Friday, November 20, 2009

பயணங்களின் வழியே கிளைக்கும் சாலைத் திரைமொழி

road movie 1

(இக்கட்டுரையின் சுருக்கமான வடிவம் ‘உன்னதம்‘ நவம்பர் 2009 இதழில் ‘அறிமுகம் - சாலைத் திரைப் படங்கள்‘  என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இப்பதிவில் உள்ள படங்கள் பொதுவானவை. ‘டொரன்ட்டோ பாலஸ்தீன திரைப்பட விழா‘ இலச்சினை மட்டும் பதிவு தொடர்பானது.)

                                                                                                                                   - பொன்.வாசுதேவன்

சாலை வழிப்பயணங்களின் போது அறியக்கிடைக்கும் எழுத்து வடிவ, கேட்கிற வாய்மொழிக் காவியங்களையும் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைமொழி வடிவமான “சாலைத் திரைப்படங்கள்“ (Road Movie) இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஆரம்பித்த ஒன்று. கிரேக்க காவியங்களான ஒடிசி (Odyssey), அனெய்ட் (Aeneid) போன்றவற்றை திரைப்படமாக்குவதை ஒத்தது சாலைத் திரைப்படங்கள்.

அமெரிக்க சினிமாவின் தொடக்க காலங்களில் அறிமுகமான சாலைத் திரைமொழி என்கிற கலை வடிவம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பரவலாக அறியப்பட்டது. அந்த காலகட்டத்தில் புதிதாக பெருகிவந்த தானியங்கி தொழில்நுட்பம் குறித்தும், அமெரிக்க இளைஞர்களின் கலாச்சார ரீதியான வளர்ச்சிகள் குறித்தும் சாலைத் திரைப்படங்கள் பிரதிபலித்தன.

சாலைத் திரைப்படங்களின் நாயகர்கள் திரைக்கதையின் போக்கிற்கேற்ப ஒருவராகவே இல்லாமல் வேறுவேறாக மாறிக்கொண்டும், வளர்ச்சியடைந்து கொண்டே செல்லும். திரைக்கதை மொழியாளர்தான் திரைப்படம் நகர்வதை தீர்மானிப்பவாக இருக்கிற இந்த சாலைத்திரை வடிவம் 1960களில் சிறிது சிறிதான வளர்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்து, பயணங்களினூடே காணக்கிடைக்கிற சகப் பிரச்சனைகள், நிகழ்வுகளை திரைப்படமாக்குவதாக உருப்பெற்றது.

road movie 2 சாலைத் திரைப்படங்களில் திரைக்கதை பொதுவாக நான்கு முனைக்களமாக வடிவமைக்கப்பட்டது. முதலில் கதையின் நாயகன் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு, அவன் மேற்கொள்கிற பயணம், பயணத்தில் ஊடாக அவன் காணும் மக்களின் வாழ்க்கை முறை, பேச்சு, எழுத்துவழி காவியங்கள் பற்றிய அறிமுகம், சிறு கதாபாத்திரங்கள் கதையினுள் கொண்டுவரப்பட்டு இறுதியாக பயணத்தின் முடிவில் கதையின் நாயகன் உணர்ந்தறிகிற வாழ்க்கை கூறப்படுகிறது. இப்பயணம் முடிவில்லாதது. வேறு களம், புதிய மனிதர்கள் என்று தொடர்ந்து நீள்வதற்கான சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியது ‘சாலைத் திரைப்படங்கள்‘

road movie 3 செப்டம்பர் 2009ல் கனடாவில் நடைபெற்ற டொரன்ட்டோ பாலஸ்தீனிய திரைப்பட விழா சாலைத் திரைமொழிக்கு முக்கியத்துவத்துடன் நிகழ்ந்தது. சாலைத் திரைப்படங்களின் வேர்களான பேச்சு மற்றும் எழுத்துவழியே கிளைக்கும் காவியங்களை உள்ளடக்கிய சிறப்பு காட்சியளிப்பாக எட்டு பாகங்களைக்கொண்ட பாலஸ்தீனிய சாலைத் திரைப்படங்கள் குறும்படங்களாக இவ்விழாவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்விற்கென 12 திரைகளில் பன்ஊடக பொருத்தல் ஏற்பாடுகளுடன் எல் பிளாண்டர்ஸ் (Elle Flanders) மற்றும் டமிரா ஸவாட்ஸ்கி (Tamira Sawatzky) ஆகியோரால் தனித்து வடிவமைக்கப்பட்டிருந்தது.

பாலஸ்தீனம் அல்லது யூத மக்களுக்கிடையே பல மணி நேர பயணவெளி களங்களில் நிகழும் கதைகளாக வடிவமைக்கப்பட்ட இந்த சாலை திரைப்படங்கள் நிமிடங்களாக சுருக்கப்பட்டு, அச்சமூகத்தின் நிலையை துல்லியமாக பிரதிபலிக்கும் விதமாக ஆக்கப்பட்டிருந்தது. சமகால பாலஸ்தீனிய அரசியல் சூழல் குறித்த பார்வையை இக்குறும்படங்கள் எளிதாக உணர்ந்தறிய செய்கிறது.

இவ்விழாவில் திரையிடப்பட்ட எட்டு சாலைத்திரைப்படங்கள் பற்றி காணலாம்.

ஓபல் கேடட் (Opal Cadet) - 3 நிமிடங்கள்

road movie 5 பாலஸ்தீனிய உரிமைகளுக்கான வழக்குரைஞராகவும், சமூகம் குறித்த நுண்பார்வையும், பேச்சுத்திறனுள்ள எழுத்தாளருமான ராஜா ஷிஹாதி, பாலஸ்தீன ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதிகளில் இருக்கும் இனரீதியாக தனித்து விடப்பட்ட சாலைகள் குறித்து இஸ்ரேல் ஏற்படுத்தவிருக்கும் சாலைத்திட்டம் பற்றி அறிய வருகிறார். பாலஸ்தீனிய எல்லைப் பகுதிகளை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி, சட்ட ரீதியாகவும் தன்னாளுகைக்கு கொண்டு வந்துவிட செயல்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு ராஜா ஷிஹாதி வாழ்சாட்சியாக இருக்கிறார். யூத மக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமேயான ஜஃபா என்ற சாலையின் ஊடாக ஓபல் கேடட் என்ற சீருந்தில் பயணிக்கும் போது ராஜா ஷிஹாதி நினைவில் விரியும் காட்சிப்பின்புலத்தில் இக்குறும்படம் நிகழ்கிறது.

மித அவசரம் (Slow Emergency) - 3 நிமிடங்கள்

road movie 6 பாலஸ்தீனத்தின் வடகிழக்கு பகுதியான ரமல்லாவிலிருந்து 15 நிமிட பயண தொலைவில் இருக்கும் ஸில்வத் என்ற நகரில் விபத்து வாகன ஓட்டியாக பணி புரிகிறான் யேஹியா. ஸில்வத் நகர் இஸ்ரேலின் வடக்கு ஜெருசலேம் அருகாமைப் பகுதியாகும். செயற்கை சிறுநீரக சிகிச்சைக்காக ஒரு நோயாளியை அழைத்துச் செல்கிற அவனது ஆம்புலன்ஸ், இனரீதியாக தனித்து ஆக்கிரமிக்கப்பட்ட சாலைகளில், குறித்த நேரத்தில் அடைந்துவிடக்கூடிய சாத்தியமற்ற சீரில்லாத வழியில் ரமல்லா மருத்துவமனைக்கு நாற்பது நிமிடங்கள் மிதவேகத்துடன் செல்வதை திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

ஜெரிகோ செல்லும் புதிய-பழைய சாலை (The New-Old Road to Jericho) - 3 நிமி.

மிகப்பழமையான பாலஸ்தீனிய குடியேற்ற நகரங்களில் விளங்கிய ஜெரிகோ, ரமல்லா நகர மக்களுக்கான ‘பாலஸ்தீனிய குளிர் வீடு‘ என வழங்கப்பட்டது. பரபரப்பான ஜெரிகோ நகரின் பழச் சந்தையில் ஹுடோ உடன் ஒரு தினத்தை கழித்த எழுபது வயது முதியவரின் நினைவோடையில் கிறிஸ்டியன் டேபே வரை நீளும் ஜெரிகோவின் பழைய சாலை பற்றிய நினைவுகள் பரிமாறப்படுகிறது.

ஓ கேமின்ஹோ (O Caminho) - 3 நிமிடங்கள்

road movie 7 பிரேசிலின் மேடோ கிரஸ்ஸோ என்ற ஊரிலிருந்து வெகு தொலை உள்ளது பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரம். இவ்விரு நகரங்களிலும் வசித்திருந்த அய்மன் ரமல்லாவிலேயே நிரந்தரமாக வசிக்க எண்ணுகிறான். அவனது முடிவு சரியானதுதானா என்ற குழப்பமும் இருக்கிறது. டாக்ஸி ஓட்டுரான அவனுக்கு பாலஸ்தீனிய தலைமையின் செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. சில சதுர மைல்களிலேயே அவனது டாக்ஸி சவாரி முடிந்து விடுகிறது. ஜெருசலேம் வழியே பெத்லகேம் சவாரி சென்று 20 நிமிட தொலைவில் சென்று வந்து கொண்டிருக்கிறான். ஆனால் பாலஸ்தீனியர்கள் ஜெருசலேம் மற்றும் சுற்று வட்டார சாலை வழிகளில் புழங்க தடையிருப்பதால், 20 நிமிடமே ஆகக்கூடிய பயண நேரம் ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது. ஆக்கிரமிப்பு சாலைப் பிரச்சனைகளைப் பற்றிய கூரிய பார்வையை இத்திரைப்படம் முன் வைக்கிறது.

அல் அல்மேனி (ஜெர்மன்) (Al Almanie – The German) - 3 நிமிடங்கள்

குறைந்து வரும் பாலஸ்தீனத்தின் நீராதாரம் பற்றி க்ளீமன்ஸ் என்ற ஜெர்மன் புவியிலாளர் பார்வையில் எடுக்கப்பட்ட படம். ரமல்லாவிலிருந்து க்வால்கில்யா என்ற இடத்திற்கு பயணம் செய்கிற க்ளீமன்ஸ், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிடம் இழந்த நீர்வளங்களைப் பற்றி கூறுகிறார். படத்தில் இறுதியில் இன ஆக்கிரமிப்பு பகுதியிலிருக்கிற க்வால்கில்யா என்ற இடத்திற்கும் அவர் செல்ல முடியாமல் போகிறது.

டு பிட்டோ (To Biddo) - 3 நிமிடங்கள்

பாலஸ்தீனத்தில் வசிக்கும் அரேபிய ஆசிரியை ஒருவரின் மகிழ்ச்சியான பயணத்தின் போது பாலஸ்தீன எல்லைப் பகுதியில் காண நேரிடும் வாழ்க்கை பற்றிய கதை.

பாதாம் அரும்பு போல் (Like Almond Blossoms) - 3 நிமிடங்கள்

தான் வசித்த ஜெனின் நகரை விட்டு பெருநகரான ரமல்லாவிற்கு குடியேறிய 70 வயதாகும் சோனியா என்னும் பெண்மணி தனது தாயாரை காண மீண்டும் ஜெனின் நகருக்கு செல்லும் பயணமே கதை. தனது பால்யத்தில் ஹிப்பி கலாச்சாரப் பிரியையாக இருந்து 19 வயதில் ஒரு மாணவர் இயக்கத்தில் இருந்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சோனியா, தனது பயணத்தின் போது ஜெனின் செல்லும் பாதையில் உள்ள பெரும் மாற்றங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

எஸ்ரா (Ezra) - 3 நிமிடங்கள்

road movie 8 வரையறுக்கப்பட்ட சுதந்திரங்களுடன் பாலஸ்தீனியர்கள் புழங்கும் பகுதியான ஹெப்ரன், ரமல்லாவிலிருந்து வெகுதொலைவில் உள்ள ஒரு நகரம். ஈராக்கை சேர்ந்த இஸ்ரேலிய யூதரான எஸ்ரா ஆக்கிரமிப்பு செயல்களால் மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்படும் அழிவு குறித்து வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க இயலாது என்கிறார். இஸ்ரேலில் வசித்துக் கொண்டு பாலஸ்தீன விடுதலைக்காக சிறை சென்று போராடும் எஸ்ரா, மார்டின் லூதர் கிங்குடன் ஒப்பிட்டுப் பேசப்படுபவர். இதுபற்றிய தொகுப்பாக இக்குறும்படம் உள்ளது.

000

3 comments:

  1. புதிய‌ ப‌ட‌ அறிமுக‌ங்க‌ளுக்கு ந‌ன்றி ஸார்.

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  2. உன்னதத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள். சாலைத் திரைமொழி நன்றாக இருக்கின்றது

    ReplyDelete
  3. puthusaa thrinthu kolla vaiththatharkku nantri....

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname