Friday, January 1, 2010

சித்திர பாவனை - சிறுகதை

les5 சுசீலா பேசிக்கொண்டிருந்தாள். உடலை உள்ளுக்குள் சுருட்டியிருக்கும் நத்தை வடிவாயிருந்த அவளது தெறித்த விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் யமுனா. சுசியின் உதடுகள் காற்றடிக்கும் திசை யெல்லாம் சாயும் மழைத்தாரையாய் ஓயாமல் வார்த்தைகளை வீசிக் கொண்டேயிருந்தது. பேச்சின்பால் துளியும் கவனமின்றி, கோப்பை விளிம்புகளைக் கவ்வி நிதானமாக, பிரிய பழச்சாறை உறிஞ்சி அருந்துவதான பாவனையில் யமுனா அவளையே பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.

சமீபத்தில் தன்னுடைய தாயின் பிறந்த ஊருக்குச் சென்று வந்த கதையைப் பற்றியும், ஒப்பனையற்ற கிராம வாழ்வை இழந்து நகரத்தில் வசிக்க நேர்ந்திருப்பது குறித்த அலட்டலற்ற புலம்பல்களாய் சுசியின் பேச்சோட்டம் போனது. சமீபகாலமாய் சுசியின் பேச்சில் தன்னையிழந்து லயிக்கத் தொடங்கியிருந்தாள் யமுனா. சுசிக்கும் தன்னைப் போலவே யாருமற்ற ஒரு குடும்பப் பின்னணி  யிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம்.

பேசுவதிலும், பேசுவதைக் கேட்பதிலும்தான் எத்தனையின்பம்.. பேசுவது என்ற ஒன்று இல்லையென்றால் மொழி தோன்றியிருக்காது என்று நினைத்தாள் யமுனா. எல்லோரையும் போலவே யமுனாவிற்கு எப்போதும் இரண்டு முகம் உண்டு. பிடித்ததைச் செய்யும் போது முகக்கரையில் சேரும் சந்தோஷ நுரைகள் கொண்ட முகம். மற்றொன்று, கட்டாயத்திற்காக பிடிக்காத ஒன்றை செய்ய நேர்கையில் நனைந்து இறுகிய துணியைப் போலாகிவிடும் அவள் முகம். இதனாலேயே பல சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது அவளுக்கு.

-0-

les8

பணியின் நிமித்தம் அந்த நகருக்குள் நுழைந்த முதல் தினத்தில் அவளுக்கு ஒருவரையும் தெரியாது. சிறு வயதிலிருந்தே தாய்மையை, அணுக்கத்தை அனுபவித்திருக்காத காரணத்தினால், பெண்மை, தாய்மை போன்ற விஷயங்கள் அவளுக்கு ஒவ்வாத விஷயங்களாகி விட்டது. பராமரிப்பின்றி தானாய் செழித்து வளர்ந்த மரங்களின் வளர்ச்சியையொத்தது அவளுடைய இளமைப்பருவம், கல்விக்காலங்களும். ஆழ்கடலில் தனித்து காற்றின் ஓட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் படகைப் போல திசை குறித்த தீர்மானங்களேதுமின்றி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

புதிய நகரின் பரபரப்பும் அவளுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆண்கள் மட்டுமே பணி புரிந்த அந்த அலுவலகத்தின் முதல் பெண் பணியாளராக அவள் சேர்ந்திருந்தாள். விசித்திர மிருகமொன்றின் கூண்டுக்குள் அடைத்து விட்டதைப்போல் அவளின் சக பணியாளர்கள் சுதந்திரமிழந்து தவித்தனர். உடைகள் குறித்த கவனமேதுமின்றியும், தோற்றம் குறித்த கவலையின்றியும் இதுவரை அசட்டையாக இருந்த அவர்களுக்கு யமுனாவின் வருகையின் பொருட்டு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. அடிக்கடி அவளைப் பார்த்து, அவள் தங்களைப் பார்க்கிறார்களா என உறுதி செய்து கொள்ளத் துவங்கினார்கள். பொதுவாகவே தாங்கள் மென்மையானவர்கள் கனிவானவர்கள் என்று தோற்றமளிக்கும் விதமாக நடந்து கொண்டதும் ஒரு மன ஆறுதலாக இருந்தது யமுனாவிற்கு.

-0-

les3 அன்றன்றைய தேவைக்காக நீரை குடத்திலிட்டு நிரப்பிக் கொண்டு வருவதான அவள் அப்பாவின் அன்பு, அள்ளிப் பருக துளியும் லாயக்கற்றது என்பதை அவள் சிறு வயதிலேயே அறிந்திருந்தாள். அம்மா என்கிற வஸ்து என்னவென்று அவளும் அவரிடம் கேட்டதில்லை. அது குறித்த கவலையேதும் அவருக்கும் இருந்ததில்லை. சிறு வயதில் இரண்டு பிறவியாக தன்னைக் கொண்டு, தன் சோகத்தை மறக்க களிப்பான யமுனாவின் கனவுகளிலே ஆழ்ந்து தன்னை உற்சாகப்படுத்திக் கொள்வாள்.

பள்ளித்தோழி கொடுத்த ஒரு சிறு புத்தகத்தை வாசித்த பின் இப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். அவளுடைய பொழுதுகளை உற்சாகமானதாகவும், உல்லாசிக்க வைப்பதாகவும் ஆக்கிக்கொள்ள அதுவே போதுமானதாக இருந்தது. பெரும்பாலும் எழுத்துக்களுடன் வாசிக்க வேண்டியிருந்த பள்ளிப் புத்தகங்களைப் போலல்லாமல், பக்கங்கள் முழுக்க வண்ணச் சித்திரங்களடங்கிய அப்புத்தகத்தில் எழுத்துக்களின் இடையீடு மிகக்குறைவு என்பதே அவளை ஆசுவாசப் படுத்துவதாயிருந்தது. அச்சித்திரப்புத்தகத்தின் கதையின் நாயகியான சிறுமியின் வழியே யமுனாவின் பிராய வாழ்வின் கிளைகளும் விரியத் தொடங்கியது. வறுமையின் பொருட்டு சோகத்தைப் பொழிந்து கொண்டிருந்த அச்சிறு பெண்ணின் கனவில் தோன்றிய தேவதையொன்று கனவுகளில் அவள் விரும்பியதைப் பெற வரமொன்று அளிக்கிறாள். அச்சிறுமியின் கனவுகளில் தினமொரு சந்தோஷமாய் பல்லாயிரக்கணக்கான உலகங்கள் பூக்கின்றன.

ஒவ்வொரு உலகமும் விவரிக்கப் படாவிட்டாலும், அக்கதைகளின் நூல் விளிம்பைப் பற்றியபடியே யமுனாவின் இரவுலகம் உருவாகத் தொடங்கும். இரவு தளர்ந்து பொழுது விடியும் கணங்கள் எப்போதென்றே தெரியாது. அவ்வளவு மகிழ்ச்சியான நாட்களாயிருந்தது. வழக்கமாக தனியாக அல்லது சில சமயங்களில் வேலைக்கார ஆயாவோடு தூங்கும் பொழுதுகளில், அவளது இரவுகளுக்காகவே காத்திருந்து போர்த்திக் கொள்ளும் அச்சக் கனவுகளும், திடுக்கிட்டு விழித்த பிறகு முன்னிற்கும் தடித்த இருளும் எப்போதும் பயமூட்டியபடியே இருக்கும். சித்திரப்புத்தகத்தின் வாசிப்பிற்குப் பிறகு, இரவுகளை எதிர்பார்த்து கண்களை இறுக மூடி உறங்கச்செல்லும் கணங்களுக்காகவே காத்திருக்கத் தொடங்கினாள் யமுனா. வயதேற, வயதேற பகல் பொழுதுகளிலேயே கண்களைத் திறந்தபடி கனவு காணும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தாள்.

சித்திரக்கதைகளின் நினைவினூடாக எழுகிற தேவதை வரமளித்த கனவுகளில் லயித்து தன்னை ஈடுபடுத்திக் கொண்ட யமுனாவின் வாழ்க்கை ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மலர்த்திக் கொண்டது. படிப்பதும், கனவு காண்பதுமே அவளது முக்கிய வேளைகளாயிருந்தது. பனிக்குளிர் விடியல் பொழுதொன்றில் நதியில் இறங்கியதான உணர்வையனுபவித்து, தானும் ஒரு பெண்ணெண உணர்த்தப்பட்ட சில நாட்களுக்கு அவளுக்குள் இந்தப் பழக்கம் மறைந்திருந்தது. அன்றைய பொழுது அடர் தீற்றலான வெம்மைச் செவ்வானத்தினை நீளவாக்கில் கிழித்து அடிவயிற்றில் சுற்றித்திணித்தது போலிருந்தது அவளுக்கு.

-0-

les6

பணியில் சேர்ந்த கொஞ்ச நாளில் தங்கியிருந்த விடுதியின் அறைப் பங்காளியாக வந்து சேர்ந்த சுசியின் நட்பு கிடைத்து சில வாரங்களே ஆகியிருந்தது. சுசிக்கும் யமுனாவிற்கும் பல விஷயங்களில் ஒத்த கருத்திருந்தது. இதையெல்லாம் விட அவர்களை இணைத்த முக்கியமான ஒற்றைப் புள்ளியொன்று உண்டு. யமுனா அந்த தினத்தை மிக நன்றாக நினைவில் பதியச் செய்திருந்தாள். விடுப்புக்கடிதம் எழுதுவதை மனப்பாடம் செய்கிற பள்ளிச் சிறுமியைப்போல அதை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்வதில், ஒரு சுகமிருந்தது அவளுக்கு.

வார இறுதியின் சனிக்கிழமை பிற்பகல் வேளைகளில் வழக்கமாகச் செல்லும் கடற்கரைப் பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அக்கடற்கரை பகுதி பொதுமக்கள் புழக்கம் மிகக்குறைந்த குப்பத்து குடியிருப்பினை ஒட்டியிருந்தது. நட்சத்திரங்களைப் துகளாக்கி பரப்பியதான மினுமினுக்கும் தோற்றம் தரும், உலர வைக்கப்பட்ட சிறு மீன்களிருக்கும் பகுதிக்கு அருகாமையில், துர்வாசனையின் மணத்தை லேசாக நுகர்ந்தபடியிருக்கக்கூடிய தொலைவில்தான் அவர்களிருவரும் அமர்ந்து பேசுவது வழக்கம்.

வழக்கம் போல இருவருக்கும் பொதுவானதாக வாய்த்திருந்த சின்னஞ்சிறு வயதின் நிராசைகள் குறித்தும், பிரியங்களின் மீதான அவநம்பிக்கை பற்றியும் பேசிக்கொண்டேயிருந்தார்கள். பிரம்மாண்டமாய் தங்கள் முன் படுத்திருந்த கடலிடம் எல்லாவற்றையும் சொல்லி முறையிடுவதில் அவர்களுக்கிருந்த திருப்தி அலாதியானது. ஆண்களை உணர்ந்த கணங்களைக் குறித்த பேச்சை ஆரம்பித்தாள் சுசி. அவளுக்கு அதில் பல அனுபவங்கள் இருந்திருக்கிறது. பேசும் போதெல்லாம், பிரியத்தையும் பிணைப்பையும் எதிர்பார்த்து அணுகி பலமுறை உட்காயங்களோடு விலக நேரிட்ட சம்பவங்கள் அவள் உதடுகளைப் பற்றி தொங்கிய படியேயிருந்தன.

யமுனாவிற்கு அப்படியல்ல. சுயலாபத்திற்கான ஒரு பொருளாகவே ஆண்கள் பெண்களைப் பார்க்கிறார்கள் என்ற உறுதியான கருத்தும், பார்வையும் ஆரம்பத்திலிருந்தே அவளுக்கிருந்தது. சந்தர்ப்பத்தையும், சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதில் ஆண்களுக்கு நிகர் வேறெவருமில்லை என்ற எண்ணவோட்டத்தை வற்புறுத்தி தனக்குள் நீடிக்கச் செய்திருந்தாள். அதன் பொருட்டு ஆண்களின் மீது பிரியமில்லையே தவிர வெறுப்பும் கிடையாது யமுனாவிற்கு.

ஆனால் வானம் போல வாழ்க்கை எல்லோருக்கும் பொதுவானதாக இருந்து விட வில்லையே. சுசிக்கு வேறு விதமாய் பிரியத்தையும், அவ நம்பிக்கையையும் அறியச் செய்திருந்தது. அப்படியான ஒரு பொழுதில் கடற்கரைப் பேச்சில் அவளது பிரியத்தின் மீதான நம்பிக்கையற்றுப் போன ஒரு சம்பவத்தை சொல்லி முடித்த பின் அந்தப் பக்கமாய் சென்ற பூனையொன்றின் மேல் சுசியின் பார்வை திரும்பியது.

நீடித்த மௌனத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தவள் சொன்னாள்

les7

“பூனைகளை எனக்கு ஒருபோதும் பிடிக்காது. கள்ளத்தனமும், போலியான உல்லாசங்களும் பூனைகளைப் போன்ற ஆண்களுக்கு எளிதாக கைகூடுவதன் ரகசியம் இதுதான். பூனையுடலின் மென்தோற்றம் அதன் முடிப்பொதிகளுக்குள் பிறாண்டக் காத்திருக்கும் நகங்களை மறைத்து விடுகிறது. பூனைகளின் பயப்பாவனை ஆண்களிடமும் ஒரு வித்தையாக இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். முற்பிறவியில் சபிக்கப்பட்ட ஆண்கள்தான் பூனைகளாகி உலகெங்கும் திரிந்து கொண்டிருக்கின்றனர்“

கேட்டுக் கொண்டேயிருந்த யமுனாவிற்கு, எழுந்து எதிரே கிடந்த கடலில் சென்று ஆழ முழ்கிக் கொண்டிருப்பது போல ஒரு நிம்மதியான நிலையேற்பட்டது. பால்யத்தின் விளிம்புகளில் வெறித்தனமாக ஆரம்பித்த தேடலின் கயிற்று நுனியைப் பற்றி விட்டதைப் போலுணர்ந்தாள். சுசியை அணைத்து தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். சுசியும் குழைந்து அவளது மடியில் தன்னை கிடத்திக் கொண்டாள். இருவரும் பேசவேயில்லை வெகுநேரம்.

-0-

les2 தாய்மை, தந்தைமைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் கயமைத்தனம் பற்றி சுசிலா இப்போது பேசிக் கொண்டிருக்கிறாள். எதிரே வருவோரையெல்லாம் வெட்டிச் சாய்த்து போர் புரியும் வீரனின் முகபாவத்துடன், நேர்த்தியாக, சலிப்பேற்படுத்தாமல் பேசிக் கொண்டே யிருந்தாள். அவள் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைக் கூர்மை தாங்கவியலாதது போல மின்சாரம் தடைப்பட்டு இருளில் மிதந்தது அறை. கதவு, ஜன்னல்கள் அடைக்கப்பட்டு, காற்று வெளியேற வைக்கப்பட்டிருந்த சிறு சாளரத்தின் வழியே பயந்து பயந்து வெளிச்சம் உள்ளெட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

இருள் வேறு உலகமாக இருந்தது. அங்கு போலிச் சிரிப்பு தேவையில்லை. புன்னகைக்க வேண்டியதில்லை. செயல்கள் மட்டுமே நிகழும். ஒருவிதத்தில் இருள் சௌகரியம்தான். வெளிச்சமேயற்ற உலகம் என்ற ஒன்றிருந்தால் அங்கு குடியேறி விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. இடையில், பயம் போர்த்திய தனது இளமைக்கால இரவுகளின் நினைவிலாழ்ந்தாள் யமுனா. சுயசரிதை எழுதி எல்லாவற்றையும் பதிய வேண்டுமென அற்பமாய்த் தோன்றியது.

அறை முழுவதும் இருள் தேங்கியபடியிருக்க மென்மையாகக் கசிந்து கொண்டிருந்த சுசியின் குரலோசை ஆறுதலைப் பரவவிட்டபடியிருந்தது. தன் நினைவிலிருத்தியிருந்த சுசிலாவின் பெருவிழிகளை மனத்திலிருத்தியபடி இருளில் அவளைப் பார்த்தபடியே பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள் யமுனா. மகிழ்ச்சி வெளியில் மயக்கத்தின் பித்துப் பூக்கள் அவளை வேறோர் உலகிற்குள் உலவ விட்டிருந்தது. அணுக முயன்று தோற்றுப்போன சாளரத்து வெளிச்சம் சற்றே மங்கிக் கொண்டிருந்தது. விரல்களில் பரவசத்தை குவித்து பேசிக்கொண்டிருக்கும் சுசியின் தலையைத் தன் புறத்தில் தாழ்த்தி தன் மடியில் படுக்க வைத்து ஆறுதலாய்த் தலையைக் கோதினாள் யமுனா. கழுத்தறுபட்டு காயத்தின் வேதனை நொடிகளில் படபடத்து, உயிரடங்குதலில் நிம்மதியடையும் ஆட்டுக் குட்டியைப் போல அவள் மடியில் படுத்தபடியே பேசிக் கொண்டிருக்கிறாள் சுசீலா.

000

23 comments:

 1. அருமையான நடை. தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை சீராக... நல்ல கதை, கரு நான் புரிந்து கொண்டதிலும், படங்கள் வேறு விசயத்தை உணர்த்துகின்றது.

  ReplyDelete
 2. அற்புதமான படைப்பு !!!

  இரு உறவுகளிடையே இழையோடும் மென் உணர்வுகளை அழகியலோடு செதுக்கியிருக்கிறீர்கள்.

  மொழிநடை தொய்வில்லாமல் பயணிக்கிறது.வெகுநாட்களுக்கு பிறகு (வலையுலகில்)
  நல்லதொரு வாசிப்பானுபவம் தந்தமைக்கு நன்றி வாசு !!

  ReplyDelete
 3. ம்ம். எனக்கென்னவோ உங்களுடைய பழைய கதை ஒன்றையே திருப்பிப் படிக்கும் உணர்வு. தற்செயலாய் பறிக்கப் பட்ட மலர்? போன்ற தொனியே இங்கும். ஆனாலும் ஏனோ படங்கள் பொருத்தமற்று இருக்கிறது மாதிரியே இருக்கு வாசு.

  --வித்யா

  ReplyDelete
 4. புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. நல்ல நடை, ரொம்பவும் மறைமுகமாக பூடகமாக சொல்லப் பட்டிருக்கும் கதை. நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 6. அவர்களுக்குள் இருக்கும் உறவை மறைமுகமாக சொல்லி இருக்கிறீர்களா வாசு? பிரதியின் வடிவம் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்..

  ReplyDelete
 7. உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் !!!


  வாசகனாய் ஒரு கவிஞன் ,
  பனித்துளி சங்கர்
  http://wwwrasigancom.blogspot.com

  ReplyDelete
 8. //பிடித்ததைச் செய்யும் போது முகக்கரையில் சேரும் சந்தோஷ நுரைகள் கொண்ட முகம். மற்றொன்று, கட்டாயத்திற்காக பிடிக்காத ஒன்றை செய்ய நேர்கையில் நனைந்து இறுகிய துணியைப் போலாகிவிடும் அவள் முகம்//
  என்ன அழகான கற்பனை!!
  எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு. செயற்கையாய் சிரித்து செயற்கையாய் வாழத் தெரிந்தால் வாழ்வு சுலபமாய்ப் போகும். முடிவதில்லையே. வித்தியாசமான கதை.

  ReplyDelete
 9. இந்த மொழியின் பயணம் எனக்கு புதிதான ஒரு பரவசத்தை தருகிறது வாசு.அவர்கள் இடையே நடக்கும் சம்பாஷனைகள் இலக்கிய தரமாக இருப்பது மட்டும் யதார்த்தத்தை தவறவிட்டது போல் உணர்ந்தேன்.கம்பிமேல் நடக்கிற லாவகம் போல் இரு தோழிகளின் மன உணர்வுகளை மிக அற்புதமாக பதிகிறீர்கள்.விசேசம் என்னவெனில் ஒரு ஆணாக இருந்து பதிந்ததுதான்.

  இன்னும் விசாலமாக என் உணர்வு பரவசத்தை பதிய இயலவில்லை என்னால்.அல்லது பதிய வார்த்தைகள் போதாமல் இருக்கு.

  its a diferent,nice journy!

  ReplyDelete
 10. படங்கள் mis-lead பன்னுவதுபோல்தான் தோனுகிறது வாசு.

  ReplyDelete
 11. கத்தி மேல் பயணிக்கும் சாகசவீரனையொத்த மொழிநடை.சற்றும் பிசகிவிடாமல் சொல்ல வந்ததை அற்புதமாக புனைவாக்கியிருக்கிறீர்கள். அதிகம் ரசித்தது ஆழ்ந்து வாசிக்க வைத்த மொழி.வாழ்த்துகள் வாசு :)

  ReplyDelete
 12. முதல் முறை உங்கள் கதை வாசிக்கிறேன். அழகிய நடை. வாக்கியங்கள் பெரும்பாலும் சின்னதாய் இருப்பது அருமை. படங்கள் கதைக்கு சற்று diversion-ஆக தான் உள்ளது. அழகிய நடை நிச்சயம் ஈர்க்கிறது

  ReplyDelete
 13. பூனை.. ஆண் ஒப்புவமைகள் அருமை.. இன்னும் கொஞ்சம் பூடகத்தை குறைத்திருக்கலாமோ..??:))

  ReplyDelete
 14. சித்திரபாவனை அருமையான சிறுகதைங்க. உங்களின் மொழி லாகவத்தினை, காட்சிப் படிமமாக விரியும் உவமையினை, செய்நேர்த்தியை குழந்தையைக் கொஞ்சுவது போல கொஞ்சிக்க்கொண்டிருக்கிறேன்

  ReplyDelete
 15. சென்னை புத்தகக்கண்காட்சி EXCLUSIVE புகைப்படங்கள்

  http://kaveriganesh.blogspot.com

  ReplyDelete
 16. நல்ல நடை. ஆனால், ஏதோ குறைந்தது போல் உள்ளது. கருவா?

  ReplyDelete
 17. தினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

  ReplyDelete
 18. புத்தாண்டு வாழ்த்துக்கள் வாசு! உங்கள் சிறுகதையை படிக்கும் வாய்ப்பு இப்போதான் கிடைச்சுது. இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு இடங்கள். ஒன்று கனவுகள் மூலம் பயணிக்க முடிவது. கனவுகளில் தான் உடல்களை விடுத்து பயணிக்க முடிகிறது. கனவுகள் முடியும் போது மனதில் ஏதாவதொரு பாதிப்பை விட்டுச் செல்லும். அதிலும் யமுனாவுக்கு, நினைக்கும் நேரங்களில் வந்து வரம் தருகிறது, பிறகு முடிவில் உற்சாகத்தையும் தருகிறது. இரண்டாவது இடம் அவர்களுக்குள் நட்பு பிறக்கும் ஒற்றைப் புள்ளி. ஏதோ ஒரு புள்ளியில் அன்பு மலர்கிறது என்பது நிதர்சனம். அறிமுகமான சில நாட்களிலும் வரலாம், அல்லது மனதை பகிர்ந்து கொள்கிற ஏதாவதொரு நொடியிலும் வரலாம். அந்த தருணங்களை அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொள்கிறதும் நிச்சயமாக ஒரு சுகம் தான். நல்லா இருக்குங்க வாசு!

  ReplyDelete
 19. மரபுக்கவிதைகளை படிக்க நேர்கிறபோது, முதல் வாசிப்பில்,அதிலிருக்கும் சந்தம் என் கவனத்தை ஈர்த்துக்கொள்ளும்.பிறகான வாசிப்பிலேயே கவிதை வரிகளுக்குள் பயணிக்க இயலும்.

  அதுபோலவே, உங்களின் மொழி நடையும்.
  உங்கள் மொழிவளம் ஏற்கனவேயுள்ள உங்கள் படைப்புகளின் மூலம் அறிந்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் வியப்பூட்டக்கூடியது.கவித்துவமான மொழி நடை,
  /கழுத்தறுபட்டு காயத்தின் வேதனை நொடிகளில் படபடத்து, உயிரடங்குதலில் நிம்மதியடையும் ஆட்டுக் குட்டியைப் போல /

  போன்ற தனித்துவமான உவமைகள் எல்லாம் சேர்ந்து கதையிலிருந்து முதல் வாசிப்பில் விலகி செல்லவைத்துவிட்டது. அல்லது கதையை இன்னும் எளிமையாக சொல்லியிருந்தால் சாத்தியமாகியிருக்கும்.

  கதையை மறுபடியும் வாசிக்கவேண்டும். மேலான புரிதலுக்காகவும், வாசிப்பின் இன்பத்திற்காகவும்.

  ReplyDelete
 20. //எழுத வருகிறதய்யா உமக்கு.நீரெல்லாம் இலக்கியம் படித்து, எழுத வந்தால் அரைகுறை ஆட்களையெல்லாம் விரட்டி விடலாமய்யா.//

  ReplyDelete
 21. கவித்துவமாய் ஆரம்பித்து.. சீராய் பயணித்து அப்படியே முடிகிறது. கிணற்றுக்குள் கல் எறிவது போன்ற கரு எனினும் தாங்கள் மலர் விழுவது போல மென்மையாக அளித்துள்ளீர்.

  பெரும்பாலோருக்கு ஒவ்வாமை அளிக்கும் வாழ்க்கை முறை எனினும், இல்லை என்று மறுப்பதற்கு இயலாது.

  ReplyDelete
 22. கவித்துவ நடை வாசு. சொல்லாத வார்த்தைகள் கதையை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. படங்கள் காட்சிப்படுத்துவதைப்போல இருந்தது. உவமைகள் ஓவர்டோஸ் போல் ஒரு எண்ணம். கதையாக கலக்கல்!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname