தமிழில் அதிகம் பேசப்படாத பல சிறந்த எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் மிக முக்கியமானவர் மா.அரங்கநாதன். ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதியவர். இவர் 'சிவனொளி பாதம்' என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதியுள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் 1980களில் 'முன்றில்' என்ற சிற்றிதழையும், முன்றில் இலக்கிய அமைப்பையும் நடத்தியவர்.
'எண்பதுகளில் கலை இலக்கியம்' என்ற தலைப்பில் இவர் நடத்திய கருத்தரங்கின் போதுதான் விக்ரமாதித்யன், சாருநிவேதிதா உட்பட பலரையும் நான் முதல் முறையாக நேரில் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். மாம்பலம் இரயில் நிலையம் அருகில் இருந்த சாந்தி வணிக வளாகம் என்ற இடத்தில் முன்றில் புத்தக நிலையம் இருந்தது. அப்போது சிறுபத்திரிகைகளில் எழுதுகின்ற பலரும் சந்திக்கின்ற மையம் அதுதான். கல்லூரி நாட்களின் மாலைப் பொழுதுகள் அங்கேதான் கழிந்தது.
கவிதை குறித்து மா.அரங்கநாதன் எழுதிய 'பொருளின் பொருள் கவிதை' என்ற புத்தகம் மிக முக்கியமானது. வீடுபேறு, ஞானக்கூத்து, காடன் மலை என்ற சிறுகதைத் தொகுப்புகளும், பறளியாற்று மாந்தர் என்ற நாவலையும் இவர் எழுதியுள்ளார். மா.அரங்கநாதன் கதைகள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட இவரது 63 கதைகளை வாசித்து முடித்தேன். தமிழர் வாழ்வியல் சார்ந்த சாமியாடல், குறிசொல்லுதல், மாந்திரீகம் போன்ற மத நம்பிக்கைகள் குறித்து பரவலாக இவரது கதைகளில் வாசிக்க முடிகிறது. இயற்கை சார்ந்த கடவுள் வழிபாட்டிலிருந்து வழிமாறிய தமிழ் இனம் பற்றிய இவரது பார்வை பிரத்யேகமானதும் முக்கியமானதும் எனப்படுகிறது. தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட வட மயமாக்கமான இந்துத்துத்வத்துக்கும், தமிழர் கடவுள் வழிபாட்டுக்கும் இடைப்பட்ட வேற்றுமையை பல கதைகளில் எழுதியிருக்கிறார். உலகமயமாக்கலின் முன் தயாரிப்பு காலத்தை பதிவு செய்கின்ற ஆவணமாகவும் இவரது கதைகள் இருக்கின்றன. நேரடியாக அரசியல் பேசாமல் தன் கதைகளினூடாக இவர் முன்வைக்கின்ற அரசியல் பார்வை மிக நுட்பமானது.
சில மாதங்களுக்கு முன்பு (கவிஞர் வெயில் திருமணத்திற்கு சென்று திரும்பும்போது) மா.அரங்கநாதன் பாண்டிச்சேரியில் வசிப்பதை அறிந்து, அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எழுதுகிறவன் எவ்வளவு கூர்மையான சிந்தனையாளனாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். சில மணி நேரங்கள் அவருடன் பேசியதை அகநாழிகையில் நேர்காணலாக வெளியிட விரும்பி ஒலிப்பதிவாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
*
இணையத்தில் இலக்கியம் பகிர்கிறவர்கள் பெரும்பாலும் ஜெயமோகன், சாருநிவேதிதா மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களைச் சுற்றியே ஜல்லியடிக்கிறார்கள். இவர்களைத்தவிர பிற எழுத்தாளர்களை இவர்கள் வாசிப்பதில்லையா அல்லது இவர்களே போதும் என முடிவு செய்து விட்டார்களா என்று தெரியவில்லை. இவர்களையும் முழுமையாக எத்தனை பேர் வாசித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இவர்களைத் தவிர இருக்கின்ற எழுத்தாளர்கள் குறித்தும் இணைய வாசகர்கள் கருணை கூர்ந்து பரிசீலிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
*
கடந்த ஆண்டு திருமாவளவனை அவரது இல்லத்தில் சந்தித்த போது அவரது சில புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். நன்றியைப் பகிர்ந்து கொண்டு மரபுப்படி சால்வை அணிவித்து ஒரு நிழற்படமும், அவர் என் தோளில் கைபோட்டு நெருங்கியபடி ஒரு நிழற்படமும் எடுத்துக் கொண்டேன். திருமாவளவன் கொடுத்த புத்தகத்தில் ஒன்றான அவரது கவிதைகளை சமீபத்தில் (இந்த வார்த்தை பலருக்கும் அலர்ஜி என்பது தெரியும்) படித்து ..............புறும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.
அரசியல் ஈடுபாடுள்ள கவிஞர்களின் வழமைப்படியே பல்வண்ண அச்சில் பெரியார், பிரபாகரன், பாரதிதாசன், யாசர் அராபத், திலிபன், அம்பேத்கர், ரெட்டை மலை சீனுவாசன், பெருஞ்சித்திரனார் மற்றும் திருமாவளவன் படங்களுடன் கவிதை வரிகளும் இருந்தன.
*
விமர்சனம் என்பது மிக நுட்பமான விஷயம். ஒரு படைப்பின் கூறுகளை ஆராய்ந்து விருப்பு வெறுப்பற்று கருத்துகளை முன்வைப்பதும், அது சார்ந்த ஆரோக்கியமான விவாதங்களை எழுப்புவதுமே விமர்சனத்தின் அடிப்படையான நோக்கமாக இருக்க வேண்டும். தமிழில் விமர்சனம் இரண்டு வகையாக முன் வைக்கப்படுகிறது. ஒன்று எழுதுவபரைக் கருத்தில் கொண்டு படைப்பை விமர்சிப்பது. மற்றொன்று சுயவிருப்பின் பொருட்டு படைப்பை நிராகரிப்பது அல்லது ஏற்பது. தற்போது எழுதப்பட்டு வருகின்ற புத்தக விமர்சனங்களை ஒப்பு நோக்கினால் இன்றைய படைப்பு விமர்சனம் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பது தெரிந்து விடும்.
ஒரு படைப்பை படிக்கின்ற வாசகன் அதன் மீதான சுய வாசிப்பு அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். அது விமர்சனம் அல்ல, அனுபவ வெளிப்பாடு என்ற அளவிலேயே அதை ஏற்றுக் கொள்ளலாம். ஒரு அனுபவத்தை சக மனிதனுடன் பகிர்ந்து கொள்கிற முனைப்புதான் வாசக வெளிப்பாடு. ஒரு படைப்பை உள்வாங்கிக் கொள்வதற்கான ஆயத்தத்தை ஏற்படுத்துவதே விமர்சனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
*
கணையாழியில் (1986 என்று நினைக்கிறேன்) வெளியான ‘அப்பாவின் குகையில் இருக்கிறேன்’ என்பதுதான் நான் முதல் முதலில் வாசித்த கோணங்கியின் கதை. தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் திட்டத்தில் தேர்வு பெற்ற குறுநாவல் அது. மிக எளிய வாசிப்பில் கதையின் முடிச்சு பிடிபட்டு விடுகின்ற கதை அது. அப்போதைய கோணங்கி வேறு.
வாசிப்பின் ஆரம்ப நாட்களில் கோணங்கியின் எழுத்துகள் மிக வசீகரமானவையாக இருந்தன. மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் என ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு கிளியிடம் இருக்கின்ற மாயாவியின் உயிரைப் பறிக்கச் செல்வதான சுவாரசியத்தை கொடுக்கின்ற வல்லமை படைத்தவை அவரது கதைகள். அவரது கதைகளில் இழையோடும் தொன்மம் சார்ந்த படிமங்கள் ஈர்ப்பானவை. ஒவ்வொரு வரியும் ஒரு சிறுகதைக்கு ஒப்பானதாக இருக்கும். வனாந்தரத்தில் தனியே செல்கிறவனை திடுக்கிடச் செய்கின்ற மயிலின் அகவலைப் போல ஒரு பதட்டத்தை வாசிப்பினூடாக அளிக்கின்ற படைப்புகள் கோணங்கியுடையவை. கோணங்கியின் ‘பாழி’ வாழ்வின் தடங்களை சலனப்படுத்தி உயிர்ப்பூட்டுகின்ற மிக முக்கியமான ஒரு படைப்பு.
எந்த காரணமுமின்றி கோணங்கியை வாசிக்காமலே புறக்கணிக்கிறவர்களாயிருக்கிறார்கள் பலர் அல்லது கோணங்கியை முழுமையாக வாசித்தவர்கள் போல தங்களை காட்டிக் கொள்கிறார்கள். இதுவே கோணங்கியின் தனித்துவம்.
*
பொன்.வாசுதேவன்
//ஒரு படைப்பை படிக்கின்ற வாசகன் அதன் மீதான சுய வாசிப்பு அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். அது விமர்சனம் அல்ல, அனுபவ வெளிப்பாடு என்ற அளவிலேயே அதை ஏற்றுக் கொள்ளலாம். ஒரு அனுபவத்தை சக மனிதனுடன் பகிர்ந்து கொள்கிற முனைப்புதான் வாசக வெளிப்பாடு. ஒரு படைப்பை உள்வாங்கிக் கொள்வதற்கான ஆயத்தத்தை ஏற்படுத்துவதே விமர்சனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.//
ReplyDeleteபகிர்வுகளுக்கு நன்றி வாசு..:-))))