‘நாற்பத்தைந்து வயதானால் நாய்க்குணம் வந்துவிடும்’ என்று சொல்வது
வழக்கம். நாற்பத்தைந்து என்பதை இந்தியாவில் நடு வயதின் ஆரம்பம் என்று சொல்வதைவிட, கிழட்டுத்தனத்தின்
ஆரம்பம் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். அதுகூட ஒருவிதத்தில் தவறுதான்.
ஏனென்றால் நம்மில் பலர் குழந்தையாகப் பிறந்து பத்து வயதுக்குள்ளாகவே வாலிபம் எய்தி
– இருபது வயதுக்குள்ளாகப் பழுத்து – அதற்கு இரண்டொரு வருஷங்ககளுக்கு உள்ளாகவே கிழடு
தட்டிவிடுகிறவர்கள்தான். மற்றபடி, இதில் எவ்வளவு அசௌகரியங்கள் இருந்தாலும், ஒருவிதத்தில்
சௌகரியமும் இருக்கிறது. நம்மில் பலருக்கு அறிவும் அனுபவமும் அடி நாட்களிலேயே, வாழ்க்கை
தொடங்கு முன்னரே, ஏற்பட்டு விடுகிறது.
நாற்பத்தைந்தாவது வயதை எட்டும்போ எந்த மனிதனுமே நின்று நிதானித்து
அதுவரை தன் வாழ்வில் தான் சாதித்திருப்பதைக் கவனித்துப் பார்த்துக் கோடுபோட்டு, கூட்டிப்போட்டு,
நிகர லாப நஷ்டக் கணக்குப் பார்க்க விரும்புவதில் தவறில்லை.
இன்று என் நாற்பத்தியாறாவது
பிறந்தநாள். நான் இவ்வுலகில் தோன்றி முதல் குரல் கொடுத்து சரியாக நாற்பத்தைந்தாண்டுகள்
முடிந்து விட்டன. முதல் குரலிலிருந்தே என் குரல் உலகில் சிலருக்கேனும் கேட்டிருக்கிறது
என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. அக்குரலைக் கேட்டவர்களில் சிலர் அந்தக் குரலுக்குடையவனான
என்னிடம் அன்பு செலுத்தினார்கள்; சிலர் வெறுத்துக் காறி உமிழ்ந்தார்கள். பெரும்பாலோர்
‘ஓஹோ! இப்படியும் ஒரு குரல்! எத்தனையோ குரல்களில் இதுவும் ஒன்று’ என்று மனத்தில் எவ்விதச்
சலனமும் இன்றி மேலே சென்றார்கள்.
விதி என்கிறார்களே அதன் அர்த்தம் எனக்கு யோசித்துப் பார்க்கும்போது,
சரிவரத் தெரிகிறது என்றுதான் சொல்ல வேண்டும். என்னிடம் அன்பு செலுத்தியவர்களில் பலரிடம்
எனக்கு அன்பு எழவில்லை. அவர்கள் என். அனுதாபத்துக்குரியவர்களே தவிர, அன்புக்குப் பாத்திரமானவர்கள்
என்று அன்றும் தோன்றவில்லை. இன்றும் நினைத்துப் பார்க்கும்போது கூடத் தோன்றவில்லை.
அதற்கு மாறாக, எனக்குத் தீமையே நினைத்துச் செய்த சிலரிடம் என் மனம் அசட்டுத்தனமாக அளவுக்கு
மீறியே ஈடுபட்டு, அடிமைப்பட்டு, உழன்றது. இந்த ஏறுமாறான நிலைமைக்கு விதி காரணமில்லாவிட்டால்
வேறு எதைக் காரணமென்று சொல்வது? விதியிலே எனக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. ஆனால்
அதன் காரணமாக விளைகிற விளைவுகளை நானேதான் அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது.
வாழ்க்கை என்பது ஒரு மின்சார ஓட்டம். அதில் அந்த ஓட்டத்தைச் சாத்தியமாக்குபவை,
இரண்டு சரடுகள்; ஒன்று பாஸிடிவ், ஒன்று நெகடிவ். ஒன்றை அசையாத அன்பு என உணருகிறோம்,
இன்னொன்றை வெறுப்பு என்று உணருகிறோம். இந்த இரண்டு சரடுகளினாலும் பின்னப்பட்ட பின்னல்தான்
வாழ்க்கை.
மூன்றாவது சரடு ஒன்றும் வாழ்க்கையிலே ஓடுகிறது. அது பாஸிடிவும் அல்ல நெகடிவும்
அல்ல. நிர்க்குணமானது. அதை மின்சார ஓட்டத்திற்கு அவசியமான எர்த்துக் கம்பி என்று சொல்லலாமா?
மண்ணைத் தொடும் இந்த மூன்றாவது கம்பியை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு வாழுகிறவனுடைய வாழ்க்கைதான்
இங்கு இன்று வெற்றி பெறுகிறது என்று சொல்ல முடியும்.
பாஸிடிவையும், நெகடிவையும் மட்டும்
வைத்துக்கொண்டு, அன்பு வெறுப்பு என்கிற இரண்டு சரடுகளில் மட்டும் தன் வாழ்க்கையைப்
பின்னி அமைக்க முயலுபவன் வாழ்க்கையில் படுதோல்வி அடைகிறான் என்றே எண்ணிப் பார்க்கும்போது
எனக்குத் தோன்றுகிறது.
• க.நா.சுப்ரமண்யம் •
‘பெரிய மனிதன்’ நாவலில்.
நன்றி ஐயா
ReplyDelete