Monday, August 24, 2009

குரங்கேற்றம் – உயிரோசை இணைய இதழில் வெளியான சிறுகதை

header1

உயிரோசை 24.8.09 இணைய இதழில் வெளியான எனது சிறுகதை

குரங்கேற்றம் ……………………………………………………………………….- ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

 

அவர்கள் பேச ஆரம்பித்த போது மணி ஐந்தரை இருக்கும். லேசாக இருட்ட ஆரம்பித்துவிட்டது.

monkeys1 ஊர்க்கோடியில் இருக்கும் மாந்தோப்பு அது. பெரும்பாலும் அவர்கள் வாசம் செய்யும் இடம் அதுதான். சில நேரங்களில் தென்னந்தோப்பு பகுதிக்கும் சென்று விடுவார்கள். கிளைகள் இல்லாததால் தென்னை மரத்தை அவர்களுக்கு அதிகம் பிடிப்பதில்லை. ஆனாலும் அதில் இருக்கும் இளங்குருத்தான தென்னம் பாளைகளுக்காகவும், சிறு தித்திப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை தரும் தென்னைப் பூக்களுக்காகவும் அங்கே செல்வதுண்டு.

"எதைப்பற்றி பேசப் போகிறீர்கள்...?"

மனிதர்களின் வழக்கம் போலவே வயதான குரங்கு ஒன்றுதான் பேச்சை ஆரம்பித்தது.

"எல்லா நம்ப கிட்டேயிருந்து வந்தவங்கன்னுதானே சொல்றாங்க. அப்புறம் நமக்கு மரியாதை கொடுக்கணுமா இல்லையா.." இளைய குரங்கு ஒன்று குரலை உயர்த்திப் பேசியது.

"இதோ பார், பெரியவங்க எதிரில் எப்படிப் பேச வேண்டுமுன்னு தெரியாதா உனக்கு" நடுத்தர வயதுக் குரங்கொன்று பேசிவிட்டு, வயதான குரங்கின் திருப்தியான முகத்தைப் பார்த்தது.

"நானும் ரொம்ப நாளாவே இதைப்பத்தி யோசிச்சுகிட்டுதான் இருக்கேன்" என்றது வயதான குரங்கு.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பெண் குரங்குகள் எல்லோரும் வயதான குரங்கு பேசுவதை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தன. அவர்களைப் பொறுத்தவரை வயதான குரங்கின் சொல்தான் வேதவாக்கு. இளவயது பெண் குரங்குகள் அவர்கள் வயதையொத்த குரங்குகளின் மீது தங்கள் பார்வைகளை வீசியபடியிருந்தன.

கொஞ்ச நேரத்திலேயே குரங்குகள் கூட்டம் அதிகரித்து விட்டது.

வயதான குரங்கு பேச ஆரம்பித்தது.

monkeys2 "நாமெல்லாம் ஒரு குழுவாக செயல்படணும். அப்போதான் நமக்கு நல்லது நடக்கும். நமக்குள்ள ஒற்றுமை இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அறவழியில நம்ம எதிர்ப்பை முதல்ல தெரிவிக்கலாம். இது பத்தி என்ன சொல்றீங்க"

ஆளுக்கொரு கருத்தாக பல யோசனைகளை சொல்லின.

"நாம எல்லாம் உணவை எடுத்தாந்து ஒரே இடத்துல பகிர்ந்து சாப்பிடணும்"

"நாம ஒரு பழத்தோட்டம் போடலாம்"

"தினமும் ஒரு கடைன்னு மாசம் முழுக்க உணவு வாங்கலாம், தேவையில்லாம யாரையும் தொல்லை பண்ண வேண்டாம், இது அவங்களுக்கும் சரியான திட்டமாதான் இருக்கும்"

"நாம ஒரு தலைவர தேர்ந்தெடுத்து அவரையே உணவு வாங்கித்தர சொல்லலாம், தராதவங்க பொருளை மட்டும் நாசம் பண்ணலாம்"

எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு நடுத்தர வயது குரங்கு எழுந்தது.

நீண்ட வாலை தன் ஒரு கையில் மடித்துப் பிடித்தபடி, "நமக்குன்னு ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம்" என்றது அமைதியாக.

எல்லா குரங்குகளும் சற்று நேரம் அமைதியாக இருந்தன.

mon4 "எல்லாரும் அமைதியா இருந்தா எப்படி..... நாம ஒற்றுமையா பலத்தோட இருக்கணும்னா நம்மை வழி நடத்த ஒரு தலைவர் தேவை. இதுதான் நம்ம பிரச்சனைக்கெல்லாம் தீர்வு. இல்லேன்னா காலம் முழுக்க அவங்க கிட்ட அடிவாங்கி அவமானப்பட்டு, திருடித் தின்னு கெட்ட பேரோட வாழ்ந்து, அப்படியே சாக வேண்டியதுதான்" உணர்ச்சிகரமாக பேசியது நடுத்தர வயது குரங்கு.

மறுபடியும் கூட்டத்திற்குள் சலசலப்பு.

"என்ன நான் சொல்றது சரிதானே" நடுத்தர வயது குரங்கு தன்னையொத்த குரங்கிடம் கேட்டது.

"நீ சொல்றதுதான் எனக்கும் சரியா படுது, என்ன அப்படித்தான.. நீ என்ன சொல்ற" பக்கத்திலிருந்த குரங்கைக் கேட்டபடி தன் சம்மதத்தை தெரிவித்தது.

monkeys3 சற்று நேரத்தில்,

"நாம தலைவரை தேர்ந்தெடுக்கலாம், நாம தலைவரை தேர்ந்தெடுக்கலாம்,

நாம தலைவரை தேர்ந்தெடுக்கலாம், நாம தலைவரை தேர்ந்தெடுக்கலாம்"

பெரும்பாலான குரங்குகளும் உற்சாகமாய் கத்தின.

கோஷம் அதிகரித்தது. எல்லா குரங்குகளும் கத்தின. பெண் குரங்குகளும் உற்சாகமாகி கத்தின. குட்டிக் குரங்குகள் மகிழ்ச்சியில் குதித்து கும்மாளம் போட்டன.

இளவயதுக் குரங்குகள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. வேறு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவர்களின் வயதும் அனுபவமின்மையும் அவர்களுக்கு எதிராகி பேச முடியாமல் போனது.

வயதான குரங்கு எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

மறுபடியும் நடுத்தர வயதுக் குரங்கு ஆரம்பித்தது.

"நமக்குள்ள ஒருத்தரை தலைவரா தேர்ந்தெடுத்து, அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நாம நடந்தா நம்ம நிலைமை மாறிடும், என்ன சொல்றது"

mon3 "ஆமாமாம்... நம்மை நிலைமை மாறிடும், நமக்காக உணவை தலைவரே தேடித் தருவார், நமக்கு எந்த கெட்ட பேரும் இருக்காது. நாமளும் கௌரவமா வாழலாம், மறுபடி நம்மளை அவங்கல்லாம் கும்பிட ஆரம்பிச்சுடுவாங்க"

குரங்குகளின் கருத்து ஒருமித்ததாக இருந்தது.

"முக்கியமான விஷயம், நமக்குன்னு தலைவர் இருக்கறப்ப நாம அவர் பேச்சை கண்டிப்பா கேக்கணும், சரியா" நடுத்தர வயதுக் குரங்கு சொன்னது.

"இனிமே கடையில இருக்கற பூவை பறிக்கறது, வீட்ல பெண்கள் தனியா டி.வி. பார்த்துட்டு இருக்கும்போது ஜன்னல் வழியா பருப்பு டப்பாவை எடுத்து கொட்டறது, வாழை மரத்துல ஏறி அட்டகாசம் பண்றது எல்லாம் நீங்க பண்ணக்கூடாது" தொடர்ந்து பேசியது நடுத்தர வயதுக் குரங்கு.

மந்திரத்தால் வசியம் பண்ணப்பட்டது போல கட்டுண்டு எல்லா குரங்குகளும் அதன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தன.

மறுபடியும் பேச ஆரம்பித்தது நடுத்தர வயது குரங்கு

"சரி, நம்ம தலைவரா யாரை தேர்ந்தெடுக்கலாம். விருப்பு, வெறுப்பில்லாம செயல்படணும், நம்ம நலனுக்கு எதிரா இருக்கக்கூடாது. அப்படி ஒருத்தர் தலைவரா இருக்கணும்"

"அப்போ அதுக்கு சரியான ஆளு நீதான். நீதான் தலைவரா இருக்கணும். நீ நல்லா பேசறே. நம்ம இனத்தோட நலனுக்காக பேசற" என்றன குரங்குகள் ஒன்றான குரலில்.

mon2 இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நடுத்தர வயதுக் குரங்கு. அதிர்ச்சியை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், "நானெல்லாம் தலைவரா இருக்க முடியாது. நம்ம நலனுக்குன்னு பாடுபடற ஒரே தலைவர் அவர்தான், அவர்தான் நமக்கெல்லாம் தலைவரா இருந்து வழிநடத்தனும்" என்றபடி வயதான குரங்கை நோக்கி வணங்கியது.

பக்கத்தில் இருந்த மற்றொரு குரங்கை உசுப்பிவிட, "தலைவர் வாழ்க" என்று குரலெழுப்பியது அது. மற்ற குரங்குகளும் "தலைவர் வாழ்க" என உரக்கச் சொல்லின.

வயதான குரங்கு மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கர்வமாய் அமர்ந்திருந்தது.

"எல்லாம் முதல்லயே முடிவு பண்ணிட்டாங்க. இது அப்பவே எதிர்பார்த்ததுதான்" அதிருப்தியான குரலில் இளைய குரங்குகள் வெறுப்புடன் கூறின.

"நீங்களே பேசினா எப்படி. தலைவரை பேச சொல்லுங்க" சில குரங்குகள் நடுத்தர வயது குரங்கை நோக்கி கூறின.

வயதான குரங்கு பேச ஆரம்பித்தது.

"நான் இதுக்கெல்லாம் தகுதியான ஆளான்னு தெரியல. ஆனா நீங்கள்லாம் சொல்றீங்க. இந்த உடம்பு இனிமே உங்களுக்காகவே உழைக்கும், இது உறுதி"

"தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க" குரங்குகளில் குரல் விண்ணை முட்டியது.

நடுவில் ஒரு குரங்கு "தலைவருக்கு வலது கரமாவும், நம்ம நலனுக்காக சரியான தலைவர அறிவிச்ச நம்ம தளபதி வாழ்க" என்று நடுத்தர வயதுக் குரங்கை நோக்கி வணங்கியது.

உடனே "தலைவர் வாழ்க.. தளபதி வாழ்க.. நம் ஒற்றுமை ஓங்குக" குரல்கள் விண்ணை முட்டியது.

"சரி... சரி... அமைதி. சொல்றத கவனமா கேளுங்க. எந்த இடத்திலையும் நம் உரிமைய விட்டுக் கொடுக்காதீங்க. நாம மிருகங்கள்தானே. நாம் மிருக பாவத்தோடதான் நடந்துக்குவோம்னு அவங்களுக்கு தெரியாதா என்ன, அப்படி நாம நடந்துக்க கூடாதுன்னா அவங்க நம்மை மதிச்சு, மரியாதையா நடத்தணும். அதுக்கு பிறகு நாமளும் அவங்க எதிர்பார்க்கிறா போல நடந்துக்கலாம்"

தலைவராகிவிட்ட வயதான குரங்கு எல்லோரையும் பார்த்து கட்டளையிடுவது போல பேசியது.

"நாம ஒற்றுமையாகிவிட்ட இந்த நேரத்துல நம்ம தலைவரை ஒரு நாற்காலியில உக்கார வெச்சு, அவங்களை போலவே மரியாதை செலுத்தணும். அதுதான் தலைவருக்கு கௌரவமா இருக்கும்" என்றது தளபதியான நடுத்தர வயதுக் குரங்கு.

"ஆமாமாம்.... அதுதான் சரி" என்றன எல்லா குரங்குகளும்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இளைய குரங்குகள் வேறு வழியின்றி வெறுப்புடன் அமர்ந்திருந்தன.

"சரி தலைவருக்கு ஒரு நாற்காலி தனியா செஞ்சு அவரை பதவியேற்க செய்யலாம்" என்றன எல்லா குரங்குகளும்.

mon1 "தனியா செய்யணும்னு இல்ல. ஏற்கனவே நான் தயார் செஞ்சு வெச்சிருக்கேன்" என்றபடி மரத்திற்கு பின்னாலிருந்து ஒரு புதிய பஞ்சு பொதித்து பட்டுத்துணியால் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியை எடுத்து வந்தது தளபதி குரங்கு.

தலைவர் குரங்கு கால்மேல் கால் போட்டு கம்பீரமாய் நாற்காலியில் அமர்ந்தபடி வாலை எடுத்து கைப்பிடியின் ஒரு பக்கம் போட்டது. அருகில் சென்று நின்றது தளபதி குரங்கு.

"தலைவர் வாழ்க.... தளபதி வாழ்க.... நம் ஒற்றுமை ஓங்குக..." குரங்குகளின் குதூகலமான குரல் அடங்க வெகுநேரமானது.

000

aganazhigai@gmail.com

14 comments:

 1. வெவகாரமான கதையா இருக்கே. இளைஞர்களுக்கு வழிவிடாம இருக்கற குணம் மனுசங்களோட குணமில்லையா!!!

  ReplyDelete
 2. கவணிக்க எவ்வளவோ இருந்தாலும்

  ---------------

  தலைவர் குரங்கு கால்மேல் கால் போட்டு கம்பீரமாய் நாற்காலியில் அமர்ந்தபடி வாலை எடுத்து கைப்பிடியின் ஒரு பக்கம் போட்டது.]]

  உங்கள் இரசனை ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்

  ReplyDelete
 3. வாழ்த்துக‌ள் அக‌நாழிகை. க‌தை ந‌ன்று.

  ReplyDelete
 4. எனக்கு புரியுது..ஆனா சில அரசியல்வாதிகள் குரங்கு மாதிரி தாவுறாங்களே ..ஏன்?விளக்கமா பின்னூட்டம் போடலாம்..வேணாம்

  ReplyDelete
 5. ஆகா.....இந்த விளையாட்டுக்கு நான் வரல... பிடிச்சிருக்குன்னு சொன்னா ஆட்டோ வருமா?

  -ப்ரியமுடன்
  சேரல்

  ReplyDelete
 6. மனிதனின் பரிணாம வளர்ச்சிதான் குரங்கோ !!! அருமை

  ReplyDelete
 7. வாழ்த்துக‌ள்
  அருமை

  ReplyDelete
 8. ஆகா... இந்த கதை எங்கயோ நடந்திக்கிட்டிருக்கிற மாதிரியே இருக்கு(தப்பா...) நான் நினைத்தது சரியா...

  ReplyDelete
 9. சரிதான்,...வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. வாழ்த்துகள், அருமையான கதை.

  ReplyDelete
 11. முதலில் வாழ்த்துகள்,.. கதை அருமையாக இருக்கு வாசு,...

  ReplyDelete
 12. உயிரோசையிலேயே படித்துவிட்டேன். மிகவு‌ம் ரசித்து படித்தேன்

  ReplyDelete
 13. உயிரோசையிலேயே படித்துவிட்டேன். வாழ்த்துக‌ள்
  அருமை.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname