செஞ்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெ.இராதாகிருஷ்ணன், செஞ்சி தமிழினியன், செந்தில்பாலா உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பலர் ஒன்றிணைந்து "நறுமுகை" என்ற சிற்றிதழையும், "குறிஞ்சி வட்டம்" (சமூக கலை இலக்கியக் கூடல்) என்ற பெயரில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர். செஞ்சி தமிழினியன் எழுதிய "ராக்காச்சி பொம்மை" மற்றும் "சொப்புக்கடை" என்ற இரு கவிதை நூல்களும், இன்னும் சில நூல்களையும் "நறுமுகை" வெளியிட்டுள்ளது.
000
"குறிஞ்சி வட்டம்" சமூக கலை இலக்கியக் கூடலின் 42-வது நிகழ்வாக கடந்த 27.7.09 அன்று செஞ்சி ஏ.என்.ஏ. சிற்றரங்கில் "இனவரைவியலும் தமிழ்ப் புனைவுகளும்" என்ற தலைப்பில் கருத்தரங்கும், கலந்துரையாடலும் நடைபெற்றது. தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழகத்தின் மிக முக்கிய சமூகவியல் ஆய்வறிஞர் முனைவர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நானும், தூறல்கவிதை ச.முத்துவேலும் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் மிக முக்கியமான சமூகவியல் அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் (1943). தூத்துக்குடி வ.ஊ.சி. கலைக்கல்லூரியில் 1967 முதல் 2001 வரை, 34 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கல்லூரிப் பேராசிரியர் என்ற அடையாளத்தைத் தாண்டி ஒரு சமூகவியல் ஆய்வாளராக அவரது பணி குறிப்பிடப்படவேண்டியது. நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு, மானுடவியல் துறைகளில் ஆழ்ந்த புலமையோடு பல தனித்துவமான ஆய்வுகளைப் படைத்தவர்.
நா.வானமாமலையின் மாணவர் என்ற அடிப்படையில் இன்னமும் கள ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவர் தமிழக நாட்டுப்புற பாடல்கள் களஞ்சியம் 10 தொகுதிகளும், தமிழக நாட்டுப்புற கதைக் களஞ்சியம் 10 தொகுதிகளும் வெளியிட்டுள்ளார்.
கல்வெட்டுக்கள், பட்டயங்கள், இலக்கியங்கள், பயணக்குறிப்புகள், தொல்லியல் சான்றுகள், நாணயங்கள், அரசு ஆவணங்கள் மட்டுமின்றி மக்களின் வாய்மொழி வழக்காறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மாற்று வரலாற்றை / மக்கள் வரலாற்றை எழுதி வரும் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், நா.வானமாமலையின் ஆராய்ச்சி, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய ஆய்வு இதழ்களின் ஆசிரியக்குழு உறுப்பினர்.
இடதுசாரி கருத்தியலின் அடிப்படையில் தமது ஆய்வுகளினால் தமிழில் புதிய திறப்புகளைச் செய்து புதிய சமூக மானுடவியல் ஆய்வாளர்களுக்கு வழகாட்டியாக விளங்குகிறார்.
"இனவரைவியலும், தமிழ்ப் புனைவுகளும்" என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் தமிழ் புனைவுகளில், குறிப்பாக தமிழ் நாவல்களில் இனவரைவியல் (Ethnography) எவ்வாறு எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி கருத்துரை வழங்கினார்.
தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய ‘பஞ்சும் பசியும்‘ எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித்தீ‘, ராஜம் கிருஷ்ணனின் ‘குறிஞ்சித்தேன்‘ இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்‘ ஆகிய நாவல்களில் பேசப்பட்டிருந்த இனவரைவியல் குறித்து குறிப்பிட்டார். விரிவான கருத்துரையும் அதையொட்டி கேள்வி பதில் வகையிலான கலந்துரையாடலும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தவர்களை நறுமுகையின் சார்பில் பேராசிரியர் ஜெ.இராதாகிருஷ்ணன் வரவேற்றார். இடையிடையே கவிதைகளும் வாசிக்கப்பட்டது. கவிஞர் செந்தில்பாலா நன்றியுரை கூறினார். நிறைவானதொரு நிகழ்வாக இருந்தது.
000
(ஆ.சிவசுப்ரமணியன் பற்றிய குறிப்புகள் நறுமுகையால் வழங்கப்பட்டவை)
000
பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடத்தக்க சில படைப்புகள் :
- பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வுரை
- அடிமை முறையும் தமிழகமும்
- வ.ஊ.சி.யும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும்
- ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும்
- மந்திரம் சடங்குகள்
- பின்னி ஆலை வேலை நிறுத்தம் 1921
- வ.ஊ.சி. ஓர் அறிமுகம்
- மகளிர் வழக்காறுகள்
- தமிழ் அச்சுத் தந்தை அன்ட்ரிக் அடிகளார்
- அடித்தள மக்கள் வரலாறு
- தமிழகத்தில் அடிமை முறை
- நாட்டார் வழக்காற்றியல் அரசியல்
- கிறித்தவமும் சாதியும்
- பஞ்சமனா பஞ்சையனா
- கோபுர தற்கொலைகள்
- கிறித்தவமும் தமிழ்ச்சூழலும்
குறுநூல்கள்
- எந்தப்பாதை
- தர்க்காக்களும், இந்து இஸ்லாமிய ஒற்றுமைகளும்
- பிள்ளையார் அரசியல்
- சமபந்தி அரசியல்
- பண்பாட்டு அடையாள போராட்டங்கள்
- நாட்டார் சமயம்
- மதமாற்றத்தின் மறுபக்கம்
- விலங்கு உயிர்பலி தடைச்சட்டத்தின் அரசியல்
- புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள்
பதிப்புகள்
- பூச்சியம்மன் வில்லுப்பாட்டு
- தமிழக நாட்டுப்புற பாடல் களஞ்சியம் (10 தொகுதிகள்)
- தமிழக நாட்டுப்புற கதைக் களஞ்சியம் (10 தொகுதிகள்)
- புனித சவேரியாரின் கடிதங்கள்
000
நறுமுகை அமைப்பின் ஒருங்கிணைப்பில் நாவல் குமாரகேசன் நூல்கள் வெளியீட்டு விழா 2.8.09 காலை 9.30க்கு சென்னை தேவநேயப்பாவாணர் மைய நூலக சிற்றரங்கில் நடைபெற உள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம்.
விவரங்கள் அழைப்பிதழில்....
தொடர்புகளுக்கு :
நறுமுகை, 29/35, தேசூர்பாட்டை, செஞ்சி. பேச : 9486150013
000
“அகநாழிகை“ பொன்.வாசுதேவன்
முதிர்ந்தவர்களை அறிமுகபடுத்திற்கு நன்றி....
ReplyDelete//பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடத்தக்க சில படைப்புகள் //
புத்தக பெயர்களே ஆச்சியமூட்டுகின்றன அப்புறம் எழுதபட்ட வருடம். என்ன சொல்ல.. படிக்கவே இந்த பிராணன் போதாதுபோலயிருக்கு
நல்ல பகிர்வு.. பலவும் அறிந்துகொண்டேன் மிக்க நன்றி வாசு..
ReplyDeleteநிறைய செய்திகளை அறிந்து கொள்ள ஏதுவாயிருந்தது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி வாசு !!
செஞ்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெ.இராதாகிருஷ்ணன், செஞ்சி தமிழினியன், செந்தில்பாலா உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பலர் ஒன்றிணைந்து "நறுமுகை" என்ற சிற்றிதழையும், "குறிஞ்சி வட்டம்" (சமூக கலை இலக்கியக் கூடல்) என்ற பெயரில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர். செஞ்சி தமிழினியன் எழுதிய "ராக்காச்சி பொம்மை" மற்றும் "சொப்புக்கடை" என்ற இரு கவிதை நூல்களும், இன்னும் சில நூல்களையும் "நறுமுகை" வெளியிட்டுள்ளது.///
ReplyDeleteஇலக்கிய நிகழ்வுகள் ஆங்காங்கே நடப்பது உற்சாகமூட்டுகிறது!!
"நறுமுகை" என்ற சிற்றிதழை அறிமுகம் செய்ததற்கு நன்றி... கிடைத்தால் அவசியம் படிக்கிறேன்.
ReplyDeleteதமிழைக் கொஞ்சமாவது அதன் அருமை பெருமைகளோடு இவர்கள் இழுத்துப் போனால்தான் இன்றைய தலைமுறையினர் பின் தொடர்வார்கள்.நன்றி வாசு அண்ணா.
ReplyDeleteஏன் என் பக்கம் உங்களைக் காணவில்லை.வாங்க.
நல்லதொரு பதிவு பகிர்வுக்கு நன்றிகள்...
ReplyDeleteநல்ல பகிர்வு வாசு சார்
ReplyDeletenice introduction to our reading community. continue ur good work,
ReplyDeletewith warm regards,
RVC
நறுமுகை- பேரே அருமையாக இருக்கிறது. அப்பத்திரிகையை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி வாசு சார்.
ReplyDeleteநல்லதொரு பதிவு. மிகவும் நன்றி
ReplyDeleteஅன்புடன்,
நறுமுகை.காம் (www.narumugai.com)