Thursday, May 26, 2011

இலக்கிய அக்கப்போர் – 2


தேசாபிமானம் - பாஷாபிமானம்

வயது, விதம், நியதி, தருணம், சுகம், ஞாபகம், கேலி, அற்புதம், அவசரம், அவதூறு, சதுரம், சித்திரம், பாத்திரம், பயம், பைத்தியம் இந்த வார்த்தைகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்ன தெரியுமா?

கடைசியில் பார்ப்போம்..

மொழியின் வரலாறு என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமா? தேசம் -மொழி இவற்றின் மீதான பற்றுதல் எந்த அளவிற்கு இருக்க வேண்டும்? ஏன் இருக்க வேண்டும்? இந்தக் கேள்வி அடிக்கடி எனக்குள் எழும். ஒரு மொழியின் வரலாறு என்றால் என்ன? இதன் பொருள் யாது? என்று பல கேள்விகள்…

ஞானக்கூத்தன் ஒரு கவிதையில் எழுதுவார்.

எனக்கும்
தமிழ்தான் மூச்சு ஆனால் அதை 
பிறர்மேல் விடமாட்டேன்

நம் தினசரி வாழ்வில் புழங்குகின்ற ஒவ்வொரு வார்த்தை தோன்றியதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. மொழியிலிருந்து தோன்றுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ ஒரு அடிப்படை விதிப்படியே உபயோகத்தில் இருந்து வருகிறது. சில வார்த்தைகள் வழக்கொழிந்து போனாலும் புதிய வார்த்தைகள் அவற்றிற்கான வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூகத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அச்சமூகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பையாக இருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களை நாம் வாசிக்கின்ற போது அப்போதிருந்த வார்த்தைப் பிரயோகங்கள் குறித்து அறிய முடிகிறது.

தமிழ் மொழிக்கான இலக்கண நூல்களில் தொல்காப்பியம் முக்கிய இடம் வகிக்கிறது. ‘எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி’ என ஐவகையாகப் பகுத்து தமிழ் மொழி இலக்கணம் எழுதப்பட்டுள்ளது.

வெறுப்பை ‘சீ’ யென்றும், உவகையை ‘வா’ என்றும், வியப்பை ‘ஐ’ என்றும், அவலத்தை ‘ஓ’ என்றும், அச்சத்தினை ‘ஐயோ’ என்றும் மொழியற்ற ஆதி நாட்களில் சைகை மற்றும் சுவையை வைத்தே மொழிக்கான ஒலிக்குறிப்புகள் முதன்முதலில் தோன்றியிருக்கிறது. இதன் நீட்சியாகத்தான் ஒலிக்குறிப்புகள் தோன்றி அதனை அவதானித்து மொழிக்குறிகள் உருப்பெற்றிருக்கின்றன. தமிழ் மொழியில் ட், ண், ர், ல், ழ், ற், ன் என்ற எட்டு மெய்யெழுத்துக்களை கொண்டு எந்த வார்த்தையும் துவங்குவதில்லை. இதற்கு காரணம் இவ்வனைத்து எழுத்துகளும் நாவின் மேலண்ணத்தை தொட்டு உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். இவ்வார்த்தைகளை சிரமப் பிரயோகம் செய்தே உச்சரிக்க வேண்டியிருந்ததால் அவை ஆரம்பத்திலிருந்தே முதல் வார்த்தையாக பயன்படுத்தப்படவில்லை.

நம் மொழி சார்ந்த வரலாற்றைப் படிப்பதும், அறிந்து கொள்வதும் அவசியமானதா இல்லையா என்பதை விட அதில் ஒரு புதிரை விடுவிக்கின்ற வசீகரம் ஏற்படுவதென்கிறது என்பது என்னளவில் உண்மை.

மேலே ஆரம்பத்தில் கேட்டதற்கான பதில்… இவ்வார்த்தைகளுக்கிடையே உள்ள ஒற்றுமை அனைத்தும் வடமொழி சொற்கள் என்பதுதான்.

*
நிஷாந்த் - இரவின் முடிவு

சுஜாதாவின் பரிந்துரையின் பேரில் - 1975ம் ஆண்டு கணையாழியின் கடைசிப் பக்கங்களில் - (இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்) ஷியாம் பெனகலின் இயக்கத்தில் வெளிவந்த ‘நிஷாந்த்’ (இரவின் முடிவு) படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் கொஞ்ச நாட்களாகவே அரித்துக் கொண்டிருந்தது. எதற்கும் தேடிப்பார்க்கலாமென்று இணைய பகவானை சுரண்டினால், என்ன ஆச்சர்யம்… முழுப்படமும் நீ-குழாயில் கிடைத்தே விட்டது.

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் நடந்த முதலாளித்துவ வன்முறைகளை பின்னணியாக கொண்டிருக்கிறது இப்படம். ஊரின் பண்ணையார் குடும்பத்தினர் செய்கின்ற அக்கிரமங்கள், ஏழைகள் மீதான கொடுஞ்செயல்கள் என கதைக்களம் ஹைதராபாத்தில் நடக்கிறது. ஊருக்கு புதிதாக வருகின்ற ஆசிரியரின் மனைவியை முதலாளி குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவன் கடத்திச் சென்று சிறைப்படுத்தி விடுகிறான். எதிர்த்துப்பேச திராணியற்ற கிராமத்து மக்கள். ஆசிரியரோ காவல்துறை, கலக்டர், வக்கீல், அரசியல்வாதி என ஒவ்வோரிடமாய் முறையிட்டு பண பலத்தின் முன் தோற்றுப் போகிறார். இறுதியாக கோவில் அர்ச்சகர் ஒருவரின் உதவியோடு கிராமத்து மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி, கோவில் திருவிழா நடக்கின்ற வேளையில் பண்ணையாரின் குடும்பத்தை ஊர் மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்று விடுகிறார்கள். இதில் ஆசிரியரின் மனைவியும் கொல்லப்படுகிறாள். அன்றைய காலகட்டத்தில் அதிகாரத்தின் வன்முறையை எதிர்ப்பதன் அவசியத்தை நேரடியாக பேசிய முக்கியமான படம் நிஷாந்த்.

க்ரீஷ் கர்னார்ட், ஷப்னா ஆஸ்மி, அம்ரிஷ் பூரி, நஸ்ருதின் ஷா, ஸ்மிதா (அறிமுகம்) ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிக்கனமான வசனம், நேரடியான கதைசொல்லல் என ஷ்யாம் பெனகலின் இயக்க உத்தி அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கோவிந்த் நிஹ்லானி தன் அழகான ஒளிப்பதிவில் எந்த செயற்கை பூச்சுகளுமின்றி, அசல் கிராமத்தை நம் கண்முன்னே கொண்டுவரச் செய்திருக்கிறார்.

இந்த இணைப்பில் நிஷாந்த் படத்தை நீங்களும் கண்டு மகிழுங்கள்.


*

படிமம் படுகிற பாடு 

சமீபத்தைய கவிதைகளில் படிமம் என்பது படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறதை நாம் அறிவோம். கற்பனையே செய்ய முடியாத படிமங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் படிமம் என்பதுதான் என்ன?

கவிதையை அழகியலோடு உணர படிமம் வகை செய்கிறது. கவிதையின் கருப்பொருளை எளிதான மனதுக்கு அணுக்கமானதாக உணரச் செய்கிற ஒரு கருவிதான் படிமம். தெரிந்ததைச் சொல்லி தெரியாததை விளக்குவது என்ற பொருளில் இதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

கவிதையில் வருகின்ற ஒரு காட்சியை, உணர்வு தளத்தில் புரிந்து கொள்வதற்கு கற்பனைத் தளத்தில் உருவகித்து காண்பதற்கு படிமம் உதவுகிறது. கவிதையின் செறிவு என்பது வெறுமனே வடிவப்பண்பு அல்ல. சுருக்கமான அல்லது செறிவான ஒரு நிகழ்வு. உடனடியாக சரியான, பொருத்தமான படிமத்துடன் அது எளிதாக விளங்கிக் கொள்ளப்படுகிறது. கவிதைக்கு படிமம் என்பது ஒரு வருணிப்பு உத்தியே தவிர வெறும் படிமங்களை அடுக்கிக் கொண்டால் அது கவிதையாகாது

‘மின்னல்’ பற்றி படிமங்களால் கூறப்பட்ட பிரமிளின் கவிதை ஒன்று.

ககனப் பறவை
நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை

கடலுள் வழியும்
அமிர்தத் தாரை

கடவுள் ஊன்றும்
செங்கோல்.

படிமக் கவிதைக்கு ஒரு எளிய உதாரணமாக மோகனரங்கனின் கவிதை.

ஊருணிக்குள்
நனைந்தது நிலவு
நக்கிக் குடிக்கிறது நாய்.

*
பொன்.வாசுதேவன்

1 comment:

 1. //
  கடலுள் வழியும்
  அமிர்தத் தாரை
  //

  pidichurukku.....

  //ஊருணிக்குள்
  நனைந்தது நிலவு
  நக்கிக் குடிக்கிறது நாய்.
  //

  :)

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname