Lions International என ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் உலகளாவிய சேவை இயக்கமான பன்னாட்டு அரிமா சங்கத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக சேவைப் பணியில் உடனிருக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருந்து வருகிறேன். 2007-ம் ஆண்டில் ‘மாவட்டத் தலைவர் – தமிழ்ப் பண்பாடு‘ என்ற பொறுப்பை எனக்களித்தார்கள்.
தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் பற்றிய செய்திகளை பண்பாட்டியல் சார்ந்து, நான் ஏற்கனவே வாசித்ததில் இருந்து தொகுத்து ‘பொன் மலர்‘ என்ற தலைப்பில் நான்கு பக்க தகவல் பிரதியாக பிரசுரித்து லயன்ஸ் சங்கத்தின் 5000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வினியோகித்தேன்.
‘தமிழர் மதம்‘ மறைமலையடிகள், ‘தமிழர் பண்பாடு‘ வானமாமலை, ‘பண்பாட்டு அசைவுகள்‘ தொ.பரமசிவன் என நான் விரும்பி வாசித்த பலரின் புத்தகங்களிலிருந்து இருந்து எடுத்தாளப்பட்டுள்ள பிரதியே இது. அதையே இப்போது (வேறு ஏதும் எழுத வக்கின்றி) உங்களுடன் பதிவாக பகிர்ந்து கொள்கிறேன்.
பண்பாடும் கலாச்சாரமும்
நமது கலாச்சாரம், பண்பாடு, மரபு, நெறிமுறைகளை இன்றைக்குள்ள புது வேகத்திற்கேற்ப பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் அனைவரின் கடமை. இவ்வாறு இப்பணியைத் தொடர்ந்து காக்க வேண்டியவற்றைக் காத்து சுழல் (Cyclic) நடவடிக்கையாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக வேண்டும்.
பண்பாடு என்ற சொல் விரிந்த பொருளுடையது. பல அறிஞர்கள் இதற்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கி செழுமைப்படுத்தியுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஒரே சூழலில் தொடர்ந்து வாழ்ந்ததின் விளைவாய் கற்றுக் கொண்ட மொழி, கலை, இலக்கியம், அறிவு, சிந்திக்கும் முறை, பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள் உள்ளிட்ட அனைத்தும் பண்பாடு என்கின்றனர்.
உணவு, உடை, திருமணம்செய்கின்ற முறை, இறந்தவர்களை அடக்கம் செய்யும் சடங்கு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு முறையும் இதில் அடங்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பண்பாட்டின் வரையறைக்குள் வராத எதுவும் வாழ்வில் இல்லையென்று கூறலாம்.
தமிழ் பண்பாடு
தமிழ் பண்பாட்டை வெகுஜனப் பண்பாடு – செவ்வியல் பண்பாடு மற்றும் நாட்டார் பண்பாடு என்று பிரித்துப் பார்க்கின்ற முறைமை ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. ஒரே பண்பாடுள்ள மனித இனக்குழுவை நாட்டார் என்று அழைக்கிறார்கள். (நாடார் அல்ல) இவர்களிடம் புழங்குகிற அல்லது புழங்கிய பாடல்கள், நிகழ்கலைகள், வாய்மொழி இலக்கியங்கள், பழமொழிகள், சொலவடைகள், நாட்டார் தெய்வங்கள், சடங்குகள், சிறு தெய்வ வழிபாடுகள் போன்றவற்றை உற்று நோக்குவதன் மூலம் தமிழர் வாழ்வியலின் அடிப்படை அடையாளங்கள் சிலவற்றையும் நம்மால் கண்டு கொள்ள முடியும். வாய்மொழி இலக்கியங்களில்தான் மக்களின் உண்மையான ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கோபங்கள் எல்லாம் பட்டுத் தெறிக்கின்றன.
சடங்குகளின் தொகுப்புதான் மதம் என்பார்கள். ஆனால் மதம் சாராத கணக்கிலடங்கா சடங்குகள் தமிழ் மக்கள் வாழ்வில் இருக்கின்றன. இவற்றில் சில கால மாற்றத்தால் வீரியம் இழந்துள்ளன. புதிய சடங்குகளும் சில உருவாகியுள்ளன. ஆனால் எல்லா சடங்குகளிலும் மரபும், மூட நம்பிக்கையும் பின்னிப் பிணைந்துள்ளன.
உணர்வும் உப்பும்
மனித குல வரலாற்றில் உப்பிற்குத் தனி இடம் உண்டு. மனிதன் நாகரீக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றது போல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவம் உடையதுதான். அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.
உப்பு என்ற சொல்லுக்கு சுவை என்பதே முதற்பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்தவை. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பிற்கு வெள்ளுப்பு என்று பெயர்.
செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்), உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால் தான் சம்பளம் (சம்பா+அளம்) என்ற சொல் பிறந்தது. ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்ததே.
உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தவரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்வதன் குறியீடாகவே ஒருவர் இறந்த எட்டாவது நாளில் இறந்தார்க்கும் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்றளவும் நம் சமூகத்தில் உள்ளது. உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாயாகவும் கருதப்படுகிறது. உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு பேரளம், கோவளம், என அரசர்களின் பெயரைச் சூட்டும் வழக்கமும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளது.
தமிழர்களின் உறவுப் பெயர்கள்
பழந்தமிழரின் உறவுப் பெயர்கள் இடம், மண உறவு முறை சார்ந்தே தோன்றியுள்ளது. உறவுப்பெயர்கள் பொதுவாக விளிப்பெயராகவே விளங்குகின்றன. அம்மை, அப்பன், மாமன், அக்கன், தாத்தன், ஐயன் ஆகிய பெயர்கள் அம்மா, அப்பா, மாமா, அக்கா, தாத்தா, ஐயா என இன்றும் வழக்கில் உள்ளன.
‘தம்+அப்பன்‘ என்பது மருவி ‘தகப்பன்‘ என்று ஆனது. அண்ணனைக் குறிக்கும் ‘தம்+அய்யன்‘ என்பது ‘தமையன்‘ எனவும், ‘தம்+பின்‘ என்ற சொல் ‘தம்பி‘ எனவும் வழங்கப்படுகிறது.
தாய், தந்தை என இப்பொழுது வழங்கி வரும் சொற்களின் மூலவடிவம் ஆய், அந்தை என்பதே. ‘தாய்‘ என்பது ‘தாயம்‘ (உரிமை) என்ற சொல்லின் பொருளான உரிமையுடையவள் என்ற பொருளில் அழைக்கப் படுகிறது.
‘ஆயின் ஆய்‘ ‘ஆயா‘ என்று அழைக்கப்படுவதும் இன்று வழக்கத்தில் உள்ளது. ‘தன்+ஆய்‘ என்பது ‘தாய்‘ ஆனது. அண்ணன் மனைவி அண்ணியாவது போல மாமன் மனைவி மாமி ஆகியுள்ளது. அம்மையுடன் பிறந்தவனை குறிக்கும் சொல்லாக ‘அம்மான்‘ விளங்குகிறது. மைத்துனன், மைத்துனி என வழங்கும் சொற்கள் மைதுன (பாலியல்) உறவின் அடிப்படையில் வந்ததாகும்.
தமிழர் வீரம்
மனிதனின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரு வம்சத்தின் வெற்றியையோ, புகழையோ நிர்ணயிக்கும் அளவுகோளாக வீரம் விளங்கிருப்பது தெரியவரும். ஏனென்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதனின் ஆற்றல் அவனுடைய உடலாற்றலை வைத்துதான் அளக்கப்பட்டது.
உலகின் புகழ் வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொள்ளம் அமைத்து கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடும், உலகின் ஒவ்வொரு இனமும் வீர விளையாட்டுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன.
ஐம்புலன்களையும் அடக்கி உடலையும் மனதையும் ஒரு கட்டுக் கோப்புக்குள் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர் காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும்.
“வாளோடு முன்தோன்றி மூத்தக்குடி“ என்னும் செவ்விய கூற்று தமிழ் இனத்தை ஒரு வீரப்பரம்பரையாகவும், தமிழ் மண்ணை வீரத்தின் விளை நிலமாகவும் சித்தரிப்பதாகும். தற்காப்புக் கலையில் தமிழ் இனம் தழைத்தோங்குகிறது. என்பதற்கு சங்க நூல்கள் தொட்டே தடயங்கள் கிடைக்கின்றன. “முதுமரத்த முரண்களரி வரிமணல்“ என்ற பட்டினப்பாலை குறிப்பு ஒன்று தமிழனின் போர்த்தொழில் பற்றிய குறிப்புகளைத் தருகிறது.
சொல்வதைச் சொல்லும் தமிழ்ச்சொற்கள்
பொதுவாக சொல்லுதல் என்னும் பொருளினை பின்வரும் பழந்தமிழ்ச் சொற்கள் குறித்தாலும், கூர்ந்து நோக்குங்கால் நுட்பமான பொருட்சிறப்பினை தருவதாகவும் இருக்கின்றன.
கூறுதல் – கதைத்தல் – கத்துதல் – கரைதல் - குறித்தல் – இயம்புதல் – உளருதல் - உரைத்தல் - ஓதுதல் – சாற்றுதல் - செப்புதல் – சொல்லுதல் – நவிலுதல் – பன்னுதல் – பகருதல் – பிதற்றுதல் – பினாத்துதல் – பீற்றுதல் – புகலுதல் – புலம்புதல் – புகழுதல் – பேசுதல் – பொழுதல் – போற்றுதல் - மாறுதல்- முழங்குதல் – மொழிதல் – வலித்தல் – விள்ளுதல் – விடுத்தல் - விளம்புதல்.
பழந்தமிழக பொன் நகைகள்
நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் அணிமணிகள் செய்யும் வினைத்திறம் மிக்க பொற்கொல்லர்கள் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்களும், ஆடலரசி மாதவி அணிந்திருந்த மாசறு பொன் நகைகளும் நமக்குச் சொல்லுகின்றன. அவற்றில் சிலவற்றின் பெயர்களைக் காண்போம்.
அரியகம், கண்டிகை, கணையாழி, குதம்பை, குறங்குசெறி, சதங்கை, சவடி, சரப்பள்ளி, சங்கவளை, சூடகம், சூடாமணி, செம்பொன்வளை, செழுநீர், தூமணிக்கோவை, தொய்யகம், தோள்வளை, நவமணிவளை, நுண்மைச்சங்கிலி, நூபுரம், பவழவளை, பாடகம், பாதரசம் (கால்கொலுசு) புல்லகம், பூண்ஞான்ஆரம், மரகதத்தாள்செறி, மாணிக்கமோதிரம், முத்தாரம், முடக்குமோதிரம், மணிமேகலை, வலம்புரி, வாளைப் பகுவாய் மோதிரம், விரிசிகை, வீரச்சங்கிலி.
நோய் தணிக்கும் வாய்
“நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” (குறள் 948) என்கிறது வள்ளுவம்.
“கூற்றை உதைக்க வேண்டுமானால் காற்றைப் பிடிக்கும்
கணக்கறிய வேண்டும்” என்கிறது திருமந்திரம் (571)
நோயின்றி வாழ்வதற்கு பிரணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதே இதன் பொருள்.
மனிதனின் மூச்சுக் காற்றின் இயக்கத்தைப் பொறுத்தே வாழ்நாள் நீடிப்பும், குறைவும் அமையும். இன்னின்ன நாளில் இன்னின்ன நாடி வழியாகப் பிராணன் இயங்குமானால் உடல் இயல்பாக இருக்கிறது என்று அறியலாம்.
வெள்ளி, திங்கள், புதன், கிழமைகளில் இடநாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் வலநாடியின் வழியாக மூச்சு இயங்க வேண்டும். இது வாழ்நாளை நீட்டிக்கும் வழி.
மூச்சுக்காற்று எந்த அளவிற்கு மிகையாக வெளியேறுகிறதோ அந்த அளவிற்கு வாழ்நாள் குறைகிறது. எந்த அளவிற்கு குறைவாக வெளியேறுகிறதோ அந்த அளவிற்கு வாழ்நாள் கூடுகிறது.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு சராசரியாக பதினைந்து மூச்சுகள் இழுத்து விடுகிறான். இதன்படி ஒரு நாளுக்கு 21600 மூச்சுகள் என கணக்காகிறது. இந்த அளவில் சராசரியாக மனிதன் தன் மூச்சை அமைத்துக் கொண்டால் குறைந்த அளவு நூற்றிருபது ஆண்டுகள் வாழ முடியும்.
000
சேவை என்பது பிறருக்கு செய்யும் உதவியை மட்டுமே குறிப்பதன்று. நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில் பண்பாடு குறித்த தகவல்களை அடுத்து வரும் தலைமுறையினர் அறிந்துணரும் வகையில் கொண்டு செல்வதும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்து கொண்டு சேர்ப்பதும் ஒரு வகையில் சேவைதான்.
நம் பண்பாட்டின் கூறுகள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து, உணவு, உடை, பழக்க வழக்கங்கள் இவற்றில் நாம் எவ்வாறு அடையாளமிழந்து வருகிறோம் என்பதற்கு எனது இப்படமும் சான்றாக இருக்கிறது.
‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்
.
mee firstu
ReplyDeleteநல்ல பதிவு வாசு
ReplyDelete//பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்து கொண்டு சேர்ப்பதும் ஒரு வகையில் சேவைதான்.//
நல்லா உரைக்கற மாதிரிதான் சொல்லியிருக்கிங்க.
அருமையான பதிவு வாசு
ReplyDeleteஅருமையா விளக்கிச் சொல்லியிருக்கீங்க பண்பாடுனா என்னன்னு.....!! அழகான பதிவு....!! விளக்கங்களுக்கு நன்றி......!!!!
ReplyDeleteநன்றி!
ReplyDeleteம்ம்ம்... பெருமூச்சுதான் வருது.
அருமையான பதிவு
ReplyDeleteகணினியில் இப்பதிவை சேமித்துக் கொண்டேன்
மீண்டும் வாசித்து உணர வேண்டியது
அரிய பல தகவல்களை தெளிவாக தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteநிச்சயமாக இந்த பதிவு பயன்படும்.
நன்றி வாசு சார்.
என் வியர்வையை உறிஞ்சி
ReplyDeleteவளர்ந்த என் முதலாளி
இன்று என்னை
ஏன் எட்டி உதைக்கிறான்..
உப்பிட்டவனை
உள்ளலவும் நினை
அது அவருக்கு இல்லையோ?
உங்கள் இடுகைகளில் இது மிகவும் சிறந்தது. பண்பாடு குறித்த தெளிவான பார்வையையும், இன்றைய யதார்த்தத்தையும் தெளிவாக முன்வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு எனது நன்றிகள்.
ReplyDeleteஸ்ரீ....
\\ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு சராசரியாக பதினைந்து மூச்சுகள் இழுத்து விடுகிறான். இதன்படி ஒரு நாளுக்கு 21600 மூச்சுகள் என கணக்காகிறது. இந்த அளவில் சராசரியாக மனிதன் தன் மூச்சை அமைத்துக் கொண்டால் குறைந்த அளவு நூற்றிருபது ஆண்டுகள் வாழ முடியும். \\
ReplyDeleteஇது இயல்பான அளவு அல்ல,
இந்த மூச்சுக்கு 60 வருடம் தான் தாங்கும்.
நிமிடத்திற்கு 6 மூச்சு அமைத்து பாருங்கள். ஒரு மணி நேரத்தில் உடலில் மனதில் ஏற்படும் மாற்றத்தை.100 வருடம் நிச்சயம்
நல்ல தொகுப்பு!
ReplyDeleteநீங்க ஒரு லயன்னு நிறுப்பிச்சிடிங்க!
//செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்), உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால் தான் சம்பளம் (சம்பா+அளம்) என்ற சொல் பிறந்தது. ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்ததே.//
ReplyDeleteசம்பளத்திற்க்கான சரியான விளக்கங்கள் சார்...
எல்லாமே நல்ல தொகுப்புகள் சார்
அருமையான விளக்கங்கள். திரும்பவும் வாசிக்கணும்.
ReplyDeleteதெரிஞ்சுகொள்ளவும் வேறு யாருக்காவது சொல்லவும் தேவையாயிருக்கும்.என்றாலும் என்னதான் பாரம்பரியங்கள் கொட்டிக் கிடந்தாலும் தமிழனின் நிலை...?
வாசு அண்ணா,
ReplyDeleteபத்திர படுத்த வேண்டிய பதிவுகளில் ஒன்று.
நிறைய அன்பும் வாழ்த்துக்களும்!
அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅருமையான பதிவு வாசுதேவன்.
ReplyDeleteசென்னையில் நடந்த சங்கமம் நிகழ்ச்சி, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பு சுற்றுதல் என சுவையானதாகவே இருந்தது. இருப்பினும் சென்னையில் இருந்த எனது நண்பர்கள் (Aged 23 to 35) சொன்ன பதில் "அய்யே, அதெல்லாம் யாருங்க போய் பாக்குறது?".
இத்தனைக்கும் அனுமதி இலவசம்.
நல்ல தகவல். வாசிக்கிறதுக்கும் எளிமையா, சுவாரஷ்யமா இருக்கு நன்றி.
ReplyDeleteசிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள் வாசு சார். நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இன்னும் இதுபோல் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteஅருமையான பதிவு வாசு.
ReplyDeleteஇதையெல்லாம் படிக்கையில் பீஷ்மர் போன்ற மூத்தோர்கள் 300 வருடங்கள் வாழ்ந்தது நிஜம்தானோ என்று நம்பத் தோன்றுகிறது இல்லையா?
மாதவியின் நகைகளைப் பார்த்து, பாஸ்கருக்குப் படித்து சொல்லிய போது, பாஸ்கர் "இதெல்லாம் படிச்சு மனச "கெடுத்துக்காத" என்று சொல்லிட்டார். :(
//சேவை என்பது பிறருக்கு செய்யும் உதவியை மட்டுமே குறிப்பதன்று. நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில் பண்பாடு குறித்த தகவல்களை அடுத்து வரும் தலைமுறையினர் அறிந்துணரும் வகையில் கொண்டு செல்வதும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்து கொண்டு சேர்ப்பதும் ஒரு வகையில் சேவைதான்.//
ReplyDeleteஉண்மைதான் வாசு நல்ல பகிர்வு வாழ்த்துகள்
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.
ReplyDelete//தம்+அப்பன்‘ என்பது மருவி ‘தகப்பன்‘ என்று ஆனது. அண்ணனைக் குறிக்கும் ‘தம்+அய்யன்‘ என்பது ‘தமையன்‘ எனவும், ‘தம்+பின்‘ என்ற சொல் ‘தம்பி‘ எனவும் வழங்கப்படுகிறது. //
அருமையான தொகுப்பு. கொளு(ழு)ந்தியா என்ற வார்த்தைகூட கொளுந்து என்ற வார்த்தையிலிருந்தே வந்தது என கேள்விப்பட்டுள்ளேன்.
கற்றது கையளவு..
ReplyDeleteதமிழிலேயே நமக்குத் தெரியாதவை எவ்வளவு இருக்கிறது என உணர்த்துகிறது. மிக அருமையான பதிவு. எழுத வக்கில்லாமல் போட்ட பதிவே இப்படியா!
அகம் ஒரு நாளிகை அசந்துத் தான் போனது இந்த பதிவை படித்து.... உங்களுக்கு நிகர் நீங்களே.....
ReplyDeletesuperb vaasu sir
ReplyDeleteஅருமை
ReplyDeleteவாழ்த்துகள்
nalla pathivu vasu sir
ReplyDeleteநல்ல பல தகவல்கள். சம்பளம் உப்பை சார்ந்தது வந்த சொல் என்று சொல்லி இருப்பது, உறவை உப்பு சார்ந்து சொல்லி இருப்பது, சொல்லுதல் என்பதற்கான சொற்கள், பழந்தமிழக பொன்நகைகள், மேலும் திருமந்திரமென்று அருமையான தகவல்கள்.
ReplyDeleteஅருமையான பகிர்வு வாசு.
This comment has been removed by the author.
ReplyDeleteபல சுவையான, அவசியம் தெரிந்து கொள்ள் வேண்டியகருத்துக்கள்
ReplyDeletesalt - salary இன்று தான் கேள்விப்படுகிறேன்
நன்றி
இது போன்ற அரிய விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
ReplyDeleteஅரிய தகவல்களுடன் நல்ல பதிவு
ReplyDeleteஅற்புதமான கட்டுரை. இது போன்ற செய்திகள் வலைத்தளங்களில் அபூர்வம் என்றே தோன்றுகிறது. தொடர்ந்து இப்படியான ஆக்கங்களைத் தாருங்கள்.
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
//நம் பண்பாட்டின் கூறுகள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து, உணவு, உடை, பழக்க வழக்கங்கள் இவற்றில் நாம் எவ்வாறு அடையாளமிழந்து வருகிறோம் என்பதற்கு எனது இப்படமும் சான்றாக இருக்கிறது.//
ReplyDeleteஉண்மைதான். எல்லோருமே இப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறோம். மீண்டும் வேர் தேடிப்போவது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்? சந்தேகத்தோடு கேட்கவில்லை. உங்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி கேட்கிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்