Tuesday, December 30, 2008

வருகிறது புது வருடம்...!

சூழ்ந்து
அகன்று
உயர்ந்து
தாழ்ந்து
நெருங்கி
விலகி
சேர்ந்து
பிரிந்து
அடித்து
அணைத்து
அழுது
சிரித்து
செலவழிக்கலாம்
வருகிறது
புது வருடம்...
வாழ்த்துக்கள்...!
- பொன். வாசுதேவன்

வலை வீசி தேவதை


கண் முன் ஒரு தேவதை
அலைகளை
சேகரித்து வீசுகிறாள்
முகத்தின் மீது
கழுவிச் சலிக்கின்றன அலைகள்
அலை சூடிய முகடு
கடற்கரையில் செல்கிறேன்
இப்போது
வேறொரு தேவதை
கடற்காற்றில் வலை படபடக்க
வீசுகிறாள்
தப்பி ஒளிகிறேன் கடலுக்குள்
அலையையும்
வலையையும்
கடந்து முழ்கித் தேடுகிறேன்
மற்றுமொரு தேவதையை
(காயத்ரிக்கு...)

- பொன். வாசுதேவன்

"புதிய பார்வை" 16-31, 2007 இதழில் வெளியானது.

Monday, December 29, 2008

மிதந்து கொண்டேயிருக்கும் வலை



அடர் மழை மௌனமாய்

யாருக்கும் தெரியாமல்

இறங்கும் வேலையில்

உயிர்ச்சுழி தேடிப் பரவுகிறது

நீ வீசிய வலை

விழி தீண்டும் தூரம் அறியாது

அப்பிக்கிடக்கிறது இருள்

வெடிக்காத இசையின்

அரூப ஒலியாய்

காத்திருக்கிறது

வலை வருடிய கைகள்

தனியுச்சியில் புதையுண்டு

தருணம் நோக்கி

காத்திருக்கிறேன்

வலைக்குள் உன்னை இருத்த.


- பொன். வாசுதேவன்


"புதிய பார்வை" ஆகஸ்ட் 16-31, 2007 இதழில் வெளியானது.

Saturday, December 27, 2008

பொம்மை விளையாட்டு

பிசைந்தெடுத்து வழிய விடுவாய்
அன்பற்ற இறுக்கத்தை
இரைச்சல்களற்று
எல்லாம் உறங்கும்
இரவின் விளிம்பில் அமர்ந்து
காத்திருந்த நீ
என் மேல்
இப்போதும் ஒரு கணம்
படரும் ஒசையெனக்கு
கேட்கிறது சுவாசமாய்
சருமம் கருக
நிரப்பவியலா பள்ளத்தாக்கில்
உருகி வழிந்து ஓயும் ஊற்றாய்
களைத்துறங்குகிறாய்
ஒரு சொல் இல்லை
மொழிகளுக்கப்பாற்பட்டு அதிரும் ஓசை
உள் பேசும் நான்
மின்னலாய் தோன்றுமொரு யோசனை
பாய்ந்து வெளிப்பட்டாலென்ன
அறுந்து சுருண்டு
கவிழ்ந்து படுக்கும் நான்
களைத்து குழந்தையாகியுறங்கும்
உன் முதுகு பார்த்து...
- பொன்.வாசுதேவன்

" புதிய பார்வை " ஆகஸ்ட் 16-31, 2007- ல் வெளியானது.

Friday, December 26, 2008

மிதக்கும் வதந்திகள்

நிழல் மிதிபடாத

மாலை வேளையில்

கண்களின் குளுமை
இதயத்தை நிரப்ப
இணைந்திணைந்து
செல்கின்றனர் நண்பர்கள்
முகம் உமிழ்ந்த
புன்னகையின் மிச்சமாய்
தொடர்கிறது உரையாடல்
களைப்பின்றி
அந்தரங்கப்பூக்கள் மலர
உன்னைப்பற்றி
என்னைப்பற்றி
இவரைப்பற்றி
அவரைப்பற்றி
யாவரையும் பற்றி
ஊற்றாய் பரவுகிறது பேச்சு
கைபிடியளவு அள்ளிக்கொண்டு
ஒரு புள்ளியில் விலகிச் செல்கின்றனர்
வீதியெங்கும்
அணுவணுவாய் இறைத்தபடி...

- பொன். வாசுதேவன்

ஆகஸ்ட் 2007 இதழில் வெளியானது.

Sunday, December 14, 2008

உனக்காக ஒரு கவிதை

அன்பின் தடம் பல தேடியலைந்து
கூடடைந்தேன் சிலகாலம்
எண்ணங்களில் மிதந்த
உன் வசீகர ஆசைகளும்
மொட்டவிழ்ந்து
கரை சேர்ந்த நேரம் அது
பேசி முடித்த கணத்திலிருந்து
அடுத்த ஆரம்பத்தை எதிர்நோக்கி
விடிந்த பொழுதுகள்
புன்னகை விளையும்
விழிகளின் நொடிகளுக்கு காரணமாய்
தொடர்ந்தன நினைவுகள்
பறவையின் காலடி தேடும்
வான்வெளி விளையாட்டாய்
முளைத்தெழுந்தன
நமக்கான நட்சத்திரங்கள்
தீண்டாமல் நீ தந்த வெதுவெதுப்பில்
இதயம் உறங்கச் சென்ற நாட்கள் பல..
நான் உனக்கானவன் இல்லை
நீ எனக்கானவள் இல்லை
நீ இருக்கிறாய்
நானும்...
வளராதிருக்கும்வரை
வலைகளின் இடுக்கில் கசிந்து
தப்பியோடும் சிறு மீன்களின்
குதியாட்டமாய் படர்கிறது சந்தோசம்
இறுக்கி விரல்களுக்குள்
கனவுப்பூக்களை சேமித்துக் கோர்த்து
சூடிகொள்கிறேன் எனக்குள் உன் நினைவுகளை
மாலையாக....

- பொன். வாசுதேவன்


Comments system

Disqus Shortname