Wednesday, March 12, 2014

மனோலயம் - படித்ததும் பார்த்ததும்...

கடந்த இரண்டு நாட்களின் அன்றாட பயண நேர வாசிப்பில் 108 பக்கங்களில் ஒன்பது கதைகளை உள்ளடக்கிய அமரத்துவம்என்கிற (2002 வெளியானது) மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பைப் படித்து  முடித்தேன். 

அமரத்துவம்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) 

போர்ஹேயின் The Immortal, Pierre Mernard, The Intruder, Dream Tiger ஆகிய நான்கு கதைகளும், காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் The Sea of lost time, Death Constant beyond love, Other side of death என்ற மூன்று கதைகளையும், இடாலோ கால்வினோவின் Going to headquarters,  Hunger at bevera என்ற இரண்டு கதைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. .

போர்ஹேயின் அமரத்வம்கதையையும், மார்க்வெஸின் மரணத்தின் வேறு கோணம்கதையையும் இரண்டு முறை வாசித்தேன். கதை புரியாமலில்லை வாசிப்பின் சுவையுணர்வுகளுக்காக அப்படிச் செய்தேன். நிறைய எழுத்துப்பிழைகள் வாசிப்பினூடே இடறினாலும், நெருடலற்ற சரளமான மொழிபெயர்ப்பு படிப்பதைத் தடை செய்யவில்லை. பெரும்பாலும் ஞாபகங்களின் நினைவு கூறல்கள்தான் புனைவின் மீதான ஈர்ப்புகளை வாசிப்பவருக்குச் சாத்தியமாக்குகிறது. 

தேர்ந்தெடுத்த இக்கதைகள் அனைத்தும் சொற்களை ஒன்றின் அருகில் ஒன்றாக அடுக்கிக் கொண்டே சென்று சர்க்கஸ் கலைஞனின் ஊஞ்சலாட்டத் தாவலையொத்த நிலையில் உள்ளுணர்வின் கம்புகளைச் சட்டெனப் பற்றிக் கொள்கிறது. மனதுக்குப் பாந்தமான அவ்விதமான உணர்வைத் தருகிற வாசிப்பின்பமே திரும்பத்திரும்ப அதில் ஈடுபடச் செய்கிறது. 

ஒரு படைப்பை சரியென்று ஏற்கவும், மறுத்துப் புறந்தள்ளுவதற்குமான புள்ளி இங்குதான் இருக்கிறது. படிக்காமலே பொதுக்கருத்துகளையொட்டி சார்ந்தும், வெட்டியும் பேசுவது வேறு. அதைப்பற்றிய, அவ்விதமான விமர்சனங்களைக் குறித்து பொருட்படுத்த வேண்டியதில்லை. தகுதியுள்ளவை எஞ்சும்என்பார்கள். அப்படியான நல்ல புத்தகத்தை அடையாளம் கண்டுகொள்வதில் ஆகச்சிறந்த வாசகனுக்கு எப்போதும், எவ்விதத் தடையும் இருப்பதில்லை. படைப்புகளுக்கான பரிந்துரைகளும் அவசியமற்றதுதான். ஆழ்ந்து வாசிக்கத் தேடுகிறவர்களுக்கு எல்லாம் கிடைக்கும்.

அமரத்துவம்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) 
- தமிழில் : க.செண்பகநாதன்
(முதல் பதிப்பு : 2002) விலை : ரூ.50/-


விழுந்து கொண்டிருக்கும் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) 

ரே பிராட்பரி, ராபர்ட் சில்வர்பெர்க், டினோ புசாட்டி, உர்சுலா லெக்யுன், ஐசக் பாஷவ்ஸ் சிங்கர், டோனி கேட் பம்பரா, அனில் வ்யாஸ், மரியா ஸ்ரஜ், யசுநரி கவாபட்டா, அன்னி ஃப்ருல்க்ஸ், ஜான் எட்கர் வைட்மான், அன்டன் செகாவ், ஸோரன்டினோ, சஹி, மண்ட்டோ, என்.எஸ்.மாதவன், ஸக்கரியா ஆகியோரின் கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது.

இக்கதைகளில் பாதி தோலுரித்த காட்டு மாடு (அன்னி ஃப்ருல்க்ஸ்), பாரம் (ஜான் எட்கர் வைட்மான்) என்ற இரு கதைகளும் நவீன புனைவுகள் எப்படி மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணங்கள் என்று இப்புத்தகத்திற்கான தனது நீண்ட முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். வாசிப்பினூடாக கதைகளில் பயணிக்கிற போது இவ்வுண்மையை உணர முடிந்தது.

 வாசிக்கக் கிடைக்கிற பெரும்பாலான மொழியாக்கங்களில் காணக் கிடைக்காத இயல்பான நம்பகம், சரளம், தெளிவு ஆகியவற்றைக் காண முடிவதே எம்.எஸ். அவர்களின் மொழிபெயர்ப்பின் சிறப்பு. 

விழுந்து கொண்டிருக்கும் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
- தமிழில் : எம்.எஸ். (காலச்சுவடு) (ரூ.160) 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname