணிக்கை மிகுதியாகலாம் என்றே தோன்றுகிறது.

ஒரு சமூகம் சிந்திக்கும் ஆற்றல் மிகுந்த மக்களால் நிறைந்திருக்க வேண்டுமென்றால், அதற்கு முக்கிய பங்களிப்பாக இலக்கியம் மிகுதியாக படைக்கப்பட்டுக்கொண்டே இருத்தல் வேண்டும் என்றே நம்புகிறேன். அந்த இலக்கியம், சமூகத்தில் உள்ள அனைவரையுமே சென்றடைய எளிமையான எழுத்தே சிறந்த வழிகளுள் ஒன்றாக இருக்கக் கூடும்!

*

- குளோபன்

8 comments:

  1. /சிற்றிதழ்களைப் பொறுத்தவரையில், எழுத்துகள் எளிமையாக இருக்கும்பட்சத்தில் இலக்கியம் வாசிப்போரின் எண்ணிக்கை மிகுதியாகலாம் என்றே தோன்றுகிறது. ஒரு சமூகம் சிந்திக்கும் ஆற்றல் மிகுந்த மக்களால் நிறைந்திருக்க வேண்டுமென்றால், அதற்கு முக்கிய பங்களிப்பாக இலக்கியம் மிகுதியாக படைக்கப்பட்டுக்கொண்டே இருத்தல் வேண்டும் என்றே நம்புகிறேன். அந்த இலக்கியம், சமூகத்தில் உள்ள அனைவரையுமே சென்றடைய எளிமையான எழுத்தே சிறந்த வழிகளுள் ஒன்றாக இருக்கக் கூடும்!/

    judicious analysis.

    ReplyDelete
  2. சிறப்பானதொரு கருத்துகள். குளோபனின் பல வரிகள் அப்படியே என் மனதிலிருப்பவை.!

    ReplyDelete
  3. //சிற்றிதழ்களைப் பொறுத்தவரையில், எழுத்துகள் எளிமையாக இருக்கும்பட்சத்தில் இலக்கியம் வாசிப்போரின் எண்ணிக்கை மிகுதியாகலாம் என்றே தோன்றுகிறது.//
    எவ்வளவு உண்மையான வரிகள். 'பூனைக்குட்டியை' நான் படித்தபோது ஏற்பட்ட
    உணர்வும் இத்தகையது தான். நல்லவேளை நானும் இறுதியாக (இரவில்) தான் படித்தேன். 'அகநாழிகை' படித்த ஏற்பட்ட அநேக உணர்வுகளை அப்படியே
    எழுதி விட்டது போல் இருக்கிறது.
    குளோபனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. "சிற்றிதழ்களைப் பொறுத்தவரையில், எழுத்துகள் எளிமையாக இருக்கும்பட்சத்தில் இலக்கியம் வாசிப்போரின் எண்ணிக்கை மிகுதியாகலாம் என்றே தோன்றுகிறது.

    இலக்கியம், சமூகத்தில் உள்ள அனைவரையுமே சென்றடைய எளிமையான எழுத்தே சிறந்த வழிகளுள் ஒன்றாக இருக்கக் கூடும்!"

    மேற் சொன்னவையே என் கருத்துக்களும் கூட...ஒரு வட்டத்திற்கு என்று எழுதாமல் எல்லோருக்கும் எழுதினால் நல்லது.

    ReplyDelete
  5. //கவிதையைப் படித்து முடித்தவுடன், அது சார்ந்து சிந்திக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இதுவே, இலக்கியத்தின் முக்கிய நோக்கமென கருதுகிறேன்.//

    இதுதான் அந்த‌ க‌விதையின் வெற்றி.குளோபனுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் "அக‌ம் ல‌யித்த‌ நாழிகையாக" மாற‌ வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  6. மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் வாசு

    ReplyDelete
  7. படித்த முடித்த போதுதான் பல கவிதைகள் துவங்கின. அதாவது, கவிதையைப் படித்து முடித்தவுடன், அது சார்ந்து சிந்திக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இதுவே, இலக்கியத்தின் முக்கிய நோக்கமென கருதுகிறேன்.

    அகநாழிகை முத‌ல் இதழில் எழுதியிருந்த முப்பது கவிஞர்கலா கவிதைகளை வாசித்தேன்.

    ஒவ்வொரு கவிதையும் தந்த அனுபவத்தை பிசிறின்றி வெளிப்படுத்த இயலாதவன் என்பதால் இங்கு சுருக்கம் என்பது அவசியமாகிறது.

    முத்துசாமி பழனியப்பன் சொன்னது போல

    இலக்கியம், சமூகத்தில் உள்ள அனைவரையுமே சென்றடைய எளிமையான எழுத்தே சிறந்த வழிகளுள் ஒன்றாக இருக்கக் கூடும்

    அகநாழிகையின் பலமே இதுதான்.

    ReplyDelete
  8. //
    சிற்றிதழ்களைப் பொறுத்தவரையில், எழுத்துகள் எளிமையாக இருக்கும்பட்சத்தில் இலக்கியம் வாசிப்போரின் எண்ணிக்கை மிகுதியாகலாம் என்றே தோன்றுகிறது. ஒரு சமூகம் சிந்திக்கும் ஆற்றல் மிகுந்த மக்களால் நிறைந்திருக்க வேண்டுமென்றால், அதற்கு முக்கிய பங்களிப்பாக இலக்கியம் மிகுதியாக படைக்கப்பட்டுக்கொண்டே இருத்தல் வேண்டும் என்றே நம்புகிறேன். அந்த இலக்கியம், சமூகத்தில் உள்ள அனைவரையுமே சென்றடைய எளிமையான எழுத்தே சிறந்த வழிகளுள் ஒன்றாக இருக்கக் கூடும்!
    //

    எல்லா எழுத்தாளர்களும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையான முறையில் எழுத வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது.

    பிரச்சினை உங்களது வாசிப்பனுவக் குறைவாகவும் இருக்கலாம்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname