Wednesday, October 30, 2013

பைத்தியக்காரப் பிள்ளை

வாழ்க்கை பற்றியும், வலிகளைக் குறித்தும் இப்போது எழுதுவதற்கான அவசியம்தான் என்ன? சற்றே நீண்ட மூன்று சிறுகதைகளை நேற்றைய (29.10.2013) பொழுதின் வீடு திரும்பும் பயண நேரத்தில் வாசித்தேன். நான் படித்த மூன்று கதைகள் என்ன என்பதைச் சொல்லி விடுகிறேன். 

1. பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி.வெங்கட்ராம்
2. மண் - லா.ச.ராமாமிருதம்
3. தரிசனம் - பி.எஸ்.ராமையா


வாழ்வில் வலிகள்தான் எத்தனை விதம்... இம்மூன்று கதைகளைப் படித்து முடித்ததும், ஒரு சூடுட்டியை மார்பில் வைத்து அழுத்தியது போலொரு வலி. நமக்குள் பரவுகிற அவ்வலியின் உணர்வைத் தவிர்க்கவே இயலவில்லை. மூன்று கதைகளையும் இரு முறை படித்தேன். உணர்வுகளைக் கடத்துதலே எழுத்து என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. ‘தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம்’ என்றான் பாரதி.  ‘நெருப்பு என்று எழுதினால் வாய் வெந்து போக வேண்டும்‘ என்பார் லா.ச.ராமாமிருதம். இவ்விரண்டும் எழுத்து என்பது எப்படி உணர்வுக் கடத்தியாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது. ஒரு வாசிப்பில் படிக்கக் கிடைக்கிற வாழ்வனுபவத்தை வாசிக்கிறவரும் பெறுதலே அவ்வாசிப்பின் பலன். ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிற திருப்தியும், அதன் வழியாகத் தன் வாழ்வைத் திருத்திக் கொள்கிற நேர்மையையும் தருகிறதுதான் வாசிப்பு. வாசிப்பில் உயிர்த்திருப்பது என்பது இதுதான்.

பழச்சாறை உறிஞ்சு குழல் கொண்டு மெல்ல அனுபவித்துப் பருகிக் கொள்வதான வாழ்க்கை எத்தனை பேருக்கு வாய்த்து விடுகிறது... தியானத்திலும், மந்திரத்திலும், புனிதத் தலங்களுக்கு பயணித்தலிலும் தேடுகிற அதே அமைதியைத்தானே அப்படிச் செய்யாதவர்களும் தேடுகிறார்கள். போதாமையென்பது ஒவ்வொருவருக்கும் உண்டுதானே..

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போலவே அமைந்து விடுவதில்லை. ஒரு சிலருக்குப் பணம், சிலருக்குப் புகழ், சிலருக்கு அன்பு, சிலருக்கு அமைதி, சிலருக்கு தெய்வீகம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடல் இருக்கத்தான் செய்கிறது. பட்ட கடன்களைத் தீர்க்கவா, புகழ் சேரவா, பொருள் சேர்க்கவா என்று எதற்கெனத் தெரியாமல் எதை நோக்கி இவ்வாழ்க்கை என்னை இழுத்துக் கொண்டு ஓடுகிறது.  வாழ்வு என்பதே மரணத்தை நோக்கி நகர்கின்ற ஒரு பயணம்தான் என்பதும் என் எண்ணமாக இருந்திருக்கிறது. வாழ்வின் போதாமையென்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கிறது. அதேபோலத்தான் வலிமிகுந்த வாழ்க்கையும். வலியும் ஒன்று போலவே இருப்பதில்லை. தீராவலி வாழ்க்கைதான். மரணத்தை எதிர் கொள்வதற்கான மன ஓர்மையை மரணத்தின் வரை கொண்டு செல்ல முடியாது என்பதே உண்மை. மேலே விழுந்த மழையை கைகளால் வழித்துத் துடைத்து விட்டுக் கொண்டாலும் நம்முள் பரவிய அம்மழையின் குளுமையை உடல் உணர்வதை நம்மால் தடுக்க முடியாதது போல பல சம்பவங்கள், நபர்கள், சந்தோஷங்கள், வலிகள் எனக் கடந்து கொண்டேதான் வாழ்வின் நாட்களும் நகர்கிறது.

இதைப் பற்றி பேசிக் கொண்டேயிருக்கலாம்தான். கதைக்கு வருகிறேன்.‘பைத்தியக்காரப் பிள்ளை’ என்றொரு சிறுகதை. எம்.வி.வெங்கட்ராம் எழுதியது. 

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி துன்புறுகிற ஒரு சௌராஷ்டிரக் குடும்பத்தின் கதை. தறி இருக்கிறது. அப்பணியையும், வேறு முதலாளிகளிடம் தறி வேலை செய்தும் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிற அக்கறையுள்ள ராஜம் என்கிற ஒருவனின் கதை. ஆண் ஐந்து, பெண் ஐந்து என பத்துப் பிள்ளை பெற்ற அம்மா. பத்தாவது குழந்தை பெண்ணாகப் பிறந்ததும், ‘போயும் போயும் பெண்ணா பெத்தே’ என்று கேட்டு குடித்துக் குடித்தே தன் இயலாமையை நொந்து கொண்டு செத்துப் போகிற அப்பா. மூன்று தங்கைகளைத் திருமணம் செய்து கொடுத்து, தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள சின்ன சேமிப்பிற்கும் வழிவகை செய்து வைக்கிறான் ராஜம்.

எதிர் வீட்டிலிருக்கிற பங்கஜத்தை கல்யாணம் செய்து கொள்ள உத்தேசம். அவளும் சௌராஷ்டிர இனம்தான். பேசிக் கொண்டதில்லை என்றாலும் கண் சாடையாலேயே இவனுக்குள் அவள் மீது ஒரு அன்பு உருவாகியிருந்தது. தன் குடும்பத்தைச் சீராக்கி திருமணத்துக்கு முன் தான் ஒரு சிறிய அளவிலாவது நல்ல நிலைமை பெற வேண்டும் என்பதே ராஜத்தின் அவா.

ஆனால் எதற்கும் உதவவோ, உடனிருந்து வழிநடத்தவோ வக்கற்ற அவன் அம்மா. உபத்திரவத்திற்கோ குறைச்சலில்லை. அம்மாக்கள் என்றாலே நம் கண்முன் வருகிற கருணைக்கு எதிரான கோரக் காளி அவள். ராஜம் தன் பெட்டியில் சேர்த்து வைத்திருக்கிற கொஞ்சம் தாலித் தங்கத்தையும், சின்னச் சங்கிலி, நூறு ரூபாயையும் கள்ளச்சாவி கொண்டு திறந்து பார்த்து விடுகிறாள்.

எதிர் வீட்டு மேனாமினுக்கிக்காக இப்பவே தனியா எடுத்து வெச்சிருக்கியா என்றபடி கூரிய பற்களைக் கொண்டு பிராண்டுவது போல அவனை வார்த்தைகளால் வாட்டியெடுக்கிறாள். கொள்ளிக் கட்டையால் முகத்தைத் தீய்க்கிற வார்த்தைகள்..  வாளெடுத்துச் செருகியதைவிட அதிக வலி தரக்கூடிய வார்த்தைகள்தான் எவ்வளவு கூர்மையானவை.. பெற்றவள் ஒருத்தி இப்படியும் இருக்க முடியுமா? நீயே எடுத்துக் கொள் எனச் சாவியை விட்டெறிந்து வீட்டை விட்டு வெளியே வருகிறான். எதிர்ப்படுகிற  கடைசித் தங்கை குள்ளியிடம், ஏழு ரூபாயைக் கொடுத்து, பெரிய தங்கையிடம் கடன் வாங்கிய ஐந்து ரூபாயைக் கொடுத்து விடு, அவளுக்கு டிபன் சாப்பிட ஒரு ரூபாய் கொடு, உனக்கு ஒரு ரூபாய் எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்.

சாகத் துணிந்துவிட்ட ராஜத்துக்கு குளத்தைப் பார்த்து பயமாக இருக்கிறது. நீச்சல் தெரியுமே சாக ரொம்பக் கஷ்டமாச்சே என்று தோன்றியது. அதைத் தவிர்த்து அருகேயிருக்கும் ரயில் பாதையில் எதிர்வருகிற ரயிலை நோக்கிச் செல்கிறான். “தூஃரோடி” (நீ அழுது அழுது சாகணும்) என்று கூக்குரலிட்டபடி இரண்டு பெட்டிகளுக்கிடையே பாய்கிறான். ரயில் ஓட்டுநர் சட்டென நிறுத்தியதில் உடல் சிதையாமல் தலையில் மட்டும் பெரும் அடிபட்டு  அவன் வாழ்வு முடிகிறது.

ராஜத்தின் உடம்பு பெரிதாகச் சிதையவில்லை. நேர்த்தியாக மடித்துக் கட்டப்பட்ட பரிசுப் பொட்டலம் போல கழுத்தில் ரோஜா மாலையிட்டு வெள்ளைத் துணியில் சுற்றி நீளவாக்கில் கிடத்தியிருந்தார்கள். அம்மாவாயிற்றே.. அழாமலிருக்க முடியுமா? கதறிக் கதறி அழுதாள். தெருவாசிகள் எல்லாரும் வந்து பார்த்துக் கண் கலங்கினார்கள்.

எதிர்வீட்டுப் பங்கஜம் அவள் வீட்டிலிருந்தாள்.  ‘நீ போய் பார்க்கலையா‘ என்று அவள் அண்ணன் கேட்கிறான்

‘பார்க்காமே என்ன? பைத்தியக்காரப் பிள்ளை! கலியாணம் ஆனப்பறம் இந்த வேலை செய்யாம இருந்தானே’ என்றபடி போர்வையால் தலையை முக்காடிட்டுப் போர்த்திக் கொண்டாள் பங்கஜம்.


இதுதான் கதை. அந்த வலியும், ராஜத்தின் அம்மா காட்டும் கோரத்தனமும், முகத்தில் பளீரென்று மீண்டும் மீண்டும் அறைந்தபடியிருந்தது. இந்தக் கதையை வாசித்து முடித்ததும் கொஞ்ச நேரத்துக்கு எதுவும் செய்யாமல் புத்தகதையும் கண்ணையும் ஆழ்ந்து மூடிக்கொண்டேன். அனிச்சையாகவே இப்படி நடந்தது. வலிதான் எத்தனை வகையானது... வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. எத்தனை விதமான மனிதர்கள் எத்தனை விதமான வாழ்வுகள்...


மற்ற இரண்டு கதைகளையும் பிறகொரு நாள் எழுதுவேன்.

இந்தக் கதையை இணையத்திலும் வாசிக்கலாம். வாய்ப்பும், ஆர்வமும் இருக்கிறவர்கள் இக்கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதைக்கான இணைப்பு : http://azhiyasudargal.blogspot.in/2010/10/blog-post_3000.html


பொன்.வாசுதேவன்

3 comments:

  1. எம்.வி.வேங்கடராமின் நூல்களை நான் வாசித்திருக்கிறேன். ('வேள்வித்தீ' மறக்க முடியாதது.). அவரது காலம் அப்படி. எழுத்துலக ஜாம்பவான்கள் வாழ்ந்த காலம். அவர்களோடு போட்டியிட்டு நாற்காலி பிடிப்பதென்றால் சாதாரணமா? வலிமையான எழுத்து அவருடையது. நிச்சயம் வலிக்கும் தான்...! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete
  2. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஹார்ட்பீட் தொண்டு நிறுவனம் செ.சொர்ப்பனந்தல் பதிவு எண் : 321/2009 சார்பில் வெளிவரும் இதயத்துடிப்பு செய்திமடலிற்கு தங்கள் படைப்புகளையும், நன்கொடையும் தந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி : editoridhathudippu@gmail.com. தொடர்பு எண் 9940120341, 9524753459, 949703378,

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname