Saturday, May 11, 2013

வலி சூழ்ந்த வாழ்க்கை - அ.எக்பர்ட் சச்சிதானந்தத்தின் ‘நுகம்’ சிறுகதைத் தொகுப்பு


மனித வாழ்க்கை பல்வேறு சம்பவங்களாலும், அதைத் தொடர்ந்து நிகழ்கின்ற உணர்வெழுச்சிகளாலும் கோர்க்கப்பட்டது. சுயமாக அனுபவித்தும், பார்த்தும், கேட்டும் பெறுகிற அனுபவங்களை எழுத்தின் மூலமாக வெளிப்படுத்தி, அந்த உணர்வுகளையும், அனுபவங்களையும் வாசிக்கிறவருக்கு கடத்துதல் என்பதில்தான் எழுத்தின் வெற்றி இருக்கிறது. ஒரு படைப்பை வாசிக்கும் போது நமக்குள்ளாக எழுகின்ற உணர்வுகள்தான் அப்படைப்பின் வெற்றி.

அப்படித் தமிழில் குறைவாக ஆனால் சிறப்பாக எழுதி அதிகம் பேசப்படாத அமைதியான எழுத்தாளுமைகளில் ஒருவர் அ.எக்பர்ட் சச்சிதானந்தம். தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் குறைகளையும், அதில் நிகழும் ஊழல்களையும் குற்றவுணர்ச்சியோடு விமர்சித்து எழுதத் துணிகிறவர்கள் மிகக்குறைவு. அதன் பின்னெழும் எதிர்ப்புகளையும், புறம்பேசுபவர்களையும் சமாளிக்க வேண்டும் என்பதும், நடைமுறை வாழ்க்கையில் புழங்குவதற்கான சாத்தியக் கூறுகளையும் பார்த்துத்தான் எதையும் செய்ய வேண்டியிருக்கிறது என்பதுமே இதற்குக் காரணம்.

அ.எக்பர்ட் சச்சிதானந்தத்தின் கதைகள் எல்லாமே கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்களைப் பற்றியவை. சர்ச்களில் நிர்வாகங்களில் நடக்கின்ற சீர்கேடுகளும், அதையொட்டி எழுகின்ற பிரச்சனைகளும், அதன்பொருட்டு பலிகடாவாக்கப்படுகின்ற விளிம்புநிலை மக்களும்தான் இவரது கதை மாந்தர்கள். சின்னச்சின்ன வார்த்தைகளில் உணர்வுகளைச் சொல்லி, படிக்கின்ற போதே அதை நமக்குள் சரியான முறையில் அந்த வலியை உள்வாங்கிக் கொள்ளச் செய்கின்றன எக்பர்ட்டின் கதைகள். ஒழுங்கு, விசுவாசம், கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் இதெல்லாம் அடித்தட்டு மக்களுக்கான போதனை என்பதாகவே இருந்து விடுவதைக் குறித்துக்  கதைப்போக்கினூடாக நமக்குள்ளே கேள்விகளை எழுப்புகின்றன.

அன்பான சுபாவமுடைய மக்கள், ஆத்திரத்தில் தேவாலய நிர்வாகிகள் மீது மொட்டைக்கடுதாசி எழுதிப்போடுகின்றவர்கள், பாவியானவன் சர்ச்சுக்குத் அன்பளிக்கிற சிலுவையை உடைத்து விட்டு ஓடுகிறவன், சூம்பின காலோடு சர்ச்சுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் தன் மகனுக்கு வேலை கேட்டு மன்றாடும் தாய், ஓடிப்போய் திரும்ப வந்து வேறு கல்யாணம் செய்து கொள்கின்ற பெண், ஊதாங்கோலால் நாத்தனார்கள் இடுப்பு முழுக்க அடித்து வரிவரியாகச் சிவந்தும் தாங்கிக் கொள்கிற பெண், குழந்தையின் அன்புக்காக ஏங்கும் ஓலப்பெட்டி, யாருடைய பிள்ளைகளையோ தன் பிள்ளைகளாக பாவித்து உழைத்து, அவர்களை வளர்த்து ஏமாறும் பிலிப்பு என ஒவ்வொரு கதையிலும் அவர்கள் மொழியிலேயே அவர்களின் வாழ்க்கையைக் கூர்ந்த அவதானிப்புடன் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் வாழ்விலிருந்து எழுதப்படுவதுதான் இலக்கியம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அ.எக்பர்ட் சச்சிதானந்தத்தின் ‘நுகம்’ சிறுகதைத் தொகுப்பு தமிழின் மிக முக்கியமான தொகுப்புகளில் ஒன்று. தமிழினி பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.பொன்.வாசுதேவன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname