Sunday, July 12, 2009

தொன்மை மிக்க தெய்யம் நடனம்

"கடவுளின் சொந்த பூமி" கேரளாவை இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். கேரளத்தின் இயற்கையும், எழிலும் அதையே உறுதிப்படுத்துகிறது.

தொன்மக் கலைகளிலும் நடனங்களிலும் கூட மிகச் சிறப்பான பெயர் கேரளாவிற்கு உண்டு. தெய்யம், கோலம் துள்ளல், பேட்டை துள்ளல், சவிட்டு நாடகம் என கிராமம் சார்ந்த பலவகை நடனக் கலைகளின் வேர்கள் இங்குதான் தொடங்கியிருக்கிறது. நடனங்களை மதத் தொடர்பான கலாச்சாரப் பின்னணியில் இழைத்து வெளிப்படுத்துகின்ற கேரள பாணி நடனப்பாங்கு நம்மை மட்டுமல்லாமல், வெளிநாட்டினரையும் வியக்க வைத்திருக்கிறது.

theyyam1 பாரம்பரிய கேரள நடன வகைகளில் ஒன்றுதான் தெய்யம். வடக்கு மலபார் பகுதி முழுவதிலும் பரவலாக நடத்தப்பட்டு வரும் பழங்கால நடனமுறை. குறிப்பாக, இந்துமத பழக்க வழக்கங்களின் அடிப்படையில் மதத்தோடு பின்னிப்பிணைந்து நிகழ்த்தப்படும் தெய்யம் நடனம், நடனமாக அல்லாமல் சடங்காகவே நினைத்து செய்யப்படுகிறது.

போராளிகளும், ஆயுதங்களும்... இதுதான் தெய்யம் நடனத்தின் மையக்கரு. குடிவழி சார்ந்த போர் வீரர்களையும், அவர்கள் உபயோகித்த ஆயுதங்களையும் வணங்கி வழிபடுவதே தெய்யம் நடனம். வரலாற்றிலும் இது பற்றிய குறிப்புகள் நமக்குக் காணக் கிடைக்கிறது.

தமிழிலும் சங்க இலக்கியத்தில் வேலன் வெறியாட்டல் என்ற பெயரில் வீரர்களை வழிபட்ட வரலாறு இருக்கிறது. இறந்த வீரர்களின் நினைவாக கற்களை நட்டு வழிபடுதல், இசைக் கருவிகளை இசைத்தும், மது அருந்தியும், இலைகளால் ஆடை அணிந்தும் என்று தொடரப்பட்ட கி.மு 500-க்கு முந்தைய பழக்கங்கள்தான் நடனக்கலையாக மெருகூட்டி செம்மைப்படுத்தின.

இந்தியாவில் வடக்கிலும்கூட திரா என்ற நடனக்கலை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்துள்ளது. தெய்யம் நடனம் போலவே நடன முறை, பாடல், உடை அலங்கரிப்பு, வீரர்கள் என அனைத்தையும் ஒப்பாகக் கொண்டிருக்கும் திரா நடனம், வீரர்களை வழிபடுவது நம் நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரம் என்பதற்கு சான்றாகிறது.

theyyam3 கர்நாடகாவின் தெற்கு கனரா பகுதியிலும் வீரர் வழிபாட்டுக்கென பழங்கால நடனமுறை ஒன்று வழக்கில் இருந்துள்ளது. பூட்டா அல்லது கோலா என்ற பெயரில் இருந்த அவ்வகை நடனக்கலை தற்போது சிறிதுசிறிதாக அழிந்துவிட்டது.

வரலாற்றுச்சான்றுகளின்படி தெய்யம் நடனம் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக தென்னிந்தியாவில் தோன்றியிருக்கிறது. கேரளத் தோட்டங்களில் பாடப்பட்டு வந்த பாடலே தெய்யம் நடனத்திலும் பாடுகின்ற பழக்கம் இருந்தது.

எந்த இலக்கியங்களிலும் இது பதியப்படாததால் வாய்வழி மூலமாகவே தலைமுறை தலைமுறையாக இப்பாடல்கள் பதிவாகியுள்ளன. பிற்காலத்தில் இவற்றின் சில பாடல்கள் பனையோலையில் பதியப்பட்டது. தெய்யம் நடனக் கலையை தற்போதும் தொடர்ந்து வருகின்றவர்களிடம் இதற்கான சான்றுகள் உள்ளன.

ஆரியர்களின் வருகைக்குப்பிறகு பிராமணரல்லாத சமூகத்தினர் குறிப்பாக, தென்னிந்தியாவில் தங்களுடைய மத நம்பிக்கைகளை புதிய வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டனர். புராணக் கதைகளும் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றன.

சிறியகுடி வம்சாவழியினர் தங்களின் குடும்ப சடங்குகளை மத வழிபாட்டோடு சேர்த்து கலவையாக்கி புதிய நம்பிக்கைகளை தங்கள் சமூகத்தினரிடையே ஏற்படுத்தினர். அவ்வழி வந்த தொண்டு கலைகளில் ஒன்றுதான் தெய்யம் நடனக்கலை.

குடிவழி வம்சங்களின் சிறுபான்மை இனத்தவர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களான வண்ணான், மாவிலன், வேட்டுவன், வேலன், மலையன் மற்றும் புலையன் போன்ற குடிமக்கள் தெய்யம் நடனத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்களாய் இருந்தனர். பிறகு தொடர்ந்த காலங்களில் கடவுள் வழிபாடு, மிருகவழிபாடு, வியாதிகள், நீத்தார் நினைவு கூறல், போர்வீரர்கள் முன்னோர்கள் வழிபாடு, சர்ப்ப வழிபாடு போன்றவற்றிற்காகவும் தெய்யம் நடனம் ஆடப்படுவது வழக்கமாகி விட்டது.

theyyam2 கதகளி, களரி, பேயாட்டு போன்ற நடனக்கலைகள் போலவே அலங்காரத்துடன் (தமிழ்நாட்டின் கூத்து, தோல் பாவைக்கூத்து போல) நிகழ்த்தப்படும் தெய்யம் நடனம் குறிப்பாக பகவதி மற்றும் விஷ்ணுமூர்த்தி, ரக்தா சாமுண்டி போன்ற கடவுள்களை வழிபட ஆடப்படுகிறது.

பகவதி கடவுளின் பெயரை ஊர்ப் பெயரோடு இணைத்து வணங்கப்படுவதால் முச்சிலோட்டு பகவதி, கன்னங்காட்டு பகவதி என ஊர்களின் பெயர் சேர்த்து எல்லா ஊர்களிலும் பரவலாக வணங்கப்படுகிறது.

தெய்யம் நடனத்தின் மற்றோரு முக்கிய அம்சம் அலங்கரிப்பு. உடல் முழுவதும் வண்ணங்களால் வரைந்து தலைக்கு தனியே வடிவமைக்கப்பட்ட கிரீடமும் செய்யப்படுகிறது. வண்ணம் பூசிக்கொள்வதிலும் பல விதங்கள் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த தெய்யம் நடன வழக்கங்களின் அலங்காரம் இன்று சிதைந்து போகாமல் தொடரப்படுவது அதன் சிறப்பு.

தெய்யம் நடனம் வழங்குதலில் தேட்டம் மற்றும் வேலாட்டம் என இரண்டு பகுதிகள் உள்ளன. ஆரம்பம் வழிபாடாக தொடங்கி இறுதியில் வீர விளையாட்டு போல் ஆக்ரோஷத்தோடு உச்ச நிலை அடைவதில் நடனம் முடிகிறது.

theyyam4 வாத்தியக் கருவிகளின் இசையும் தெய்யம் நடனத்துக்கென உள்ள பிரத்யேகப் பாட்டும், நடனமும் இணைந்து உணர்வெழுச்சி மிகுந்த ஒரு நடனமாக அமைகிறது.

தெய்யம் நடனத் திருவிழா வருடத்துக்கொரு முறை கேரள கிராமப்புறங்களில் சடங்காக நிகழ்த்தப் படுகிறது. ஒரு நாளில் தொடங்கும் நடனம் இரண்டு மூன்று என ஏழு நாட்கள் வரை கூட தொடர்வதுண்டு. தெய்யம் கேரள பாரம்பரிய நடனங்களில் ஒன்றாக பெருமையோடு கூறப்பட்டாலும் இன்று மாறி வரும் சமூகத்திற்கேற்ப சிறிது சிறிதாக சிதைந்து வருகிறது.

பராமரிக்கவும், தொடரவும் ஆட்களில்லாமல் வெறும் வேர்களோடு மட்டும் நிற்கிற கேரளாவின் தெய்யம் நடனக்கலை மட்டுமின்றி நாடு முழுவதும் வழக்கொழிந்து வரும் இதுபோன்ற பல நடனக்கலைகளுக்கு புத்துயிர் அளித்து பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கும் உண்டு.

“அகநாழிகை” பொன்.வாசுதேவன்

23 comments:

  1. தெய்யம் பற்றிய நல்ல பகிர்வு நண்பரே..

    //தெய்யம் நடனக்கலை மட்டுமின்றி நாடு முழுவதும் வழக்கொழிந்து வரும் இதுபோன்ற பல நடனக்கலைகளுக்கு புத்துயிர் அளித்து பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கும் உண்டு.//

    கண்டிப்பாக நமது கடமைதான்

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு நன்றிகள்.....

    என்று எமது கலைகள் மறைந்து வருகின்றன அவற்றை மீண்டும் புத்துயிர் அளிக்கவேண்டியது எமது கடமைதான். அதுமட்டுமல்ல வழக்கொழிந்துவரும் எமது கலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி....

    உங்கள் பணி தொடரட்டும்...

    ReplyDelete
  3. //சிறியகுடி வம்சாவழியினர் தங்களின் குடும்ப சடங்குகளை மத வழிபாட்டோடு சேர்த்து கலவையாக்கி புதிய நம்பிக்கைகளை தங்கள் சமூகத்தினரிடையே ஏற்படுத்தினர். அவ்வழி வந்த தொண்டு கலைகளில் ஒன்றுதான் தெய்யம் நடனக்கலை//

    சமூக ஆராய்சிக்கான கூறுகள் நிறைந்த வார்த்தைகள். வரிவடிவில் தங்கள் வரலாறுகளைச் செய்ய முடியாத அவர்கள்,
    இதுபோல கலைகளைத் தாங்களாகவே வடிவமைத்துக் கொண்டார்கள். அவர்களை நினைவுபடுத்தும் பதிவு. அருமை.

    ReplyDelete
  4. இது வரை அறிந்திராத பல தகவல்கள். நல்ல பதிவு வாசு.

    அனுஜன்யா

    ReplyDelete
  5. குறிப்பாக, இந்துமத பழக்க வழக்கங்களின் அடிப்படையில் மதத்தோடு பின்னிப்பிணைந்து நிகழ்த்தப்படும் தெய்யம் நடனம், நடனமாக அல்லாமல் சடங்காகவே நினைத்து செய்யப்படுகிறது.///

    நல்ல தொகுப்பு நண்பரே!!!

    ReplyDelete
  6. ஒவ்வொரு திருவிழா,கல்யாணங்களில் இக்கலைஞர்களை பங்குபெறச்செய்து ஊக்குவிக்கலாம்!!

    ReplyDelete
  7. தமிழிலும் சங்க இலக்கியத்தில் வேலன் வெறியாட்டல் என்ற பெயரில் வீரர்களை வழிபட்ட வரலாறு இருக்கிறது. இறந்த வீரர்களின் நினைவாக கற்களை நட்டு வழிபடுதல், இசைக் கருவிகளை இசைத்தும்,

    பொன்னியின் செல்வனில் படித்திருக்கிறேன் ....

    தொய்யம் பற்றிய பகிர்வுக்கு நன்றி வாசு சார்....

    ReplyDelete
  8. பல புதிய விசயங்கள் அறியப்பெற்றேன். நல்ல பகிர்வு. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. கேரளா கொஞ்சம் “அறிவு”பூர்வமான ஊர்.பலவற்றில் முன்னோடிகளாக இருப்பார்கள்.பிட்டுப் படம் முதல் நாசா வரை.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  10. நல்ல பதிவிற்கு நன்றி வாசு.

    இது போன்ற அருமையான பதிவுகள் தொடரட்டும்.

    நன்றியுடன்..

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு வாசு அண்ணா,
    இங்கு,பனிரெண்டு மலையாளிகளுடன் ஒரே இல்லத்தில்
    வசித்து வருகிறேன்.யாவரையும் அழைத்து கட்டுரையை,
    வாசித்து காட்டினேன்.(முல்லை பெரியாரில் இருந்தமுறைப்பு
    சற்று சாந்தபட எதுவாக இருந்தது இந்த வாசிப்பு..)
    "கடவுளுக்கும்,நம்பிக்கையாளர்களுக்கும் பாலமாக
    இருந்தது இதன் நடன பாஷை" என்று கூடுதல் தகவலும் தருகிறார்கள்.
    நன்றி..

    ReplyDelete
  12. அருமையான பதிவு.. அகநாழிகை..

    ReplyDelete
  13. அறியாத விடயம் அறிந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி திரு.வாசு.

    ReplyDelete
  14. மீண்டும் அதேதான் வாசு. என்னோடு நெருங்கிப் பழகும் வாசுவுக்கும், எழுத்தில் பார்க்கும் வாசுவுக்கும்தான் எத்தனை ஆச்சரியமான வேறுபாடு. பிரமிப்பூட்டுகிறீர்கள்.

    இப்பதிவு நல்ல ஒரு ஆவணம்.இதுபோல் நிறைய எழுதுங்கள்

    ReplyDelete
  15. நல்ல அறிமுகம், புதிய தகவல் - நன்றி

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. உண்மைதான். கேரளா-வும் கேரள பாரம்பரியமும் நான் வியந்து பார்க்கும் ஒன்று.
    தெய்யம் என்ற வார்த்தையே தெய்வம் என்பதின் மறுவல் தான் என்று நம்பப் படுகிறது. கோழிகோடு பல்கலைக் கழகத்தின் "folklore studies" பாடத்திட்டத்தில் தெய்யமும் பழகுகிறார்கள்.
    முன்பு எறத்தாழா 450 தெய்வங்கள் அல்லது வீரர்களை பாடி ஆடப்பட்டது இப்போது அதில் பாதி ஆகி விட்டது.
    தெய்யம் ஆட்டம் பள்ளியறை மற்றும் கோட்டம் என்ற இறைதளங்களுக்குள் மட்டும் நடை பெறும். இதில் முக்கியமானது என்னவென்றால், சமூக வேறுபாடு அதிகம் காணப் படும் அவ்விடத்தில் (கேரளக் கோவில்களில்)இவ்வாட்டத்தை ஆடுவது மலையன் மற்றும் வண்ணான் இனத்தினர். இறைவனுக்கு மிக அருகில் இருந்து, இறைவனாக உருவெடுத்து ஆடும்போது வணங்கப்படும் இவர்கள் இன்றும் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து வருகிறார்கள்.

    ---நல்ல பகிர்வு வாசு. நன்றி.
    ...வித்யா

    ReplyDelete
  19. அருமையான தகவல்களை சொல்லி வந்த நீங்கள் கடைசியில் அழிந்து வருகிறது என்ற சொல்லவும், மனம் சங்கடத்திற்குள்ளாகியது. சென்னையில் நடத்தப்பபெறும் சென்னை சங்கமம் போல் அங்கும் செய்தால் நல்லது.

    ReplyDelete
  20. ஒரு ஆவணப்படம் பார்த்த உணர்வு.. நல்ல பகிர்வு வாசு

    ReplyDelete
  21. தமிழ்நாட்டு சங்கமம் மாதிரி கேரளாவுலயும் ஆரம்பிக்க வேண்டியது தான்!

    ReplyDelete
  22. தெய்யம் நடனம் 2000 ல் வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது கேரளா சுற்றுபயண கலைநிகழ்ச்சியில் இடம் பெற்று பின் பாதுகாப்புகருதி அந்த நடன நிகழ்ச்சி ரத்து செய்யபட்டது,இது போன்ற நிகழ்வுகளால் பழமையான கலைகளைவளரும் என நினைக்கமுடியவில்லை.

    ReplyDelete
  23. அறிந்துகொள்ள வேண்டிய ஆவணப் பதிவொன்று.விஞ்ஞான வளர்ச்சியின் பிடியில் இன்றைய இளம்தலை
    முறையினர்.அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து எம் கலைவளங்களை வளர்ப்பது முக்கியமான கடமையே.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname