Tuesday, November 24, 2009

ஆயுத எழுத்து ( ‘உயிரோசை’ யில் வெளியான கட்டுரை)

ஆயுத எழுத்து ………… பொன்.வாசுதேவன்

நன்றி : உயிரோசை இணைய இதழ்

பல ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்து வந்த ஆலோசனைகளுக்கும் விவாதங்களுக்கும் பின்னர் பெரும்பான்மையினரான 153 ஐக்கிய நாடுகள் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திற்கான கால அட்டவணை ஏற்படுத்துவதற்கான உறுதியான நம்பிக்கை அளித்துள்ளனர். ஆயுதங்கள் பரிமாற்றத்திற்கான பொது உச்ச நடைமுறைகளுக்கும் இது உறுதியளிப்பதாக உள்ளது. தற்போது உலகளாவிய ஆயுத வர்த்தக ஒப்பந்தம் ஏதும் இல்லாத நிலையில் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. உலகின் பெரும்பான்மை ஆயுத வர்த்தகர்கள் உலகளாவிய ஆயுத ஒப்பந்தத்தை ஏற்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஆயுத வர்த்தகத்தில் முக்கிய நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய குடியரசு,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகளின் இத்திட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்து தங்கள் ஒப்புதலை தெரிவித்துள்ளன.ஐக்கிய நாடுகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், பஹ்ரைன், பெலாரஸ், சீனா,க்யூபா, எகிப்து, ஈரான், குவைத், லிபியா, நிகராகுவா, கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, சூடான், சிரியா, ஐக்கிய அரபு நாடுகள், வெனிசுலா மற்றும் யேமன் ஆகிய 19 நாடுகளும் ஓட்டளிப்பில் பங்கேற்கவில்லை. எனினும் அவர்களும் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வே மட்டுமே இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.

தீர்மானங்களின் மீதான விவாதத்தின்போது, ஆயுத வர்த்தக ஒப்பந்தம் பன்னாட்டு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும், பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்களின்படியும் இருக்க வேண்டுமென இதில் பங்கேற்ற நாடுகள் வலியுறுத்தின.

ஆயுத கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கூட்டணியாக முனைப்புடன் செயல்படும் தன்னார்வ அமைப்புகள் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திற்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளன. உலக ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகளின் வரலாற்று நிகழ்வு என்றும், உலகம் முழுவதும் இந்த ஒப்பந்தத்தை முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும்.மேலும், ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் இறுதி நிலை வரை அனைத்து நாடுகளும் தொடர்ந்து உத்வேகமளிக்க வேண்டியது அவசியம் என்றும் தன்னார்வ குழுக்கள் எச்சரித்துள்ளன. ஒப்பந்தத்தில் நம்பிக்கையற்ற குறைந்த அளவிலான எண்ணிக்கையிலான நாடுகளால் ஆயுத வர்த்தக உடன்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளன.

"ஆயுத வர்த்தகத்தின் விளைவாக பரவலாக  ஏற்படும் உயிரிழப்பு, காயங்கள் மற்றும் மனித உரிமை குற்றங்கள் போன்றவற்றிற்கான பொறுப்புகளை மரபுவழி ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நாடுகளும் ஏற்றாக வேண்டும்" என்கிறார் சிறு ஆயுதங்களுக்கான பன்னாட்டு செயல் கட்டமைப்பின் இயக்குநர் ரெபேக்கா பீட்டர்ஸ். மேலும், "இக்கொடிய ஆயுத வர்த்தகத்தின் மீது கொண்டு வரப்பட்டுள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகளுக்கு உடன்பட முன் வருவதாக அரசுகள் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்கிறார்.

ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் தொடர் கூட்டங்களின் இறுதியான முடிவுகள் 2012ல் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ஆயுத பரிமாற்றத்தை நிறுத்தவும், தொடர்ச்சியாக நிகழும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை தடுக்கவும் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திற்கு பொது ஒழுங்கு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்" என்கிறார் பன்னாட்டு மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஆயுத கட்டுப்பாடு பிரிவின் தலைவரான பிரையன் வுட்."இவ்விதிமுறைகளை ஏற்படுத்துவதன் வாயிலாக நூறாயிரக்கானவர்களின் உயிர்களையும், கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள பன்னாட்டு ஆயுத பரிவர்த்தனை பொருட்டு விளையும் தீங்குகளுக்கு மாறாக ஏற்படும் அமைதி, பாதுகாப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவை குறித்த முக்கிய விவரங்கள் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

ஆயுத புழக்கத்தின் விளைவாக உலகின் ஏழ்மையான பகுதிகளில் ஏற்படும் துன்பங்கள், இறப்பு போன்றவை நெடுங்காலமாக தொடர்ந்து வருவது வருத்ததிற்குரியது. ஆண்டிற்கு நூறாயிரக்கணக்கான மக்கள் ஆயுத வன்முறையின் காரணமாக குற்றவாளிகள் கையில் சிக்கி உயிரிழக்கிறார்கள்.இவ்உரிமை மீறல்களை நிகழ்த்துவதன் வாயிலாக இனஅழிவுகளும், வாழ்வு நிலையும் பெரிதும் பாதிப்புள்ளாகிறது என்று தெரிவிக்கும் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனர் நிறுவனத்தின் அன்னா மெக்டொனால்ட், "ஆயுத வர்த்தகத்தின் மீதான உலகளாவிய தரத்தை செம்மைப்படுத்துவதன் வழியே உலகெங்கும் வாழ்வா, சாவா என்ற நிலையில் இருந்து வரும் மக்களை பாதுகாக்க இயலும்"என்கிறார்.

மனித உரிமை மீறல்களுக்கும், எரிபொருள் தொடர்பான சச்சரவுகளுக்கும்,வறுமைக்கும் காரணியாக இருந்து வருகிற உலகளாவிய மரபுவழி ஆயுதப் பரிவர்த்தனையை நிறுத்த உலகளாவிய ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை பொது ஓழுங்கு விதிகள் அவசியம்.

அனைத்து நாடுகளும் யுத்த தளவாடங்களிலிருந்தோ, இராணுவ வெடிமருந்துச் சாலை மூலமாகவோ நடத்தப்படும் மரபுவழி ஆயுதப் பரிவர்த்தனையை அனுமதிப்பதை பின்வரும் நிலைகளில் முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

மரபுவழி ஆயுத பரிவர்த்தனையானது பன்னாட்டு மனித உரிமை சட்ட மீறல் நிகழ்வுகளுக்கோ அல்லது மனித நேயத்திற்கு புறம்பான செயல்களுக்கு பயன்படுத்த அல்லது பயன் படுத்தக்கூடும் என்ற சந்தேகம் எழும் பட்சத்தில் ஆயுத பரிவர்த்தனை அனுமதிக்கப் படக்கூடாது.

தொடர் வளர்ச்சிக்கு பாதகமான தாக்கத்தையோ, ஊழல் ஒழுங்கீனங்களுக்கு துணைபோகும் என்றோ கருதப்பட்டால் ஆயுதப் பரிவர்த்தனை தடை செய்யப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் கடமைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் அல்லது நடைமுறையில் இருக்கும் ஆயுத ஒப்பந்தங்களுக்கு இடையூறு செய்யும் விதத்திலோ ஆயுதம் தரித்த சச்சரவை மோசமாக்கும் பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட வேண்டும்.

சமகால வன்முறை குற்றங்களுக்கு ஆதரவளிப்பதான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஏற்படும் மரபுவழி ஆயுத பரிவர்த்தனைக்கு அனுமதிக்க கூடாது.

தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்ற சந்தேகத்திற்கிடமான ஆயுத பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடாது.

ஆயுதப் புழக்கத்தின் மீதான கட்டுப்பாடு என்பது முழுமையாக ஆயுதத் தடை விதிப்பது அல்ல. சட்டத்திற்கு புறம்பான குற்ற நிகழ்வுகளுக்கும், மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்துவோரின் கைகளில் ஆயுதங்கள் கிடைக்காமல் செய்ய சட்டமியற்றி ஆயுத பரிவர்த்தனையை ஒழுங்குபடுத்துவதாகும்.நிலச்சுரங்கங்கள் போன்ற சில வகை ஆயுதங்கள் மற்றும் போருக்கு உபயோகப்படுத்தும் ஆயுதங்கள் மீது இக்கட்டுப்பாடு கிடையாது. பன்னாட்டு ஆயுத சட்டத்திற்குட்பட்டு தற்காப்புக்காகவும், சட்ட அமலாக்கத்திற்கும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்துக்கொள்ள தடையேதும் இல்லை.என்றாலும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், குடிமக்கள் நலன் கருதியும் இவ்வகை தற்காப்பு ஆயுத உபயோகத்திற்கான அனுமதி நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு ஆயுத சட்டங்கள் மீறப்படாமல் கட்டுக்குள் வைக்க ஆயுத வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. மனித உரிமை மீறல், மனிதநேயம் ஆகியவற்றின் பன்னாட்டு சட்ட விதிகளின் அடிப்படையில் ஆயுத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. மரபுவழி ஆயுத பரிவர்த்தனையின் மீது செம்மைப் படுத்தப்பட்ட உலகளாவிய பொது விதிகளை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இவ்ஒப்பந்தத்தின்படி உலக நாடுகளில் மனித உரிமை மீறல் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு ஆயுதப் பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்க முடியும்.

Friday, November 20, 2009

பயணங்களின் வழியே கிளைக்கும் சாலைத் திரைமொழி

road movie 1

(இக்கட்டுரையின் சுருக்கமான வடிவம் ‘உன்னதம்‘ நவம்பர் 2009 இதழில் ‘அறிமுகம் - சாலைத் திரைப் படங்கள்‘  என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இப்பதிவில் உள்ள படங்கள் பொதுவானவை. ‘டொரன்ட்டோ பாலஸ்தீன திரைப்பட விழா‘ இலச்சினை மட்டும் பதிவு தொடர்பானது.)

                                                                                                                                   - பொன்.வாசுதேவன்

சாலை வழிப்பயணங்களின் போது அறியக்கிடைக்கும் எழுத்து வடிவ, கேட்கிற வாய்மொழிக் காவியங்களையும் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைமொழி வடிவமான “சாலைத் திரைப்படங்கள்“ (Road Movie) இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஆரம்பித்த ஒன்று. கிரேக்க காவியங்களான ஒடிசி (Odyssey), அனெய்ட் (Aeneid) போன்றவற்றை திரைப்படமாக்குவதை ஒத்தது சாலைத் திரைப்படங்கள்.

அமெரிக்க சினிமாவின் தொடக்க காலங்களில் அறிமுகமான சாலைத் திரைமொழி என்கிற கலை வடிவம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பரவலாக அறியப்பட்டது. அந்த காலகட்டத்தில் புதிதாக பெருகிவந்த தானியங்கி தொழில்நுட்பம் குறித்தும், அமெரிக்க இளைஞர்களின் கலாச்சார ரீதியான வளர்ச்சிகள் குறித்தும் சாலைத் திரைப்படங்கள் பிரதிபலித்தன.

சாலைத் திரைப்படங்களின் நாயகர்கள் திரைக்கதையின் போக்கிற்கேற்ப ஒருவராகவே இல்லாமல் வேறுவேறாக மாறிக்கொண்டும், வளர்ச்சியடைந்து கொண்டே செல்லும். திரைக்கதை மொழியாளர்தான் திரைப்படம் நகர்வதை தீர்மானிப்பவாக இருக்கிற இந்த சாலைத்திரை வடிவம் 1960களில் சிறிது சிறிதான வளர்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்து, பயணங்களினூடே காணக்கிடைக்கிற சகப் பிரச்சனைகள், நிகழ்வுகளை திரைப்படமாக்குவதாக உருப்பெற்றது.

road movie 2 சாலைத் திரைப்படங்களில் திரைக்கதை பொதுவாக நான்கு முனைக்களமாக வடிவமைக்கப்பட்டது. முதலில் கதையின் நாயகன் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு, அவன் மேற்கொள்கிற பயணம், பயணத்தில் ஊடாக அவன் காணும் மக்களின் வாழ்க்கை முறை, பேச்சு, எழுத்துவழி காவியங்கள் பற்றிய அறிமுகம், சிறு கதாபாத்திரங்கள் கதையினுள் கொண்டுவரப்பட்டு இறுதியாக பயணத்தின் முடிவில் கதையின் நாயகன் உணர்ந்தறிகிற வாழ்க்கை கூறப்படுகிறது. இப்பயணம் முடிவில்லாதது. வேறு களம், புதிய மனிதர்கள் என்று தொடர்ந்து நீள்வதற்கான சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியது ‘சாலைத் திரைப்படங்கள்‘

road movie 3 செப்டம்பர் 2009ல் கனடாவில் நடைபெற்ற டொரன்ட்டோ பாலஸ்தீனிய திரைப்பட விழா சாலைத் திரைமொழிக்கு முக்கியத்துவத்துடன் நிகழ்ந்தது. சாலைத் திரைப்படங்களின் வேர்களான பேச்சு மற்றும் எழுத்துவழியே கிளைக்கும் காவியங்களை உள்ளடக்கிய சிறப்பு காட்சியளிப்பாக எட்டு பாகங்களைக்கொண்ட பாலஸ்தீனிய சாலைத் திரைப்படங்கள் குறும்படங்களாக இவ்விழாவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்விற்கென 12 திரைகளில் பன்ஊடக பொருத்தல் ஏற்பாடுகளுடன் எல் பிளாண்டர்ஸ் (Elle Flanders) மற்றும் டமிரா ஸவாட்ஸ்கி (Tamira Sawatzky) ஆகியோரால் தனித்து வடிவமைக்கப்பட்டிருந்தது.

பாலஸ்தீனம் அல்லது யூத மக்களுக்கிடையே பல மணி நேர பயணவெளி களங்களில் நிகழும் கதைகளாக வடிவமைக்கப்பட்ட இந்த சாலை திரைப்படங்கள் நிமிடங்களாக சுருக்கப்பட்டு, அச்சமூகத்தின் நிலையை துல்லியமாக பிரதிபலிக்கும் விதமாக ஆக்கப்பட்டிருந்தது. சமகால பாலஸ்தீனிய அரசியல் சூழல் குறித்த பார்வையை இக்குறும்படங்கள் எளிதாக உணர்ந்தறிய செய்கிறது.

இவ்விழாவில் திரையிடப்பட்ட எட்டு சாலைத்திரைப்படங்கள் பற்றி காணலாம்.

ஓபல் கேடட் (Opal Cadet) - 3 நிமிடங்கள்

road movie 5 பாலஸ்தீனிய உரிமைகளுக்கான வழக்குரைஞராகவும், சமூகம் குறித்த நுண்பார்வையும், பேச்சுத்திறனுள்ள எழுத்தாளருமான ராஜா ஷிஹாதி, பாலஸ்தீன ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதிகளில் இருக்கும் இனரீதியாக தனித்து விடப்பட்ட சாலைகள் குறித்து இஸ்ரேல் ஏற்படுத்தவிருக்கும் சாலைத்திட்டம் பற்றி அறிய வருகிறார். பாலஸ்தீனிய எல்லைப் பகுதிகளை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி, சட்ட ரீதியாகவும் தன்னாளுகைக்கு கொண்டு வந்துவிட செயல்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு ராஜா ஷிஹாதி வாழ்சாட்சியாக இருக்கிறார். யூத மக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமேயான ஜஃபா என்ற சாலையின் ஊடாக ஓபல் கேடட் என்ற சீருந்தில் பயணிக்கும் போது ராஜா ஷிஹாதி நினைவில் விரியும் காட்சிப்பின்புலத்தில் இக்குறும்படம் நிகழ்கிறது.

மித அவசரம் (Slow Emergency) - 3 நிமிடங்கள்

road movie 6 பாலஸ்தீனத்தின் வடகிழக்கு பகுதியான ரமல்லாவிலிருந்து 15 நிமிட பயண தொலைவில் இருக்கும் ஸில்வத் என்ற நகரில் விபத்து வாகன ஓட்டியாக பணி புரிகிறான் யேஹியா. ஸில்வத் நகர் இஸ்ரேலின் வடக்கு ஜெருசலேம் அருகாமைப் பகுதியாகும். செயற்கை சிறுநீரக சிகிச்சைக்காக ஒரு நோயாளியை அழைத்துச் செல்கிற அவனது ஆம்புலன்ஸ், இனரீதியாக தனித்து ஆக்கிரமிக்கப்பட்ட சாலைகளில், குறித்த நேரத்தில் அடைந்துவிடக்கூடிய சாத்தியமற்ற சீரில்லாத வழியில் ரமல்லா மருத்துவமனைக்கு நாற்பது நிமிடங்கள் மிதவேகத்துடன் செல்வதை திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

ஜெரிகோ செல்லும் புதிய-பழைய சாலை (The New-Old Road to Jericho) - 3 நிமி.

மிகப்பழமையான பாலஸ்தீனிய குடியேற்ற நகரங்களில் விளங்கிய ஜெரிகோ, ரமல்லா நகர மக்களுக்கான ‘பாலஸ்தீனிய குளிர் வீடு‘ என வழங்கப்பட்டது. பரபரப்பான ஜெரிகோ நகரின் பழச் சந்தையில் ஹுடோ உடன் ஒரு தினத்தை கழித்த எழுபது வயது முதியவரின் நினைவோடையில் கிறிஸ்டியன் டேபே வரை நீளும் ஜெரிகோவின் பழைய சாலை பற்றிய நினைவுகள் பரிமாறப்படுகிறது.

ஓ கேமின்ஹோ (O Caminho) - 3 நிமிடங்கள்

road movie 7 பிரேசிலின் மேடோ கிரஸ்ஸோ என்ற ஊரிலிருந்து வெகு தொலை உள்ளது பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரம். இவ்விரு நகரங்களிலும் வசித்திருந்த அய்மன் ரமல்லாவிலேயே நிரந்தரமாக வசிக்க எண்ணுகிறான். அவனது முடிவு சரியானதுதானா என்ற குழப்பமும் இருக்கிறது. டாக்ஸி ஓட்டுரான அவனுக்கு பாலஸ்தீனிய தலைமையின் செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. சில சதுர மைல்களிலேயே அவனது டாக்ஸி சவாரி முடிந்து விடுகிறது. ஜெருசலேம் வழியே பெத்லகேம் சவாரி சென்று 20 நிமிட தொலைவில் சென்று வந்து கொண்டிருக்கிறான். ஆனால் பாலஸ்தீனியர்கள் ஜெருசலேம் மற்றும் சுற்று வட்டார சாலை வழிகளில் புழங்க தடையிருப்பதால், 20 நிமிடமே ஆகக்கூடிய பயண நேரம் ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது. ஆக்கிரமிப்பு சாலைப் பிரச்சனைகளைப் பற்றிய கூரிய பார்வையை இத்திரைப்படம் முன் வைக்கிறது.

அல் அல்மேனி (ஜெர்மன்) (Al Almanie – The German) - 3 நிமிடங்கள்

குறைந்து வரும் பாலஸ்தீனத்தின் நீராதாரம் பற்றி க்ளீமன்ஸ் என்ற ஜெர்மன் புவியிலாளர் பார்வையில் எடுக்கப்பட்ட படம். ரமல்லாவிலிருந்து க்வால்கில்யா என்ற இடத்திற்கு பயணம் செய்கிற க்ளீமன்ஸ், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிடம் இழந்த நீர்வளங்களைப் பற்றி கூறுகிறார். படத்தில் இறுதியில் இன ஆக்கிரமிப்பு பகுதியிலிருக்கிற க்வால்கில்யா என்ற இடத்திற்கும் அவர் செல்ல முடியாமல் போகிறது.

டு பிட்டோ (To Biddo) - 3 நிமிடங்கள்

பாலஸ்தீனத்தில் வசிக்கும் அரேபிய ஆசிரியை ஒருவரின் மகிழ்ச்சியான பயணத்தின் போது பாலஸ்தீன எல்லைப் பகுதியில் காண நேரிடும் வாழ்க்கை பற்றிய கதை.

பாதாம் அரும்பு போல் (Like Almond Blossoms) - 3 நிமிடங்கள்

தான் வசித்த ஜெனின் நகரை விட்டு பெருநகரான ரமல்லாவிற்கு குடியேறிய 70 வயதாகும் சோனியா என்னும் பெண்மணி தனது தாயாரை காண மீண்டும் ஜெனின் நகருக்கு செல்லும் பயணமே கதை. தனது பால்யத்தில் ஹிப்பி கலாச்சாரப் பிரியையாக இருந்து 19 வயதில் ஒரு மாணவர் இயக்கத்தில் இருந்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சோனியா, தனது பயணத்தின் போது ஜெனின் செல்லும் பாதையில் உள்ள பெரும் மாற்றங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

எஸ்ரா (Ezra) - 3 நிமிடங்கள்

road movie 8 வரையறுக்கப்பட்ட சுதந்திரங்களுடன் பாலஸ்தீனியர்கள் புழங்கும் பகுதியான ஹெப்ரன், ரமல்லாவிலிருந்து வெகுதொலைவில் உள்ள ஒரு நகரம். ஈராக்கை சேர்ந்த இஸ்ரேலிய யூதரான எஸ்ரா ஆக்கிரமிப்பு செயல்களால் மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்படும் அழிவு குறித்து வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க இயலாது என்கிறார். இஸ்ரேலில் வசித்துக் கொண்டு பாலஸ்தீன விடுதலைக்காக சிறை சென்று போராடும் எஸ்ரா, மார்டின் லூதர் கிங்குடன் ஒப்பிட்டுப் பேசப்படுபவர். இதுபற்றிய தொகுப்பாக இக்குறும்படம் உள்ளது.

000

Tuesday, November 10, 2009

யமுனாவின் மனநோய் - சிறுகதை

 

யமுனாவின் மனநோய் – சிறுகதை ………………………………………. பொன்.வாசுதேவன்

thumbnail.aspx யமுனாவை இந்த வாரத்திற்குள்ளாக நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அறையிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும் படியாக பார்வை எதன் மீதும் பதியவில்லை. யோசனையிலேயே புறக்காட்சிகளை மறந்துவிடுகிற பழக்கம் அவனுக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

யமுனாவைப் பற்றித்தான் நினைவெல்லாம். சமீப காலமாகவே இன்னதென்று உணர முடியாத மாற்றம் அவளிடம் தெரிகிறது. எப்போதும் கவலையும் சோர்வும் சூழ்ந்த முகமாகவே காட்சி தருகிறாள். கல்யாணமான புதிதில் இப்படியில்லை. சிரிப்பும் சந்தோஷமுமாகத்தான் நேரம் கடந்தது. அதிலும், அவள் ஒருவனைக் காதலித்த விஷயத்திருந்து, பேருந்து நெருக்கத்தில் இடுப்பைத் தடவியவனைப் பற்றியெல்லாம் கூட வெளிப்படையாக சொன்னவிதம் அவனை மிகவும் கவர்ந்திருந்தது.

அவனுக்கும் காதலித்த அனுபவங்கள் உண்டு. மகேஸ்வரி, வானதி, கலா மற்றும் சத்யா என நான்கு பேரை, வெவ்வேறு வயதில் வெவ்வேறு சூழ்நிலைகளில் காதலித்திருக்கிறான் என்றாலும், யாரைப் பற்றியும் யமுனாவிடம் சொல்லவில்லை.

‘நீதான் நான் தொட்ட முதல் பெண்‘ என்று முதலிரவன்று ரொம்பவும் சாதாரணமாகச் சொன்னதை அவளும் நம்பி விட்டாள். அவனுக்கு இயல்பாகவே, பொய் சொன்னாலும் பிறர் நம்பி விடும்படி சொல்லக்கூடிய திறன் வாய்த்திருந்தது. மேலும், பெண்மை கலந்த அழகான அவன் முகத்தைப் பார்க்கிற எவருக்குமே ‘இவன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்‘ என்றொரு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

0016 யமுனா தனது காதலைப் பற்றி சொன்னபோது முதலில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. முதலிரவன்றே ‘நான் ஏற்கனவே ஒருவனை காதலித்தேன்‘ என்று சொல்கிற பெண்களை சினிமாவில் மட்டுமே பார்த்துப் பழக்கம். பிறகு இவ்வளவு துணிச்சலா... என்று கோபம் வந்தாலும், அவள் கொஞ்சம் அழகாக வேறு இருந்ததால் கோபத்தையடக்கி ‘இதிலென்ன இருக்கு... பரவாயில்லை‘ என்று சொல்லி சமாளித்தான். கல்யாணமெல்லாம் முடிந்து முதலிரவு வரை வந்து விட்ட பிறகு இனி எதுவும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்தான். ஐந்து மாதங்கள் போனதே தெரியவில்லை. விருந்து, வெளியூர், சினிமா, ஊர் சுற்றல் என பொழுது ஓடியது.

எதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் மார்பு வரை உருவம் தெரிந்தது. ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்...?‘ தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்குள் கேள்வியெழுந்தது. மனதிற்குள் நினைத்திருந்தாலும் பேசியது போல உதடுகள் சப்தமின்றி அசைந்தன.

ஆமாம். யமுனாதான் காரணம். எப்போதும் கலகலப்பாக இருந்த அவள் சில நாட்களாகவே குளிரில் உறைந்த நீராகசெயலற்று, ஜீவனற்று இருப்பதுதான் தன்னையும் பாதித்திருக்கிறது என்று அவன் நினைத்துக் கொண்டான்.

யமுனாவின் மனதில் ஆழ்ந்த உள்ளுணர்விற்கும், புற உலகிற்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதோ என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் தயங்கித் தயங்கி பேசுகிறாள். துணியை அலசிப் பிழிவதைப் போல் தொடர்ச்சியாக வழியும் அவள் பேச்சில் எப்போதுமே அவனுக்கு ஒரு மயக்கம் உண்டு.

இப்போதுகூட, கோயிலுக்குப் போயிருக்கும் அவள் உடன் இல்லாத இந்த நேரத்தின் வெறுமை மனதை கனக்கச் செய்கிறது. வெளியே பார்த்தான்.

0034 வெட்ட வெளியில் வட்டமிட்டது போன்ற வடிவத்தில் யாருமே விளையாடாமல் வெறுமையாய் காட்சியளித்தது தூரத்து மைதானம். சுற்றுச்சுவரைத் தாண்டி மைதானத்திற்குள் எட்டிப் பார்ப்பது போல் வளைந்து நின்றிருந்தது ஒரு தென்னை மரம். தென்னங்கீற்றின் இடைவெளிகளுக் குள்ளிருந்து கசிந்த சூரிய ஒளி கண் கூசச் செய்தது.

யமுனாவிற்கும் இயற்கையை ரசிப்பது ரொம்பப் பிடிக்கும். அவனைப் போலவே படிப்பது, எழுதுவது, வரைவது என எல்லாவற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அவனுக்குத் தெரியாமல் பத்திரிகைக்கு அனுப்பிய அவளது கவிதையொன்று கூட பிரசுரமாகியிருந்தது. நேர்த்தியான கவிதை. அவனுக்கு கூடஅது மாதிரியான நுட்பம் கைவரப்பெறவில்லை.

சொல்லாமல் கவிதையை பிரசுரத்திற்கு அனுப்பியதில் அவனுக்கு வருத்தம்தான் என்றாலும், நண்பர்களிடையே தன் மனைவியின் கவிதையைப் பற்றி சிலாகித்துப் பேசினான், நண்பர்கள் அனைவருமே அவளது கவிதையைப் பற்றி, அதில் தேங்கிக்கிடந்த அழகியல் உணர்வுகளை உன்னதங்களாய்ப் புகழ்ந்தனர். அவனுக்கும் பெருமையாக இருந்தது.

குவிந்த நிழலொன்று அறைக்குள் நீண்டது. நிமிர்ந்து பார்த்தான். யமுனாதான். கதவைத் திறந்த சப்தம் கூட எழவில்லை.

“வா... யமுனா, கோவில்ல நிறைய கூட்டமா...?“

“இல்லே, குறைச்சலாதான் இருந்தது. இந்தாங்க“

0026 உள்ளங்கையில் வைத்திருந்த திருநீற்றையும் குங்குமத்தையும் கலந்து நீட்டினாள். திருநீற்றுடன் கலந்து இயல்பான ஆழ்ந்த சிகப்பு நிறத்தை இழந்திருந்தது குங்குமம். அதையே சிறிது நேரம் பார்த்தான். பிறகு விரலால் தொட்டு உதிர்த் நெற்றியிலும் கழுத்திலும் தடவினான். கைகளில் மீதமிருந்ததை அவன் நெஞ்சிலும் கைகளிலும் தடவினாள் யமுனா. எப்போதும் அவள் இப்படிச் செய்வது வழக்கம். ஒருமுறை காரணம் கேட்ட போது ‘கை, கால்களை நல்லா வைப்பா... கடவுளே‘ என்று சொல்லி அவள் அம்மா சிறுவயதிலிருந்தே தடவி விட்டு வந்ததால் தனக்கும் அதே பழக்கமாகி விட்டது என்று சொன்னாள்.

“ஏன் இப்போதெல்லாம் சரியா பேசறதேயில்ல“

“நீங்கதான எப்பவும் அமைதியா இருக்கீங்க. என் மேல ஏதாவது கோபமிருந்தா சொல்லணும்“

அவனுக்கு சோர்வாக இருந்தது. என்ன இவள்... ஏன் ஒரு மாதிரியா இருக்கேன்னு கேட்டா நான் கோபமாக இருப்பதாக சொல்கிறாளே... சிறிது நேரம் பேச்சேதுமின்றி கழிந்தது.

“நமக்குள்ள ஏதோ ஒரு இடைவெளி ஏற்பட்டுடுச்சுன்னுநினைக்கிறேன். உன்னோட மாறுதலுக்கு அதுதான் காரணமா இருக்கணும். நானே உன்னை மனநல மருத்துவரிடம் அழைச்சுட்டு போகலாமான்னு யோசிச்சுகிட்டிருந்தேன்“ மென்மையாக அதேசமயம் அழுத்தமான முடிவாகச் சொன்னான் அவன்.

யமுனா பதிலேதும் சொல்லவில்லை. இருவருக்கிடையேயான நெருக்கத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்பது போல அமைதியாக இருந்தாள். பிறகு வழக்கம்போல தனது ஆழ்ந்த பார்வையை அவன் மேல் நிறைத்து, “சரி போகலாம், அதுகூட நல்லதாகத்தான் படுகிறது“ என்றாள்.

கொஞ்ச நேரம் கழித்து “என் பிஃரண்டோட கணவர் கூட சைக்ரியாட்ரிஸ்ட்தான். நான் வேணும்னா அவளுக்கு போன் பண்ணி நாளைககு வர்றதா சொல்லட்டுமா“ அனுமதியை எதிர்பார்க்கிற பார்வையோடு கேட்டாள் அவள்.

“சரி போன் பண்ணி சொல்லிடு. காலையில பத்து மணிக்கு

138276 இதுவரை தன்னை அழுத்திக் கொண்டிருந்த உணர்வுகளின் பாரம் குறைந்தது போல இருந்தது அவனுக்கு. இரவு படுத்த பின்னும் அவனுக்கு யோசனையாகவே இருந்தது. மனநல மருத்துவரிடம் போவதாக முடிவாகி விட்டது. ஆனால் அவரிடம் சென்றும் பலனேதும் இல்லையென்றால்... தூக்கமே வரவில்லை. யமுனாவை திரும்பிப் பார்த்தான்.

கால்களை மடக்கி பின்புறத்தோடு லேசாக அழுந்தியவண்ணம் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நிரம்பி வழியத்தயாரான வெண்ணை போல அவளது இடுப்புச் சதை சேலை விலகலில் புலப்பட்டது. பார்ப்பதற்குக் கிளர்ச்சியூட்டிய அக்காட்சி அவனது பாலுணர்வைத் தூண்டியது. பெரும்பாலும் இதுபோன்ற சமயங்களில் அவள் விழித்திருந்தால் மட்டுமே மேற்கொண்டு அவனது அசைவுகள் செயல்படும். இப்போது அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அதுவுமில்லாமல் மனதளவில் சந்தோஷமான நிலையில் அவள் இல்லாததும் அவனை யோசிக்கச் செய்தது.

இரவு கனவில் – தென்னை மட்டையொன்றை தலைகீழாகத் திருப்பி கீற்றுகளை கத்தியால்உதிர்த்துக் கொண்டிருந்தான் யாரோ ஒருவன். கவனச் சிதறலில் மட்டையைப் பிடித்திருந்த ஒரு கையின் ஐந்து விரல்களும் துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்தது. ரத்தம் வழியத் துடித்து முகத்தருகே கையை கொண்டு சென்ற போதுதான் கவனித்தான் அவனது முகம் போல இருந்தததை. அவன்தான் அது. அதற்குள் விழிப்பு வந்து விட்டது. இருளில் கடிகாரம் இருந்த திசைநோக்கித் திரும்பினான். மணி மூன்றரை காட்டியது.

இரவு சரியாக தூக்கமில்லாததால் காலையில் எழுந்ததும் கண்கள் எரிச்சலாக இருந்தது. யமுனா சமைப்பதற்கு அடையாளமாக தாளிப்பு வாசனை படுக்கை அறையெங்கும் பரவியிருந்தது. குளித்துவிட்டு வந்ததும்., உணவு மேசையில் உணவைத் தயாராக எடுத்து வைத்திருந்தாள் யமுனா. எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவது வழக்கம். யமுனாவும் வந்து அமர்ந்தாள்.

“சாப்பிட்டு பத்து மணிக்கு மேல டாக்டர் கிட்டே போகலாமா..?“

“போன் பண்ணி சொல்லியிருக்கேன். பதினொரு மணிக்கு வரச் சொன்னார்“

465921 ஆட்டோ பிடித்து அரை மணி நேரம் முன்பாகவே போய்விட்டோம். அவர்களுக்கு முன்பாகவே ஒருவர் கிளினிக் வெளியே அமர்ந்திருந்தார். வழக்கமாக கிளினிக்களில் காணப்படும் டோக்கன் தரகிற அட்டெண்டர் யாரும் இல்லை. வெளியே அமர்ந்திருப்பவரும் டாக்டரைப் பார்க்க வந்தவராகத்தான் இருக்கும். அவனும் யமுனாவும் உள்ளே நுழைந்தார்கள். ஏற்கனவே அமர்ந்திருந்தவர் திரும்பி யமுனாவைப் பார்த்தார். அவள் மீதேறிய பார்வை அத்தோடு இறங்கவே இல்லை. அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவள் மட்டும்தான் அந்த அறைக்குள் நுழைந்த்து போல, பெயரளவுக்கு கூட அவன் மேல் பார்வையைத் திருப்பவில்லை அவர். அவரது பிரச்சனை பெண்களைப் பற்றியதாகத்தான் இருக்குமென்று நினைத்துக் கொண்டான் அவன்.

அமர்ந்த சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து வயதான ஒருவர் வெளியே வந்தார். இவருக்கு சைக்ரியாட்ரிஸ்ட்டை பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கும் என்று யோசித்துப் பார்த்தான் அவன்.

தலையைக் கவிழ்ந்து கண்களை மூடிய படியிருந்தாள் யமுனா. எதுவும் பேச வில்லை.

மணியொலி கேட்டது. எதிரே அமர்ந்திருப்பவர் அடுத்து உள்ளே போவார் என்று நினைத்தான் அவன். அவர் யமுனா மேலிருந்த பார்வையை இன்னும் நகர்த்தவில்லை. மறுபடியும் மணியொலி கேட்டது. அவர் போவதாக தெரியவில்லை. யமுனாவும் அவனும் எழுந்து உள்ளே சென்றார்கள். கூடவே அவர் பார்வையும் தொடர்ந்தது.

3121827660_0f13163c58_m நீளமான அல்லது குறுந்தாடியுடன் கருமை சூழ்ந்த விழிகள் உள்ளிடுங்கியிருக்கும் மனநல மருத்துவரை கற்பனை செய்திருந்த அவனுக்கு உள்ளே நுழைந்ததும், விற்பனை பிரதிநிதி போன்று பளிச்சென்று மருத்துவர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. சிரித்த முகத்தோடு அமரச் சொன்னார்.

அவன் யமுனாவைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும்,“அதெல்லாம் தேவையில்லை. உங்க இரண்டு பேரோட பேசினால் மட்டும் போதும். பிரச்சனை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்“ என்றார் மருத்துவர்.

அவனுக்கு நம்பிக்கையேற்படவில்லை. எப்படி பேசுவதை மட்டுமே கவனித்து பிரச்சனையை உணர முடியும். யமுனாவைப் பற்றி எதுவும் சொல்லவிடாமல் செய்தது அவனுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது.

தன்னிடம் கேட்கப்பட்டதெற்கெல்லாம் உணர்ச்சிகளின் உந்துதல் ஏதுமின்றி கவனமாக பதில் பேசினான் அவன். யமுனாவும் அவர் கேட்டதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளிடம்தான் மருத்துவர் நிறையப் பேசினார். டாக்டரின் இந்தச் செயல் அவனுக்குள் கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. எப்படியும் பிரச்சனையைத் தீர்த்து விடுவார். அவனுக்கு வேண்டியதெல்லாம் பழைய கலகலப்பான யமுனா. அரை மணி நேரத்திற்கும் மேலாக இருவரிடமும் பேசினார் மருத்துவர்.

‘நன்றி‘ சொல்லிவிட்டு மருந்துச் சீட்டில் ஏதோ எழுதத் தொடங்கினார். மனநல மருத்துவத்திற்கு கூட மருந்துகள் சாப்பிட வேண்டியுள்ளது பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது முகமாற்றத்தை உணர்ந்தவராக “பொதுவான மருந்துகள்தான்“ என்றார் மருத்துவர்.

3599012355_a36fefd5ce_m பணம் செலுத்தி மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு விடை பெற்று வெளியே வந்தார்கள். வெளியே அமர்ந்திருந்தவர் இன்னும் அங்கேயே இருந்தார். மறுபடியும் அவர் பார்வை யமுனாவை மொய்க்கத் தொடங்கியது. வாசலை விட்டு இறங்கும் போது மணியொலி கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். அவர் உள்ளே போகாமல் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு குணமாகும் வாய்ப்பே இல்லை என்று தோன்றியது.

கிளினிக்கிற்கு எதிரே மருந்து கடை தென்பட்டது. யமுனாவைப் பார்த்து “நீ இப்படியே ஓரமாக நில். நான் மருந்து வாங்கி வரேன்“ என்று சொல்லிவிட்டு சாலையைக் கடந்து சென்றான்.

மருந்துகளை வாங்கிவிட்டு பணம் கொடுத்ததும் மருந்து சீட்டை பார்த்து மருந்துகள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு சீட்டின் மேலே பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

மருந்துச் சீட்டின் மேலே ‘திரு.சுந்தரம்‘ என்று அவன் பெயர் எழுதப்பட்டிருந்தது.

000

Friday, November 6, 2009

ஆண் ஏன் சம்பாதிக்க வேண்டும்...?


பொருளாதாரம் என்பதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம், இருத்தலுக்கு படும் அவஸ்தைகள், பணம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு முக்கியமானது இப்படி பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ணோ, பெண்ணோ வெற்றிகரமான, நிம்மதியான வாழ்க்கையை ஏன் நடத்த வேண்டும்? வாழ்வாதாரத்திற்கு அல்லல்பட்டு துயருற்று ஏன் பணத்தைத் தேடியலைய வேண்டும்? வாழ்வில் பணம் முக்கியமா.. நிம்மதி முக்கியமா.. பணத்தினால் நாம் தேடும் நிம்மதி கிடைத்து விடுகிறதா என்ற கேள்விகளை எழுப்பிய படம் Pursuit of Happiness.

னது குடும்ப சேமிப்புகளை முதலீடாகக் கொண்டு ‘எலும்புகளின் அடர்திறன் வருடி‘ (ஸ்கேனர்) மருத்துவ உபகரண விற்பனை பணி செய்து வருகிறான் கிறிஸ் கார்டனர் (வில் ஸ்மித்). எக்ஸ்ரே கருவியை விட அதிக விலை என்பதால் அதற்கு அதிக வரவேற்பில்லை. பொருளாதார ரீதியாக திருப்திகரமான வாழ்க்கையை தர இயலாத காரணத்தால் அவனை விட்டுப் பிரிந்து நியூயார்க் சென்று விடுகிறாள் மனைவி லிண்டா (டான்டி நியூட்டன்). ஐந்து வயது மகனான கிறிஸ்டோபர் (ஜேடன் ஸ்மித்) உடன் சான் பிரான்சிஸ்கோவில் வாழ்வைத் தொடரும் கிறிஸ் எதிர் கொள்ளும் துயரமான நிகழ்வுகளை பின்னணியாக கொண்ட படம்.

பொருளாதார ஸ்திரத்தன்மை எந்த அளவிற்கு வாழ்வின் சுகதுக்கங்களை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது என்பதை மிக தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விற்பனையாளனாக, கிறிஸ் சந்திக்கும் அவநம்பிக்கை, தோல்விகள், மனைவியுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, விரக்தியின்றி, விடாமுயற்சியுடன் எப்படி வெற்றி கொண்டான் என்பதே கதையின் மையக்கரு. கதையின் முக்கிய பாத்திரங்கள் கிறிஸ் மற்றும் அவனது மகன் இருவர் மட்டுமே.

ன் மருத்துவ உபகரண தொழிலின் எதிர்காலம் மோசமாகி விட்ட நிலையில், மனைவி பிரிந்து சென்று விட, வீடை இழந்து வசிக்க இடமற்று, மகனுடன் தங்க இடம் தேடி அலையும் கிறிஸ், மகனிடம் அடிக்கடி ‘நீ என்னை நம்புகிறாயா..? நம்பு‘ என்கிறான். ஜுனியர் கிறிஸ் கூரிய பார்வையுடன் தன் வயதுக்கே உரிய கேள்விகளை கேட்டாலும், அவை கிறிஸ் மனதுள் ஊடுருவித் துளைக்கின்றன. எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில், மகனின் நம்பிக்கையை பொய்யாக்காமல் சிறு சிறு சந்தோஷங்களை வாய்க்கச் செய்கிறான் கிறிஸ். படம் நெடுக கிறிஸ் செல்லுமிடமெல்லாம் அவனது மகனும் ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்புடன் உடன் சுற்றி வருகிறான்.

ங்க இடமற்று, கையில் பணமின்றி, மகனிடம் தான் வைத்திருக்கும் மருத்துவ உபகரணம் ஒரு ‘கால இயந்திரம்‘ என்று கூறி... ‘டைனோசர் உலகை நாம் இப்போது காண்கிறோம்‘ என இரயில் நிலைய கழிப்பறைக்குள் மகனை உறங்க வைத்து, கண்ணீர் வழிய கிறிஸ் அமர்ந்திருக்கும் காட்சி உணர்த்துவது சொற்களில் அடங்காதது.

ருத்துவ உபகரண தொழில் செய்துகொண்டே, பங்கு விற்பனை முகவராக முயலும் கிறிஸ், அதற்காக ஊதியம் ஏதுமின்றி ஆறு மாத பயிற்சியில் சேர்கிறான். இருக்கின்ற ஒரு காலியிடத்திற்கு இருபது பேர் பயிற்சி பெறுகின்றனர். தன்னிடமிருக்கும் கடைசி ‘ஸ்கேனர்‘ விற்பனையாவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது, அதை வாங்கும் மருத்துவர் முன் செயல்படாமல் போகிறது. ‘சிறு பிரச்சனைதான், சரி செய்து கொண்டு வருகிறேன்‘ என அவகாசம் கேட்டு செல்கிறான் கிறிஸ். ஸ்கேனரை பரிசோதனை செய்ததில், அதன் ‘வருடல் விளக்கு‘ செயலிழந்திருக்கிறது. அதை மாற்றி புதுப்பிக்கபணமின்றி, இரத்தம் கொடுத்து பணம் பெற்று, விளக்கினை மாற்றி பின்னர் விற்றும் விடுகிறான். கையில் கிடைத்த பணம் செலவாகி மறுபடியும், வருமானம் ஏதுமின்றி சிரமத்துடன் வாழ்க்கை நகர்கிறது.

வாழ்வில் வெற்றி பெறும் பெரிய கனவுகளுடன் தன் முயற்சிகளில் சிறிதும் தளராமல், உள்ளுக்குள் தோய்ந்திருக்கும் சோகத்தை சந்திப்பவர்களிடம் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் வலம் வருகிறான். பயிற்சியின் நிறைவில் பங்கு முகவராக பணி கிடைத்து விடுகிறது. அதன் பிறகு எல்லாமே தலைகீழ், கிறிஸ்க்கு வாய்ப்புகளும் வசதியும் குவிகிறது என்பதாக படம் நிறைவடைகிறது.

ன் கதையை தானே சொல்லிச் செல்லும் உத்தியில் நீளும் படம் நெடுக வில் ஸ்மித்தின் இயல்பான முகபாவங்கள் திரைப்படம் என்ற உணர்வையழித்து, யாருடைய வாழ்க்கையையோ நேரில் காண்கிறோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. மகனாக வரும் ஜேடன் ஸ்மித் மிக அருமையான உணர்வு பெருக்கினை நமக்களிக்கிறான்.

1981-களில் ‘கிறிஸ் கார்டனர்‘ என்பவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கோர்த்து ‘Memoir’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதினார். ஒரு சாதாரண விற்பனையாளராக தனது வாழ்வை துவங்கி அதில் தோல்வியுற்று, பின்னர் பங்கு முகவராக தொழில் புரிந்து கோடீஸ்வரரான கிறிஸ் கார்டனரின் உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது இப்படம்.

டுத்தர வர்க்கத்து ஆண்களின் பொருளீட்டல் சிரமங்களையும், அவனுள் புதைந்திருக்கும் தந்தைமை உணர்வின் உள்ளார்ந்த வெளிப்பாடாகவும் இப்படம் சிறப்பாக உள்ளது. குழந்தைகளுடன் பார்க்க தகுதியான படம்.


ஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளுக்கு பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது இப்படம். வில் ஸ்மித் நடித்து தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘Seven Pounds’ என்ற படத்தையும் ‘கேப்ரியேல் முசினோ‘ இயக்கியுள்ளார்.


திரைப்பட இரசனை கொண்டவர்கள் பொதுவாக யோசிக்கும் ‘ஏன் இது போன்ற திரைப்படங்கள் நம் மொழியில் எடுக்கப்படுவதில்லை‘ என்ற கேள்வியை இப்படமும் நமக்குள் ஆழ ஏற்படுத்துகிறது.

THE PURSUIT OF HAPPYNESS

இயக்குநர் : கேப்ரியேல் முசினோ

வெளியான வருடம் : டிசம்பர் 2006


Thursday, November 5, 2009

இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்களா…?

images (5) சமீபத்தில் மதுரையில் நடந்த ‘உயிர்மை புத்தக வெளியீட்டு விழா மற்றும் உயிரோசை இணைய இதழின் ஓராண்டு நிறைவு விழா‘ நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அங்கு இணைய எழுத்துக்களைப் பற்றி பேசும் போது பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. சாருநிவேதா தான் இணைய எழுத்துக்களையே வாசிப்பதில்லை என்றும், இணையத்தில் வெறும் குப்பைகள்தான் எழுத்தாக்கப்படுவதாகவும், இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் அல்ல என்றும் தனது கருத்தை கூறினார். எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில் இதற்கு நேரெதிர் கருத்தை முன் வைத்தார். இணைய எழுத்தில் பலர் நன்றாக எழுதுவதாகவும், அவர் தொடர்ந்து பல நல்ல பதிவுகளை வாசித்து வருவதாகவும் கூறினார். இரு வேறு பல தளங்களில் பதியப்பட்ட இந்த கருத்துக்கள் யோசிக்க வேண்டியவை.

எழுத்தார்வம் உள்ளவர்கள் எல்லோருமே எழுதுகிறார்கள். அச்சு ஊடகமானாலும், இணைய எழுத்து என்றாலும் யார் எழுதுவது சரி ? எது நல்ல எழுத்து என்பதை தீர்மானிப்பது யார் ? வேறு யாருமல்ல… வாசிப்பவர்கள்தான். ஒருவர் எழுதுவதை வாசிக்கும் நபர்தான் அதை நல்ல எழுத்தா, ரசனையானதா என்பதை தீர்மானிக்கிறார்,

ஆக ஒரு படைப்பின் தரத்தை தீர்மானம் செய்வது வாசகனின் மனம்தான். வாசிப்பதற்கு முன்பே இவர் இப்படித்தான் எழுதுவார் என்ற முற்சாய்வு மனோநிலையுடன் ஒரு படைப்பை அணுகும்போது, படைப்பின் தரம் குறித்து முன்கூட்டியே தீர்மானித்து பிரதி அணுகப்படுகிறது. ஒரு படைப்பை பணம் கொடுத்து வாங்கி வாசிக்க எண்ணுபவர்கள் அதை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே வாங்குகிறார்கள். அல்லது குறைந்தபட்சம், இந்த எழுத்தாளர் நன்றாக எழுதியிருப்பார் என்ற முந்தைய வாசிப்பு அனுபவத்தை வைத்து முடிவு செய்கிறார்.

ஆனால், இணையத்தில் வாசிப்பிற்கும், நிராகரிப்பிற்கும் பெரிய ஊடக சுதந்திரம் இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கப்படும் திரைப்படங்களை நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று சொல்லி கருத்து ஏற்படுத்துவது எளிதாக உள்ளது. அவர் செய்தது சரி, இல்லை இவர் செய்ததுதான் சரி என்று காத்திரமான உரையாடல்களையும் அதையொட்டிய கருத்து முற்சாய்வு ஏற்படுத்துவதும் மிக எளிதாக இருக்கிறது. இது குழு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது.

images (6) சரி, இணையத்தில் எழுதுபவர்களை எழுத்தாளர்கள் என்று சொல்லலாமா...? நிச்சயம் சொல்லலாம். காரணம், எழுதுபவர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள்தானே… எது தகுதியான எழுத்து, எது மொக்கையான எழுத்து என்பதையெல்லாம் வாசிப்பவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும். காலம்தான் படைப்பின் தகுதியையும் தகுதியின்மையையும் தீர்மானம் செய்கிறது. லட்சக்கணக்கான ஆட்கள் எழுதுகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் வாசிக்கிறார்கள். எழுத்தும் வாசிப்பும் ஒரு இயக்கம். அது தொடர்ந்து கொண்டேயிருக்கும். நான் எழுதினாலும் எழுதாவிட்டாலும் வேறு யாராவது எழுதிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அதை வாசிக்கவும் மக்கள் இருக்கத்தான் போகிறார்கள். எனவே இணையத்தில் எழுதுபவர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

தற்போது இணையத்தில் எழுதுபவர்களை பிற ஊடகங்களும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இணைய பிரதிகளை உருவாக்குபவர்களை பொறுத்தவரையில் இது வளர்ச்சிக்கான அடுத்த கட்டம். ஒரு படைப்பை வேறு எங்கும் தேடியலையாமல் தன்னறையிலோ அலுவலகத்திலோ வாசிக்க முடிகிற கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால் இணைய எழுத்தாளர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.

இணைய எழுத்தாளர்கள் ஒன்றுகூடி பேசுவது இணைய எழுத்தின் வளர்ச்சியினை அதிகரிக்கும். மேலும், மனங்களின் சந்திப்பு (Meeting of Minds) நிகழும் போது ஒருமித்த கருத்து ஏற்பட்டு ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் ஏற்படலாம். இதற்கு பதிவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சந்திப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட வேண்டும்.

வழக்கமாக திறந்த வெளியில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த இணைய எழுத்தாளர்கள் சந்திப்பு ஒரு முயற்சியாக அரங்கத்தினுள் நடத்தப்பட உள்ளது. இந்த சந்திப்பு ‘நமக்கு நாமே‘ நடத்திக் கொள்வது என்பதால் இதில் குழுவோ, நிர்வாகிகளோ கிடையாது. அனைவரும் ஒருங்கிணைப்பாளர்கள்தான்.

இந்நிகழ்வு நடத்தப்பட இருக்கும் இடமான டிஸ்கவரி புத்தக மாளிகை புதிதாக திறக்கப்பட்டுள்ள புத்தகக்கடை. இங்கு அனைத்து பதிப்பக புத்தகங்களும் கிடைக்கிறது. இணைய எழுத்தாளர்களுக்கு புத்தக விலையில் கழிவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் இதன் பொறுப்பாளர் நண்பர் வேடியப்பன்.

இணைய எழுத்தாளர்கள் சந்திப்பு

இடம் : DISCOVERY BOOK PALACE No. 6. Mahaveer Complex, 1st Floor, Munusamy salai, West K.K. Nagar, Chennai-78. Ph; 65157525 (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)

நாள் : 7.11.2009 மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை.

திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களை நம்முடன் பகிர இசைந்திருக்கிறார்.

நம்முடைய கலந்துரையாடல் நிகழ்வும் இருக்கிறது.

புதிய, பழைய என்றில்லாமல் இணைய எழுத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்

பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே..

- பொன்.வாசுதேவன் (பேச : 999 454 1010)

இந்த கட்டுரை “உலகத்தமிழ் ஊடகம்“ என்ற வலைக்குழுமத்தில் எழுதப்பட்டது.

தொடர்புகளுக்கு :
பாலபாரதி : 9940203132
கேபிள் சங்கர் : 9840332666
தண்டோரா : 9340089989
நர்சிம் : 9841888663
முரளிகண்ணன் : 9444884964

Comments system

Disqus Shortname