Tuesday, January 6, 2015

சாம்பல் வாசனை

சாம்பல் வாசனை
(சிறுகதை)
………………………………………………………
பொன். வாசுதேவன்
………………………………………………………

மி நிதானமாகப் புறப்படத் துவங்கினான். அலைபேசிச் செய்தி வந்ததிலிருந்து எந்தப் பதற்றமும் இல்லை. எதிர்பாராத உயிரிழப்புச் செய்தி என்றாலும் எல்லாவற்றையும் காலம் அதனதன் நேரத்திற்குச் சரியாகச் செய்து கொண்டுதானிருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. அவனைப் போலவே சாவுச் செய்தியைச் சொன்னவரும் ஆசுவாசப்பட்டிருப்பார் என்று நினைத்தான். இறப்பைவிட இறப்புச் செய்தி சொல்கிறவருக்கு மிகுந்த படபடப்பு இருக்கும்தானே. எல்லோருக்கும் உரிய நேரத்துக்குள் சொல்லியாக வேண்டுமே என்ற கவலையும் பதற்றமும் அவருக்கும் இருக்கும்.

கருப்பில் சாம்பல்நிறக் கோடுகளிட்ட சட்டையை அணிந்துகொண்டான். கால்சட்டைக்குள் சட்டையை உள்ளிட்டுக்கொள்ளத் தேவையில்லை. சாதாரணமாக, கண்களை உறுத்தாத விதத்தில் போய் சோக முகத்துடன் கைகளைக் கோத்தபடி நிற்க அதுவே சௌகரியமானது. மரண வீட்டை எதிர்கொள்வதில் எப்போதும் அவனுக்குத் தயக்கம்தான். மிக அருகிலிருந்து பார்த்தவை மூன்று மரணங்கள் மட்டுமே. அதிலும் ஒரு மரணத்தின்போது மட்டும்தான் அடக்க முடியாமல் அழுது கொண்டேயிருந்தான். அம்மா, அப்பா இறப்பின்போது அழவில்லை. இறப்புக்குப் பிறகு பல நாட்கள் தனியே அழுதிருக்கிறான். அழுகை பல நேரங்களில் எல்லாவற்றையும் யாரிடமோ சொல்லிவிட்ட உணர்வைத் தரும். சுமந்துகொண்டிருக்கிற பெரும்பாரத்தை கரைத்து இளக்கிவிட்ட மனநிலையை அழுகையால் மட்டுமே தரமுடியும். சில நேரங்களில் அர்த்தமுள்ளதாயும் சில நேரங்களில் அர்த்தமில்லாமலும் எனப் பல தடவை அவன் அழுதிருக்கிறான். மலைமேல் ஏறித் தனித்த பெரும்பாறையில் அமர்ந்தழுத ஒரு தினம் நினைவுக்கு வந்த்து.

வெள்ளைக் கைக்குட்டை கறையாக இருந்தது. ஈஸ்வரியின் ஞாபகம் வந்தது. ஈஸ்வரியிடம் உள்ள கெட்ட பழக்கம் என்று அவன் நம்பியவைகளில் இதுவும் ஒன்று. வெள்ளைத் துணிகளை தனியே ஊறவைத்துத் துவைக்கச் சொன்னால் செய்வதில்லை. வேறு துணிகளோடு சேர்த்து நனைத்து அதில் ஏதேனும் ஒரு சிறிய கறையை ஏற்படுத்திவிட்டால்தான் அவளுக்கு நிம்மதி போல என்று நினைத்திருக்கிறான். அவன் உபயோகப்படுத்துகிற எல்லா வெள்ளை உடுப்புகளிலும் ஒரு சிறிய கறையாவது இருக்கிறது. கேட்டால், சின்ன கறைதானே, நான் என்ன பண்றது சாயம் போகற துணிகளை வெச்சுகிட்டு, தரையில நனைச்சு போட்டா இப்படியாகுது என்பதான பதில்களே எப்போதும் வரும். அடிக்கடி சொல்லியும் மாற்றிக் கொள்ளாத குறைகளை மனது அனிச்சையாக ஏற்கப் பழகிவிடுகிறது. அல்லது அதை விட்டு விலகி நிற்கச் செய்துவிடுகிறது. கறையோ குறைகளோ இல்லாதவர் யாருமேயில்லை என்று அவன் நம்பினான். அதுவுமில்லாமல் ஈஸ்வரியே இப்போது இல்லை என்பதால் இதை யோசிப்பது வீண்தான் என்று தோன்றியது.
பதுங்கியிருக்கிற தீவிரவாதியைக் கண்டொழிக்கிற மௌனத் தீவிரத்தோடு மதில் சுவரின் வழியே பம்மியபடிச் சென்றுகொண்டிருந்தது பூனை. சன்னலின் திரைச்சீலைகள் அழுக்காகியிருந்தது தெரிந்தது. காற்று பிளந்த அதனசைவில் தூசியெழும்பி அறையெங்கும் பரவியும் தணிந்தபடியுமிருந்தது.

சாவு மிகவும் வசீகரமானது. அது எப்போது நிகழும் என்பது தெரியாததாலேயே அதன் மீது பயமும் ஈர்ப்பும் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. மீளாத காலத்தைப் போல இறந்தவர்கள் போய்ச் சேர்ந்துவிடுவதில்லை. என்றைக்கோ பார்த்து மனதில் நன்கு படிந்துபோன பனிக்கொக்கைப் போல நினைவுக்கு கொண்டுவர வாய்ப்பிருக்கிற போதெல்லாம் இறந்தவர்களை நினைவு கூர்கிறது மனது. அடர்ந்த புதர்ச்செடிக்குள்ளாக சரசரவென வளைந்து நெளிந்து போய் மறைகிற சர்ப்பமொன்றின் நினைவு காரணமேயில்லாமல் வந்து போனது.

அம்மா இறந்த தினம் நன்றாக நினைவிலிருக்கிறது. “சாக வேண்டிய வயதா இது.. நாற்பத்தியிரண்டு வயதில் சாவு வரலாமாஎன்று ஆயா, சித்திகள் உட்பட எல்லோரும் கூடிக்கூடி அழுதார்கள். அம்மாவின் சாவை அவன் எதிர்பார்க்கவில்லை. பேருந்திலிருந்து மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கியதும் அங்கே காத்திருந்த தனுசுதான்பெரிம்மா இறந்துட்டாங்கண்ணாஎன்ற தகவலைச் சொன்னான். என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போது அழவும் முடியவில்லை. காலையில் மருத்துவமனையில் பார்த்துவிட்டுப் பதினொரு மணிக்குக் கிளம்பும் போது நன்றாக இருந்தாள். அலுவலகத்திற்குப் போய் மேலும் இரண்டு நாட்கள் விடுமுறைக்குச் சொல்லிவிட்டு வருகிறேன் என்று சொன்னதற்குசாப்பிட்டு விட்டுப் போஎன்று சைகையால் தெரிவித்தாள். வாயோரம் புண்ணாகி சிறு காயம் ஏற்பட்டிருந்தது. அதற்கு முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பிராணவாயு செலுத்தப்படுவதற்காக வாயில் மூடியிட்டார்கள். அப்போது, கட்டப்பட்டிருந்த செயற்கைப்பல்லை நீக்காமல் அப்படியே பொருத்தியதால் காயமாகி ரத்தம் லேசாக இரவு முழுக்க வழிந்தபடியிருந்து காயமாகிவிட்டது. உணர்விழந்த நிலையிலிருந்த அம்மாவுக்கு எதுவும் தெரியவில்லை.

நீரிழிவு நோய் வந்ததிலிருந்தே வேறுவேறு வகையான பல சிகிச்சைகளை மேற்கொண்டதில் அம்மாவுக்கு உடல் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது. பார்க்கிறவர்கள் சொல்கிற மருத்துவத்தையெல்லாம் பழக்கத்திற்கு உட்படுத்துவது அம்மாவிடமிருந்த கெட்ட பழக்கம். ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், குத்தூசி மருத்துவம் என எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டாள். இன்சுலின் மாத்திரையிலிருந்து ஊசிக்குப் பழகி ஒரு கட்டத்தில் எதற்கும் ஈடுகொடுக்க முடியாமல் உடல் மரத்துப் போய்விட்டது. நாகப்பழத்தின் கொட்டைகளை உலரச்செய்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்ததில் உடம்பு வற்றிப்போய் சீக்கிரமே இளைத்துப் போய்விட்டாள். கடைசியாக குத்தூசி மருத்துவம். அதையும் செய்து பார்த்துவிட்டாள். ஊசியால் குத்தி உணர்வகற்றலைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்து விடலாம் என்று சொன்ன அரைகுறை அக்யூபஞ்சர் மருத்துவர்களை நம்பி உடல் பஞ்சரானதுதான் மிச்சம்.

மணி ஒன்பதாகிவிட்டது. சீக்கிரம் போய்விட்டால் தேவையில்லாமல் நின்று கொண்டிருக்க வேண்டும் என்பதால் காலந்தாழ்த்தியபடியிருந்தான். சாவு எடுக்கிற நேரத்துக்குப் போனால் போதும். மின்சார இடுகாடுதான் என்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. பணம் கட்டிவிட்டால் ஏற்பாடுகள் தயாராக இருக்கும். சாவதற்குப் பின்பு எல்லாமே எளிதானதாகி விடுகிறது. முன்பு போலில்லாமல் இடுகாட்டுக்குப் பெண்கள்கூட இப்போது வருகிறார்கள். கால மாற்றம் முன்னேற்றம் நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது. வாழ்க்கையின் எல்லாச் சிக்கல்களையும் எரித்துச் சாம்பலாக்கி கடலில் அலசிக் கரைத்துவிடலாம். அப்புறம் நினைவுகளோடு வாழத் துவங்கிவிடுகிறோம். வாழ்ந்து முடித்தவர் என்றாலும், முடிக்காதவர் என்றாலும் இப்படித்தான்.

கடமைகளைச் செய்வதில்தானே ஆனந்தம்என்ற பாடலின் வரிகள் நினைவுக்கு வந்து போனது. கடமை என்பது என்ன, நன்றாகப் படித்து, கல்யாணம் கட்டி, பிள்ளைகளைப் பெற்று, படிக்கவைத்து, கல்யாணம் செய்து, செய்ய வேண்டியதையெல்லாம் செய்து, சேர்க்க வேண்டியதையெல்லாம் சேர்த்து செத்துப் போவதுதான். அப்படிச் செய்யாமல் செத்துவிட்டால் உலகம் ஏசும். எதற்குப் பயப்படுகிறோமோ இல்லையோ ஊர் உலகத்திற்குப் பயப்பட்டு வாழ்ந்தாக வேண்டும். இதுதான் முக்கியமானது. ஊர் மெச்ச வாழ்ந்தால்தான் வாழ்க்கை.

செத்துப்போன சக்கரை அப்பாவுக்குப் பங்காளி உறவுமுறை. ஊரிலிருந்த நிலத்தையெல்லாம் விற்றுத் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் பிரித்துக்  கொடுத்துவிட்டார். பெரிய மகன் பிச்சாண்டி மும்பை விக்டோரியா எதிரில் செருப்புக்கடை வியாபாரம் செய்து சம்பாதித்து ஆறு வருடங்களுக்குப் பிறகு கோயம்பேடு மார்க்கெட்டில் கடை வாங்கி, காய்கறி கமிஷன் மண்டி போட்டு போரூரில் இடம் வாங்கி வீட்டைக் கட்டிக் குடியேறினான். சின்ன மகன் அண்ணாமலை அம்பத்தூரில் சரக்கு வாகனம் போக்குவரத்துத் தொழில். அப்பா கொடுத்த பணத்தை இருவரும் முறையாக முதலீடு செய்து ஓரளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள்.

சக்கரை வாழ்ந்து முடித்த மனிதர்தான். கருத்த திடமான தேகம். நெடுநெடுவென உயரம். சிறுவயதில் ஊருக்குச் சென்றிருந்தபோது அவருடைய கொல்லையிலிருந்த பெரிய வட்டக் கிணற்றில்தான் அவன் நீச்சல் கற்றுக் கொண்டான். தளும்பத் தளும்ப நீர் நிரம்பிய அந்தக் கிணற்றில் பிடித்துத் தள்ளி விட்டுவிட்டார் ராஜாபாதர் மாமா. முங்கி மூச்சுத்திணறிய அவனை பின்னாலேயே குதித்துத் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கரை சேர்த்ததும் அவர்தான். அதன்பிறகு தண்ணீர் பயத்தைப் போக்கி நீஞ்சக் கற்றுக்கொண்டான்.
நன்கு வாழ்ந்த மனுஷன். சக்கரை பெரியப்பாவை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோருக்கும் பிடித்தவராக வாழ்வது எவ்வளவு கடினமானது என்பது எல்லோருக்குமே தெரியும்.
சக்கரைக்கு என்ன குறை. நிறைய படிக்கலன்னாலும் பசங்களுக்கு சரியான நேரத்துல செய்ய வேண்டியதை செஞ்சு அவங்களுக்கு ஒரு வழிகாட்டிவிட்டான். புள்ளைங்களும் அதைப் புடிச்சிக்கிட்டே கயிறு திரிச்சு ஏறி மேல வந்துட்டாங்கஎன்பதே சர்க்கரை பெரியப்பா பற்றிய எல்லோருடைய கருத்தும்.

ஆனாலும், ஊருக்குள்ளிருந்த சில கருவாய் பயல்கள்இவன் நல்லவன்தான். இவம்புள்ளைங்க இருக்கேஒருத்தம் பம்பாயில நோட்டு மாத்தற வேலை பண்ணிக் கொழிச்சான். இன்னொருத்தன் பெரியபாளையத்துக்கும் ஆந்திராவுக்கும் ஸ்பிரிட்டு லோடு ஓட்டிச் சம்பாரிச்சான்என்று பேசிக் கொள்வார்கள். மற்றும் சில பேர் இது உண்மையாகத்தான் இருக்கும் என்றும், இருக்காது என்றும் கசமுசவெனப் பேசிக்கொள்வார்கள்.

இப்படியெல்லாம் இருந்தாலும் சக்கரை பெரியப்பா மேல் எல்லோருக்குமே பரிவும் அன்பும் உண்டு. அதுவும் சாவுக்குப் பிறகு துவேஷம் பேசுகிறவர்கள் யார் இருக்கப் போகிறார்கள். பொதுவாகவே செத்த பின்பு எல்லாவற்றையும் மறந்து விடுவதுதானே மரபு.

நினைவு கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் உக்கிரமாய் எங்கெங்கோ அலைந்தபடியிருந்தது. அதை சரி செய்ய முடியாது. கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான். எதிரே தெரிகிற முகங்களைக் கடந்து தனியுலகில் நடந்து போய்க்கொண்டிருந்தான். பேருந்து நிறுத்தத்தை அடைவதற்குள் தலை முழுக்க வியர்த்து கன்னங்களில் சில்லென்று வழியத் துவங்கியிருந்தது. மணி பத்தரைதான் ஆகியிருக்கும். வெய்யிலின் தாக்கம் இன்று அதிகம்தான்.

இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் நினைவு தானாக தன்னை மீட்டுக்கொண்டது. இறங்கினான். ஏற்கனவே வந்து பழக்கமில்லாத இடம் என்பதால் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. பேருந்து நிறுத்தம் அருகே தள்ளுவண்டியில் சாத்துக்குடியை அடுக்கி வைத்து சாறு பிழிந்து சில்வர் அடுக்கில் சேமித்துக் கொண்டிருந்தவனை அணுகி, மின் மயானத்திற்கு எப்படிப் போவது என்று கேட்டுக்கொண்டான்.

நடக்கிற தூரம்தான். இடது புறம் குட்டையாகத் தேங்கிக் கிடந்த ஏரியைத் தாண்டிச் சென்று இடது புறமாகவே திரும்பி மீண்டும் வலது புறம் சென்றால் மின் மயானத்தை அடையலாம்.

வழி சொன்னவனின் குரல் மலையாள மாந்திரீகம் சொல்வதைப் போலிருந்தது. அவனுக்குப் பில்லி சூனியத்தில் நம்பிக்கையில்லை. இதைச் சொன்னால் ஈஸ்வரி புன்முறுவல் செய்வாள். அவளுக்கு அதிலெல்லாம் தீவிர நம்பிக்கையிருந்தது. கல்யாணமாகிய சில வருடங்களுக்குப் பிறகு ஒருமுறை தாயத்து ஒன்றை மந்திரித்து எடுத்து வந்து கையில் கட்டிவிட்டாள். உள்ளுரக் கசப்புகள் இருந்தாலும் அவளுடைய திருப்திக்காக என்னவென்று கேட்காமலே கட்டிக்கொண்டான்.

அவனுடைய கலை வாசனையெதுவும் அவளுக்குப் பிடிப்பதில்லை. தன்மீது அக்கறையற்று அசட்டையாக அவன் இருப்பதாக அவளுக்குள் எப்போதும் ஒரு எண்ணமுண்டு. அதை வெளிப்படையாக எப்போதும் கேட்டதும் இல்லை. ஒருவேளை அந்தத் தாயத்துகூட அவளிடம் அவன் எப்போதும் நெருக்கமாக, விலகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகக்கூட இருக்கலாம். ஆனால் ஈஸ்வரி நினைத்ததுபோல அவன் இல்லை. அவளுடைய மனம் கோணாமல்தான் நடந்து கொள்ள முயற்சித்தான். அதற்காகவே பல பொய்களை அவளிடம் சொல்வான்.

தெருமுனையில் இடது புறமாகத் திரும்பினான். வெகுதூரம் நடந்ததுபோல் களைப்பாக இருந்தது. தண்ணீர் தாகமாய் இருந்தது. அருகிலிருந்த கடையில் குளிர்ச்சியற்ற தண்ணீர் பாட்டில் வாங்கி மூச்சிரைக்கக் குடித்தான். பாட்டிலை மூடிக்கொண்டே பார்த்தால் கடைக்குள்ளே குமரேசு மாமா சிகரெட் பிடித்தபடி எதிரில் அமர்ந்திருந்த யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். தொலைவிலிருந்து பார்க்கும்போது நன்றாகக் குடித்திருப்பது தெரிந்தது..

அவனைப் பார்த்துவிட்டார். “வாடா.. சாவுக்குக்கும் கல்யாணத்துக்கும்தான் பார்க்க முடியுது. அதுலயும் கல்யாணத்துக்கு வர்றதும் தெரியல போறதும் தெரியல. இவன் பெரியக்கா விசாலம் பையன். எங்கக்கா இருந்தா இதெல்லாம் நடக்குமா? போய்ச்சேர்ந்துட்டா.. தியேட்ருக்கு போம்போது என்னை இடுப்புல தூக்கி வெச்சிகிட்டு டிக்கட் வாங்காம படம் பாக்க கூட்டுட்டுப் போவா. இத்தினிக்கும் அப்ப நாப்பது பைசாதான் டிக்கட்டுஎன்று எதிரிலிருந்தவரிடம் சொல்லியபடி எழுந்து வெளியே வந்தார். உடனிருந்தவரும் வந்தார். அவரைப் பார்த்ததாக நினைவில் இல்லை.

இவரத் தெரியுதா? அருணாசலம் மாமாடா.. தாத்தாவுக்கு வழியில சொந்தம். கோலார் சுரங்க வேலை பார்க்கப் போய் அங்கியே செட்டிலாயிட்டாங்க. இப்ப கேஜிஎப்ல பெரிய துணிக்கடை வெச்சிருக்காருமாமா அறிமுகம் செய்தார். புன்னகைத்தான். மாமா எதையோ பேசியபடி வந்தார். வேலையிலிருக்கும்போதுகூட அவர் போதையில்தான் இருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறான்.

மின் மயானம் எதிர்த் தெருவில்தான் இருந்தது. பச்சை நிறப் பெயர்ப்பலகை வைத்திருந்தார்கள். மயான வாசலில் தெரிந்த முகங்கள் தென்படத் தொடங்கியது. முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான். சங்கிலியான ஞாபகத்தை அறுத்துத் துண்டு போடும் விதமாக சந்திக்கிறவர்களிடம் எல்லாம் கேட்கிறதுக்குப் பதிலாக ஓரிரு வார்த்தைகள் பேசினான்.

மயானத்தில் பூங்கா நடைபாதை, மலர்ச்செடிகள் வரிசை, அழகான வடிவில்  கத்தரிக்கப்பட்டிருந்த செடிகள் என ஒழுங்காக பராமரித்து வைத்திருந்தார்கள். பின்புறத்தில் கிணறும் குழாயடியும் இருந்தது. ஓரத்தில் பறை சார்த்தி வைக்கப்பட்டிருந்தது, சிகப்பு பச்சை மஞ்சள் உடையணிந்திருந்த டிரம்ஸ் குழுவினர் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

மின் மயானத்திற்கு இடப்புறம் பெரியப்பாவின் பிள்ளைகளுக்கு முகச்சவரம் செய்து கொண்டிருந்தார்கள். சின்னவன்தான் கொள்ளி போடுவான் போலிருக்கிறது. சட்டிகள் தயாராக இருந்தது. மின் மயானத்தின் வெளியே இருந்த சிமெண்டு மேடையில் நிறைய மாலைகளோடு பெரியப்பாவைக் கிடத்தியிருந்தார்கள். கால் பெருவிரலை இறுகப் பிணைத்திருந்ததில் நீர் வடிந்து கொண்டிருந்த்து. ஊதுவத்தி மணமும் பூ வாசனையும் நிறைந்து மரணச் சூழலை திரளச் செய்தது. ஒவ்வொரு சடங்கும் சாவதானமாகச் செய்யப்பட்டது.

அவனையும் பந்தம் பிடிக்கச் சொன்னார்கள். பந்தம் பிடித்தபடி சுற்றி வந்தான். பெரியப்பாவின் பஞ்சடைத்த மூக்கின் மேல் பெரிய ஒன்று துழாவியபடியிருந்தது. பின்னால் வந்த சித்தப்பா பையன் அவன் காலைத் தவறுதலாக மிதித்தான். இவன் திரும்பிப் பார்த்ததும், முறைக்கிறான் என்றெண்ணித் தயங்கி மெதுவாகப் பின்தொடர்ந்தான். மூன்று சுற்று முடிந்து விட்டது. எல்லோரும் வாய்க்கரிசியிட்டார்கள். மாலைகள் எல்லாம் கழற்றிவிட்டு ஒற்றை மாலையோடு தூக்கி இரும்புப் படுக்கையில் மாற்றி மின் மயானத்திற்கு உள்ளே கொண்டு சென்றார்கள். அதுவரை அமைதியாக இருந்த கூட்டத்தில் அழுகையும் சிறு ஓலமுமாக சலசலப்பு எழுந்தது.

நெரிசலாக எல்லாரும் பின்னாலேயே உள்ளே போக முயன்று, தடுத்து நிறுத்தப் பட்டார்கள். உள்ளே மிகச் சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். அவனும் உள்ளே சென்றுவிட்டான். இறுதி கட்டச் சடங்குகளுக்காக நீள இரும்புப் படுக்கையில் ஒற்றை மாலையுடன் பெரியப்பாவைக் கிடத்தியிருந்தார்கள். பெரு வாய் திறந்து விழுங்கத் தயாராய் காத்துக்கொண்டிருந்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த ஸ்தூல உடல், சூட்சுமமாகிக் காற்றில் கலந்து விடப்போகிறது. இந்த வாழ்க்கைதான் எவ்வளவு அற்ப விஷயமாகிவிட்டது என்று அவனுக்குத்  தோன்றியது. கொஞ்சம் பதற்றமாகவும் படபடப்பாகவும் இருந்ததுஅம்மாவின் இறப்பின்போது விறகுகளை நிதானமாக அடுக்கி மேலே சந்தனக் கட்டைத் துண்டுகளையிட்டு, விறகடுக்கலின் கீழே லேசாக மண்ணெண்ணை ஊற்றி பற்றவைத்தது நினைவுக்கு வந்தது.

முகத்தைப் பார்க்கிறவர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. எல்லோரும் முண்டினார்கள். மீண்டும் சலசலப்பு. பிச்சாண்டியும், அண்ணாமலையும் இரு கைகளையும் முன்புறம் கோத்தபடி உலர்ந்த கண்களோடு நின்றிருந்தார்கள். மீசையில்லாத இருவரையும் பார்க்கச் சகிக்கவில்லை. கற்பூரத்தை இருவருமாக ஏற்றித் தலைமாட்டிலும் நெஞ்சிலுமாக வைத்தார்கள். எல்லோரையும் வெளியே போகச் சொல்லி நீள இரும்பு ஸ்ட்ரெச்சரைத் தள்ளத் தொடங்கியதும்ஹோவென்ற இரைச்சலோடு அழுகையொலி எழுந்தது. அதற்குமேல் அங்கிருக்கப் பிடிக்காமல் வெளியே நெரிசலில் இடிபட்டபடி வந்தான்.

இறுக்கமும் தொய்வுமான மனநிலை ஆட்கொள்வதைத் தவிர்க்கவில்லை. இவ்வளவுதானா வாழ்க்கை என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். தலை நரைத்த வயசாளிகள் எல்லாம் பூங்காவின் கிரானைட் நாற்காலியிலேயே அமர்ந்திருந்தனர். மின் மயானத்தின் அருகில்கூட வரவில்லை. அவர்களுக்குப் பேச நிறைய கதைகள் இருந்தது. இருக்கிற மிச்ச காலத்தையெல்லாம் பேசிப்பேசியே தீர்த்துவிடவேண்டும் என்பது போல அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவன் மனது புற உலகத்தோடு ஒட்டாமல் அரற்றிக் கொண்டிருந்தது. நீளமான இரும்புக் குழாயின் உச்சி முனையின் வழியே சாம்பலாகிக் கரும்புகையாகக் காற்றில் பரவிக் கொண்டிருந்தார் சர்க்கரை பெரியப்பா. எலும்பு நசிந்த கருகல் வாசனை ரம்மியமாகப் பூங்காவில் பரவியபடியிருந்ததுபசியெழுப்பித் தூண்டும் அந்த வாசனை அவனுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. வெளியேறி நடக்கத் துவங்கினான். சவுக்கின் சொடுக்குகளைப் போல சுள்ளென்று கீறத் தொடங்கியது வெய்யில்.


•••

4 comments:

  1. இவ்வளவுதான் வாழ்க்கை
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. மிகச் சிறப்பான நடை. பல்வேறு பணிகளுக்கு இடையே உங்களுக்கு எழுத நேரம் கிடைத்தது அபூர்வமே. 2015இலாவது உங்கள் நூல்களை நீங்கள் பதிப்பித்தாக வேண்டும்.

    ReplyDelete
  3. சிறந்த எழுத்து நடை... வாழ்த்துக்கள்... வாசு...

    ReplyDelete
  4. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/02/blog-post.html

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname