Wednesday, March 17, 2010

பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்


பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். கடந்த மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

சைவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு…

சேசாசலம் (பெரியார் தாசன்) இஸ்லாத்தில் இணைந்தது எப்படி?

இஸ்லாத்தை தழுவிய உடன் ரியாதில் எமது செய்தியாளர்களுக்கு டாக்டர் அப்துல்லாஹ் (பேராசிரியர் பெரியார்தாசன்) மக்கள் உரிமைக்கு அளித்த பிரத்யோக பேட்டியின் முக்கிய பகுதிகளை இங்கே அளிக்கிறோம். முழு பேட்டியை வீடியோ வடிவத்தில் எமது இணையத்தளத்தில் www.tmmk.in பார்க்கலாம்

சந்திப்பு: எம். ஹூஸைன் கனி, மீமிசல் நூர் முஹம்மது, ஆசிக் இக்பால்
-----------------------------------------------------------------------

மக்கள் உரிமை : ஆரம்ப காலத்தில் இந்துவாக, நாத்தீகராக, பௌத்தராக பல்வேறு கோணங்களில் முன்னிறுத்தப்பட்ட தாங்கள் இஸ்லாத்தை தழுவியதற்கான காரணம் என்ன?


டாக்டர் அப்துல்லாஹ் : நாத்தீகராவதற்கு முன்னர் (16 வயதுக்கு முன்பு) ஒரு சைவக் குடும்பத்தில் செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டேன். தினமும் 3 மணி நேரம் பிள்ளையார் பூஜை செய்யும் குடும்பத்தில் பிறந்தவன். தேவாரம், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றை பொருள் புரியாமலேயே சிறுவயதிலேயே மனனம் செய்து வைத்திருந்தேன். இவை எல்லாமே உடைந்தது எப்போது என்றால் நான் புது முக வகுப்பில் கல்லூரியில் சேர்ந்த போது தந்தை பெரியார் நான் பயின்ற கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்போது அவரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதி அதனை என் ஆசிரியர் குமரவேலன் அவர்களிடம் காட்டினேன். அவரும் அதனைப் படித்து விட்டு இந்த கவிதை மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் சேசாஷலம் என்ற உனது பெயரை போட்டுள்ளாயே இது ஐயர் பெயர் போன்று அல்லவா உள்ளது. ஏதாவது புனைப் பெயர் வைக்கலாமே என்றார். நான் உடனே எதுவும் யோசிக்காமல் பெரியார் தாசன் என்று எழுதினேன். அன்று பெரியார் தாசன் என்று பெயரிட்ட போது என் தலையில் பட்டை, சந்தனம், குங்குமப்போட்டு என்று பக்திப் பழம் போன்று காட்சி தந்தேன்.

பின்னர் பெரியாருடன் பழகி, நூற்களைப் படித்து, நாத்திகத்தில் படிப்பும் பயிற்சியும் மேற்கொண்டு பின்னர் தமிழ்நாட்டில் பெயர் சொன்னால் விளங்குகின்ற கடவுள் மறுப்பாளனாக எல்லா மதங்களையும் விமர்சிப்பவனாக அறியப்பட்டது எல்லாம் தாங்கள் அறிந்ததே.

அதன் பிறகு அம்பேத்கரின் எழுத்துக்களை படித்தபின் புத்தரும் அவரது தர;மமும் என்ற பெயரில் அவர் கடைசியாக எழுதிய நூலை மொழி பெயர்த்து வெளியிட்டேன். செட்யு+ல்ட் இன மக்களுடன் பழகினேன். பவுத்தம் தான் சரியான வழி என்றெண்ணி புத்த மதத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். சித்தார்த்தன் என்று பெயர் மாற்றத்தை கெஜட்டிலும் பதிவு செய்து கொண்டேன்.

2000 ஆவது ஆண்டில் எனது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இப்போது இந்த நிலையில் நாம் எல்லாம் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு அந்த திருப்புமுனை பெரிதும் காரணமாக இருந்தது. நண்பர் ராஜகிரி தாவூத் பாட்சா அழைப்பின் பெயரில் அபுதாபி வந்தேன். அப்போது எனது வகுப்பு தோழர் என்னுடன் ஆரம்ப பள்ளி முதல் 11 வரை படித்த நண்பர் சிராஜ்தீனை சந்தித்தேன். எங்கள் பள்ளித்தோழர்களான தெய்வசீகாமணி (தமிழருவி மணியன்) கல்கி பகவன் மற்றும் எங்கள் இருவரைப் பற்றியும் எங்கள் ஆசிரியர் ஜனார்த்தனம் விசாரித்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 2000ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நடந்த அந்த இரவுத் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த இரவு தொடங்கி விடியல் வரை நானும் சிராஜுத்தீனும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு இஸ்லாமியப் போதகராகவும் இருக்கும் சிராஜுத்தீன் நட்பு ரீதியாக என்னிடம் சில கேள்விகளை கேட்டார். அந்த கேள்விகளை நினைத்துக் கொண்டே விடிந்த பிறகு தூங்க முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. வெறுமனே படுத்துக் கிடந்தனே தவிர சீராஜுதீன் எழுப்பிய கேள்விகள் என்னை யோசிக்க வைத்தன. இது வரை நாம் செய்து வருவது சரிதானா என்று எண்ணத் தொடங்கினேன். சிராஜுத்தீன் என்னிடம் அதிகமாக பேசவில்லை. சில கேள்விகளை மட்டுமே எழுப்பினார். மற்றபடி எங்கள் இளமை காலம் பற்றி தான் நாங்கள் அதிகம் பேசினோம்.

இறைவன் இல்லவே இல்லை என்று பிரச்சாரம் செய்து வருபவன் நான். இறைவன் இல்லவே இல்லை என்றால் இதுவரை நான் செய்தது சரி. ஏனென்றால் ஒரு ஆயிரம் நபர்களையாவது நான் நாத்தீகராக மாற்றியிருக்கிறேன். இறைவன் இருக்கிறான் என்றால் அப்போது என்னுள் பயம் ஏற்பட்டு விட்டது. இறைவன் இருக்கிறான் என்பது எவ்வாறு எனக்கு உறுதியாகவில்லையோ அது போலவே இறைவன் இல்லை என்பதும் எனக்கு உறுதியாக வில்லை. எனவே நான் எவ்வாறு ஒரு பக்கம் நிற்பது என்று பயம் வந்து விட்டது. உண்மையாகவே இதனை சொல்கிறேன். உலகம் நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறதா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. சிலர் பேர் பெரும் எதிர்ப்பு வரும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இறைவன் என் பக்கம் இருந்தால் எதிர்ப்பையெல்லாம் சமாளிக்கலாம் என்ற உறுதியுடன் தான் நான் இருக்கிறேன்.

இந்து மதத்தில் தேடினேன், இறைவன் அவ்விடத்தில் இல்லை. பைபிள் படித்திருக்கிறேன். கடவுளுக்கு குழந்தைகள் உண்டு என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. பவுதத்தில் உங்களுக்கு தெரியும் இறைவனைப் பற்றி பேசாதீர்கள் என்று பவுத்தர் சொல்லி விட்டார். இப்படியே நகர்ந்து நகர்ந்து வந்தேன். இந்த நிலையில் தான் ஐ.எப்.டி. (இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட்) பெரியவர் தன்னன் மூஸாவை சந்திக்க நேரிட்டது.

பெரியவர் தன்னன் மூஸா (தொண்டியைச் சேர்ந்த கவிஞர் மூஸா) தான் எழுதிய சௌந்தர்ய முத்திரை என்ற புத்தகத்தை என்னிடம் தந்து அதற்காக அணிந்துரை எழுதி தருமாறு என்னிடம் கேட்டார். இது என்னுள் திருப்பம் ஏற்பட்ட இடமாகும். நானும் அந்த நுhலுக்கு அணிந்துரை எழுதித் தந்தேன். பின்னர் அவர் ஏன் அணிந்துரையை எழுதுவதற்காக என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று பலமுறை யோசித்தேன். பின்னர் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் ஐ.எப்.டி.யை சேர்ந்த சிக்கந்தர் என்ற சகோதரை அறிமுகப்படுத்தினார். அவருடன் சில சகோதரர்கள் வந்து என்னை என் இல்லத்தில் சந்தித்து இஸ்லாத்தை பற்றி விளக்கினார்கள். பின்னர் நான் பல புத்தகங்களை விலைக்கு வாங்கி அவற்றை வாசித்தேன். தினமும் 5 மணி நேரம் திருக்குர்ஆனை படிப்பதற்காக நான் நேரம் ஒதுக்கினேன். அப்போது இறைவன் இருக்கிறான் என்று எனக்கு உறுதியாகி விட்டது. 2004 ஆம் ஆண்டில் கடவுள் மறுப்பு பிரச்சாரத்தை முற்றாக நிறுத்திக்கொண்டேன். அதன் பிறகு நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீத் நூற்களை ரஹ்மத் பதிப்பகம் முத்துப்பேட்டை முஸ்தபா அவர்கள் வெளியிட்ட போது ஏழு பாகங்களின் வெளியிட்டு விழாவிற்கும்; என்னை அழைத்தார்கள். என்னை ஏன் இவர்கள் அழைக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. நாத்தீகப் பிரச்சாரத்தை கைவிட்டது அவர்களுக்கு தெரியும். ஆனால் நான் இந்த தேடலில் இருப்பது அவர்களுக்கு தெரியாது. ரோடு டூ மக்கா என்ற ஆங்கில நுhலையும் படித்து அதனை மக்காவை நோக்கி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வைத்துக் கொண்டேன். இப்படியே எனது ஆய்வு தொடர்ந்தது. அப்துஸ் ஸமது, லத்தீப் (கவிக்கோ) அப்துல் ரஹ்மான், ஜவாஹிருல்லாஹ் முதலியவர்களெல்லாம் எனது நண்பர்கள் தான். அவர்களுடன் எல்லாம் பழகியிருக்கிறேன். ஆனால் இனங்காட்டிக் கொள்ளாமல் எனது ஆய்வுகளை செய்து வந்தேன். சில பேருக்கு எனக்கு இந்த நாட்டம் உள்ளது என்பது தெரியும்.

நான் கடந்த முறை சவூதி வந்த போது முகம்மது நபி (ஸல்) வாழ்ந்த மக்கா மதீனா நகரங்களை காண ஆசைப்பட்டு நண்பர்களிடம் கூறினேன். ஆனால் யாரும் இதனை கண்டு கொள்ளவில்லை. அப்போது நினைத்தேன். இறைவன் இப்போது எனக்கு நாடவில்லை போலும், அடுத்த முறை எனது சொந்த செலவிலேயே காண வேண்டும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

இப்போது நான் ரியாத் வந்துள்ள தருணத்தில் நண்பர்கள் சிக்கந்தர், சாதிக் ஆகியோருடன் கலிமா மொழிந்த பிறகு மக்கா செல்லவுள்ளேன். நான் இந்த முறை எனது சொந்த செலவில் வந்துள்ளேன். இந்த முறை நான் அவர்களிடம் மக்கா மதீனா செல்ல வேண்டும் என்று சொன்னேன். கலீமா சொன்னால் தான் போக முடியும் என்று சொன்னார்கள். சென்ற முறை நான் இதை சொன்ன போது அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இப்போது புரிந்துக் கொண்டார்கள். அவர்கள் வழிகாட்டினார்கள். ரப்பாவிற்குச் சென்று நான் கலீமா சொல்லி முஸ்லிம் ஆனேன். நான் இஸ்லாத்தில் இணைந்துள்ளதை என் துணைவியாரிடம் தொலைப்பேசியில் கூறினேன். முதலில் அதிர்ச்சி அடைந்தார்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஆனால் எனது விருப்பம் நான் ஏற்றுக் கொண்டேன் என்று சொன்னேன். நான் மேலும் அவர்களிடம் கியாமத் (இறுதி தீர்ப்பு) நாளில் நீயே என் மனைவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் யோசி என்று கூறினேன். பிறகு பத்து நிமிடம் கழித்து அவரே என்னுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நான் மகனிடம் பேசி விட்டு உங்களது மார்க்கத்திற்கு வர யோசிக்கிறேன் என்று கூறினார்.

மக்கா மதீனா செல்ல வேண்டும் என்று நான் விரும்பியது அங்கு சென்று பேரீச்சை பழம் வியாபாரம் செய்வதற்காக அல்ல. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டால் தான் அங்கே போக முடியும் என்பது எனக்கு தெரியும். அதை சென்ற முறை நான் கேட்ட போது நண்பர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இப்போது புரிந்துக் கொண்டார்கள்.

மக்கள் உரிமை : தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள பத்து ஆண்டு காலங்கள் ஆனது ஏன்?

டாக்டர் அப்துல்லாஹ் : கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாத்தை அறிவதற்கும், ஆழமாக கற்பதற்கும், அரபி மொழியை கற்பதற்கும் எனது நேரத்தை செலவழித்தேன். இன்னும் மார்க்கத்தை அறிய ஆவலுடன் இருந்தேன். எதை செய்தாலும், முழுமையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்பது என் குணம். ஆகவே இதற்கு பத்து ஆண்டுகள் ஆகியது.

மக்கள் உரிமை : இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை இந்தியாவில் அறிவிக்காமல் ஏன் சவூதியை தேர்ந்தெடுத்தீர்கள்?

டாக்டர் அப்துல்லாஹ் : புனித மண்ணில் இஸ்லாத்தில் ஏற்க வேண்டும் என்பதே காரணம். மாறாக சவூதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்ற காரணத்திற்காக அல்ல. இங்கே இருக்கிறவர்கள் இஸ்லாமியர்களாக அறியப்பட்டவர்களே தவிர இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் வெகுதூரம் என்பதை நான் அறிவேன். உம்ரா முடிந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு இதனை அறிவிக்க போகிறேன்.

மக்கள் உரிமை : வெகுஜன மக்களும், அறிவு ஜீவிகளும் இஸ்லாத்தை சரியான கொள்கை என்று ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள பின்னடைவிற்கான காரணங்கள் என்ன?

டாக்டர் அப்துல்லாஹ் : இஸ்லாமியர்கள் பெண்களை பூட்டி வைப்பார்கள். பர்தாவை போட்டு மூடி வைப்பார்கள். அடுத்தவர்களுடன் பழக விட மாட்டார்கள். தானும் பழக மாட்டார்கள். மோடி மஸ்தான் வேலை செய்பவர்கள். புகை போடுபவர்கள். இவர்களுடன் சேர்ந்தால் நம் வாழ்வை கெடுத்து விடுவார்கள் என்றெல்லாம் பரப்பப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்தவன் நான். எனது 16வயது வரை நான் சென்ற ஒரே முஸ்லிம் வீடு சிராஜுத்தீன் வீடு மட்டும் தான். அந்த வீட்டில் உள்ள எல்லோரும் என்னிடம் அன்பாக பழகுவார்கள்.

இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமியர்களே அறியாமல் இருப்பதும், பிறர் தவறான கோட்பாட்டை சொல்லும் போது உடனே அதனை எதிர்கொண்டு அவர்களுக்கு விளக்கம் அளிக்க முன்வராததும் வருத்தத்திற்குரியது. இஸ்லாம் முஸ்லிம்களுக்காக மட்டும் வந்த மார;க்கம் என்று நான் விளங்கவில்லை. உங்களுக்கே தெரியும் இஸ்லாம் அனைத்து மக்களுக்காவும் இறைவனால் தனது இறுதி நபி மூலம் இறுதி வேதத்துடன் அருளப்பட்டதாகும்.

இஸ்லாம் எல்லா மக்களுக்கும் உரியது. அதில் மற்றவர்களை அழைக்காமல் இஸ்லாத்தை மூடி மறைத்த இஸ்லாமியர்களும் உண்டு. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக பார்ப்பவர்களும் உண்டு. முஸ்லிம்கள் என்றால் முட்டாள்கள், கடத்தல்காரர்கள், மோடிமஸ்தான் வேலைப் பார்ப்பவர்கள், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து (மன்னிக்க வேண்டும்) எச்சில் சாப்பாடு சாப்பிடுபவர்கள் என்று எண்ணுபவர்கள் உண்டு. இந்த தவறான சித்தரிப்புகளை நீக்க் எத்தனை இஸ்லாமியர்கள் தகுந்த பதில் தந்தார்கள். பதில் சொல்வது நமது கடமையில்லையா? எல்லோருக்குமான அழைப்பு திருக்குர்ஆனில் உள்ளது. அதனை சரியான முறையில் மக்களிடம் நம்மவர்கள் சொல்வதில்லை.

ஜமாத்தில் இருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டும். ஜமாத்தில் மொத்தமே மூன்று பேர்கள் என்றால் அதிலும் நான்கு கட்சி. உலகளவில் சதி செய்து முஸ்லிம்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

முருகன் கொலை செய்தால் முருகன் கொலை செய்தான் என்றும் நெல்சன் கொள்ளை அடித்தால் நெல்சன் கொள்ளை அடித்தான் என்றும்

இதையே முகம்மது செய்தால் இஸ்லாமிய தீவிரவாதி செய்து விட்டான் என்று சித்தரிக்கிறார்கள். நான் இப்போது களத்தில் இறங்கியதற்கும் இதுவே காரணம். இன்ஷா அல்லாஹ் என்னுடைய பிரச்சாரம் இதற்கு பயன்பெறும்.

மக்கள் உரிமை : இஸ்லாத்தை தெரிந்து கொள்ள கூடியவர்கள், பிற மதத்தை சேர்ந்த அறிவு ஜீவிகள், ஆராய்பவர்களுக்கு தாங்கள் கூறும் சுருக்கமான செய்தி?

டாக்டர் அப்துல்லாஹ் : மிக சுருக்கமான சேதி இது தான். உலகத்தில் இருக்கும் எல்லா வேதங்களையும் அடுக்கி வைக்கலாம். இந்து மதம் பின்பற்றும் வேதங்கள், யூதர்கள் பின்பற்றும் தவ்ரா வேதம், கிறித்தவர்களின் பைபிள் வேதம் இவற்றையெல்லாம் அறிவு பூர்வமாக ஆராய்ச்சி செய்து பார;த்தால் இவற்றில் இறைவன் நேரடியாக சொன்னதாக ஏதாவது வேதம் உள்ளதா? கிருஷ்ணசாமி சொன்னதாக முனுசாமி சொன்னதாக சின்னசாமி சொன்னதாக தான் உள்ளது.

1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன் தான். இப்போது அறிவு ஜீவிகள் எந்தப் பக்கம் வரவேண்டும் என்பதை புரிய வேண்டும்.

மக்கள் உரிமை : உங்கள் எதிர்கால செயல்திட்டம் எவ்வாறு இருக்கும்?

டாக்டர் அப்துல்லாஹ் : இறைவன் நாடுகின்ற வழியில் எல்லாம் இருக்கம்; என்பதே எனது சுருக்கமான பதில்.

எனக்காகவும், இறைவனுக்காகவும் இஸ்லாத்தில் விதித்துள்ள ஐந்து கடமைகளை செய்யப் போகிறேன்.

சமுதாயத்திற்காக என்றால் வழி தவறி சென்று கொண்டிருப்பவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்ப்பதற்கு எனது வாக்கு வண்மையை பயன்படுத்துவேன்.

மக்கள் உரிமை : இஸ்லாத்திற்கு எதிராக பரப்பி வரும் வெகுஜன ஊடகங்கள் விஷயத்தில் முஸ்லிம்களின்; நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்----?

டாக்டர் அப்துல்லாஹ் : அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நாங்களும் ஜிஹாத் செய்ய வேண்டாமா-? என்று கேட்டதற்கு சண்டை இல்லாத போர் ஒன்று உள்ளது. அதனை நீங்கள் செய்யுங்கள் என்றார்கள். முதலில் சண்டை இல்லாத ஜிஹாத் செய்வோம். இறைவன் நாடினால் என்னை எதற்காகவும் தயார;படுத்திக் கொள்வேன்.

தொகுப்பு : ராமேஸ்வரம் ராஃபி

நன்றி :
TMMK

13 comments:

 1. நல்லது.செய்யட்டும்.

  ReplyDelete
 2. அங்கேயாவது
  தங்கினால் சரி.

  ReplyDelete
 3. Helloo Mr.Thasan dont come to tamil nadu and try to spread islam.You are not welcomed.You cannot cheat the people as you were doing all these days.You are another nithyananadar.Ok So dont try to come here and try to do nonsenses.Take your family to saudi and settle down there.Thats ideal and safe for you.

  ReplyDelete
 4. இப்பல்லாம் எல்லாமே தழுவுறாங்க ...
  பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்
  நித்யானந்தர் ரஞ்சிதாவ தழுவுறார்.

  என்ன நடக்குது இங்க?

  ReplyDelete
 5. ஆன்மிகவாதிகளைக் காட்டிலும்,
  பகுத்தறிவாளர்கள்தான்
  இறைவனைப் பற்றி அதிகம்
  சிந்திக்கிறார்கள் என்று
  தெரிகிறது !

  இதற்கு, இஸ்லாம் மதத்திற்குத் தாவிய
  பெரியார்தாசன் ஒரு தலை சிறந்த உதாரணம் !

  S.S. JAYAMOHAN

  ReplyDelete
 6. உங்க வலைப்பூ வடிவமைப்பு அருமை அருமை. இதழ் இன்னும் எனக்கு வரலை..நன்றி

  ReplyDelete
 7. மதம் மாறி பேர் மாற்றிக்கொள்ளும் வரி விளம்பரங்களை நாளிதழ்களில் தினந்தோறும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
  பெரியார்தாசன் அப்துல்லாஹ் என்ற பெயர்மாறியதும் ஒரு சாதாரண நிகழ்ச்சிதானே!
  இதற்கு எதற்கு இவ்வளவு விளம்பரம்? பத்தி பத்தியாகப் பதிவுகள்?

  ReplyDelete
 8. இந்தியா ஜனநாயக நாடு,யாரும் எந்த மதத்தையும் தழுவலாம்.

  ReplyDelete
 9. "நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன. எவர் அவற்றை
  (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் 'நான் உங்களைக் காப்பவன் அல்ல' (என்று நபியே! நீர் கூறும்)" -(அல்குர்ஆன் 6:104)

  ReplyDelete
 10. எந்த ஒரு மனிதனுக்கும் வயதாக வயதாக ஒரு தளர்ச்சி வரும் அது தான் இந்த நபருக்கும் ஏற்ட்பட்டிருக்கிறது.

  கடைசி வரை நாத்திகராக இருக்க மன வலிமை இருக்க வேண்டும் அது பெரியாருக்கு மட்டுமே இருந்தது.இந்த தாசனுக்கும் இருக்கும் என்று நினைப்பது மடத்தனமே
  இதெல்லாம் விவாதிக்க கூடிய அளவான நிகழ்வே அல்ல அதுவும் ஒரு இலக்கிய பத்திரிக்கையில்

  இந்த குப்பைகளை ஒதுக்கி தள்ளுங்கல் ஆசிரியரே

  ReplyDelete
 11. Good and Excellent Post. Thanks to Spread this.

  ReplyDelete
 12. mr.sheshasalam ultimately realised god is there,he is feeling shy to declare that as an Hindhu.He has chosen islam to do that.

  ReplyDelete
 13. அவர் மாறி ரொம்ப நாளாச்சு...
  எலெக்சன் வர்ற நேரத்தில 'எல்லா'ப் பிரபலங்களும் 'கல்லா'க் கட்ட வேண்டாமா ?

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname