கார்சியா மார்க்வெசின் ‘காலரா காலத்தில் காதல்’ எங்களைப் போன்ற இளைஞர்களை அந்தக் காலத்தில் கவர்ந்த நாவல்களில் ஒன்று. அதன் மேலோட்டமான எளிமையிலும், உக்கிரமான காதலிலும் மயங்கி ஏமார்ந்து விடாதீர்கள் என மார்க்வெசே எச்சரித்திருந்தும்கூட அந்த மேலோட்டமான எளிமை என்கிற பொறியில் வேண்டுமென்றே வலிந்து சிக்கி அதை ஒரு காதல் காவியமாக நாங்கள் ரசித்திருக்கிறோம். காதலுக்குள் எல்லோரும் பைத்தியந்தான். முட்டாள்கள்தான். இந்த முட்டாள்தனத்தையும் பைத்தியக்காரத்தனத்தையும் பகுத்தறிவின் தர்க்கத்தில் இயங்கும் சமூகம், குடும்பம், சாதி முதலான நிறுவனங்கள் ஏற்பதில்லை. வரலாறு முழுவதும் இந்த முரணே காதல் காவியங்களின் அடிப்படையாய் இருந்து வந்துள்ளது.
இன்று இப்படியான ஒரு முரணுக்குப் பலியாகியுள்ளார் 12 ஆண்டு காலமாகச் சோறும் தண்ணீரும் இல்லாமல் இந்திய அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இரும்புப் பெண்மணி இரோம் சானு ஷர்மிலா. இந்திய அரசியலை மேலோட்டமாகக் கவனித்துக் கொண்டு வருபவர்களுக்குக் கூட ஷர்மிலாவைத் தெரிந்திருக்கும். கடந்த 31 ஆண்டுகளாக இந்திய அரசு மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பல ஆண்டுகளாகக் காஷ்மீரிலும், தற்போது மாவோயிஸ்ட்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பகுதிகளிலும் அமுல்படுத்தி வரும் ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்’ தை(அஃப்ப்சா- AFPSA) மணிப்பூரிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காக அவர் இந்தப் போரட்டத்தை நடத்தி வருகிறார். எந்த ஒரு பயங்கரவாதச் செயல் அல்லது அதிரடி நடவடிக்கையாலும் ஈர்க்க இயலாத அளவிற்கு உலகின் கவனத்தை இந்தப் பிரச்சினையின் மீதும், மணிப்பூர் மக்களின் போரட்டங்களின்மீதும் தனது அமைதி வழிப் போராட்டத்தின் மூலம் ஈர்த்தவர் அவர்.
இரக்கம் மிகுந்த இந்திய அரசு ஷர்மிலாவைச் சாகவிடவில்லை. 12 ஆண்டுகளாக அவரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அவரை யாரும் எளிதில் சந்திக்க முடியாது. உள்துறை அமைச்சரின் அனுமதி பெற்றுத்தான் சந்திக்க முடியும். மணிப்பூரிலுள்ள ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு மூக்கில் ஒரு ப்ளாஸ்டிக் குழாயைச் செருகி வயிற்றுக்குள் கட்டாயமாகத் திரவ உணவைச் செலுத்தி அவரை ‘உயிருடன்’ வைத்துள்ளது. நாசித் துளையிலிருந்து நிரந்தரமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக் குழாய், சீவப்படாத சுருண்ட கேசம், ஊடுருவும் கண்கள் இவற்றுடன் இன்று அவர் ஒரு icon (திரு உரு) ஆகியுள்ளார்.
கதை எழுதுதல், யோகாசனம் பயிலுதல், நீதிமன்றத்திற்கும் மருத்துவமனைக்குமாக அலைக்கழிக்கப்படுதல், மெல்லிய குரலில் தன் உறுதியை வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் வெளிப்படுத்துதல் என்று வாழ்ந்துகொண்டுள்ள ஷர்மிலாவின் உடல் உள் உறுப்புகளெல்லாம் உளுத்துப் போய்க்கொண்டுள்ளன. இப்போது அவருக்கு 38 வயது. உண்ணா விரதத்தைத் தொடங்கியபோது 26. அவரது ஆரோக்கியத்தின் அடையாளங்கள், பெண்ணுடலின் அடையாளமான மாத நிகழ்வு உட்பட, இன்று எதுவும் காணக்கூடியதாக இல்லை.
இந்திய மனித உரிமைப் போராளிகளால் கடுமையாக எதிர்க்கப்படும் இந்த ‘அஃப்ப்சா’ சட்டம் இராணுவத்திற்கு அபரிமிதமான அதிகாரங்களை வழங்குகிறது. யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். எந்த வீட்டுக்குள் வேண்டுமானாலும் நுழையலாம். சுட்டுக் கொல்லலாம். பெண்களாயின் அவர்களை ஒரு இராணுவம் என்னென்னவெல்லாம் செய்யுமோ, அவ்வளவ்வையும் செய்து பின் கொல்லலாம். இதற்கெல்லாம் எந்தக் காரணத்தையும் அவர்கள் சொல்ல வேண்டியதில்லை. வெறும் சந்தேகமொன்றே போதும். செய்தது தவறு என எத்தனை மனித உரிமை அமைப்புகளும், விசாரணை ஆணையங்களும் சொன்ன போதும் காரணமான இராணுவத்தினரை யாரும் தண்டிக்க முடியாது.1980 தொடங்கி 2004வரைக்குமே 24,000 பேர்களை இராணுவம் இவ்வாறு கொன்றுள்ளது.
2004ல் தங்கம் மனோரமா என்கிற பெண் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இராணுவ நிலையமான காங்லா கோட்டை முன்பு மணிப்பூரி அன்னையர், ‘இந்திய இராணுவமே எங்களை வன்புணர்சி செய்’ என்று எழுதப்பட்ட துணியுடன் நடத்திய நிர்வாணப் போராட்டம் எல்லோரையும் தலை குனியச் செய்தது- இந்திய அரசைத் தவிர.
2005ல் இச்சட்டப் பிரிவுகளைக் கடுமையாகக் கண்டித்து அளிக்கப்பட்ட நீதியரசர் ஜீவன் ரெட்டி ஆணைய அறிக்கை, இச்சட்டத்திற்கு எதிராகச் சென்ற அண்டு காஷ்மீர் இளைஞர்கள் நடத்திய கல்லெறிப் போராட்டம் எதற்கும் மசியாமல் இன்னும் கோலோச்சுகிறது அஃப்ப்சா சட்டம்.
அப்படித்தான் 2000ல் ஒரு நாள். மணிப்பூர் தலைநகரான இம்பாலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள மலோம் என்கிற இடத்தில் இந்திய இராணுவம் பத்து அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுச் சாய்த்தது. அடுத்த நாளிதழ்களில் சிதைந்த சடலங்களின் புகைப்படங்களைப் பார்த்த ஷர்மிலா ஒரு முடிவுக்கு வந்தார். இறை பக்தி மட்டுமின்றி காந்தியடிகளின் மீதும் பக்தி கொண்ட அவர், அம்மா இரோம் ஷகியிடம் சென்று ஆசி பெற்று வந்து உண்ணா நிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.
அண்ணா ஹஸாரே போல ஏகப்பட்ட ஊடக, கார்பரேட், மற்றும் மத்திய வர்க்க ஆதரவோடு தொடங்கப்பட்ட போராட்டமல்ல அது. ஒரு ஏழை நான்காம் நிலை ஊழியர் ஒருவரின் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு இளம் பெண் தன் மனச்சாட்சியின் உந்துதலால் தன்னந்தனியாக எடுத்த முடிவு அது. தனது உடலைத் தவிர வேறு சொத்துக்களோ, ஆயுதங்களோ, விளம்பரங்களோ இல்லாத அந்தப் பெண் தன் உடலையே ஆயுதமாக்கிக் களம் இறங்கினாள். சாகும்வரை உண்ணாவிரதமென அவள் சொல்லவில்லை. அஃப்ப்சா சட்டம் நீக்கப்படும் வரை என்றுதான் சொன்னாள். இந்திய அரசைப் புரிந்து கொண்டவர்களுக்கு ஒருவேளை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தோன்றலாம்.
மணிப்புரி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் உலகளவில் தெரிவதற்கு ஷர்மிலாவின் இந்தப் போராட்டம் பெரிய அளவில் காரணமாகியது. போராட்டக்காரர்கள், இயக்கத்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர் எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஷர்மிலா ஒரு icon ஆனார். முப்பதுக்கும் மேலான சிவில் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பான ‘அபுன்பா லுப்’ உள்ளிட்ட அமைப்புகள் ஷர்மிலாவை முன்வைத்து தமது போராட்டத்தின்பால் உலகின் கவனத்தை ஈர்த்தன.
ஷர்மிலாவின் 12 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்திற்குக் கிடைக்காத ஊடக ஆதரவு, அண்ணா ஹஸாரேயின் 12 நாள் உண்ணாவிரதத்திற்குக் கிடைத்தது குறித்த சர்ச்சை ஒன்று உருவான தருணத்தில்தான் ‘தி டெலிகிராஃப்’ நாளிதழின் கொல்கத்தாப் பதிப்பில் அந்தச் செய்தி வந்தது (செப் 2011). “இரோம் காதலைப் பற்றிப் பேசுகிறார்- உண்ணாவிரதப் போராளி காதலிக்கிறார், ஆதரவாளர்கள் எதிர்ப்பு” என்கிற தலைப்பில் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது அச் செய்தி. சுருக்கம் இதுதான்:
உலகின் நீண்ட நாள் உண்ணாவிரதப் போராளி தான் காதலிப்பதாகவும், தன் காதலன் பொறுமையின்றிக் காத்திருப்பதாகவும், தன்னை அவர் சந்திக்க வந்தபோது தன் ஆதரவாளர்கள் தடுத்துவிட்டதாகவும் கூறுகிறார். “அவர்களின் எதிர்ப்பிற்குச் சில சமூகக் காரணங்களும் உள்ளன. என் காதலர் டெஸ்மான்ட் கூடினோ லண்டனில் குடியுரிமையுள்ள ஒரு கோவா மாநிலத்தவர். அதனால்தான் அவர்கள் என் காதலை ஏற்கவில்லை. நான் எல்லோரையும் போல ஒரு சாதாரணப் பெண். ஒரு சூப்பர் ஹீரோவாக என்னை அவர்கள் பார்க்கக் கூடாது.”
48 வயது டெஸ்மான்ட் ஒரு எழுத்தாளர், மனித உரிமைப் போராளி. ஓராண்டு காலக் கடிதப் பரிமாற்றத்திற்குப் பின் சென்ற மார்ச்சில்தான் இருவரும் சந்தித்துள்ளனர். கடிதங்களைப் படுக்கைக்குப் பக்கத்தில் ஒரு பெட்டியில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளார் ஷர்மிலா. காதலர் பரிசளித்துள்ள ‘ஆப்பிள் மேக்’ கையும் பெருமையோடு காட்டுகிறார்.
“சென்ற மார்ச்சில் அவர் இங்கு வந்திருந்தபோது என் ஆதரவாளர்கள் என்னைச் சந்திக்க விடவில்லை. அவரது ஒழுங்கற்ற தோற்றம், மனித உரிமைகள் பற்றிய பேச்சுக்கள் எதுவும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவரை அவமானப்படுத்தினார்கள், மிரட்டினார்கள். பெண்கள் தங்குமிடத்திலேயே அவர் காத்திருந்தார். இரண்டு நாட்கள் அவரும் உண்ணாவிரதமிருந்து போராடிய பின்பே என்னைச் சந்திக்க அவரை அனுமதித்தனர். அவர்களுக்கு இரும்பு இதயம்.”
மார்ச் 9 அன்று நீதிமன்றத்தில் தன்னைச் சந்திக்க வந்த டெஸ்மான்டிற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நீதியரசரை வேண்டிக்கொண்டார் ஷர்மிலா. “இல்லாவிட்டால் அவரை அடித்தே கொன்றிருப்பார்கள். அவர்களுக்கு எங்கள் உறவைப் புரிந்து கொள்ள முடியாது. அற்ப புத்தி உடையவர்களாக உள்ளனர்.”
டெஸ்மான்ட் எல்லோரையும் போல ஒரு காதல் பைத்தியம். “காந்தியிடம் அவர் மனைவி நடந்துகொண்டதுபோல நான் ஷர்மிலாவிடம் நடந்து கொள்வேன். அவளது காரியங்களுக்குத் துணையாய் இருப்பேன். நான் ஒரு மகாத்மாவைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். அந்த வாழ்வு அவ்வளவு எளிதாக இராது என நான் அறிவேன்” – இது டெஸ்மான்ட்.
டெலிகிராஃப் பத்திரிக்கையாளர் புறப்படும்போது, “எப்போது திருமணம்?” எனக் கேட்டார். “எனது கோரிக்கை நிறைவேறிய பின்புதான் திருமணம் செய்துகொள்வேன்” எனப் பதிலளித்தார் இரோம் ஷர்மிலா. அதாவது இந்திய அரசு அஃப்ப்சா சட்டத்தைத் திரும்பப் பெற்ற பின்பு.
இந்த நேர்காணல் மணிப்பூரில் ஒரு மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. ஷர்மிலாவின் ஆதரவாளர்களும், இயக்கத்தவர்களும் கொதித்தெழுந்தனர். செல்வாக்கு மிக்க அபுன்பா லுப் அமைப்பு, நேர்காணலை வெளியிட்ட டெலிகிராஃப் நாளிதழை மணிப்பூரில் தடை செய்தது. இந்தச் செய்திக்குப் பின் மிகப் பெரிய சதி இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ‘கோர்’ என்னும் தொண்டு நிறுவனம், புகழ்பெற்ற இயக்கவாதி பப்லு லோய்டோன்பாம் ஆகியோரின் கடுமையான விமர்சனங்களை இணையத் தளங்களில் காணலாம். “போராளியின் தனிப்பட்ட வாழ்வை ஏன் இவர்கள் பேசுகிறார்கள்? அண்ணா ஹஸாரே அல்லது காந்தியின் தனிப்பட்ட வாழ்வு அக் காலங்களில் பேசப்பட்டதா? அஃப்ப்சா சட்டத்திற்கெதிரான போராட்டத்தை இவர்கள் பலவீனப் படுத்துகின்றனர்” – என்கிற ரீதியில் இவ் விமர்சனங்கள் அமைகின்றன. இது இந்திய அரசின் ‘காதல் சதி’, டெஸ்மான்ட் ஒரு உளவாளி என்கிற அளவில் கருத்துக்கள் கசியவிடப் படுகின்றன.
இன்னொரு பக்கம் ஷ்ர்மிலாவைத் திருஉருவாக்கித் தம் போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தேடியவர்கள், “எங்கள் போராட்டம் 90 களில் தொடங்கியது. ஷர்மிலா 2000த்தில்தான் வந்து சேர்ந்து கொண்டார். அவர்தான் எங்கள் ஆதரவாளரே ஒழிய, எங்களை அவர் ஆதரவாளராகச் சுருக்கிப் பார்க்கக் கூடாது” என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.
எனினும் இவர்களால் ஷர்மிலாவின் காதல் ‘கதையைப்’ பொய் என நிராகரித்துவிட முடியவில்லை. டெலிகிராஃப் இதழில் வந்த அத்தனை செய்தியும் அவர் வாயால் சொல்லப்பட்டு என்.டி.டி.வி யில் ஒளிபரப்பாகியுள்ளது. தவிரவும் யாரும் அவரைச் சந்தித்து இது குறித்துக் கேட்டுவிட முடியும்.
டெலிகிராஃப் நாளிதழும் அப்படியொன்றும் போராட்டத்திற்கு எதிரானதல்ல. ஷர்மிலாவின் உண்ணாவிரதத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்ததுதான். இந்தச் செய்தி ஒரு மிகப்பெரிய ‘ஸ்கூப்” ஆக இருக்கும் என்கிற நோக்கிலேயே முதல் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளது என்றே தோன்றுகிறது. அதற்காக இதழையே தடை செய்வது என்பதெல்லாம் என்ன நியாயம் என்கிற கண்டனம் பல தரப்புகளிலும் வந்துள்ளது. அரசியல் நோக்கம், இறுதிக் குறிக்கோள், அரசியல் கறார்த்தன்மை (political correctness) என்பதெல்லாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறார்களோ அந்த மக்களின் அடிப்படை உரிமைகளையே, காதல் உரிமை, கருத்துரிமை உட்பட நசுக்குவதை நியாயப் படுத்துவது குறித்த ஒரு விவாதம் இன்றைய தேவையாக உள்ளதைப் பலரும் உணர்கின்றனர்.
ஷர்மிலா கற்பனை செய்து பார்க்க இயலாத மிகப் பெரிய தியாகத்தைச் செய்தவர். இப் போராட்டம் உலகறியச் செய்யப் பட்டதில் அவரது பங்கு மிக முக்கியம். இன்றும் கூட அவர் தன் கொள்கையையே முதன்மைப் படுத்தி நிற்கிறார். ஒருவேளை அவர் தன் காதலருடன் இணைந்து வேறு வடிவங்களில் இப் போராட்டத்தைத் தொடர விரும்பினால், மிக்க கண்ணியத்துடன் அதை ஏற்று அவருக்குத் துணை நிற்பதே நாம் அவருக்குச் செய்யும் நியயமான மரியாதையாக இருக்க முடியும்.
[இந்நிகழ்வையும் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் நிகழவிருந்த இலை உதிர்கால இலக்கிய விழாவிற்கு ஏற்பட்ட நியாயமான எதிர்ப்பையும் இணைத்து எழுதப்பட்ட விரிவான கட்டுரையை (‘போராட்ட காலத்தில் காதலும் கவிதையும்) அக்டோபர் 2011 தீராநதி இதழில் காணலாம்’.]
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...