Friday, November 6, 2009

ஆண் ஏன் சம்பாதிக்க வேண்டும்...?


பொருளாதாரம் என்பதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம், இருத்தலுக்கு படும் அவஸ்தைகள், பணம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு முக்கியமானது இப்படி பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ணோ, பெண்ணோ வெற்றிகரமான, நிம்மதியான வாழ்க்கையை ஏன் நடத்த வேண்டும்? வாழ்வாதாரத்திற்கு அல்லல்பட்டு துயருற்று ஏன் பணத்தைத் தேடியலைய வேண்டும்? வாழ்வில் பணம் முக்கியமா.. நிம்மதி முக்கியமா.. பணத்தினால் நாம் தேடும் நிம்மதி கிடைத்து விடுகிறதா என்ற கேள்விகளை எழுப்பிய படம் Pursuit of Happiness.

னது குடும்ப சேமிப்புகளை முதலீடாகக் கொண்டு ‘எலும்புகளின் அடர்திறன் வருடி‘ (ஸ்கேனர்) மருத்துவ உபகரண விற்பனை பணி செய்து வருகிறான் கிறிஸ் கார்டனர் (வில் ஸ்மித்). எக்ஸ்ரே கருவியை விட அதிக விலை என்பதால் அதற்கு அதிக வரவேற்பில்லை. பொருளாதார ரீதியாக திருப்திகரமான வாழ்க்கையை தர இயலாத காரணத்தால் அவனை விட்டுப் பிரிந்து நியூயார்க் சென்று விடுகிறாள் மனைவி லிண்டா (டான்டி நியூட்டன்). ஐந்து வயது மகனான கிறிஸ்டோபர் (ஜேடன் ஸ்மித்) உடன் சான் பிரான்சிஸ்கோவில் வாழ்வைத் தொடரும் கிறிஸ் எதிர் கொள்ளும் துயரமான நிகழ்வுகளை பின்னணியாக கொண்ட படம்.

பொருளாதார ஸ்திரத்தன்மை எந்த அளவிற்கு வாழ்வின் சுகதுக்கங்களை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது என்பதை மிக தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விற்பனையாளனாக, கிறிஸ் சந்திக்கும் அவநம்பிக்கை, தோல்விகள், மனைவியுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, விரக்தியின்றி, விடாமுயற்சியுடன் எப்படி வெற்றி கொண்டான் என்பதே கதையின் மையக்கரு. கதையின் முக்கிய பாத்திரங்கள் கிறிஸ் மற்றும் அவனது மகன் இருவர் மட்டுமே.

ன் மருத்துவ உபகரண தொழிலின் எதிர்காலம் மோசமாகி விட்ட நிலையில், மனைவி பிரிந்து சென்று விட, வீடை இழந்து வசிக்க இடமற்று, மகனுடன் தங்க இடம் தேடி அலையும் கிறிஸ், மகனிடம் அடிக்கடி ‘நீ என்னை நம்புகிறாயா..? நம்பு‘ என்கிறான். ஜுனியர் கிறிஸ் கூரிய பார்வையுடன் தன் வயதுக்கே உரிய கேள்விகளை கேட்டாலும், அவை கிறிஸ் மனதுள் ஊடுருவித் துளைக்கின்றன. எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில், மகனின் நம்பிக்கையை பொய்யாக்காமல் சிறு சிறு சந்தோஷங்களை வாய்க்கச் செய்கிறான் கிறிஸ். படம் நெடுக கிறிஸ் செல்லுமிடமெல்லாம் அவனது மகனும் ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்புடன் உடன் சுற்றி வருகிறான்.

ங்க இடமற்று, கையில் பணமின்றி, மகனிடம் தான் வைத்திருக்கும் மருத்துவ உபகரணம் ஒரு ‘கால இயந்திரம்‘ என்று கூறி... ‘டைனோசர் உலகை நாம் இப்போது காண்கிறோம்‘ என இரயில் நிலைய கழிப்பறைக்குள் மகனை உறங்க வைத்து, கண்ணீர் வழிய கிறிஸ் அமர்ந்திருக்கும் காட்சி உணர்த்துவது சொற்களில் அடங்காதது.

ருத்துவ உபகரண தொழில் செய்துகொண்டே, பங்கு விற்பனை முகவராக முயலும் கிறிஸ், அதற்காக ஊதியம் ஏதுமின்றி ஆறு மாத பயிற்சியில் சேர்கிறான். இருக்கின்ற ஒரு காலியிடத்திற்கு இருபது பேர் பயிற்சி பெறுகின்றனர். தன்னிடமிருக்கும் கடைசி ‘ஸ்கேனர்‘ விற்பனையாவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது, அதை வாங்கும் மருத்துவர் முன் செயல்படாமல் போகிறது. ‘சிறு பிரச்சனைதான், சரி செய்து கொண்டு வருகிறேன்‘ என அவகாசம் கேட்டு செல்கிறான் கிறிஸ். ஸ்கேனரை பரிசோதனை செய்ததில், அதன் ‘வருடல் விளக்கு‘ செயலிழந்திருக்கிறது. அதை மாற்றி புதுப்பிக்கபணமின்றி, இரத்தம் கொடுத்து பணம் பெற்று, விளக்கினை மாற்றி பின்னர் விற்றும் விடுகிறான். கையில் கிடைத்த பணம் செலவாகி மறுபடியும், வருமானம் ஏதுமின்றி சிரமத்துடன் வாழ்க்கை நகர்கிறது.

வாழ்வில் வெற்றி பெறும் பெரிய கனவுகளுடன் தன் முயற்சிகளில் சிறிதும் தளராமல், உள்ளுக்குள் தோய்ந்திருக்கும் சோகத்தை சந்திப்பவர்களிடம் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் வலம் வருகிறான். பயிற்சியின் நிறைவில் பங்கு முகவராக பணி கிடைத்து விடுகிறது. அதன் பிறகு எல்லாமே தலைகீழ், கிறிஸ்க்கு வாய்ப்புகளும் வசதியும் குவிகிறது என்பதாக படம் நிறைவடைகிறது.

ன் கதையை தானே சொல்லிச் செல்லும் உத்தியில் நீளும் படம் நெடுக வில் ஸ்மித்தின் இயல்பான முகபாவங்கள் திரைப்படம் என்ற உணர்வையழித்து, யாருடைய வாழ்க்கையையோ நேரில் காண்கிறோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. மகனாக வரும் ஜேடன் ஸ்மித் மிக அருமையான உணர்வு பெருக்கினை நமக்களிக்கிறான்.

1981-களில் ‘கிறிஸ் கார்டனர்‘ என்பவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கோர்த்து ‘Memoir’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதினார். ஒரு சாதாரண விற்பனையாளராக தனது வாழ்வை துவங்கி அதில் தோல்வியுற்று, பின்னர் பங்கு முகவராக தொழில் புரிந்து கோடீஸ்வரரான கிறிஸ் கார்டனரின் உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது இப்படம்.

டுத்தர வர்க்கத்து ஆண்களின் பொருளீட்டல் சிரமங்களையும், அவனுள் புதைந்திருக்கும் தந்தைமை உணர்வின் உள்ளார்ந்த வெளிப்பாடாகவும் இப்படம் சிறப்பாக உள்ளது. குழந்தைகளுடன் பார்க்க தகுதியான படம்.


ஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளுக்கு பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது இப்படம். வில் ஸ்மித் நடித்து தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘Seven Pounds’ என்ற படத்தையும் ‘கேப்ரியேல் முசினோ‘ இயக்கியுள்ளார்.


திரைப்பட இரசனை கொண்டவர்கள் பொதுவாக யோசிக்கும் ‘ஏன் இது போன்ற திரைப்படங்கள் நம் மொழியில் எடுக்கப்படுவதில்லை‘ என்ற கேள்வியை இப்படமும் நமக்குள் ஆழ ஏற்படுத்துகிறது.

THE PURSUIT OF HAPPYNESS

இயக்குநர் : கேப்ரியேல் முசினோ

வெளியான வருடம் : டிசம்பர் 2006


16 comments:

  1. //திரைப்பட இரசனை கொண்டவர்கள் பொதுவாக யோசிக்கும் ‘ஏன் இது போன்ற திரைப்படங்கள் நம் மொழியில் எடுக்கப்படுவதில்லை‘ என்ற கேள்வியை இப்படமும் நமக்குள் ஆழ ஏற்படுத்துகிறது.\\

    வேண்டாங்க ஒரே பாட்டில் பணக்காரனாக்கிடுவங்க நம்ம ஆட்கள்.
    அப்புறம் எங்கே..?!

    ReplyDelete
  2. நல்லா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம். பகிர்ந்ததற்கு நன்றி

    ReplyDelete
  4. அற்புதமான படம். அமெரிக்காவில் எல்லாம் சுகமாயிருக்கிறார்கள் என்பது நம் மக்களின் கருத்து. அவர்கள் இப்படத்தினை பார்க்கலாம்.

    மனைவியை இழந்து ஐந்து வயது பிள்ளையுடன் நான் வாழும் வாழ்க்கையே படமாக்க பட்டுள்ளது.

    இதில் வில் ஸ்மித் ஓடு ஓடுவென்று ஓடுவார். என் கதையும் அப்படியே.. சுயமாய் சமைக்க கூட தெரியாது. என்ன கொடுமை பாருங்கள். ஒரு ஒரு வேளைக்குமெ நல்ல ஹோட்டலை நோக்கி ஓடுவது.

    இதற்கு மேல் அடிக்க முடியவில்லை... அடுத்த வேளை துரத்துகிறது.

    சார் ஏனிந்த தாமதமான விமர்சனம்... என்னை போலவே நீங்கள்.

    ReplyDelete
  5. @ கிறுக்கல்

    அண்ணாமலை பாட்டில் பணக்காரை ஆகிவிடுவார். ஆனால் அவர் வயசாகிவிடுவார். (15 years = 1 song)

    விக்ரமன் படத்தயெல்லாம் இங்க சேக்காதிங்க

    ReplyDelete
  6. it is a good movie to watch..in times of feeling down one much watch this film.

    ReplyDelete
  7. அருமையான விமர்சனம்.. வாசு..

    ReplyDelete
  8. நல்ல பகிர்வுக்கு நன்றிங்க‌

    ReplyDelete
  9. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  10. அருமையான‌ ப‌ட‌த்திற்கு பொருத்த‌மான‌ விம‌ர்ச‌ன‌ம்.

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  11. இந்த படத்தை பல முறை பார்த்தேன் .எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. செவன் பௌண்ட்ஸ் கூட இந்த அளவு இல்லை.

    ReplyDelete
  12. தியேட்டரில் பார்க்க ஆசைப்பட்டு மிஸ் பண்ணிய படம். இன்னும் பார்க்கவில்லை..

    ReplyDelete
  13. நல்ல படைப்பு பாராட்டுக்கள்

    ReplyDelete
  14. நல்ல அறிமுகம். நன்றி

    ReplyDelete
  15. // இரயில் நிலைய கழிப்பறைக்குள் மகனை உறங்க வைத்து, கண்ணீர் வழிய கிறிஸ் அமர்ந்திருக்கும் காட்சி உணர்த்துவது சொற்களில் அடங்காதது//

    நான் அழுதேவிட்டேன் இந்த இடத்தில்.
    நான் முதன்முதலில் சென்னை ‘INOX' தியேட்டரில் பார்த்த படம்.உள்ளபடியே ரொம்ப அருமையா எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname