கவிதை என்றென்றைக்குமானது. கவர்ச்சியானது. எளிமையானது. பெரும் முனைப்புகளேதுமின்றி எல்லோராலும் எழுதப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. இதில் நகலெடுத்தல், போலச்செய்தல் எல்லாமே நிகழலாம். முனைப்புகளற்ற சிருஷ்டிகளும் நேரலாம். எது கவிதை என்பதற்கான எந்தச் சூத்திரத்தை முன்வைத்தாலும், அதை ஒட்டியும் வெட்டியும் விவாதிக்க நிறைய பொருளுண்டு. கவிஞர்கள் நுண்ணுயிரிகள் போல எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். விரல் நுனிகளில் கவிதைச் சொட்டுகள் எப்போதும் தயாராக இருக்கிற காலம் இது. தொடர்ந்த விருப்பக்குறியிடல்கள், தொடர்ந்த கவிதைப் பகிர்வுகள், அடுத்துத் தொடர்கிற ‘கவிஞர்’ என்றபடியான வளர்சிதை மாற்றம் உடனுக்குடன் நிகழ்ந்து விடுகிறது.
இந்த குளோனிங் நூற்றாண்டுச் சூழலில்தான் கவிதையை வாழ்க்கையாக பாவித்துக் கொண்டவர்களும் கவிதை எழுதுகிறார்கள். உணர்வைக் கீறி வாசிக்கிறவர்களுக்குள் கடத்துகிறார்கள். கவிதை மோடி மஸ்தான்களின் போலி ஜாலங்களிலிருந்து தம்மை தனித்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். குறைவாக, நிறைவாக எழுதுகிறார்கள். கவிதை சிலருக்குள் மட்டுமே மூர்க்கமாக இருக்கிறது. அந்த மூர்க்க நிலையில் வெளிப்படுத்துகிற ஆவேச வரிகள் நம் முகத்திலறைகிறது. கவிதை வலியால் நிரம்பியது. என்றால் ஏன் வலிதான் கவிதையா என்றும் சிலர் விவாதிக்கிறார்கள். அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கட்டும்.
இப்படியிருக்கையில்,
ஞாபகத்தின் ஒரு பகுதிதீராத அவமானத்தைக் கொண்டதுஅதை ஞாபகத்தால்தான்மெல்லப் போர்த்த வேண்டும்ஜாக்கிரதை.
என்கிறான் இவன்.
‘திருச்சாழல்’ - கண்டராதித்தனின் புதிய கவிதைத் தொகுப்பு. புது எழுத்து வெளியீடு. கண்டராதித்தன் கவிதைகள் (2001), சீதமண்டலம் (2007) என்ற இரண்டு தொகுப்புகளுக்குப் பிறகு தற்போது, திருச்சாழல் (2015) வெளியாகியுள்ளது. இந்த தொகுப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையேயான இடைவெளி சுமாராக ஏழு வருடங்கள்.
வலியிலிருந்து வாழ்க்கையை வந்தடைகின்றன இந்தக் கவிதைகள். வார்த்தைகளின் மீளாப்புதைகுழியில் சிக்கி, வெளியேறும் முனைப்புகளற்று அங்கேயே உழலும் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன கண்டராதித்தனின் கவிதைகள்.
மிகச்சிலரது வார்த்தைகளிலேயே நம்மால் உணர்வுற்றும், உணர்வற்றும் பரவசங்கொள்ள முடியும். வெறும் வார்த்தைகளாலான அன்பு மட்டுமல்ல கண்டராதித்தனின் கவிதையன்பு. ஒரு கவிதையில் அவனுடையதல்ல என்று அவனது அன்பை அவன் அறிவிக்கிறான்.
வெள்ளை நிறத்தில்நெஞ்சோடுநான் சேமித்தஇந்தஅன்பையெல்லாம்யாரோ யாருக்காகவோபறித்துக் கொண்டே இருக்கிறார்கள்.தும்பையை மாலையாகத் தொடுப்பதுநன்றல்ல எனவேஅதன் வெண்மையைபரிசளிப்பதாகச் சொன்னான்அந்த அன்பைத்தான்பழகிய தோள்கள் அனைத்திற்கும்சூட்டிக் கொண்டிருக்கிறேன்.வருவோர் போவோரெல்லாடதவைத்துவிட்டுச் சென்றதுதான்தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்நிறைய இருக்கிறது.•
துயர்மிகும் கானகத்தைக் கட்டியழும் பேதைகளும், வடிவுகெடாப் புகழ் கொடுத்த புண்ணியன்களும் கண்டராதித்தன் கவிதை மொழியில் நிறைய உலவுகிறார்கள். இருண்ட மௌனத்தில் கோவில் சிலைகளோடு பேசுகிற புராதன மொழி நடை கண்டராதித்தனுக்கு வாய்த்திருப்பது கூடுதல் சிறப்பு.
தனியொருவனின் துக்கங்களும், அவனால் எதிரிகளாக பாவிக்கப்படாத எதிரிகளும், அன்பைப் பறிக்கிற சுயங்களும் நம் மனத்திசைகளுக்குள் சுழன்று காட்சிகளாக நிகழ்கிறது. வாழ்வில் தரிசிக்கச் சாத்தியமுள்ள மனத்தருணங்களோடு நம்மால் இயல்பாக ஒன்றி, உருகி விட முடிகிறது. சுளுக்குற்ற நரம்பை மெல்ல நீவி வலி நீக்குவதான திளைப்பை கருதச் செய்கிறது.
நெருக்கடிகளற்ற வளர்ச்சிப்பரவல் காலம் இது என்ற மாயச்சூழலிலிருந்து தெளிந்து வாழ்வின் நிஜமானது என்றைக்கும் சுயம், அன்பு என்பதாலானது. இதுவே இத் தொகுப்பு முழுக்கச் செயல்பட்டிருக்கிறது. தன் கவித்தடத்தில் இடைவெளி விட்டு வந்திருந்தாலும் விலகாத மொழி நடையும், ஆழமும் கண்டராதித்தனின் ‘திருச்சாழல்’, கவிதையின் நிரந்தரத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.
• பொன். வாசுதேவன்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...