Sunday, May 29, 2011

இலக்கிய அக்கப்போர் – 3


என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தோன்றியது. வித்தியாசமாக புனைப்பெயர்களை வைத்துக் கொள்கிறவர்கள் எப்படி அப்பெயரை தேர்வு செய்கிறார்கள்? தங்களது குணநலன்களைக் கொண்டா அல்லது தங்கள் புனைப்பெயரை வைத்து வாசிக்கிறவர்கள் எழுதியவரைப் பற்றிய ஒரு உருவத்தை கற்பிதம் செய்து கொள்வார்கள் என்பதற்காகவா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

*

ஆண் – பெண் உறவுகள் குறித்த கலாச்சாரப் புனைவுகளையும், கவித்துவப் பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ,முருகனின் கதைகள். மனித உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள், வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது அவரது ‘மரம்’ நாவல். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்ல என்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிருபணம் செய்கின்றன.

*

மனித மனம் ஒரு விசித்திர விலங்கு. நாம் தெளிவான சிந்தனையோடு இருக்கிறோம் என்பதே ஒரு வித நோய்க்கூறு மனநிலைதான்.

*

கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் தமிழின் மிக முக்கியமான, அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்று. கணேசன் – கிட்டா என்ற இரு மனிதர்களின் சிறு வயது முதல் நடுத்தர வயது வரையிலான காலகட்டத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை விவரித்துச் செல்வதுதான் நாவலின் கதைக்களம். முரண்பட்ட இயல்புள்ள இருவரது வாழ்வின் போக்கு வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. தஞ்சாவூர் அக்ரஹாரத்து வாழ்க்கை, தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடக்கின்ற சமூக பொருளாதார மாறுதல்கள் ஆகியவற்றைப்பற்றியும் கதையினூடாக பதிவு செய்கிறார் கரிச்சான் குஞ்சு.

மனித வாழ்வின் ஆதாரமான அம்சங்களான பணம், அந்தஸ்து, உடல் சார்ந்த இச்சைகள், தன்முனைப்பு, அச்சம் ஆகியவை மனிதர்களை எந்த அளவிற்கு அலைக்கழித்து அகச்சிக்கலுக்கு உள்ளாக்குகிறது என்பதையும், காமம், பணம், அந்தஸ்து இவற்றிற்கிடையேயான நெருக்கத்தையும் பற்றிய பல்வேறு பார்வைகளை இக்கதை முன்வைக்கிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத  இந்தப்பசிகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார்.

நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப்புணர்ச்சியைக் கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை இலாவகமாகக் கையாள்கிறது. முட்டிமோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்களின் வாழ்வு, வயிற்றுப்பசி, அதிகாரப்பசி, காமப்பசி என பலவிதமான பசியின் உந்துதல்களால் செலுத்தப்பட்டு, பல்வேறு இன்பங்களையும் துய்த்தபின் கடைசியில் எதில் நிறைவடைகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது இந்நாவல்.

*

எக்காலம் – எக்காலம் என எக்காளமிட்டுப் பாடியிருக்கின்ற பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப்புலம்பல்களை ஒரு முறையாவது ஆழ்ந்து படித்தால் வாழ்வில் முழுமையடைந்து கரையேறும் வாய்ப்பு சித்திக்கும்.

புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?

*

1 comment:

  1. நாம் தெளிவான சிந்தனையோடு இருக்கிறோம் என்பதே ஒரு வித நோய்க்கூறு மனநிலைதான்.

    appadithaanga...:)

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname