Monday, May 17, 2010

இரண்டு கவிதைகள்

சிக்கிமுக்கி.காம் இணைய இதழில் வெளியான எனது இரண்டு கவிதைகள்


பிரியங்கள் உதிர்த்த கனி

ஞாபகத்தின் காலடியில்
தஞ்சம் புகும்
இன்றைய மீள்நினைவுகளை
பிரியங்களால் ஒத்தியெடுத்து
படுக்கையில் கிடத்துகிறேன்
 
ஊர்ந்து கொண்டிருக்கும்
அன்பின் கணங்களை
அனுபவித்தபடி
பயணிக்கிற திசைகளிலெல்லாம்
தடம் தரிசித்து
நீங்கிக் கொண்டிருக்கிறது நான்
 
பொய்த்துப்போன
பெருமழைக்காலத்தின்
வெக்கை நினைவுகளில்
மிச்சமிருந்த பழைய பிரியங்கள்
நனைத்துக் கொண்டிருக்கிறது
 
வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களை
திசைக்கொன்றாய் வீசிச்சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று.

0


பால்ய விளையாட்டு
 
வாழ்ந்து தீர்த்த பால்யத்தின்
நிறைவேற்றாத நேர்த்திக்கடனாய்
மிச்சமிருக்கின்றது பிரியங்கள்
 
உலர்த்தி பதப்படுத்தி
பத்திரப்படுத்தி
சேமித்து வைத்திருந்த
பிரியங்களை
காதலைக் கொண்டாடும்
ஒரு தினத்தில்
பீங்கான் குவளையிலிருந்து
கவிழ்த்துக் கொட்டி
பார்த்தபடியிருக்கிறேன்
 
விளையாட்டின் ஞாபகங்களை
நினைவிலேந்திய
சொப்புகளின் ஏக்கத்தோடு
காலங்களுக்குப் பின்னும்
யாசித்துக் கொண்டு
வெறிக்கின்றன பிரியங்கள்
 
பிரியங்களைச் சுமந்து
முணுமுணுத்தபடியிருக்கும்
அவற்றின் சப்தம்
அறையெங்கும்
மெல்லப்பரவி
சலசலப்பால் நிறைகிறது
 
நெளிந்து கொண்டிருக்கும்
பிரியங்களை
ஒவ்வொன்றாய்க் கையிலெடுத்து
ஆசுவாசப்படுத்தி
ஆற்றுப்படுத்தி
ஆசைதீர பார்த்துவிட்டு
மறுபடியும்
குவளைக்குள் இட்டு
மூடிவைக்கிறேன் பத்திரமாய்.

- பொன்.வாசுதேவன்

 

8 comments:

  1. hope i had already read them some time past :)

    good to read all again.

    ReplyDelete
  2. இரண்டும் அருமை. இரண்டாவது மிகப் பிடித்தது வாசு.

    ReplyDelete
  3. vaazhththukal....!

    intha 2 me vaasiththirukkiren.
    2 - vathu mikavum pidikkum:)

    ReplyDelete
  4. நல்ல கவிதைகள் இரசித்தேன்

    ReplyDelete
  5. ம்ம்... அருமையா இருக்கு..

    ReplyDelete
  6. வாழ்த்துக‌ள் வாசு

    ReplyDelete
  7. ரொம்ப அருமையா இருக்குங்க வாசு ரெண்டு கவிதையுமே.

    //மறுபடியும்
    குவளைக்குள் இட்டு
    மூடிவைக்கிறேன் பத்திரமாய்.//

    இந்த வரிகளை மிக மிக அனுபவித்தேன்.

    ReplyDelete
  8. mika sirappaana varikal...

    உலர்த்தி பதப்படுத்தி
    பத்திரப்படுத்தி
    சேமித்து வைத்திருந்த
    பிரியங்களை
    காதலைக் கொண்டாடும்
    ஒரு தினத்தில்
    பீங்கான் குவளையிலிருந்து
    கவிழ்த்துக் கொட்டி
    பார்த்தபடியிருக்கிறேன்

    vaazthukal paratukal

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname