Tuesday, March 14, 2017

கயிற்றின் மேல் நடத்தல்

கயிற்றின் மேல் நடத்தல்

மார்ச் 2010ல் என்னை அவர் முதன் முதலாகத் தொடர்புகொண்டார். ‘யோனி’ என்ற தலைப்பில் கவிதைகள் எழுதி வைத்துள்ளதாகவும் அவற்றை வெளியிட முடியுமா என்று கேட்டார். மொத்தம் எவ்வளவு கவிதைகள் உள்ளது, எத்தனை பக்கங்கள் வரும் என்று கேட்டபோது அவர் சொன்ன கவிதைகளின் எண்ணிக்கை 400. அதன்பிறகு அவ்வளவு கவிதைகள் வேண்டாம், தேர்ந்தெடுத்துக் குறைக்கலாமே என்று சொன்னேன். சில தினங்களில் 200 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்.

பொறுமையாக படித்துப் பார்க்கும்படியும், அதன் கருத்துகளோடு நீங்கள் முரண்படலாம் அல்லது வடிவம் சார்ந்த விமர்சனங்கள் இருக்கலாம், அதற்கான நியாயங்கள் என்ன என்று என் தரப்பிலிருந்து நேரில் சொல்லத் தயாரிக்கிறேன் என்ற குறிப்பையும் அனுப்பியிருந்தார். முழுவதையும் படித்த பிறகு நேரில் சந்தித்துப் பேசுவோம் என்றேன். பெரும்பாலான கவிதைகள் பிடித்திருந்தன. அதிலும், குறிப்பிட்ட பொருள் சார்ந்து முழுக்க எழுதப்பட்ட கவிதைத் தொகுப்புகள் குறைவு என்பதால் நல்ல முயற்சியாக இருக்கும் என எனக்குப் பட்டது.

மகாபலிபுரத்தில் சந்திப்பதாக முடிவு செய்து அங்கு சந்தித்துப் பேசினோம். கவிதைகளின் அச்சுப் பிரதியை வைத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை கவிதைகளைத் தேர்ந்தெடுத்து இறுதி வடிவம் உறுதியானது. ‘யோனி’ என்ற தலைப்பு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக வைத்தது போன்ற ஒரு தொனியை ஏற்படுத்துகிறது என்ற கருத்தைத் தெரிவித்தேன். மகுடேசுவரனும் இதே கருத்தைத் தெரிவித்ததாகச் சொல்லி, அதை மாற்றச் சம்மதித்தார். அப்படித் தெரிவான தலைப்புதான் ‘பரத்தை கூற்று’.



அக்டோபர் 2010ல் சாருநிவேதிதா ‘பரத்தை கூற்று’ கவிதைத் தொகுப்பை டிஸ்கவரி புக் பேலசில் வெளியிட்டார். (டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற முதல் புத்தக வெளியீட்டு விழா அகநாழிகை பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழாதான். விநாயகமுருகன் உள்ளிட்ட நான்கு பேரின் புத்தகங்கள் 2009ல் வெளியிடப்பட்டது.) சரவண கார்த்திகேயனின் எழுத்தில் எப்போதும் கூர்மையும், எள்ளலுமான தன்மையை கண்டிருக்கிறேன். பரத்தை கூற்று தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரை மிக அற்புதமானது. அவரது வலைத்தளத்தில் அவர் எழுதும் பத்திகள், விமர்சனங்கள், அனுபவங்கள், அவதானிப்புகள் என எல்லாமே புதிய நோக்கிலான மாற்று சிந்தனையை உடையவை. பரத்தை கூற்று தொகுப்பு பரவலான கவனம் பெற்றது. முழுவதும் விற்றுத் தீர்ந்தும் விட்டது.



பரத்தை கூற்று வெளியான பிறகு அவர் பல புத்தகங்களை எழுதி விட்டார். சமீபத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ள அவருடைய  ‘இறுதி இரவு’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து என்ற இரு பிரம்புகளில் கட்டப்பட்ட கயிற்றின் மேல் நடக்கிற வித்தைதான் இந்தக் கதைகள். அது அவருக்கே தெரிந்திருக்கிறது என்பது அவருடைய பலம்.

ஒவ்வொரு கதையைச் சொல்லிச்செல்லும்போதும் அவருக்குள்ளிருக்கும் புத்திசாலித்தனம் கதைசொல்லியைக் கீழே தள்ளி மிதித்துவிட்டு, துருத்திக்கொண்டு குறுக்கிடுகிறது. இதனாலேயே நன்றாக சொல்லப்பட்டிருக்க வேண்டிய கதைகள் கூட வலுவிழந்து உதிர்ந்துபோகிறது. ஒரு கதையில் அறிவியல், மற்றொரு கதையில் இதிகாசம், அடுத்த கதையில் நவீனம் என சேற்றில் விழுந்த தவளை உந்தியெழுந்து இலக்கில்லாமல் நகர்வதுபோல தொகுப்பு முழுதும் தொடர்கிறது.



சரவண கார்த்திகேயனுக்கு நன்றாக எழுத வருகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. கதைசொல்லும் முறையில் அவருக்குச் சில சிக்கல்கள் இருக்கிறது என நான் புரிந்துகொள்கிறேன். அவரை சுஜாதா மிகவும் பாதித்திருக்கிறார் என்பதை அவரது கதைகளை வாசிக்கும்போது புரிந்து கொள்கிறது. மற்றபடி அவரே முன்னுரையில் சொல்லியிருப்பது போல அவருடைய வருங்கால அனுபவமும், வாசிப்பும் அதை நிகழ்த்தக்கூடும். ஆனால், அதற்காக அவர் நிகழ்காலக் கதை சொல்லல் முறையில் கவனம் செலுத்தாதிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் ‘இறுதி இரவு’ என்ற நல்ல கதையை எழுதியிருக்கிறார். தொகுப்பில் எனக்குப் பிடித்த ஒரே கதையும் அதுதான். மொத்தம் பதினொரு கதைகளில் ஒரு கதை எனக்குப் பிடித்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சரவண கார்த்திகேயன் மற்ற கதைகளை நன்றாக எழுதவில்லை என்பதல்ல. வாசிப்பனுபவத்தில் எனது தேர்வுகளுக்கான அளவுகோல் என்ற ஒன்றினைப் பதித்துக்கொண்ட ஒரு மனச்சிக்கலை உடையவன் நான். அதனால், சரவண கார்த்திகேயனைப் பற்றிய என்னுடைய அவதானிப்பு என்பது முற்று முழுதானதும் அல்ல.



சரவண கார்த்திகேயன் நிறைய எழுத வேண்டும். ‘இறுதி இரவு’ மாதிரியான நிறைய நல்ல கதைகளை அவரால் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் எனக்கு நிறைய இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவரது கதைகளைவிட அவருடைய உரைநடை மொழி எனக்குப் பிடித்தமானது. அடுத்த சிறுகதைத் தொகுப்பில் என்னுடைய எதிர்பார்ப்பையெல்லாம் சரி செய்துவிடுவார் என்ற பெரும் நம்பிக்கையுடன் இதைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


**

பொன். வாசுதேவன்





No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname