Wednesday, June 2, 2010

வக்கத்தவன் வாத்தியான் ; போக்கத்தவன் போலிசு


தனக்குப் பிடித்தமான ஒன்றைப் பற்றிக்கொண்டு தொங்கி அதைச் சார்ந்து தன்னசைவுகளை ஏற்படுத்துவது மனித விலங்கின் இயல்பான மனோபாவம்தான். பல நிகழ்வுகளின் வாயிலாக தொடர்ந்து பல முறை இது நிரூபணமாகிக கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் அப்படித்தான்.

கான்கிரீட் காடுகளில் வாழ நேர்ந்து விட்ட சமூக விலங்காகிப் போன மனிதன் தன்விருப்பம் சார்ந்து எது சரி எது தவறு என்பதையெல்லாம் தீர்மானம் செய்து கொள்கிறான். மனித விருப்பு வெறுப்புகளை தீர்மானிக்க செய்வது சமூக நடத்தைதான் என்பதில் சந்தேகமில்லை. ஊடகங்களின் தாக்கம் அதீதமாகிப் போய்விட்ட இன்றைய நாட்களில் நம்மின் ஒரு சதவிகித செய்கையைக்கூட நாமே முடிவு செய்வதென்பது இயலாததாய் இருக்கிறது.

குழு மனப்பான்மையுடன், எதையும் வெளிப்படையாக முன் முடிவின்றி அணுக இயலாது இயல்பிழந்த மனித மனம் தனக்கு விருப்பமற்றதான எதையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

இதன் காரணமாக எந்த நிலையிலும் தான் சமூகத்திலிருந்து தனியனாக்கி விடப்படக்கூடாது என்ற உள்ளுணர்வு நம் மனதை இயக்க, குழும மனப்பான்மை சார்ந்தே தன் நெறிகளையும், நிகழ்த்து உளவியலையும் நம்மை கைக்கொள்ளச் செய்கிறது.

தனக்குப் பிடித்ததுதான் பிறருக்கும் பிடிக்க வேண்டும் என்ற கருத்து திணித்தலும், தான் ஏற்றதை பிறர் மறுக்க உரிமையுண்டு என்பதை ஒப்புக்கொள்ளத் திராணியற்ற எதிர்வினையாடல்களும் மனித மன ஆற்றலின் யோக்கியதையற்ற எல்லையின்மையைப் புலப்படுத்துகிறது.

உலகில் எத்தனை கருத்துண்டோ அத்தனைக்கும் சரியான எதிர் கருத்துக்களும், மாற்றுக் கருத்துகளும் உண்டு என்பதை அனுமதியாத அகச்சிக்கல் ஆபத்தானது.

அறம் – ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களை ஆதி குணத்தின்படியும், மரபணுக்களின் வழியாகவும், வாழ்ந்த சூழல் வாயிலாகவும், தன்னணுபவம் சார்ந்தும், கண்டு கேட்டவற்றின் அடிப்படையிலும் மனித மனம் அணுகுகிறது.

அறம் என்பது எப்போதும் ஒரே சீராக இருப்பது. மாறாக ஒழுக்கம் என்பது இடம், காலம், சந்தர்ப்பம் என்பதற்கேற்ப மாற்றமடையக் கூடியது.

எதிராளியின் பலவீனமான சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதென்பது மன இயல்பு. வாதத்திறமையின் மீதான நம்பிக்கையிலும் தன் கருத்தை நிலைநாட்டிக் கொள்வதில் சற்றும் சளைத்ததல்ல மனித மனம்.

பிரதி என்பது வாசிப்பவர்களின் முழு விமர்சனத்திற்கும், கேள்விக்கு உள்ளாக்கப்படவும், சொல்லாடல்களுக்கும், விவாதங்களுக்கும் உரியதுதான். படைப்பு பிறந்தவுடன் படைப்பாளி இறந்து விடுகிறான் என்பார்கள். படைப்பின் ஆக்கத்திற்கு பிறகு வாசிப்பவனின் புரிதலுக்கும், அணுகலுக்கும் உரிய பொருளாகி விடுகிறது.

ஒரு படைப்பை அணுகும் மனம் அதை முன்முடிவுகளுடனும், படைப்பாளியைப் பற்றிய தனிப்பட்ட அவதானிப்புகளுடனும், குழு மனப்பான்மையுடனும் அணுகினால் படைப்பு குறித்தான பார்வை சரியாக இருக்க முடியாது.

பிரதியை அல்லது படைப்பை பாவிக்கும் பலருக்கும் அதை அறிமுகம் செய்து கொள்கிற நோக்கில் அணுகுவதென்பது அரிதாக இருக்கிறது. பிரதி என்பதை இங்கு இலக்கியப் படைப்பாவோ, காண் ஊடக படைப்பாகவோ வேறு எவ்வாறாகவும் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு பிரதி அல்லது படைப்பு என்பதை நாவல், கட்டுரை, கவிதை அல்லது வலைத்தள பதிவு என்றே கொள்வோம்.

படைப்பை அணுகுகின்ற மனம் முதலில் தலைப்பைக் கண்டு அதை எழுதியவருடன் அடையாளப்படுத்திக் கொள்கிறது. அதன் வாயிலாக ஏற்கனவே மனதில் எழுதியவர் குறித்து பதிந்திருக்கும் கருத்துக்கள் சார்ந்து அகச்சாய்வுடன் படைப்பை அணுகுகிறது. அதன் காரணமாக அறிமுக மனோநிலையில் வாசிப்பதிலிருந்து விலகி நெறிமுகம் செய்ய முற்படுகிறது.

நெறிமுகம் என்பது பிரதியை நடுவுநிலைமையுடன் எந்த விருப்பு வெறுப்புமற்று, முன்முடிவுகளற்றும் படைப்பு வடிவத்தின் உணர் கூறுகளுக்கேற்ப விளங்கிக் கொண்டு செய்யப்பட வேண்டியது.

மாறாக முன்முடிவுகளுடனும், சமூகப் பண்பு சார்ந்தும், தன் விருப்பம் பற்றியும் படைப்பை நெறிமுகம் செய்ய முயலும் போது அதுவும் விவாதப் பொருளாகிறது.


(இது ஒரு மீள் பதிவு)

- பொன்.வாசுதேவன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname