Saturday, May 2, 2009

= லக்கி லக்கி நீ லக்கி = இன்ன பிற...


= அகநாழிகை என்றால் என்ன ? =

என்னைச் சந்திக்கின்ற, தொலைபேசியில் தொடர்பு கொள்கின்ற நண்பர்கள் அனைவரும் தவறாமல் கேட்கிற ஒரு கேள்வி “அகநாழிகை என்றால் என்ன அர்த்தம் ?“

‘அகத்துள் ஏற்படும் நினைவுக் கணங்கள்‘ இதுவே அகநாழிகை என்பதன் பொதுவான பொருள். இதோ இந்த பதிவை எனது விரல்களின் வழியே கணிணியின் தட்டச்சிடப்படுவதற்கு முன்பாக என் மனதில் தோன்றி அது பதிவு வடிவமாகி வெளிவரும் கணங்களை அகநாழிகை எனப் புரிந்து கொள்ளலாம்.

அகநாழிகை என்பதன் உண்மையான பொருள், கருவிலிருக்கும் குழந்தை உலகிற்கு பிரசவமாவதற்கு முன்பாக, கடைசி சில தினங்களில் அதற்கு சிந்தனையும், உணர்வும் தோன்றியிருக்கும். சிந்திக்கத் துவங்கிய குழந்தை உலகைக் காண்பதற்கு முன்பான கடைசிக் கணங்களே ‘அகநாழிகை‘

பல வருடங்களுக்கு முன் இலக்கியச் சிற்றிதழ் ஆரம்பிக்க விரும்பி அதற்காக தேர்ந்தெடுத்த பெயர்தான் ‘அகநாழிகை‘. பிறகு அம்முயற்சி தோல்வியடைந்ததால், அகநாழிகை என்ற பெயரில் அமைப்பாக செயல்பட்டு குறும்படங்கள் திரையிடும் நிகழ்வுகளும், புத்தக வெளியீடும், இலக்கியக் கூட்டங்களும் நடத்திக் கொண்டிருந்தேன். பிறகு வலைப்பக்கத்தில் எழுத ஆரம்பிக்கும் போது எனக்கே அப்பெயரை வைத்துக் கொண்டேன். சதா துரத்தும் எழுத்துக்களை எழுதியும், பதிவிட்டும் வாழ்க்கையைத் தொடரும் நானே ஒரு சிறுபத்திரிகை போலத்தானே.

(-)(-)(-)(-)(-)



= ‘ஊமைகள் பார்க்கிறார்கள்‘ ‘செவிடர்கள் பேசுகிறார்கள்‘ =

முன்பெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ஒரு அறிமுக அட்டையாக குறும்படம் ஒன்றை எடுத்துவிட்டு, அதன் குறுந்தகடுகளுடன் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். இப்போது வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதற்கு அறிமுக அட்டையாக இலக்கியமும், வலைப்பக்கங்களும் பயன்படுகின்றன. பதிவர்களின் படைப்புகள் தொடர்ந்து வெகுஜனப் பத்திரிகைகளில் வருவதே இதன் சாட்சி. வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியாவதற்கு படைப்புத்திறன் தவிர வேறு பல வித்தைகளும் தெரிந்திருக்க வேண்டும். கிறித்தவ அமைப்புகள் நடத்தும் எழுச்சிக் கூட்டங்களில் ‘ஊமைகள் பேசுகிறார்கள்‘என்பது போல ‘பதிவர்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்‘ ‘பதிவர்கள் பிரபலமாகிறார்கள்‘ ‘பதிவர்கள் நடிக்கிறார்கள்‘ ‘பதிவர்கள் பாடுகிறார்கள்‘ என பதிவர்களுக்கு இது எழுச்சிக்காலம். உன்னைப்போல் ஒருவன் படத்தின் வாயிலாக எழுத்தாளர் இரா.முருகன் திரைக்கதை ஆசிரியராகவும், கவிஞர் மனுஷ்யபுத்திரன் பாடலாசிரியராகவும் ஆகிறார்கள் என்பது கூடுதல் சந்தோஷச் செய்தி.

(-)(-)(-)(-)(-)


= லக்கி லக்கி நீ லக்கி =

தோழர் ‘லக்கிலுக்‘ பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவரது எழுத்து நடை வாசக ஈர்ப்புத்தன்மை கொண்டது. எழுத்தாக இருந்தாலும், காட்சி ஊடகங்களாக இருந்தாலும் சுவாரசியம் குன்றாமல்‘ தெளிவாக, புரியும் விததத்தில் ஒரு விஷயத்தைச் சொல்வதுதான் ஒரு படைப்பாளியின் கடமை. இதில்தான் ஒரு படைப்பின் வெற்றியென்பது நிச்சயிக்கப்படுகிறது. இந்த திறன் லக்கிலுக்கிற்கு இயற்கையாகவே கைகூடியிருக்கிறது. வெறும் லக்கியாகவே மட்டும் இல்லாமல், சரியான புரிதலை வாசிப்பவரிடம் ஏற்படுத்தி, எதிர் கருத்துக்களையும், ஆதரவுகளையும் திரட்டிக் கொள்வதில் லக்கிலுக்கிற்கு நிகர் அவரே. என்ன ஒரு விஷயம்... எந்த அளவிற்கு அவரது எழுத்துக்கள் அவரை நண்பனாக இருந்து உத்வேகப்படுத்துகிறதோ அதே அளவிற்கு அவரது எதிரியாகவும் அவரது எழுத்தே அமைந்து விடுகிறது. ‘ஒருவன் எதை ஆயுதமாக எடுக்கவேண்டும் என்பதை அவனது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்‘ என்பதை லக்கிலுக் எழுத்துக்களின் வாயிலாக உணர்கிறேன். நல்ல விவரிப்புத் திறன், வாசிப்பின் ஆர்வம் தூண்டும் தன்மை அனைத்தும் ஓருங்கே இணையப்பெற்ற லக்கிலுக் இன்னமும் பல உச்சங்களை அடைவது உறுதி. ஆனந்த விகடனில் லக்கிலுக்கின் ஒரு பக்கக் கதையை வாசித்தேன். அதை ஒரு கதையாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெறும் துணுக்குச் செய்தி அது. எனக்குப் பிடிக்கவில்லை.

(-)(-)(-)(-)(-)

= மொக்கையான தமிழ் =

நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் தனது ‘மிக்ஸ்டு ஊறுகாய்‘ பதிவில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

//ரொம்ப நாளாக எனக்கு இன்னொரு விஷயத்தில் சந்தேகம்.! அதேதான்.. விஷயத்தில்தான் சந்தேகமே.. அனுஜன்யா முதலானோர் விஷயத்தை விதயம்என்கிறார்கள். அதிஷா போன்றோர் அதைவிடயம்என்கிறார்கள். ஏராளமான ஆங்கிலச்சொற்களும், பிறமொழிச்சொற்களும் வழக்கத்தில் உள்ள நிலையில், அவற்றை எந்த தயக்கமும் இல்லாமல் நாம் (மேற்குறித்த அதே பதிவர்கள் உட்பட) பயன் படுத்திவரும் சூழலில், இந்த விஷயம்மட்டும் என்ன பாவம் செய்தது? தமிழ் வளர்த்தல் என்றால் செய்திஎன்ற சொல்லை பயன்படுத்தலாம். மாறாக ஒலிதான் பிரச்சினையென்றால் வின் மிக நெருங்கிய தமிழ் ஒலி வடிவான வை பயன்படுத்தலாம். அதை விடுத்து ஏன் இப்படி? புரியவில்லை.. விளக்குங்கள்.

அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் டூஎன்பீர்களா?//

(நன்றி : ஆதிமூலகிருஷ்ணன்)

ஆதிமூலகிருஷ்ணன் பதிவு குறித்த எனது சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

விஷயம் விடயம் விதயம் இவற்றிற்கெல்லாம் இடத்திற்கேற்ப பல பொருள் உண்டு.

‘விஷயம்‘ ‘விடயம்‘‘விசயம்‘ என்பதற்கு ஒரே பொருள்தான் ‘காணப்பட்டவைகள்‘ ‘உரியது‘ ‘அடைக்கலம்‘ ‘ஆராய்வு‘ என்றெல்லாம் பொருள்உள்ளது.

‘விசயம்‘ ‘விஜயம்‘ என்றால் ‘வெற்றி‘ என்னும் பொருளும் உள்ளது.

‘விஷம்‘ ‘விடம்‘ இரண்டிற்குமே ‘நஞ்சு‘ என்ற ஒரே பொருள்தான்.

‘விதம்‘ என்றால் ‘மாதிரி‘ ‘சூத்திரம்‘ ‘இனம்‘ என்று பொருள்.

அதேவிதமாக, சொன்னவிதம், விதம்விதமாக இப்படிப்பட்ட வார்த்தைகளை சொற்சேர்க்கை செய்து புரிந்து கொள்ளலாம்.

விதத்திலிருந்துதான் விதை, வித்து, விதர்ப்பம், விதவை, வித்தகம் என்ற வார்த்தைகள் எழுகின்றன.

அதேபோல, ஷங்கரை ‘டங்கர்‘ என எழுதலாமா என்று ஆதிமூலகிருஷ்ணன் நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

‘சங்கர்‘ என்றால் ‘போர் புரிபவர்‘ என்று பொருள்.

‘டங்கர்‘ என்றால் ‘போர் புரிபவர்கள் அணியும் தோற்கச்சை‘ என்ற பொருள் தமிழகராதியில் உள்ளது.

பெரும்பான்மை பதிவர்களுக்கு சந்தோஷமளிக்கும் கூடுதல் செய்தி.

‘மொக்கை‘ என்றால் ‘கூர் மழுங்கிய‘ என்பது பொதுவான பொருள். இவ்வார்த்தைக்கு மூல வார்த்தையான ‘மொக்கு‘ என்பதற்கு ‘கூரான‘ ‘குமிழ் போன்ற‘ என பொருள் படுகிறது.

‘மொக்கை‘ என்றால் ‘கூர் மழுங்கிய‘ என்ற பொருள் தவிர ‘பருமை‘ ‘வெட்கம்‘ என இரண்டு பொருளும் உண்டு.

இனி பதிவுகளின் வாசிப்பு வரவேற்புக்கு ஏற்ப ‘மொக்கை‘யான பதிவை பெரியதான, முக்கியமான என பொருள் கொண்ட ‘பருமை‘ எனவும், அதேசமயம் வரவேற்பில்லாத மொக்கையான பதிவிற்கு ‘வெட்கம்‘ எனவும் பொருளிட்டு மகிழ்ந்து கொள்ளலாம்.

என்னைப் பொறுத்தவரையில், எழுத வேண்டும் என்று வந்த பிறகு எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாகவாவது மொழியை சிதைக்காமல் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் பிறகு சரியாகி விடும். தமிழ் மொழி மீது பண்டிதராக வேண்டாம். ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டால் போதும். ஆங்கிலம் கற்கவும், பேசவும் ஆயிரம் முயற்சிகளைச் செய்யும் நாம் நம் தாய்மொழி அல்லது நாம் எழுதுகின்ற மொழி மீது ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம் என்பது புரியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் ஆங்கில அகராதி என்ற ஒரு புத்தகம் இருக்கும். நம்மில் எத்தனை பேர் தமிழகராதி வாங்கி வைத்திருக்கிறோம். கிரியா, பவானந்தர், கழக தமிழ் அகராதி என எத்தனையோ தமிழகராதிகள் உள்ளன. எல்லோரும் கூட வேண்டாம். எழுதுவதன் மீதும், வாசிப்பதும் மீதும் ஆர்வம் கொண்ட நாமாவது அதைச் செய்யலாமே... மனப்பாடம் செய்ய வேண்டாம், தமிழகராதியில் தினமும் ஒரு பக்கம் வீதம் படித்தால் போதும். அது மட்டுமே மொழியறிவை விரிவு செய்யும். குறைந்தபட்சம் நம் மொழி மீது நாம் காட்டும் நேர்மையான அக்கறை அதுவாகவே இருக்க முடியும்.

(-)(-)(-)(-)(-)


= விட்டுப்போன வார்த்தைகளும், எஞ்சிய நினைவுகளும்...

ஓல்டு மங்க் ரிசர்வ் ரம்மும் =

இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று வெகுநாட்களாகிறது. பொதுவாக இலக்கியக் கூட்டங்களில் நிகழும் குழு அரசியலும், உரையாடல்களில் நிலவும் வறட்சியான தன்மையுமே காரணம். இதையும் மீறி புதுப்புது அறிமுகங்களுக்காகவும், நட்பு பாராட்டலுக்குமாகவென, மது அருந்தக் கிடைக்கும் சுதந்திரத்திற்காகவும் சில கூட்டங்களுக்கு செல்ல நேரிடுகிறது. தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் சார்பில் மறைந்த கவிஞர்கள் சி.மணி, அப்பாஸ் நினைவாக ‘விட்டுப்போன வார்த்தைகளும், எஞ்சிய நினைவுகளும்‘ என்ற தலைப்பிலான அமர்விற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். லீனா மணிமேகலை இதற்கான அழைப்பை மின்மடலில் அனுப்பியிருந்தார். கவிஞரும், பதிவருமான ‘தூறல் கவிதை‘ ச.முத்துவேல் அவர்களும் ‘இந்த நிகழ்விற்கு போகலாமா ?‘ எனக்கேட்டிருந்தார். நாங்கள் இருவரும் கவிஞர் யாத்ரா அவர்களை இந்நிகழ்வில் சந்திப்பதென முடிவு செய்து அவரையும் அழைத்தோம். நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சென்று விட்டோம். வழக்கம் போலவே அங்கங்கே இருந்த கவிஞர்களை புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தேன். கோணங்கி, கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, மனுஷ்யபுத்திரன், அய்யப்ப மாதவன், பா.வெங்கடேசன், ரவி சுப்ரமணியன், கரிகாலன், அசதா, யவனிகா ஸ்ரீராம், ரிஷி, குமார் அம்பாயிரம், சுகிர்தராணி, இன்பா சுப்ரமணியன், நரன், ரிஷி, செல்மா பிரியதர்ஷன், லீனா மணிமேகலை, அ.வெண்ணிலா, அமிர்தம் சூர்யா, சொர்ணம், இளங்கோ கிருஷ்ணன், இசை, லஷ்மி சரவணக்குமார், ‘அடவி‘ முரளி, யாத்ரா, ச.முத்துவேல் இன்னும் பலர் என தமிழின் சமகாலக் கவிஞர்களையும் ஒருமித்து காண முடிந்தது. மனுஷ்யபுத்திரனிடம் பேச வேண்டுமென்று நினைத்தோம். அவரைச் சுற்றிலும் பலர் நின்றிருந்ததால் பேச முடியவில்லை. ‘மண் குதிரை‘ ‘அடவி‘ இரு சிற்றிதழ்களுக்கும் சந்தா செலுத்தினேன்.

3 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வு 5.30க்கு ஆரம்பித்தது. கவிஞர் சுகிர்தராணி அனைவரையும் வரவேற்றும், சமகால கவிதைச் சூழல் குறித்தும் உரை நிகழ்த்தினார். ஆஸ்திரேலிய பழங்குடியின இசை வடிவமான (டிஜிருடு) மூங்கில் போன்ற நீண்ட கருவியைக் கொண்டு குமார் அம்பாயிரம் நிகழ்த்து கலை வழங்கி கவிஞர்களை இசையால் அஞ்சலித்தார். இசையஞ்சலி வித்தியாசமானதாகவும், மனதில் சேமித்து ரசிக்கக்கூடியதாகவும் இருந்தது. கவிஞர் அப்பாஸ் நினைவாக நிகழ்த்தப்பட்ட முதல் அமர்வில் யவனிகா ஸ்ரீராம் நெறியாளுகை வழங்கினார். மனுஷ்யபுத்திரன் கவிஞர்களின் படங்களுக்கு மலரஞ்சலி செய்தார். கோணங்கி கட்டுரை வாசிக்கத் தொடங்கினார். மிக நீண்ட நினைவுக் கட்டுரை. அவ்வப்போது அய்யப்ப மாதவன் பக்கமாக திரும்பி ‘இதோ முடித்து விடுகிறேன்‘ என்பதாக அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். கோணங்கிக்குப் பிறகு பேச வந்த ரிஷி நேர்மையாக தனக்கு அப்பாஸ் குறித்து அவ்வளவாக தெரியாது என்று கூறியபடியே தன் கட்டுரையை வாசித்தார். அரங்க மேடையில் மிகவும் சந்தோஷமாக இருந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன் மட்டுமே. அவர் முகத்தைத் தவிர மற்றெல்லாரும் இறுக்கமான தோற்றத்திலேயே இருந்தார்கள். ரவி சுப்ரமணியன் அமர்வு ஆரம்பித்த சிறிது நேரத்தில் வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்கிறேன். முன்பு அவரது அறையில் சென்று தங்கியதைப் பற்றிய சிறு நினைவூட்டலுக்குப் பிறகு, இருவரும் மின்மடல் முகவரி பரிமாறிக்கொண்டு பேசியபடியிருந்தோம். பிறகு அ.வெண்ணிலா, மு.முருகேஷ் இருவரையும் நலம் விசாரித்தேன். பிறகு கரிகாலன், அசதா என சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். குமார் அம்பாயிரம், அடவி முரளி எனச்சிலர் வெளியே வந்தார்கள். எனக்கும் அதற்குமேல் உள்ளே அமர முடியவில்லை. வெளியே லீனா மணிமேகலையும், செல்மா பிரியதர்ஷனும் ஒரு கவிதைப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து ஆழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ச.முத்துவேல், யாத்ரா, நான் மூவரும் வெளியே வந்தோம். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மது அருந்தலாமா என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டோம். சரியென்று முடிவாகி அங்கிருந்து வெளியேறி ஆட்டோ மூலமாக மதுக்கூடத்திற்கு சென்றோம். எனக்குப் பிடித்தமான ‘கொண்டாட்டம்‘ ரம் கிடைக்காததால் ஓல்டு மங்க் ரிசர்வ் ரம் வாங்கிச் சென்றமர்ந்தோம். யாத்ரா அவரது கவிதைகளைப் போலவே மிகவும் மென்மையாகப் பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார். இலக்கியம், வலைப் பக்கங்கள், சினிமா, படித்தவை என பேச்சு ஒரு புள்ளியில்லாமல் எங்கள் பேச்சு அந்த கூடத்தில் அலைந்து கொண்டிருந்தது. பிறகு, யாத்ரா திடீரென எனக்கு பாட வரும் என்றார். மென்மையான குரலில் மிகவும் அழகாகப் பல பாடல்களை தேடித்தேடி பாடினார். எதிர்பாராத ஆச்சரியமாக ச.முத்துவேல் தனக்கும் பாடத்தெரியும் என்று கூறி பாடியும் காட்டினார். மதுக்கூடத்தின் பக்கத்து மேசை நண்பர்களும் இவர்களின் பாடலில் ஆர்வமாகி, அவர்களுக்கு பிடித்த பாடல் முதல் வரிகளை நினைவிலிருந்து எடுத்தளித்தபடி யிருந்தார்கள். சலிக்காமல் பாடிக் கொண்டும், இடையிடையே மது அருந்திக் கொண்டும் ஒன்றரை மணி நேரம் சந்தோஷமாகப் போனது. அங்கிருந்து கிளம்பி மறுபடியும் நிகழ்வு அரங்கிற்கு செல்வதென முடிவானது. இலயோலா கல்லூரி அருகிலிருந்த கூட்ட அரங்கை சென்றடைந்த போது கூட்டம் முடிந்து அனைவரும் வெளியே பேசிக்கொண்டிருந்தார்கள். அரங்கிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சுகிர்தராணியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு நாங்களும் விட்டுப்போன வார்த்தைகளுடனும்,எஞ்சிய நினைவுகளுடனும் கிளம்பினோம்,

(-)(-)(-)(-)(-)

பொன்.வாசுதேவன்

63 comments:

  1. பல நல்ல விட(ஷ)யங்களை தொகுத்து எழுதி இருக்கிங்க. :) மிக நன்று.

    பதிவு கொஞ்சம் நீளமாகவே இருக்கு. உண்மைத்தமிழன் அண்ணாச்சிக்கு போட்டியா?

    உங்கள் பதிவை திறக்கையில் ஏதோ pop up window வந்து கடுப்பேத்துகிறது. சரி பார்க்கவும் :)

    ReplyDelete
  2. அதிகப்படியான புகழ்ச்சிக்கு நன்றி தலைவரே :-)

    //அதே அளவிற்கு அவரது எதிரியாகவும் அவரது எழுத்தே அமைந்து விடுகிறது//

    எதிரிகள் என்னை நேரில் பார்த்ததும் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளவும்! ஒரு கட்டத்தில் நண்பர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகி ஞாபகமறதியின் காரணமாக பல பேரை மறந்து தொலைத்து விடுகிறேன்.

    ஆ.வி.யில் வந்த கதை சும்மா டைம் பாஸ் மச்சி! :-) அப்படி ஒரு கதை வந்திருப்பதாக வீட்டில் கூட சொல்லிக்கொள்ள முடியவில்லை :-(

    ReplyDelete
  3. நிறைய விசயங்களை தொகுத்துகொடுத்துள்ளீர்கள்..

    ReplyDelete
  4. எழுத்தாளர் முருகன் அவர்களுக்கும்,உயிர்மையின் மனுசப்புத்திரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. “அகநாழிகை என்றால் என்ன அர்த்தம் ?“
    தெரிந்து கொண்டேன். நல்ல விளக்கம் அளித்திருந்தீரகள்.

    பதிவர்களை பற்றி... சந்தோசம்.

    தமிழ் சொற்களைப் பற்றி விரிவான அலசல் ஒரு பாதிப்பாகவே இருக்கின்றது. நேற்றிரவு எஸ்.ராவின் "இலைகளை வியக்கும் மரம்" கட்டுரை தொகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அதிலும் அவர் ‘நள் எனும் சொல்’ என்ற தலைப்பில், நம்மிடம் ஆங்கில அகராதி இருப்பது போல் தழில் நிகண்டுகளோ, அகராதியோ இருப்பதில்லை என்பதை வருத்தமாக எழுதியிருந்ததை படித்தேன், அதன் தொடர்ச்சியாகவே இதையும் உணர முடிகின்றது.

    அமர்விலான உங்கள் ‘விட்டுப்போன வார்த்தைகளுடனும்,எஞ்சிய நினைவுகளுடனும் கிளம்பினோம்,’ ஏதோ ஒரு இனம் புரியாத ஏக்கத்தை விட்டுச் செல்கின்றது.

    VIKNESHWARAN said...

    பதிவு கொஞ்சம் நீளமாகவே இருக்கு. உண்மைத்தமிழன் அண்ணாச்சிக்கு போட்டியா?
    படிபதற்கு அப்படியில்லை!!

    ReplyDelete
  7. அகத்துள் ஏற்படும் நினைவுக் கணங்கள்‘ இதுவே அகநாழிகை என்பதன் பொதுவான பொருள். இதோ இந்த பதிவை எனது விரல்களின் வழியே கணிணியின் தட்டச்சிடப்படுவதற்கு முன்பாக என் மனதில் தோன்றி அது பதிவு வடிவமாகி வெளிவரும் கணங்களை அகநாழிகை எனப் புரிந்து கொள்ளலாம்.

    alaga vilakkam kuduthu erukenga

    ReplyDelete
  8. அருமையான தொகுப்பு வாசு ஸார்..!

    ReplyDelete
  9. அகநாழிகை பொருள் விளக்கம் தெளிவு.

    நண்பர் ஆதிமூல கிருஷ்ணனுக்கு நீங்கள் அளித்த சொல் விளக்கமும் நல்லதொரு விடையை அளித்தது.

    ReplyDelete
  10. பல புதிய விஷயங்களை பதிவிட்டதற்கு நன்றி அகநாழிகை.

    நீங்கள் சொல்வது போல் இப்பொழுதெல்லாம் வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் யாவருக்கும் சுலபமாக கிடைக்கிறது. ஆனால் வந்த சுவடே தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள்.

    பல சிற்றிதழ்களும் ஆரம்ப நிலையிலேயே நின்றுவிடுவது ஏமாற்றமே.

    ReplyDelete
  11. நானும் அகநாழிகை என்றால் என்ன என்று கேட்டவன் ;) தொலைப்பேசியில்

    லக்கியின் பதிவு நான் படித்தது ஒரே பதிவு அதுவும் சரத்தையும் தனி நபர் நக்கலும் அதனால் மேலும் அவரது பதிவுகளும் ஆதிஷாவின் பதிவுகளும் படிப்பது இல்லை ;)

    ReplyDelete
  12. அவரது பதிவுகளை ஓதுக்க காரணம் அவரது கருத்து இல்லை, எதிர் கருத்துகளை நான் விரும்புபவன்,

    கமண்ட் தான் வேற என்ன ;) எங்க நல்ல கமெண்ட்ஸ் எல்லாம் ;) பல மிஸ் ஆகிடுச்சு, அவரது தனி நபர் தாக்குதலில் ஒரு உண்மையும் இருக்கு அவரு ரொம்ப நல்லவர் ???? எப்படி என்று ஒரு பதிவில் சொல்கிறேன்

    ReplyDelete
  13. //லக்கியின் பதிவு நான் படித்தது ஒரே பதிவு அதுவும் சரத்தையும் தனி நபர் நக்கலும் அதனால் மேலும் அவரது பதிவுகளும் ஆதிஷாவின் பதிவுகளும் படிப்பது இல்லை//

    வன்மையான கண்டனங்கள் தோழா. ஒவ்வொருவருக்கும் தனியான அபிப்ராயங்கள் இருக்கத்தான் செய்யும், அதற்காக நல்ல எழுத்துகளை பகடி செய்வதோ, இகழ்வதோ நாகரிகமல்ல.

    ReplyDelete
  14. அடேயப்பா! ரொம்ப ரசித்துப் படித்தேன். மிக நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கிறது உங்கள் பதிவு. படிக்கும்போது ஏனோ ஒரு சந்தோஷமும் கூடவே வந்தது.

    சரி... யாத்ரா பாட்டை நானும் கேட்க வேண்டுமே!!!

    ReplyDelete
  15. நல்லாயிருக்கு உங்க ஆராய்ச்சி

    ReplyDelete
  16. நல்ல பதிவு வாசு,
    லக்கி குறித்த கருத்துக்கள் எல்லோர்க்கு ஏற்புடையதுதான்...அரசியல் தவிர்த்து.
    யாத்ரா மற்றும் ச.முத்துவேலின் பாட்டுக்களை கேட்கவும்,உங்களுடன் செலிப்ரேஷனை பகிர்ந்துகொள்ளவும் ஆவலாக இருக்கிறேன்...
    கோடை தணியட்டும்.

    ReplyDelete
  17. தருமி:ஐயா, நீர் புலவர். நீர்தான் புலவர்.
    அக நாழிகை-ஒரு விளக்கம் முன்பேசொல்லியிருந்தீர்கள்.இன்னொரு உதாரணமும் அற்புதம்.

    மண்குதிரை அல்ல. மணல் வீடு.(பேசும்போதுதான் அப்படி சொல்லிட்டிருந்தீங்க. சரி, மப்புல இதெல்லாம் சகஜம்னு இருந்தா எழுதும்போதும் இப்படியேவா?)

    ஆஹா!போட்டுக்குடுத்துட்டீங்களே.
    தப்பிக்கக்கூட முடியாதபடி initial வேற.மதுக்கூடம், மதுன்னுல்லாம் சொன்னா ஒரு இலக்கியத்தரம் வந்துருது சரக்குக்கு,இல்ல!எப்டி எப்டி?யாத்ரா மிக அழகாகப் பாடினார்.
    நான் வலிய வந்து பாடியும் காட்டினேன்.அவ்வளவுதானா?
    இருக்கட்டும்,இருக்கட்டும்.என் ரசிகர்களுக்குத்(அதிலும் பெண்கள்) தெரிந்தால் அவ்வளவுதான் உங்கள் நிலை.

    கலவையாகப் பலவற்றைப் பகிர்ந்திருக்கிறீர்கள். எல்லாமே அருமை. நேரில் பேசுகிற அக நாழிகைக்கும், எழுதுகிற அக நாழிகைக்கும் எவ்வளோ வி்த்தியாசங்கள்!

    ReplyDelete
  18. ”அகநாழிகை” பெயர் விளக்கம் அருமை நண்பரே...

    நிறைய விடயங்களை தொகுத்து தந்துள்ளீர்கள்...
    நல்ல விடயங்கள்...

    ReplyDelete
  19. நினைவுகளை மீட்டெடுத்து மீண்டும் அந்த கணங்களுக்கே என்னை அழைத்துச் சென்றது தங்களுடைய பதிவு. அந்த இனிய மாலைப் பொழுது என்றும் நினைவிலிருக்கும் ஒன்று

    //நாங்களும் விட்டுப்போன வார்த்தைகளுடனும்,எஞ்சிய நினைவுகளுடனும் கிளம்பினோம்//

    மிகவும் உண்மை, அப்படியொரு மனநிலையில் தான் நாமிருந்தோம் அன்று.ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்.

    //சரி... யாத்ரா பாட்டை நானும் கேட்க வேண்டுமே!!!//

    மாதவராஜ் சார், கண்டிப்பா சார், வங்கிப்பணி தொழிற்சங்கம், த மு எ அமைப்பு, பயணங்கள் என மிகவும் நெரிசலான கால அட்டவணைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள், இந்த அட்டவணைக்குள்ளும் எப்படியாவது தங்களை சந்தித்து விட வேண்டுமென்று
    மிகவும் ஆவலோடிருக்கிறேன்.

    //மதுக்கூடம், மதுன்னுல்லாம் சொன்னா ஒரு இலக்கியத்தரம் வந்துருது சரக்குக்கு,இல்ல!//

    ஆமாம் :)

    \\எப்டி எப்டி?யாத்ரா மிக அழகாகப் பாடினார்.
    நான் வலிய வந்து பாடியும் காட்டினேன்.அவ்வளவுதானா?
    இருக்கட்டும்,இருக்கட்டும்.என் ரசிகர்களுக்குத்(அதிலும் பெண்கள்) தெரிந்தால் அவ்வளவுதான் உங்கள் நிலை.//

    முத்துவேல், எனக்கே ஆச்சர்யம், பெயர்ல வேல் ஒன்னா, அப்பறம் இந்த பாட்டு விஷயம், ஸ்ருதி தாளம் விலகாம பாட்டுக்குரிய emtions கூட ரொம்ப நல்லா பாடினீங்க, மிகவும் இனிமையான மாலை அது.

    வாசு சார் மீண்டும் சந்திப்போம்,நிறைய பேசுவோம்,,,,,

    ReplyDelete
  20. பல தகவல்கள்; நன்றி நண்பரே!!

    அகநாழிகை: கோவிலின் கர்பக்கிருகம், கருவறை இதுகளையும் சொல்லலாம்.

    //இதோ இந்த பதிவை //

    இதோ இந்த இடுகையை

    //விஷயம் – விடயம் – விதயம் இவற்றிற்கெல்லாம் இடத்திற்கேற்ப பல பொருள் உண்டு.//

    எனது இடுகைகள்ல அவ்வப்போது குறிப்பிடுவது வழக்கம்.... செம்மொழியான தமிழில், எந்த உணர்வையும், வினையையும், பெயரையும் தனிச்சுக் குறிப்பிடுற மாதிரியான, இருபொருளில்லாத சொற்கள் உண்டு. அதனாலாயே அது செம்மொழியாகிறதுன்னு...

    பற்றியம், நஞ்சு, வகைன்னு முறையே வரும்.

    ReplyDelete
  21. குறுவட்டு = CD

    ReplyDelete
  22. நீளம் அதிகம் என்றாலும், நிதானமாக கடைசிவரை வாசித்தேன். தோழர் லக்கிலுக் பற்றியது அருமையான பகிர்வு, தங்களது இதே கருத்தைதான் நேற்று வேறொரு நண்பரின் பதிவிற்கு பின்னூட்டமாயிட்டிருந்தேன் தோழரே.

    ReplyDelete
  23. நீளம் தெரியவில்லை. அருமையான பதிவு...

    ReplyDelete
  24. ஆதிமூலகிருஷ்ணரின் சந்தேகம் எனக்கும் இருந்தது. அது பற்றிய உங்கள் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  25. விக்கி, நீண்ட நாட்களுக்குப் பிறகான வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. எனக்கு தொழில்நுட்ப ரீதியாக கணிணியில் பல விஷயங்கள் தெரியாது. உங்களை கடுப்பேற்றிய pop up window-வை எப்படி சரி செய்வதென்று முயற்சிக்கிறேன்.

    மிக்க அன்புடன்,
    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  26. லக்கி, வருகைக்கு நன்றி. வெறும் புகழ்ச்சியோ, அதிகப்படியான புகழ்ச்சியோ அல்ல எனது பதிவில் உள்ளவை. எனக்குத் தோன்றிய எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். என்னளவில் நான் பதிவிட்ட கருத்துக்கள் அனைத்தும் உண்மை.

    மிக்க அன்புடன்,
    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  27. தோழி ராஜேஸ்வரி,
    உங்களது தொடர்ந்த வருகைக்கும், ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கும் என் அன்பும் வணக்கமும்.

    மிக்க அன்புடன்,
    “அகநாழிகை“ பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  28. ஆ.முத்துராமலிங்கம்,
    தமிழில் உள்ள கிரியா, பவானந்தர் தமிழகராதி, கழகத் தமிழகராதி என பல அகராதிகள் உள்ளன. நாம்தான் அதில் அக்கறை காட்டுவதில்லை.
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  29. பாலாஜி,
    முதல் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி.


    டக்ளஸ்....... said...
    //அருமையான தொகுப்பு வாசு ஸார்..!//

    டக்ளஸ்,
    ரொம்ப நல்ல பிள்ளையா

    சொல்லியிருக்கீங்க... நன்றி.
    மே 15 சென்னையில் சந்திப்போம்.

    ReplyDelete
  30. அ.மு.செய்யது,
    தங்களது வருகைக்கும் (முதல் வருகை...?)
    கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  31. கிருஷ்ண பிரபு,
    சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவர இயலாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். தீவிரமாக இலக்கியத்தையே முழுமையாக நம்பி வாழ்க்கை நடத்த முடியாத சூழல். சிறுபத்திரிகை போர்வையில் வெகுஜனப் பத்திரிகைகளுக்கு போட்டியாக விளம்பரமும், புத்தக வியாபாரமும் செய்து இலக்கியத்தோடு தங்களையும் வளர்த்துக் கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் மட்டுமே சிறுபத்திரிகைகள் நிலைத்திருக்க முடியும்.
    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  32. சுரேஷ்,
    நலம்தானே, கருத்து வேறுபாடுகளற்று எல்லோரும் இருப்பது மிகக் கடினம். பல கருத்துக்கள் கொண்ட குடும்பச் சூழலில் வாழும் மனோபாவத்திற்கு பழகிப்போன நமக்கு இதெல்லாம் சாதாரணம். ஒவ்வொரு மனிதருக்கென்று அவரவர் வாழ்ந்த சூழல், வாழ்வனுபவம் சார்ந்து கருத்துக்கள் தொற்றிக் கொள்கின்றன. ஒரு சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிவிடுவதைப்போல எளிதான செயல் இல்லை கருத்துக்களிலிருந்து மாறிக் கொள்வது.

    ReplyDelete
  33. வெங்கிராஜா said...
    //லக்கியின் பதிவு நான் படித்தது ஒரே பதிவு அதுவும் சரத்தையும் தனி நபர் நக்கலும் அதனால் மேலும் அவரது பதிவுகளும் ஆதிஷாவின் பதிவுகளும் படிப்பது இல்லை//

    //வன்மையான கண்டனங்கள் தோழா. ஒவ்வொருவருக்கும் தனியான அபிப்ராயங்கள் இருக்கத்தான் செய்யும், அதற்காக நல்ல எழுத்துகளை பகடி செய்வதோ, இகழ்வதோ நாகரிகமல்ல.//

    வெங்கிராஜா,
    வருகைக்கு நன்றி. சுரேஷ் அவர்களுக்கு சொன்ன பதில்தான் மீண்டும்,

    ReplyDelete
  34. மாதவராஜ் அய்யா,
    உங்கள் மீது அதிக மதிப்பும், அன்பும் உண்டு. நாம் ஒருமுறை சந்திக்கலாம். முடிந்தால் தொலைபேசியில் பேசுவோம். யாத்ராவின் பாடலையும் கேட்டு இரசிக்கலாம்.

    மிக்க அன்புடன்,
    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  35. அத்திரி said...
    //நல்லாயிருக்கு உங்க ஆராய்ச்சி//

    நன்றி, நண்பரே.

    ReplyDelete
  36. கும்க்கி said...
    //நல்ல பதிவு வாசு,
    லக்கி குறித்த கருத்துக்கள் எல்லோர்க்கு ஏற்புடையதுதான்...அரசியல் தவிர்த்து.
    யாத்ரா மற்றும் ச.முத்துவேலின் பாட்டுக்களை கேட்கவும்,உங்களுடன் செலிப்ரேஷனை பகிர்ந்துகொள்ளவும் ஆவலாக இருக்கிறேன்...
    கோடை தணியட்டும்.//

    நன்றி, நண்பா.
    ‘பாம்பின் கால் பாம்பறியும்‘ என்பார்கள் ‘கொண்டாட்டத்தை‘ மிகச்சரியாக இனம் கண்டு கூறினீர்கள்.

    ReplyDelete
  37. ச.முத்துவேல், யாத்ரா இருவருக்குமான ஒரே பதில்...
    விட்டுப்போன நினைவுகளும், எஞ்சிய வார்த்தைகளும் என்பதை
    இப்படியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

    ‘தொடரும் நினைவுகளும், விட்டுப்போன வார்த்தைகளும்‘

    சந்தோஷமான கணங்கள் அவை, அதையளித்த உங்கள் இருவருக்கும் என் அன்பு என்றும்.

    ReplyDelete
  38. வேத்தியன் said...
    //”அகநாழிகை” பெயர் விளக்கம் அருமை நண்பரே...

    நிறைய விடயங்களை தொகுத்து தந்துள்ளீர்கள்...
    நல்ல விடயங்கள்...//

    வருகைக்கும் அன்பான ஊக்கத்திற்கும் நன்றி வேத்தியன்.

    ReplyDelete
  39. பழமைபேசி அய்யா,
    உங்களது பதிவுகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்ததில் இருந்து ரசித்துப் படிப்பவை உங்கள் எழுத்துக்கள்,
    உங்கள் வருகையும், ஊக்கமும் மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  40. Peer said...
    //நீளம் அதிகம் என்றாலும், நிதானமாக கடைசிவரை வாசித்தேன். தோழர் லக்கிலுக் பற்றியது அருமையான பகிர்வு, தங்களது இதே கருத்தைதான் நேற்று வேறொரு நண்பரின் பதிவிற்கு பின்னூட்டமாயிட்டிருந்தேன் தோழரே.//

    வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பா.

    ReplyDelete
  41. கார்க்கி said...
    //நீளம் தெரியவில்லை. அருமையான பதிவு...//

    கார்க்கி,
    நலம்தானே,
    வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பா.

    ReplyDelete
  42. Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
    //ஆதிமூலகிருஷ்ணரின் சந்தேகம் எனக்கும் இருந்தது. அது பற்றிய உங்கள் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது.//

    கருத்துகளுக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  43. அண்ணே வணக்கம். எல்லா விசயமும் அருமை

    ReplyDelete
  44. \\
    லக்கியின் பதிவு நான் படித்தது ஒரே பதிவு அதுவும் சரத்தையும் தனி நபர் நக்கலும் அதனால் மேலும் அவரது பதிவுகளும் ஆதிஷாவின் பதிவுகளும் படிப்பது இல்லை ;) \\


    இன்னும் உங்க சரத் பிரச்சனை தீரலையா சுரேஷ்.. தேர்தல் முடிஞ்சாதான் ஃப்ரீயா விடுவீங்களா பாஸ்... ஃப்ரீயா விடுங்க அதுக்கப்பறம் பத்து பதிவு போட்டாச்சு.

    எப்போதும் எல்லோராலும் எல்லார்க்கும் பிடித்தது போல் எழுத முடியாது நண்பரே.

    வாசு அண்ணே இங்கே இந்த கமெண்ட் போட்டதுக்கு மன்னிக்கனும்

    ReplyDelete
  45. நல்லாயிருக்கு வாசு.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. விஷயம் – விடயம் – விதயம் இவற்றிற்கெல்லாம் இடத்திற்கேற்ப பல பொருள் உண்டு.//

    என்னென்ன.?

    ‘விஷயம்‘ ‘விடயம்‘‘விசயம்‘ என்பதற்கு ஒரே பொருள்தான் ‘காணப்பட்டவைகள்‘ ‘உரியது‘ ‘அடைக்கலம்‘ ‘ஆராய்வு‘ என்றெல்லாம் பொருள்உள்ளது.// ஒரே பொருள்தான் என்கிறீர்கள், பல வார்த்தகளை தந்துள்ளீர்கள்.. குழப்பமாக உள்ளது.

    மேலும் நான் குறிப்பிட முனைந்தது, நான் கூறியுள்ள நபர்கள் ஒரே அர்த்தத்தில்தானே பயன்'படுத்து'கிறார்கள் என்பதே.!

    ஏன் சமயங்களில் பலரின் டங்குவார் கிழிகிறது என்பது மட்டும் புரிந்தது எனக்கு.!

    ReplyDelete
  48. பல விஷயங்களை கலந்து வந்திருக்கும் காக்டெயில் மிக நன்று.

    ஆதிமூலகிருஷ்ணனுக்கு ஐயம் தீர்ந்திருக்கும்!

    :)

    ReplyDelete
  49. periya manusangallam ellam sollittaango naan ennaththa solrathu

    ReplyDelete
  50. புரிஞ்சா மாதிரியும் இருந்தது..புரியாத மாதிரி நிச்சயமா இல்ல..நல்லா எழுதறிங்க வாசு ..வாழ்த்துக்கள்.சின்ன எழுத்தாளனி எப்படி இருக்காங்க?உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.எழுத்துல இல்ல..எனக்கும் "கொண்டாட" பிடிக்கும்(R EGULAR U SAGE OF M EDICINE)

    ReplyDelete
  51. ரசித்து படித்தேன்.

    ReplyDelete
  52. அதிஷா said...//அண்ணே வணக்கம். எல்லா விசயமும் அருமை//

    அதிஷா 'ட' விலிருந்து 'ச' வுக்கு மாறிட்டாறா? !!!

    இடுகையும் பின்னூட்டங்களும் நன்றாக இருந்தன. பலரை இங்கே பார்க்க முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  53. அருமையான பதிவுகள்.

    ReplyDelete
  54. //பதிவு கொஞ்சம் நீளமாகவே இருக்கு. உண்மைத்தமிழன் அண்ணாச்சிக்கு போட்டியா?//

    வழிமொழிகிறேன்..

    ReplyDelete
  55. அதிஷா
    வண்ணத்துப்பூச்சியார்
    ஆதிமுலகிருஷ்ணன்
    மங்களுர் சிவா
    சாய்ராபாலா
    தண்டாரோ
    ஊர்சுற்றி
    ஷமீர்
    தீப்பெட்டி

    அனைவரின் வருகைக்கும்,
    ஊக்கத்திற்கும், அன்பிற்கும் நன்றி.

    இந்த பதிவிற்கு பிறகு தொலைபேசியில்
    என்னுடன் பல கருத்துக்களை பரிமாறிக்கொண்ட
    அனைத்து நண்பர்களுக்கும்
    என் அன்பும் வணக்கமும்.


    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  56. அருமையான பதிவு..

    ReplyDelete
  57. //பதிவிட்டும் வாழ்க்கையைத் தொடரும் நானே ஒரு சிறுபத்திரிகை போலத்தானே.//

    நிச்சயமாக.. நல்ல பல தகவல்களைத் தந்தீர்கள் இப்பதிவில். வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  58. நெம்ப சூப்பரா தெளிய வெச்சுபோட்டீங்கோவ்....!! நெம்ப நல்லதுங்கோவ் .....!!!!!

    ReplyDelete
  59. வாசு,

    மிக அழகான, நேர்த்தியான பதிவு. நெருங்கிய நண்பனுடன் பேசும் உணர்வு.

    அடாடா, சென்னையில் இருந்தால் இவ்வளவு கொண்டாட்டமா, மன்னிக்கவும், 'முதிய துறவி'(?)யா? நீங்க தான் பாடவில்லையே. காமெராவில் பிடித்து, பதிவேற்றி இருக்கலாம் - யாத்ரா/முத்துவேல் பாடல்களை. இந்த மாதிரி 'பன்முகக்' கொலைவெறி இருக்கா அவங்களுக்கு :)

    நீண்ட பதிவுகளுக்காக என்னையும், பரிசலையும், உ.தமிழன் அண்ணாச்சியையும் பரிகசிக்கும் கார்க்கி இங்கே .... இருக்கட்டும்.

    அனுஜன்யா

    ReplyDelete
  60. நல்ல தொகுத்தளிப்பு..

    அகநாழிகை பெயர்க்காரணம், எழுத்தகராதி விஷயம் - இரண்டுமே ஈர்த்தன.

    ReplyDelete
  61. மிக நல்ல பதிவு. தூய தமிழில் எழுத வேண்டுமெனில் புதிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். வழக்கில் இருக்கும் சொற்களைச் சிதைத்தல் கூடாது என்பதை அழகாக, சொற்களின் பொருளுரையோடு எடுத்துரைத்திருக்கிறீர்கள். அப்படியே வழிமொழிகிறேன்; ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  62. /என்னைப் பொறுத்தவரையில், எழுத வேண்டும் என்று வந்த பிறகு எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாகவாவது மொழியை சிதைக்காமல் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் பிறகு சரியாகி விடும். தமிழ் மொழி மீது பண்டிதராக வேண்டாம். ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டால் போதும். ஆங்கிலம் கற்கவும், பேசவும் ஆயிரம் முயற்சிகளைச் செய்யும் நாம் நம் தாய்மொழி அல்லது நாம் எழுதுகின்ற மொழி மீது ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம் என்பது புரியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் ஆங்கில அகராதி என்ற ஒரு புத்தகம் இருக்கும். நம்மில் எத்தனை பேர் தமிழகராதி வாங்கி வைத்திருக்கிறோம். கிரியா, பவானந்தர், கழக தமிழ் அகராதி என எத்தனையோ தமிழகராதிகள் உள்ளன. எல்லோரும் கூட வேண்டாம். எழுதுவதன் மீதும், வாசிப்பதும் மீதும் ஆர்வம் கொண்ட நாமாவது அதைச் செய்யலாமே... மனப்பாடம் செய்ய வேண்டாம், தமிழகராதியில் தினமும் ஒரு பக்கம் வீதம் படித்தால் போதும். அது மட்டுமே மொழியறிவை விரிவு செய்யும். குறைந்தபட்சம் நம் மொழி மீது நாம் காட்டும் நேர்மையான அக்கறை அதுவாகவே இருக்க முடியும்./

    அருமை

    பல நல்ல கருத்துகள்

    வாழ்த்துகள்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname