Tuesday, November 10, 2009

யமுனாவின் மனநோய் - சிறுகதை

 

யமுனாவின் மனநோய் – சிறுகதை ………………………………………. பொன்.வாசுதேவன்

thumbnail.aspx யமுனாவை இந்த வாரத்திற்குள்ளாக நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அறையிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும் படியாக பார்வை எதன் மீதும் பதியவில்லை. யோசனையிலேயே புறக்காட்சிகளை மறந்துவிடுகிற பழக்கம் அவனுக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

யமுனாவைப் பற்றித்தான் நினைவெல்லாம். சமீப காலமாகவே இன்னதென்று உணர முடியாத மாற்றம் அவளிடம் தெரிகிறது. எப்போதும் கவலையும் சோர்வும் சூழ்ந்த முகமாகவே காட்சி தருகிறாள். கல்யாணமான புதிதில் இப்படியில்லை. சிரிப்பும் சந்தோஷமுமாகத்தான் நேரம் கடந்தது. அதிலும், அவள் ஒருவனைக் காதலித்த விஷயத்திருந்து, பேருந்து நெருக்கத்தில் இடுப்பைத் தடவியவனைப் பற்றியெல்லாம் கூட வெளிப்படையாக சொன்னவிதம் அவனை மிகவும் கவர்ந்திருந்தது.

அவனுக்கும் காதலித்த அனுபவங்கள் உண்டு. மகேஸ்வரி, வானதி, கலா மற்றும் சத்யா என நான்கு பேரை, வெவ்வேறு வயதில் வெவ்வேறு சூழ்நிலைகளில் காதலித்திருக்கிறான் என்றாலும், யாரைப் பற்றியும் யமுனாவிடம் சொல்லவில்லை.

‘நீதான் நான் தொட்ட முதல் பெண்‘ என்று முதலிரவன்று ரொம்பவும் சாதாரணமாகச் சொன்னதை அவளும் நம்பி விட்டாள். அவனுக்கு இயல்பாகவே, பொய் சொன்னாலும் பிறர் நம்பி விடும்படி சொல்லக்கூடிய திறன் வாய்த்திருந்தது. மேலும், பெண்மை கலந்த அழகான அவன் முகத்தைப் பார்க்கிற எவருக்குமே ‘இவன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்‘ என்றொரு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

0016 யமுனா தனது காதலைப் பற்றி சொன்னபோது முதலில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. முதலிரவன்றே ‘நான் ஏற்கனவே ஒருவனை காதலித்தேன்‘ என்று சொல்கிற பெண்களை சினிமாவில் மட்டுமே பார்த்துப் பழக்கம். பிறகு இவ்வளவு துணிச்சலா... என்று கோபம் வந்தாலும், அவள் கொஞ்சம் அழகாக வேறு இருந்ததால் கோபத்தையடக்கி ‘இதிலென்ன இருக்கு... பரவாயில்லை‘ என்று சொல்லி சமாளித்தான். கல்யாணமெல்லாம் முடிந்து முதலிரவு வரை வந்து விட்ட பிறகு இனி எதுவும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்தான். ஐந்து மாதங்கள் போனதே தெரியவில்லை. விருந்து, வெளியூர், சினிமா, ஊர் சுற்றல் என பொழுது ஓடியது.

எதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் மார்பு வரை உருவம் தெரிந்தது. ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்...?‘ தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்குள் கேள்வியெழுந்தது. மனதிற்குள் நினைத்திருந்தாலும் பேசியது போல உதடுகள் சப்தமின்றி அசைந்தன.

ஆமாம். யமுனாதான் காரணம். எப்போதும் கலகலப்பாக இருந்த அவள் சில நாட்களாகவே குளிரில் உறைந்த நீராகசெயலற்று, ஜீவனற்று இருப்பதுதான் தன்னையும் பாதித்திருக்கிறது என்று அவன் நினைத்துக் கொண்டான்.

யமுனாவின் மனதில் ஆழ்ந்த உள்ளுணர்விற்கும், புற உலகிற்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதோ என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் தயங்கித் தயங்கி பேசுகிறாள். துணியை அலசிப் பிழிவதைப் போல் தொடர்ச்சியாக வழியும் அவள் பேச்சில் எப்போதுமே அவனுக்கு ஒரு மயக்கம் உண்டு.

இப்போதுகூட, கோயிலுக்குப் போயிருக்கும் அவள் உடன் இல்லாத இந்த நேரத்தின் வெறுமை மனதை கனக்கச் செய்கிறது. வெளியே பார்த்தான்.

0034 வெட்ட வெளியில் வட்டமிட்டது போன்ற வடிவத்தில் யாருமே விளையாடாமல் வெறுமையாய் காட்சியளித்தது தூரத்து மைதானம். சுற்றுச்சுவரைத் தாண்டி மைதானத்திற்குள் எட்டிப் பார்ப்பது போல் வளைந்து நின்றிருந்தது ஒரு தென்னை மரம். தென்னங்கீற்றின் இடைவெளிகளுக் குள்ளிருந்து கசிந்த சூரிய ஒளி கண் கூசச் செய்தது.

யமுனாவிற்கும் இயற்கையை ரசிப்பது ரொம்பப் பிடிக்கும். அவனைப் போலவே படிப்பது, எழுதுவது, வரைவது என எல்லாவற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அவனுக்குத் தெரியாமல் பத்திரிகைக்கு அனுப்பிய அவளது கவிதையொன்று கூட பிரசுரமாகியிருந்தது. நேர்த்தியான கவிதை. அவனுக்கு கூடஅது மாதிரியான நுட்பம் கைவரப்பெறவில்லை.

சொல்லாமல் கவிதையை பிரசுரத்திற்கு அனுப்பியதில் அவனுக்கு வருத்தம்தான் என்றாலும், நண்பர்களிடையே தன் மனைவியின் கவிதையைப் பற்றி சிலாகித்துப் பேசினான், நண்பர்கள் அனைவருமே அவளது கவிதையைப் பற்றி, அதில் தேங்கிக்கிடந்த அழகியல் உணர்வுகளை உன்னதங்களாய்ப் புகழ்ந்தனர். அவனுக்கும் பெருமையாக இருந்தது.

குவிந்த நிழலொன்று அறைக்குள் நீண்டது. நிமிர்ந்து பார்த்தான். யமுனாதான். கதவைத் திறந்த சப்தம் கூட எழவில்லை.

“வா... யமுனா, கோவில்ல நிறைய கூட்டமா...?“

“இல்லே, குறைச்சலாதான் இருந்தது. இந்தாங்க“

0026 உள்ளங்கையில் வைத்திருந்த திருநீற்றையும் குங்குமத்தையும் கலந்து நீட்டினாள். திருநீற்றுடன் கலந்து இயல்பான ஆழ்ந்த சிகப்பு நிறத்தை இழந்திருந்தது குங்குமம். அதையே சிறிது நேரம் பார்த்தான். பிறகு விரலால் தொட்டு உதிர்த் நெற்றியிலும் கழுத்திலும் தடவினான். கைகளில் மீதமிருந்ததை அவன் நெஞ்சிலும் கைகளிலும் தடவினாள் யமுனா. எப்போதும் அவள் இப்படிச் செய்வது வழக்கம். ஒருமுறை காரணம் கேட்ட போது ‘கை, கால்களை நல்லா வைப்பா... கடவுளே‘ என்று சொல்லி அவள் அம்மா சிறுவயதிலிருந்தே தடவி விட்டு வந்ததால் தனக்கும் அதே பழக்கமாகி விட்டது என்று சொன்னாள்.

“ஏன் இப்போதெல்லாம் சரியா பேசறதேயில்ல“

“நீங்கதான எப்பவும் அமைதியா இருக்கீங்க. என் மேல ஏதாவது கோபமிருந்தா சொல்லணும்“

அவனுக்கு சோர்வாக இருந்தது. என்ன இவள்... ஏன் ஒரு மாதிரியா இருக்கேன்னு கேட்டா நான் கோபமாக இருப்பதாக சொல்கிறாளே... சிறிது நேரம் பேச்சேதுமின்றி கழிந்தது.

“நமக்குள்ள ஏதோ ஒரு இடைவெளி ஏற்பட்டுடுச்சுன்னுநினைக்கிறேன். உன்னோட மாறுதலுக்கு அதுதான் காரணமா இருக்கணும். நானே உன்னை மனநல மருத்துவரிடம் அழைச்சுட்டு போகலாமான்னு யோசிச்சுகிட்டிருந்தேன்“ மென்மையாக அதேசமயம் அழுத்தமான முடிவாகச் சொன்னான் அவன்.

யமுனா பதிலேதும் சொல்லவில்லை. இருவருக்கிடையேயான நெருக்கத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்பது போல அமைதியாக இருந்தாள். பிறகு வழக்கம்போல தனது ஆழ்ந்த பார்வையை அவன் மேல் நிறைத்து, “சரி போகலாம், அதுகூட நல்லதாகத்தான் படுகிறது“ என்றாள்.

கொஞ்ச நேரம் கழித்து “என் பிஃரண்டோட கணவர் கூட சைக்ரியாட்ரிஸ்ட்தான். நான் வேணும்னா அவளுக்கு போன் பண்ணி நாளைககு வர்றதா சொல்லட்டுமா“ அனுமதியை எதிர்பார்க்கிற பார்வையோடு கேட்டாள் அவள்.

“சரி போன் பண்ணி சொல்லிடு. காலையில பத்து மணிக்கு

138276 இதுவரை தன்னை அழுத்திக் கொண்டிருந்த உணர்வுகளின் பாரம் குறைந்தது போல இருந்தது அவனுக்கு. இரவு படுத்த பின்னும் அவனுக்கு யோசனையாகவே இருந்தது. மனநல மருத்துவரிடம் போவதாக முடிவாகி விட்டது. ஆனால் அவரிடம் சென்றும் பலனேதும் இல்லையென்றால்... தூக்கமே வரவில்லை. யமுனாவை திரும்பிப் பார்த்தான்.

கால்களை மடக்கி பின்புறத்தோடு லேசாக அழுந்தியவண்ணம் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நிரம்பி வழியத்தயாரான வெண்ணை போல அவளது இடுப்புச் சதை சேலை விலகலில் புலப்பட்டது. பார்ப்பதற்குக் கிளர்ச்சியூட்டிய அக்காட்சி அவனது பாலுணர்வைத் தூண்டியது. பெரும்பாலும் இதுபோன்ற சமயங்களில் அவள் விழித்திருந்தால் மட்டுமே மேற்கொண்டு அவனது அசைவுகள் செயல்படும். இப்போது அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அதுவுமில்லாமல் மனதளவில் சந்தோஷமான நிலையில் அவள் இல்லாததும் அவனை யோசிக்கச் செய்தது.

இரவு கனவில் – தென்னை மட்டையொன்றை தலைகீழாகத் திருப்பி கீற்றுகளை கத்தியால்உதிர்த்துக் கொண்டிருந்தான் யாரோ ஒருவன். கவனச் சிதறலில் மட்டையைப் பிடித்திருந்த ஒரு கையின் ஐந்து விரல்களும் துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்தது. ரத்தம் வழியத் துடித்து முகத்தருகே கையை கொண்டு சென்ற போதுதான் கவனித்தான் அவனது முகம் போல இருந்தததை. அவன்தான் அது. அதற்குள் விழிப்பு வந்து விட்டது. இருளில் கடிகாரம் இருந்த திசைநோக்கித் திரும்பினான். மணி மூன்றரை காட்டியது.

இரவு சரியாக தூக்கமில்லாததால் காலையில் எழுந்ததும் கண்கள் எரிச்சலாக இருந்தது. யமுனா சமைப்பதற்கு அடையாளமாக தாளிப்பு வாசனை படுக்கை அறையெங்கும் பரவியிருந்தது. குளித்துவிட்டு வந்ததும்., உணவு மேசையில் உணவைத் தயாராக எடுத்து வைத்திருந்தாள் யமுனா. எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவது வழக்கம். யமுனாவும் வந்து அமர்ந்தாள்.

“சாப்பிட்டு பத்து மணிக்கு மேல டாக்டர் கிட்டே போகலாமா..?“

“போன் பண்ணி சொல்லியிருக்கேன். பதினொரு மணிக்கு வரச் சொன்னார்“

465921 ஆட்டோ பிடித்து அரை மணி நேரம் முன்பாகவே போய்விட்டோம். அவர்களுக்கு முன்பாகவே ஒருவர் கிளினிக் வெளியே அமர்ந்திருந்தார். வழக்கமாக கிளினிக்களில் காணப்படும் டோக்கன் தரகிற அட்டெண்டர் யாரும் இல்லை. வெளியே அமர்ந்திருப்பவரும் டாக்டரைப் பார்க்க வந்தவராகத்தான் இருக்கும். அவனும் யமுனாவும் உள்ளே நுழைந்தார்கள். ஏற்கனவே அமர்ந்திருந்தவர் திரும்பி யமுனாவைப் பார்த்தார். அவள் மீதேறிய பார்வை அத்தோடு இறங்கவே இல்லை. அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவள் மட்டும்தான் அந்த அறைக்குள் நுழைந்த்து போல, பெயரளவுக்கு கூட அவன் மேல் பார்வையைத் திருப்பவில்லை அவர். அவரது பிரச்சனை பெண்களைப் பற்றியதாகத்தான் இருக்குமென்று நினைத்துக் கொண்டான் அவன்.

அமர்ந்த சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து வயதான ஒருவர் வெளியே வந்தார். இவருக்கு சைக்ரியாட்ரிஸ்ட்டை பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கும் என்று யோசித்துப் பார்த்தான் அவன்.

தலையைக் கவிழ்ந்து கண்களை மூடிய படியிருந்தாள் யமுனா. எதுவும் பேச வில்லை.

மணியொலி கேட்டது. எதிரே அமர்ந்திருப்பவர் அடுத்து உள்ளே போவார் என்று நினைத்தான் அவன். அவர் யமுனா மேலிருந்த பார்வையை இன்னும் நகர்த்தவில்லை. மறுபடியும் மணியொலி கேட்டது. அவர் போவதாக தெரியவில்லை. யமுனாவும் அவனும் எழுந்து உள்ளே சென்றார்கள். கூடவே அவர் பார்வையும் தொடர்ந்தது.

3121827660_0f13163c58_m நீளமான அல்லது குறுந்தாடியுடன் கருமை சூழ்ந்த விழிகள் உள்ளிடுங்கியிருக்கும் மனநல மருத்துவரை கற்பனை செய்திருந்த அவனுக்கு உள்ளே நுழைந்ததும், விற்பனை பிரதிநிதி போன்று பளிச்சென்று மருத்துவர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. சிரித்த முகத்தோடு அமரச் சொன்னார்.

அவன் யமுனாவைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும்,“அதெல்லாம் தேவையில்லை. உங்க இரண்டு பேரோட பேசினால் மட்டும் போதும். பிரச்சனை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்“ என்றார் மருத்துவர்.

அவனுக்கு நம்பிக்கையேற்படவில்லை. எப்படி பேசுவதை மட்டுமே கவனித்து பிரச்சனையை உணர முடியும். யமுனாவைப் பற்றி எதுவும் சொல்லவிடாமல் செய்தது அவனுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது.

தன்னிடம் கேட்கப்பட்டதெற்கெல்லாம் உணர்ச்சிகளின் உந்துதல் ஏதுமின்றி கவனமாக பதில் பேசினான் அவன். யமுனாவும் அவர் கேட்டதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளிடம்தான் மருத்துவர் நிறையப் பேசினார். டாக்டரின் இந்தச் செயல் அவனுக்குள் கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. எப்படியும் பிரச்சனையைத் தீர்த்து விடுவார். அவனுக்கு வேண்டியதெல்லாம் பழைய கலகலப்பான யமுனா. அரை மணி நேரத்திற்கும் மேலாக இருவரிடமும் பேசினார் மருத்துவர்.

‘நன்றி‘ சொல்லிவிட்டு மருந்துச் சீட்டில் ஏதோ எழுதத் தொடங்கினார். மனநல மருத்துவத்திற்கு கூட மருந்துகள் சாப்பிட வேண்டியுள்ளது பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது முகமாற்றத்தை உணர்ந்தவராக “பொதுவான மருந்துகள்தான்“ என்றார் மருத்துவர்.

3599012355_a36fefd5ce_m பணம் செலுத்தி மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு விடை பெற்று வெளியே வந்தார்கள். வெளியே அமர்ந்திருந்தவர் இன்னும் அங்கேயே இருந்தார். மறுபடியும் அவர் பார்வை யமுனாவை மொய்க்கத் தொடங்கியது. வாசலை விட்டு இறங்கும் போது மணியொலி கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். அவர் உள்ளே போகாமல் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு குணமாகும் வாய்ப்பே இல்லை என்று தோன்றியது.

கிளினிக்கிற்கு எதிரே மருந்து கடை தென்பட்டது. யமுனாவைப் பார்த்து “நீ இப்படியே ஓரமாக நில். நான் மருந்து வாங்கி வரேன்“ என்று சொல்லிவிட்டு சாலையைக் கடந்து சென்றான்.

மருந்துகளை வாங்கிவிட்டு பணம் கொடுத்ததும் மருந்து சீட்டை பார்த்து மருந்துகள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு சீட்டின் மேலே பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

மருந்துச் சீட்டின் மேலே ‘திரு.சுந்தரம்‘ என்று அவன் பெயர் எழுதப்பட்டிருந்தது.

000

19 comments:

  1. ந‌ல்ல‌ க‌தை எதிர்பார்க்காத‌ முடிவு.

    //அவனுக்கு இயல்பாகவே, பொய் சொன்னாலும் பிறர் நம்பி விடும்படி சொல்லக்கூடிய திறன் வாய்த்திருந்தது. மேலும், பெண்மை கலந்த அழகான அவன் முகத்தைப் பார்க்கிற எவருக்குமே ‘இவன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்‘ என்றொரு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.//
    இப்ப‌டிதான் ப‌ல‌ பேர் இருக்காங்க‌ நாட்டுல‌. ம்ம்ம்ம்ம்

    //உள்ளங்கையில் வைத்திருந்த திருநீற்றையும் குங்குமத்தையும் கலந்து நீட்டினாள். திருநீற்றுடன் கலந்து இயல்பான ஆழ்ந்த சிகப்பு நிறத்தை இழந்திருந்தது குங்குமம்.// க‌விதைக்கான‌ ப‌டிம‌ம்.

    ந‌ல்ல‌ க‌தையோட்ட‌ம். நீங்க‌ள் க‌விஞ‌ர் என்ப‌தால் க‌வித்துவ‌மான‌ வ‌ரிக‌ளை க‌தையூடே சேர்த்து எழுதி இருக்கின்றீர்க‌ள். அருமை.

    ReplyDelete
  2. கதையோட்டம் நன்றாக இருந்தது,முடிவை நான் ஊகித்தேன்..தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்

    ReplyDelete
  3. வித்யாசமான கோணத்தில் எழுதப்பட்ட நல்ல கதை. முடிக்கும் போது எதிர்பாராத இம்பாக்ட். பெரும்பாலான தமிழ் சிறுகதைகளிலிருந்து வேறுபட்டிருக்கிற புது முயற்சி. பாராட்டுக்கள்.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருந்துச்சு கதையோட நடை. திடுக் திருப்பம் வேணும்னு செஞ்சா மாதிரி இருந்துச்சு.

    ReplyDelete
  5. //துணியை அலசிப் பிழிவதைப் போல் தொடர்ச்சியாக வழியும் அவள் பேச்சில் எப்போதுமே அவனுக்கு ஒரு மயக்கம் உண்டு.//

    இது போன்ற கவித்துமான வரிகள் கதையெங்கும் வியாபித்து நிற்கிறது. பொதுவா இது போன்ற நீளமான பதிவுகளை சோம்பல் காரணமாக தவிர்த்து விடும் என்னை இந்த கதையின் தலைப்பும், தொடக்க வரிகளுமே இழுத்து பிடித்து நிறுத்தியது. அருமையான கதை. நன்றி வாசு sir.

    ReplyDelete
  6. கதை நல்லாருக்குங்க..

    முடிவ ஓரளவு யூகிச்சுட்டேன்..

    ReplyDelete
  7. இந்தக் கதையை முன்னமே ஆனந்த விகடனில் படித்த நியாபகம் இருக்கிறது. நீங்கள்தான் அந்த எழுத்தாளர் என்றால் வாழ்த்துக்கள். விகடனில் படிக்கும் போது நான் இறுதி வரை இப்படி ஒரு முடிவை எதிர்ப் பார்க்கவில்லை.

    ReplyDelete
  8. நடையும், கதையின் முடிவும் நல்லாயிருக்குங்க வாசு

    ReplyDelete
  9. ந‌ல்ல‌ க‌தை எதிர்பார்த்த‌ முடிவு

    ReplyDelete
  10. "வாலி" முடிவு.:)
    ஆனால் கதையின் நடுவே வரும் கவிதை வரிகளை மனதை கொள்ளை கொள்கின்றன.

    //குவிந்த நிழலொன்று அறைக்குள் நீண்டது//

    வாவ் :)

    ReplyDelete
  11. என்னை கவர்ந்த வரிகள்

    //கால்களை மடக்கி பின்புறத்தோடு லேசாக அழுந்தியவண்ணம் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நிரம்பி வழியத்தயாரான வெண்ணை போல அவளது இடுப்புச் சதை சேலை விலகலில் புலப்பட்டது. பார்ப்பதற்குக் கிளர்ச்சியூட்டிய அக்காட்சி அவனது பாலுணர்வைத் தூண்டியது.//

    சுந்தரம் பாத்திரத்திற்கு கூடுதலான அழுத்தம் கொடுத்திருந்தாள் கதை இன்னும் நன்றாயிருந்திருக்கும்

    ReplyDelete
  12. அருமையாக இருக்கிறது.
    நச் போட்டிக்காகவா?

    ReplyDelete
  13. ந‌ல்ல‌ க‌தை எதிர்பார்த்த‌ முடிவு

    ReplyDelete
  14. கதைக்குள் நிறைய விஷயங்கள். ரொம்ப நல்லாயிருந்தது

    ReplyDelete
  15. மிக அருமையான நடை வாசு.கதை ரொம்பவும் பிடிச்சு இருந்தது.என்னவோ முடிவு மட்டும் முன்பே யூகிக்கும்படி இருந்தது.

    ReplyDelete
  16. முடிவு செம திருப்பம். ஒ ஹென்றி பாணியிலான கதை

    மோகன் குமார்
    http://veeduthirumbal.blogspot.com

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. எனக்கு பிடித்த வரிகள்!
    "குவிந்த நிழலொன்று அறைக்குள் நீண்டது"

    "திருநீற்றுடன் கலந்து இயல்பான ஆழ்ந்த சிகப்பு நிறத்தை இழந்திருந்தது குங்குமம்"

    முடிவு ஏதும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும் கதையின் போக்கு ரசிக்க வைத்தது!

    ReplyDelete
  19. ok.........patient avan...

    nalla nadai........niraiya varikal azhagaa irunthathu.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname