Saturday, June 20, 2009

விதியின் கையில்



நம் இதயம் கடவுள், மகிழ்ச்சி, இன்பம், துன்பம், பக்தி, பயம் என்பதான முடிவில்லா உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது. அமைதியான மனம் இதுதான் நம் எல்லோரின் இலக்கும். முழு ஈடுபாடில்லாமல் நாம் செய்கிற எந்த ஒரு செயலும் அபத்தமானதாக தவறான விளைவுகளை அளிக்கக்கூடியதாக ஆகிவிடுகிறது.



மன அமைதியைப் பெற்றவர்களின் கதைகள் பற்றி நாம் சிலரைதான் வரலாறுகளிலிருந்து உதாரணமாகப் பெற்றிருக்கிறோம். இதற்கு காரணம் வரலாறு வன்முறை பற்றி மட்டுமே பெரும்பாலும் பதிவு செய்துள்ளது. அமைதியைப் பற்றிய பேச்சு அதிகம் இல்லை. அதை பதிவு செய்வது கடினம். மனதை வென்றவர்கள் நம்முடைய முட்டாள்தனமான உலகில் பிரவேசிப்பதை, பிரபலமாவதை விரும்புவதில்லை. போலிகளுக்கு அப்படியில்லை. தங்கள் வாழ்க்கைத் தொழிலாக சன்யாசத்தையும், சமூக சேவையையும் வைத்துக் கொள்வதால் தான் அவர்கள் மக்களின் பார்வைக்கு பிரபலமாக தெரிகிறார்கள்.



வாழ்க்கையை நதியைப் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஓடுகிற நதிபோல என்றும் சுறுசுறுப்பாக இயங்குகின்ற மனம் இருந்தால் போதும் தொடர்ச்சியான இயக்கம் எந்த தனி விஷயத்தின் மீது கவனம் குவித்து நடக்கின்றதோ அதன் பலன் நமக்கு மகிழ்வைத் தருவதாகவே அமையும்.



வார்த்தைகளும் மௌனங்களும் நம் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மௌனமாக இருக்க வேண்டிய இடத்தில் பேசுபவராக இருப்பது எவ்வளவு கடினம் என்பது யோசித்துப் பார்த்தால் புரியும். மௌனத்தை விளக்க மௌனத்தால் மட்டுமே முடியும்.



முல்லா நஸ்ருதீன் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருமுறை முல்லாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டிருந்தது. பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தும் அதை நிரூபிக்க ஆதாரமில்லாமல் இருந்தது. முல்லாவின் வழக்கறிஞர் "நீ அமைதியாக இரு. ஒரு வார்த்தை கூட பேசாதே. மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே ஒரு முட்டாளான மனிதன்.



அமைதியாக இருந்ததால் புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார்.



வழக்கை விசாரித்து முடித்த நீதிபதி "சாட்சிகள் இல்லாததால் உன் மீது உள்ள குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்" என்றார்.



அதுவரை அமைதியாக இருந்த முல்லா வழக்கு வெற்றியாக முடிந்துவிட்ட சந்தோஷத்தில் "எந்த வீட்டுக்கு நான் போவது யுவர் ஹானர்" என்று கூறிவிட்டார்.



ஒரு வார்த்தை போதும் நம் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை அது காட்டிக் கொடுத்து விடும். ஆனால் அமைதியாக இருக்கும் நேரங்களில் நம் உள்மனக் குரங்கு எங்கு தாவிக் கொண்டிருந்தாலும் கண்டறிவது கடினம்தான்.



விதை புதைந்து வெளியே முளைக்கின்ற இளம் தளிர் போல, எதையும் ஏற்றுக் கொள்கின்ற மண் போல நாம் இருக்க வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிற நாம் ஒரு விஷயம் பற்றி விளக்க முயல்வது ஆபத்தானது. எனவே கற்கும் போது நாம் கவனிப்பவர்களாக இருக்க வேண்டும்.



இரண்டு எதிரான செயல்களை ஒரே நேரத்தில் செய்ய நம்மால் முடிவதில்லை. கற்கும் வேளையில் கற்றுக் கொள்வது மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும். மௌனமாக இருக்க கற்றுக் கொள்ளும் போது மனம் அமைதி உணர்வைப் பெறுகிறது.



எப்படிக் கற்றுக் கொள்வது ? அமைதியாக கூர்ந்து கவனித்தல் மட்டுமே போதுமானது. எந்த விஷயத்தைப் பற்றியும் முன் கூட்டியே கருத்துக்களை வளர்த்துக் கொள்ளாமல் திறந்த மனதுடன் அதை அணுகுவோம். சிந்திக்காமல் ஒரு விஷயத்தை அது எப்படித் தோன்றுகிறதோ, அப்படியே அணுகுவோம்.



இதுவரை தவறான அணுகுமுறையினால் நம் வாழ்க்கை அலைக்கழிக்கப்பட்டிருக்கலாம். எதிர்காலத்தில் நம் வாழ்க்கைப் போக்கு எப்படி அமைய வேண்டும். என்பது இப்போதே தீர்மானிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். திட்டமிடாமல் செய்யும் எந்த ஒரு காரியமும் முழுமையடைவதில்லை. நம்முடைய கருத்துக்கள் சரியாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக் காரணம் திட்டமிடாமல் செயல்படத் தொடங்குவதுதான். நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அதன் விழைவுகளுக்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்.



நம்மை நாம் அறிய வேண்டியது அவசியம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இது எப்படி நமக்குத் தோன்றுகிறது ? யாரோ நமக்கு சொல்லியிருந்த ஒரு விஷயத்தின் மேல் ஏற்பட்ட பற்று நம்மை நாம் அறிவது அவசியம் என உணரத் தூண்டுகிறது. இதற்கு கற்கும் மனோபாவம் தேவை. கற்றுக்கொள்வதென்பது அறிவு ஜீவிகளுக்கான விஷயம் மட்டுமல்ல, எல்லோருக்குமே பொதுவானது.



எப்போது கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோமோ அப்பொழுதே நாம் மாற்றத்திற்கு தயாராகி விட்டோம் என்று பொருள். "நான் மாற விரும்பவில்லை அல்லது ஏன் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்" இது நம்மில் பலருக்கும் எழக்கூடிய கேள்வி. சமூகத்தில் நம்மைப் பற்றி ஏற்படுத்தியிருக்கும் அபிப்ராயத்தை அவ்வளவு எளிதில் மாற்றி விட நாம் துணிவதில்லை. நேற்று வரை வேட்டி சட்டையில் வந்தவர் திடீரென ஜீன்ஸ் அணிந்து வந்தால் என்ன நடக்கும் ? பெரும்பாலும் அவர்கள் கேலிக்குரியவராக ஆக்கப்படுவார்கள். ஆடை விஷயத்திலேயே சகிப்புத்தன்மையற்ற சமூகத்தில் வாழும் நாம் மாற்றம் என்று வரும் போது தயங்குவது இயல்பு. ஆனால் அதற்காக மாற்றத்தை மறுத்து ஒதுக்குவது இயல்பு. ஆனால் அதுக்காக மாற்றத்தை மறுத்து ஒதுக்கிவிட முடியுமா ?



ஆடையை அணிந்தறியாதவர் உலகில் ஆடையணிபவர் மூடனாகத் தான் சித்தரிக்கப்படுவான். இது இயற்கையானது ஆடை எப்படி நாகரிகத்தின் குறியீடாக அமைகிறதோ அதுபோல மாற்றமும் நல்லதற்குத்தான்.



புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிற போது நம் பழக்க வழக்கங்களும் அதற்கேற்ப மாறுபடுகிறது. கலாச்சார வேர்களை விட்டு விலகி மாறுவது அவ்வளவு எளிதல்ல. மாற்றம் சிறிது சிறிதாகத்தான் நிகழ்கிறது. முன்பெல்லாம் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்றெண்ணி அதைத் தவிர்த்தவர்கள் உண்டு. ஆனால் இன்றைய நிலை என்ன? மாற்றத்தின் தாக்கம் சிறிது சிறிதாக நிகழ்ந்தாலும் ஒரு கட்டத்தில் இது தவிர்க்க முடியாதாகிவிடுகிறது.



மன மாற்றம் தரும் வெற்றி குறித்து இந்த ஜப்பானிய கதை மூலம் புரிந்து கொள்ளலாம்.



நொபுனகா என்ற ஜப்பானிய தளபதி எதிரியுடன் போர் புரிய ஆயத்தமானான்.

எதிரியின் படை அவனுடையதைவிட பத்து மடங்கு பெரியதாக இருந்தது. அதனால் அவனுடைய வீரர்களுக்கு தாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை ஏற்படவில்லை.



போர்க்களத்திற்கு போகும் வழியில் நொபுனகாவும் வீரர்களும் ஷிண்டோ ஆலயத்தில் வழிபட்டார்கள்.



அவர்களின் மன உணர்வை புரிந்து கொண்ட நொபுனகா, வழிபாடு முடிந்த பிறகு "பூவா தலையா போட்டுப் பார்ப்போம். தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம். பூ விழுந்தால் நாம் தோல்வி அடைவோம்" என்றான் நொபுனகா.

ஆலயத்தில் பிரார்த்தனை நடந்தது. முடிவில் தளபதி நாணயத்தை தூக்கிப் போட்டார். தலைவிழுந்தது.



அவருடைய வீரர்கள் உற்சாகமாகப் போரிட்டு எதிர்ப்படையினரை வென்றார்கள்.



"விதியின் கைகளை மாற்றமுடியாது" என்றான் ஒரு வீரன்.



"நிச்சயமாக" என்றார் நொபுனகா இருபக்கங்களிலும் தலை உள்ள நாணயத்தைக் காட்டிக் கொண்டே.



எந்த விஷயத்திற்கும் ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்வது நம் கைகளில் தான் இருக்கிறது... விதியின் கைகளில் அல்ல.



- 'அகநாழிகை' பொன்.வாசுதேவன்


22 comments:

  1. என்ன தல இது..?
    உபன்யாசம் மாதிரி இருக்கு...அய்யய்யோ......
    எதாவது யோகா க்ளாஸ் போய் வந்தீங்களா?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //எந்த விஷயத்திற்கும் ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்வது நம் கைகளில் தான் இருக்கிறது... விதியின் கைகளில் அல்ல.//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  4. //எந்த விஷயத்திற்கும் ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்வது நம் கைகளில் தான் இருக்கிறது... விதியின் கைகளில் அல்ல.//

    உண்மைதான் வாசு, அதையும் விதியே என்று சொல்பவர்களுக்கு நாம் என்ன சொல்ல போகின்றொம்...

    ReplyDelete
  5. ரெண்டு கதைகளும் ஏற்கனவே படித்தது தான் என்றாலும் மீண்டும் படிப்பதற்கு நன்றாக இருந்தன - நன்றி

    ReplyDelete
  6. //ஒரு வார்த்தை போதும் நம் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை அது காட்டிக் கொடுத்து விடும். ஆனால் அமைதியாக இருக்கும் நேரங்களில் நம் உள்மனக் குரங்கு எங்கு தாவிக் கொண்டிருந்தாலும் கண்டறிவது கடினம்தான். //

    சரியாக சொன்னீர்கள்...

    ReplyDelete
  7. //"நிச்சயமாக" என்றார் நொபுனகா இருபக்கங்களிலும் தலை உள்ள நாணயத்தைக் காட்டிக் கொண்டே.//

    மனமே மந்திரம்,

    ReplyDelete
  8. நம்பிக்கை உற்றி விடுகிறீர்கள்.
    நல்ல கதைகளை தேர்ந்து கொடுத்துள்ளீரகள் வாசு சார்.

    ReplyDelete
  9. நன்றாக கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
  10. //வாழ்க்கையை நதியைப் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஓடுகிற நதிபோல என்றும் சுறுசுறுப்பாக இயங்குகின்ற மனம் இருந்தால் போதும் தொடர்ச்சியான இயக்கம் எந்த தனி விஷயத்தின் மீது கவனம் குவித்து நடக்கின்றதோ அதன் பலன் நமக்கு மகிழ்வைத் தருவதாகவே அமையும்.//

    கருத்தருமை. நிறைய கருத்துகள்.

    பதிவுகளில் நீளத்தை குறைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  11. அப்ப .. இனி யாரையும் காண்டாகாம ... அமிதியா இருக்க சொல்லுறீங்க....!!!! நம்ம தமிழ் மக்களும் அதத்தான செஞ்சுகிட்டு இருக்காங்க ....!! யாரு எப்புடி போனா என்ன .... எதுக்கும் டென்சன் ஆகமாட்டாங்க.....!!!! நீங்க கூலா இருங்க........!!!!

    ReplyDelete
  12. முல்லாவின் கதை ரசிக்க மட்டுமல்ல..சிந்திக்கவும் வைத்தது.

    ஆழ்ந்த கருத்துக்கள் வாசு சார்.

    பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  13. 1. //மௌனத்தை விளக்க மௌனத்தால் மட்டுமே முடியும்//
    2.//கற்கும் போது நாம் கவனிப்பவர்களாக இருக்க வேண்டும்//
    3.//முன் கூட்டியே கருத்துக்களை வளர்த்துக் கொள்ளாமல் திறந்த மனதுடன்//
    4.//சிக்கல்கள் ஏற்படக் காரணம் திட்டமிடாமல் செயல்படத் தொடங்குவதுதான்.//
    5.//மாற்றமும் நல்லதற்குத்தான்//
    //இருபக்கங்களிலும் தலை உள்ள நாணயத்தைக் காட்டிக் கொண்டே//
    6.//நம் கைகளில் தான் இருக்கிறது... விதியின் கைகளில் அல்ல//
    படிப்பவரை குழப்பாமல் ஒரே கட்டுரையில், இப்படி அத்தனையும் சொல்ல அற்புதமான எழுத்துத் திறம் நிச்சயம் வேண்டும். உங்களுக்கு hats off salutes வாசு.

    ReplyDelete
  14. அருமையான கட்டுரை, விதியின் கையில் அல்ல, நம் கையில் தான் இருக்கிறது,

    நிறைய இடங்களில் பளிச்சிடும் தெறிப்புகள் போன்ற் சிந்தனைகள் மிகவும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  15. மௌனமாக இருக்க வேண்டிய இடத்தில் பேசுபவராக இருப்பது எவ்வளவு கடினம் என்பது யோசித்துப் பார்த்தால் புரியும். மௌனத்தை விளக்க மௌனத்தால் மட்டுமே முடியும். ///////


    ........... ( Silent )

    ReplyDelete
  16. சிந்தனையை தூண்டும் கட்டுரை.

    ReplyDelete
  17. அருமையான கட்டுரை வாசுதேவன் சார்

    ReplyDelete
  18. கும்கி
    T.V.Radhakrishnan
    ஆ.ஞானசேகரன்
    நந்தா
    ஆ.முத்துராமலிங்கம்
    மணி நரேன்
    உயிரோடை
    லவ்டெல மேடி
    ஆ.மு.செய்யது
    விதூஷ்
    anoch
    யாத்ரா
    வண்ணத்துபூச்சியார்
    அமிர்தவர்ஷினி அம்மா
    குமாரை நிலாவன்

    அனைவருக்கும் அன்பும், நன்றியும்..

    'அகநாழிகை' பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  19. கதை நன்றாக இருந்தது.

    ReplyDelete
  20. // எப்படிக் கற்றுக் கொள்வது ? அமைதியாக கூர்ந்து கவனித்தல் மட்டுமே போதுமானது. எந்த விஷயத்தைப் பற்றியும் முன் கூட்டியே கருத்துக்களை வளர்த்துக் கொள்ளாமல் திறந்த மனதுடன் அதை அணுகுவோம். சிந்திக்காமல் ஒரு விஷயத்தை அது எப்படித் தோன்றுகிறதோ, அப்படியே அணுகுவோம் //

    // நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அதன் விழைவுகளுக்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். //

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
    இரண்டு கதைகளும் அருமை.

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  21. வணக்கம் நண்பர் அக நாழிகை,
    நலம் தானே?
    வித்தியாசமான ,அருமையான பதிவு,முல்லாவின் அப்பாவித்தனம் (தவளை)அருமை.நீங்கள் நல்ல புதிய பதிவர்களையும் வலிய சென்று ஊக்குவிப்பதையும் நன்கு காண முடிகிறது.
    நல்ல விஷயம் தொடர்ந்து செய்யுங்கள்.
    என் "the shawshank redemption"(1994)குறித்த பார்வையை பார்த்து கருத்தை சொன்னால் மகிழ்வேன்.
    http://geethappriyan.blogspot.com/2009/06/shawshank-redemption1994.html

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname