உண்மை எப்போதும் நம் அருகில் தான் உள்ளது. நம் கண்களுக்கு எதிரே கைகளுக்குப் பக்கத்தில் தொட்டுவிடக்கூடிய தூரத்தில் நிஜம் இருந்தாலும் நம்மில் பலரும் உணர்வதில்லை. காரணம் உண்மையை நாம் வெளியே தேடிக் கொண்டிருப்பது தான்.
புழுதி அடர்ந்த தெருவில் குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள் ஒரு கிழவி.
"என்ன தேடுகிறீர்கள் ?" என்றான் எதிரில் வந்த இளைஞன்.
"பெட்டிச் சாவியைத் தொலைத்து விட்டேன். தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றாள் கிழவி.
"அடடா... சாவி தெருவில் விழுந்துவிட்டதா ?"
"இல்லை... வீட்டில்தான் தொலைத்து விட்டேன்"
"வீட்டில் தொலைத்த சாவியைத் தெருவில் வந்து தேடுகிறீர்களே ?"
"வீட்டில் வெளிச்சம் இல்லை... வெளியில்தான் நிலா காய்கிறது" என்றாள் கிழவி.
இது கேரளத்து நாட்டுப்புறக் கதை. நாமும் அந்தக் கிழவியைப் போலத்தான் இருக்கிறோம். நம் சந்தோஷங்களை எங்கேங்கோ தொலைத்துவிட்டு வெளியில் தேடிக் கொண்டிக்கிறோம்.
ஆனால் அதை மீட்டெடுக்க எங்கே தொலைத்தோமோ அங்கே தேடாமல் நமக்கு சௌகர்யமான இடங்களில் தேடித்தேடி விரக்தி அடைகிறோம். விரக்தி அதிகரிக்க அதிகரிக்க வெறுப்புதான் மிஞ்சுகிறது. நம் மீதே நமக்கு வெறுப்பு. நம் கையாலாகாத்தனத்தின் மீதொரு கசப்பு.
உண்மையில் நாம் சந்தோஷம் காண முயல்வதில்லை. அதற்கு மாறாக சின்னச்சின்ன பொய்களில் கிடைக்கும் தற்காலிக சந்தோஷங்கள் நம்மை திருப்திப்படுத்தி விடுகின்றன.
உண்மையைக் காண்பது எளிது என்றாலும் நாம் அதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. பார்ப்பது, உணர்வது என எல்லாமே நேரடியான விஷயங்கள். எண்ணுதல் என்பது நேரடியாக நிகழக்கூடியதல்ல. அதற்கு மனம், மனம் வைக்க வேண்டும்.
அன்பை உணர்ந்தவர்கள் உண்மையையும், உணர இயலும். உண்மையைப் பற்றி சிந்திப்பது மட்டுமே அதை உணர போதுமானது அல்ல. சிந்தனை சரியானதாக இருக்க வேண்டும். எண்ணம் சரியானால் எல்லாம் சரியாகும்.
சரி... சிந்தனை சரியானதாக இல்லையெனில் என்னவாகும் ? முட்டாள்தனமான செயல் என்று நம் சிந்தனைக்கு பெயர் கிடைக்கும். இதுதான் இயல்பில் நடக்கக்கூடியது.
யூத தத்துவ அறிஞர் ஒருவர் இருந்தார். ‘யாசல்‘ என்ற பெயர். மிகப்பெரிய தத்துவ மேதை சிந்தனாவாதி. எல்லா தத்துவயியலாளர் போலவே ‘யாசல்‘ வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த நேரமின்றி சிந்திக்க மட்டுமே செய்து வந்தார்.
ஒருமுறை அருகில் இருந்த ஊரின் சந்தைக்கு தனது நிலத்தில் விளைந்த கோதுமையை விற்பதற்காக எடுத்துக்கொண்டு கிளம்பினார் யாசல். தனது மனைவியிடம் "நான் கோதுமையை விற்றதும் எப்போது திரும்புகிறேன் என்று தந்தி கொடுக்கிறேன்" என்றார்.
சந்தைக்குச் சென்று நல்ல லாபத்திற்கு கோதுமையை விற்ற யாசல் தனது மனைவிக்கு தந்தி தருவதற்காக அஞ்சல் நிலையம் வந்தார்.
"கோதுமை நல்ல லாபத்திற்கு விற்றுவிட்டது. நாளை வருகிறேன். அன்பு முத்தங்களுடன்.. யாசல்"என்று தந்தி எழுதினார்.
அதன் பிறகுதான் அவர் சிந்திக்கத் தொடங்கினார். என் மனைவி என்னை மூடன் என்றல்லவா நினைத்துக் கொள்வாள்...
கோதுமையை நல்ல லாபத்திற்கு விற்காமல் நஷ்டத்திற்கா நான் விற்றிருப்பேன் ? என்று யோசித்த யாசல் தந்தியிலிருந்த நல்ல லாபத்திற்கு என்ற வார்த்தைகளை அடித்தார்.
மறுபடியும் தந்தியைப் படித்து விட்டு யாசல் கோதுமை விற்க நாம் வந்ததுதான் மனைவிக்குத் தெரியுமே... பிறகு ஏன் அந்த வார்த்தைகள் ? என்று நினைத்து கோதுமை விற்று விட்டது என்ற வார்த்தை இரண்டையும் எடுத்துவிட்டு மறுபடியும் தந்தியின் வாசகங்களைப் படித்துப் பார்த்தார்.
அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. நாம் நாளைதான் போய்விடப் போகிறோமே... எதற்கு நாளை வருகிறேன் என்ற வார்த்தைகள் என்ற எண்ணத்தில் அவற்றை அடித்தார். அடுத்ததாக யோசித்து நம் மனைவிக்கு அன்பு முத்தங்கள் என்றைக்கும் உரிமையானதுதானே ? அதை வேறு ஏன் எழுத வேண்டும். என்று அந்த இரண்டு வார்த்தைகளையும் எடுத்தார்.
இறுதியாக தந்தியில் யாசல் என்ற பெயர் மட்டும் இருந்தது. எனக்கென்ன பைத்தியமா பிடித்து விட்டது ? என் மனைவிக்குத் தான் என் பெயர் தெரியுமே ? என்று அதையும் அடித்து தந்தியைக் கிழித்து விட்டு கிளம்பிவிட்டார்.
முறையற்ற சிந்தனையின் விளைவுகள் அபத்தமானதாக இருக்கும். இது எப்படி நிகழ்கிறது ? எது தேவை எது தேவையில்லை. என்று உணராமல் தேர்ந்தெடுக்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதே இதன் காரணம்.
தேவையற்ற எண்ணங்களாக முழு வாழ்க்கையும் வீணடிக்கப் பட்டு விடுகிறது. எல்லாவற்றையும் கடந்து இறுதியில் வாழ நினைக்கிற போது இறுதிக் கட்டத்தில் வாழ்வின் விளிம்பில் நிற்கிறோம் நாம்.
நம்மில் பலரிடமும் சிந்தித்ததை செயல்படுத்த இயலாத நிலை நிலவுகிறது. யோசித்துக் கொண்டிருப்பவர்கள் யோசித்துக் கொண்டும் யோசிக்காதவர்கள் செயல்பட்டுக் கொண்டும் இருக்கின்ற நிலையை நாம் காணலாம்.
யோசிக்காமல் இறங்கி விட்டேன். என்று கூறுபவர்கள் பலரை நாம் சந்தித்திருப்போம். அதற்காக இவர்களெல்லாம் யோசிக்கவே இல்லை என்று கூறிவிட முடியாது. வேகமான முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர்கள் இவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
திட்டமிடப்படாத எந்தவொரு செயலும் முழுமையான பலனைத் தருவதில்லை. ஹிட்லர், நெப்போலியன், மாவோ என்ற செயலை மட்டுமே நம்பி இறங்கியவர்கள் வரலாற்றில் இடம் பெற்றாலும் திட்டமிடப்படாத வெற்றிகள் அவர்களுக்கே எதிர் விளைவாக அமைந்ததை நாம் அறிவோம்.
அரிஸ்டாட்டில், கந்த், அல்லது ஹெகல் என சிந்தனையாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் சிந்தனை அடிப்படையில்தான் இன்றும் எண்ணம் தொடர்கிறது.
எண்ணத்துடன் எச்சரிக்கையோடு அணுகும் செயல்திறன் தான் நாம் அடைய விரும்புவது. எண்ணம் ஒரு நிலை வரை மட்டுமே தொடர வேண்டும். பிறகு செயல்படத் தொடங்கிவிட வேண்டும். மாறாக தொடர்ந்து சிந்தனையை மட்டும் வளர்த்துக் கொண்டு செயல்படாமல் போய்விட்டால் சிந்தித்ததற்கு அர்த்தமின்றி போய் விடுகிறது.
ஒரு பெரிய கோட்டை சிறிய கோடாக்குவது எப்படி சுலபமோ அதுபோல சிந்தித்ததை செயல்படுத்துவதும் சுலபம்தான். பிறகு ஏன் நாம் சிந்தித்தலையே தொடர விரும்புகிறோம் ?
காரணம் சிந்தித்தல் போதை போன்றது. கனவில் சுகம் காண்பது போல வெறும் யோசித்தலே நம்மை திருப்தியடையச் செய்து மேற்கொண்டு செயல்வடிவம் கொடுக்க விடாமல் செய்து விடுகிறது.
நம்முடைய செயல்கள் எல்லாமே நம் கட்டுப்பாட்டில் சுய நினைவில் இருக்கும்போது நிகழ்பவைதான். ஆனாலும் ஏன் நம்மையும் மீறி விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன ?
எண்ணம் வரையறை இல்லாதது. எப்படி அழகு என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாதோ அதுபோலத் தான் மனதின் எண்ணங்களும்.
எண்ணங்கள் செயலுருவாகும் போது முழுமையான ஈடுபாடு அளிக்கப்பட வேண்டியது அவசியம். துக்கம், சந்தோஷம் என எதுவானாலும் அதை முழுமையாக அனுபவித்து உணர வேண்டும்.
அந்தந்த நிமிடங்களை அனுபவித்து உணர்கின்ற பொழுது வாழ்க்கையின் எல்லா நேரமும் இன்பமானதாய் அமையும். சாப்பிடும் போது.. சாப்பிட்டு தூங்கும் போது தூங்கி... எதையும் முழு ஈடுபாடு காட்டி செய்வது நம்மை உயர்த்தும். ஏனோதானோவென்று செய்கின்ற வேலையில் கவனமின்றி அக்கறையின்றி ஈடுபடுவது நம்மையும் நம் வாழ்க்கைச் சூழலையும் பெரிதும் பாதிக்கிறது.
ஆக, முறையான சிந்தனையுடனும் சரியான செயல் திறனுடனும் வாழ்க்கையை நம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது நம் கடமை. காரணம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, வெறும் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதல்ல.
"அகநாழிகை"
பொன்.வாசுதேவன்
சிந்திப்போம்..செயல்படுத்துவோம்..
ReplyDeleteசிந்திக்கத் தூண்டும் பதிவு
ReplyDeleteஇரண்டு கதைகளும் நன்றாக இருக்கிறது
கேட்டிராததும் கூட
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
அடுக்கடுக்கான் உதாரணங்களுடம் சிந்தனையை தூண்டும் இடுகை.. வாழ்த்துகள்
ReplyDeleteயோசிக்காமல் இறங்கி விட்டேன். என்று கூறுபவர்கள் பலரை நாம் சந்தித்திருப்போம். அதற்காக இவர்களெல்லாம் யோசிக்கவே இல்லை என்று கூறிவிட முடியாது. வேகமான முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர்கள் இவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ReplyDeleteநன்றாக சொன்னீர்கள் வாசு சார்
ரொம்ப அழகான ஆழமான பதிவு....பிடிங்க பூங்கொத்தை!
ReplyDeleteசிந்தனைச் சிற்பியே!
ReplyDeleteகலக்குங்க...
இந்த நேரத்தில சொல்லுறீங்களே சார்.. ஒரு ரெண்டு வருசம் முன்ன சொல்லியிருக்கலாம்!
ReplyDeleteசிந்திக்க வைத்துவிட்டீர்கள்...
ReplyDeleteஅருமையான பதிவு வாசு.
ReplyDeleteமுதல் இரண்டு படங்கள் மிக அருமைங்க.
ReplyDeleteஉண்மையிலேயே முதல் படம் ரொம்ப பிடிச்சிருக்கு
அந்த கூதாகாலம் - அருமை ...
-------------------------
தலைப்பிலேயே நிறைய சிந்திக்க வச்சிட்டீங்க
[[வாழ்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, வெறும் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதல்ல]]
மிக அருமை.
அருமையான பதிவு.. வாசு..
ReplyDeleteas always, படங்களெல்லாம் மிக பொருத்தம், அழகு.
ReplyDeleteரொம்ப யோசிச்சு எழுதி, யோசிக்க வைத்து, யோசனையைத் தூண்டி, ஏன் யோசிக்காம இருக்கோமுன்னு, யோசிக்க யோசிச்சேன்.
--வித்யா
முந்தா நாள் அடிச்ச சரக்குல எதாவது பிரச்சனையா வாசு?
ReplyDeleteஅருமையான பதிவு அண்ணா..
ReplyDeleteஅருமையான பதிவு அகநாழிகை. விரும்பிப்படித்தேன். நன்றாக இருந்தது.
ReplyDeleteஎனக்கு இந்த நேரத்தில் அவசியமான பதிவு.. உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தேவையை உணர்கிறேன்.. நல்ல இடுகை வாசு..
ReplyDeleteஉங்கள் நடையில் அருமையானதொரு கட்டுரை
ReplyDeleteகடைசி வரிகள் நச்.
வாசு அண்ணா,சிந்தித்துச் செயல்படுங்கள் என்று ஆழமாகச் சிந்தித்து எழுதப்பட்ட தகவலோடு ஒரு பதிவு.மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய சிந்தனைகள்.
ReplyDeleteஎன்றாலும் சிலசமயம் சிந்தித்துச் செயல்பட்டாலும் சறுக்கிவிடுகிறதே!
தங்களை எனது வலைப்பூவில் தொடர் கேள்வி பதில் தொடர அழத்துள்ளேன்.http://thogamalaiphc.blogspot.com/2009/08/blog-post_05.html
ReplyDeleteஅருமையான கதைகளோடு அழகான பதிவு.
ReplyDeleteஅருமை... கதைகளும் சிந்தனையும்..
ReplyDeleteவாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றி.
ReplyDelete“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
சிந்தனையைத் தூண்டும் இடுகை. அற்புதம் நண்பரே.
ReplyDelete//
ReplyDeleteகாரணம் சிந்தித்தல் போதை போன்றது. கனவில் சுகம் காண்பது போல வெறும் யோசித்தலே நம்மை திருப்தியடையச் செய்து மேற்கொண்டு செயல்வடிவம் கொடுக்க விடாமல் செய்து விடுகிறது.
//
அருமையான, சிந்திக்கவும் செயல்படவும் வைக்கும் கட்டுரை
சிந்திக்கவும, செயலாற்றவும் வைக்கும் அருமையான பதிவை குட்டிக்கதைகளோடு எழுதி யிருந்தமை பாராட்டுக்குரியது. தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteஉங்கள் அக நாழிகைக்கும் எனனுடைய வாழ்த்துதல்கள்.
nantru....:)
ReplyDelete//காரணம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, வெறும் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதல்ல.//
ReplyDeleteso sweet.........:)