Monday, October 24, 2011

வழி தவறிய பட்டாம்பூச்சி


உங்களில் எத்துணை பேருக்கு
இவ்வனுபவம் வாய்த்திருக்கும்
என்று தெரியாது

மின்சாரம் தடைப்பட்ட பகலொன்றில்
என்னறைக்குள் தற்செயலாய் நுழைந்தது
ஒரு பட்டாம்பூச்சி

வழிதவறிய பட்டாம்பூச்சியை
மறுபடி கடைத்தேற செய்வது
எப்படியென்ற யோசனையோடு
கைப்பற்றி வெளி விட முயற்சித்தேன்

நான் துரத்த
அது கைப்படாமல் விலக என
நீடித்தது சில நேரம்

வெள்ளையாய் நீண்ட ஒளிரா குழல் விளக்கு
எப்படித் தெரிந்ததோ அதற்கு
அதன் மேல் அடைக்கலமாக
பிரயத்தனப்பட்டது

பின் 
குளிரூட்டும் மின்கருவியின் 
முன்சென்று அதன் சிறுகாற்றில் ஏமாந்தது

எப்படிப் புரிய வைப்பேன்
நானதை தோட்டத்தில்
மறுபடி திரிய வைக்க 
முயற்சிப்பதை

எங்கெங்கோ அலைபட்டு
என் கையில் சிக்கியது 
கடைசியாக

வெளி வெயிலில் 
பறக்க விட்டேன்

விரலழுத்தத்தில் சிறு கசங்கலோடு
தட்டுத்தடுமாறி
பறந்து சென்றது வெளியே..

ஆள்காட்டி விரலிலும்
கட்டை விரலிலும் 
தன்னிருப்பை
விட்டுச் சென்றிருக்கிறது நிறமாக.


1 comment:

  1. அருமையான கவிதை வரிகள் .புரியாததைப் புரிய வைப்பதற்கும் தன்னை தன் எண்ணத்தைத் தெரியவைப்பதற்க்கும் பல நெஞ்சங்கள்
    பல சந்தர்ப்பங்களில் இப்படித்தான் அவலம் உற நேர்கின்றது .வார்த்தைக் கோர்ப்பும் அருமை !.....உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு ..............................

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname