Wednesday, February 23, 2011

புகை யுகம்




கையில் வைத்திருந்த
எரிந்து கொண்டிருக்கும் வெண் சுருட்டை
வடிகட்டிப் பொருத்தி தரையில் படும்படியாக
நெடுக்கு வாக்கில் சுவரில் வைத்தான்

வெண்சுருட்டின் வாய்
நெருப்பினோடு புகைந்தபடியிருந்தது
புகை எழுதலில் மங்கிப்போன அறை
அவனுக்கு ஒரு மாயச் சித்திரத்தைத் தந்தது

அச்சித்திரத்தின் உருவங்களுக்கு
வணக்கம் கூறியபடியே அவற்றோடு நட்பு பாராட்டினான்
இது மிகவும் முக்கியமானது என்று தோன்றுகிறது
வணங்குதலில் இருந்துதான் வாழ்க்கை கழிகிறது

தெளிவற்ற சித்திரங்களின் மனவறைக்குள்
பிரவேசிக்க அவனுக்கு சிறு தயக்கம் இருந்தது

காற்றின் வீச்சு இல்லாத அமைதியான அறை
அவனுக்கு சாதகமாயிருந்தது
குழைந்தபடியிருந்த புகைச் சித்திரங்களுடன்
மெல்ல உரையாடத் துவங்கினான்

பரிச்சயமில்லாத ஒரு இருட்பிரகாசத்திற்கு
அவனை அவை அழைத்துச் சென்றன
அவ்வுலகம் அவனைச் சுண்டியிழுக்கும்
கவர்ச்சி கொண்டதாய் இருந்தது
அதில் அவன் தன்னையிழந்தான்
அவனது பாவங்களுக்கான மன்னிப்பை
அங்கே கண்டடைந்ததான்

ஒற்றைப்புள்ளியாய் நெருப்பு
உற்றுப்பார்த்தபடியிருந்தது அவனை

முட்டாள்தனமானதும்
கட்டுப்பாடற்றதுமான வெறித்தனத்தோடு
மங்கலான தெளிவற்ற முகங்கொண்ட
அச்சித்திர உருவங்களோடு
வாழ்க்கை முழுதும் கழிக்க விரும்பினான்

உருவமற்ற கனத்த தன்னுடலைக் கொண்டு
சன்னல் வழியாக உள் நுழைகிறது காற்று
சன்னலோரத்தில் வெளியேறத் தொடங்கின
புகைச் சித்திர உருவங்கள்

அறை தெளிகிறது
எரிந்து முடிந்து சாம்பலாகியிருந்தது வெண் சுருட்டு.
அவன் உறங்கிப்போயிருந்தான்.
*


பொன்.வாசுதேவன்

Friday, February 11, 2011

ஒரு வாழ்க்கையை கடந்து செல்வது எப்படி?





தொட்டிச்செடி மண்ணுள்

துளைத்துத் துழாவி தரை தட்டும்
கட்டெறும்பின் ஏமாற்றத்தோடு
புரிதலற்ற செய்கைகளாக கண்ணெதிரே
உதிர்ந்து கொண்டிருக்கின்றன பொழுதுகள்

இரவில் மலர்ந்து
விடியலில் அயரும் நட்சத்திரங்களாகி
பூத்துப் பரிகசிக்கிறது
அன்றன்றைய வாழ்க்கை

உறையும் நீர் போல் இறுகிக் கொண்டிருக்கும்
மரத்த முலைகளிலிலிருந்து
இன்னமும் சொட்டிக் கொண்டிருக்கிறது
இறைஞ்சுதலற்று கருணையுமிழ்ந்த பால்

துயரத்தின் விளிம்புகளில்
அலைகளாய் எழுந்தமர்கிறது தன்னிரக்கம்

பகலையும் இரவையும்
மறுபடி மறுபடிக் கடந்து
சென்று கொண்டிருக்கிறான்
ஜெயித்துக் கொண்டிருப்பதாய் கனவு காண்கிறவன்.

*
பொன்.வாசுதேவன்

Thursday, February 10, 2011

விடுதலையும், வன்செயலும்


பிரமிள் தமிழிலக்கியத்தின் தனித்துவமான ஆளுமைகளுள் ஒருவர். கவிதை, சிறுகதை, கட்டுரைகளுடன் பல முக்கியமான படைப்புகளையும் பிரமிள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவரது பல படைப்புகள் அச்சுக்கு வராமலேயே உள்ளது. 
மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. அசல் படைப்பின் தரம் சற்றும் குறையாமல், சரியான புரிதலை தரவல்ல மொழியாக்கங்கள் மிகக்குறைவு. மொழிபெயர்க்க கடினமான சிரமமான கதைகளையும், கட்டுரைகளையும் பிரமிள் அசாத்தியமான திறமையுடன் மொழி பெயர்த்துள்ளார்.


அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தில் முன்னணி வகித்த புரட்சிகரச் சிந்தனையாளர் ‘பிரான்ஸ்பனன்‘(FRANTZ FANON) என்பவர். மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான  மாட்னிக்கில் 1925ல் பிறந்த இவர் 1952லிருந்து அல்ஜீரியாவில் வசித்து வந்தார். இவர் எழுதிய நூல்களில் 'WRETCHED OF THE EARTH' மிகவும் பிரபலமானது. இந்த புத்தகத்தில் பனன் எழுதியுள்ள கருத்துகள் இன்றளவிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். இந்நூலிலுள்ள ‘புரட்சிகர வன்முறை பற்றி‘ என்ற அத்தியாயத்தின் ஒரு பகுதியை எழுத்தாளர் பிரமிள் தமிழாக்கம் செய்துள்ளதை இரண்டு பகுதிகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விடுதலையும் வன்செயலும் (பகுதி 1)
- பிரான்ஸ்  பனன் - தமிழில் : பிரமிள் - 

            பிரான்ஸ்  பனன் ஒரு புரட்சிகரச் சிந்தனையாளர். அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராட்டத்தில் முன்னணி வகித்த ஒரு முக்கிய தலைவர். அவரது புரட்சிகரத் தத்துவார்த்தப் படைப்புகள் அல்ஜீரியப் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்தவுடன் ஆபிரிக்க தேசிய சுதந்திர எழுச்சிகளுக்கும் உத்வேகத்தை அளித்தன.
     தேசிய சுதந்திர எழுச்சிகளின் வரலாற்று யதார்த்தத்தை பனன் மிகவும் துல்லியமாக ஆய்வு செய்கிறார். கறுப்பு ஆப்பிரிக்காவில் தாண்டவமாடிய காலனித்துவச் சுரண்டலின் மனிதாபிமானமற்ற கொடூரத்தை அவரது எழுத்துக்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, கலாச்சாரப் பரிமாணங்களில் ஊடுருவும் ஏகாதிபத்தியச் சுரண்டல் முறையானது எவ்விதம் அம்மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து விடுகிறது என்பதை அவர் மிகவும் திறமையாகச் சித்தரித்துக் காட்டுகிறார். ஏகாதிபத்தியவாதிகளின் அடக்கு முறையை உடைத்தெறிய வேண்டுமாயின் ஆயுதப் போராட்டமே அதற்கு ஒரே வழி என்பதை பனன் சதா வலியுறுத்தி வந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை வன்முறையானது அத்தியாவசியமான, வரலாற்றுக் கட்டாயமான ஒரு அரசியற் போராட்ட வடிவம் என்பதை அவர் வலியுறுத்துகிறார். அநீதிக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறை தர்மமானது, புரட்சிகரத் தன்மையுடையது என்பதை அவரது அவர் அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களின் விடிவுக்கு வழிகோலும் வன்முறைப் போராட்டங்கள் உன்னதமான தார்மீக இலட்சியத்தை உடையன என்கிறார்.
     ஒடுக்குமுறை ஆட்சியில் இருந்து ஒரு தேசிய இனம் தனது விடுதலையை, தேசிய மலர்ச்சியை பெற வேண்டுமாயின் அது வன்முறையினால் தான் முடியும். ஒடுக்குமுறை ஆட்சியில் இருந்து புரட்சிகர மக்கள் சமூகம் தனது கையில் ஆட்சியைப் பெற்றுக் கொள்வதை இது குறிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மிகக் குறைந்த கோரிக்கையில் இருந்து அவர்களின் பிரக்ஞையிலிருந்து வாழ்வோட்டத்திலிருந்து இது வெடிக்கிறது. அடக்கப்பட்ட மக்களின் இப்புரட்சிகர எழுச்சி அடக்குமுறையாளர்களை சித்தப் பிரமைக் குள்ளாக்குகிறது.

     தேசிய விடுதலை ஒரு அற்புத நிகழ்ச்சி அல்ல. அது ஒரு சரித்திர நிகழ்ச்சி. இரண்டு சக்திகளின் மோதலில் இது விளைகிறது. அடக்குமுறையாளர்களின் வன்முறை மயமான ஆட்சியிலிருந்தே இது பிறக்கிறது. தேசமக்களை துப்பாக்கி முனையில் அடக்குவதினால் மக்கள் வன்முறையைக் கையாளுகின்றனர். இந்த அடக்குமுறையாளர்களை ரகசியமாக அழிக்க முடியாது. பார்வையாளர்களாக இருந்த மக்கள் சரித்திர வெளிச்சத்துக்கு வந்துவிட்ட போராளிகளாகிறார்கள். இது மக்களையே மாற்றி அமைக்கும் இயக்கம். ஆதிக்கத்திலிருந்து விடுபடும் ஒரு இயக்கம் புது மனிதனை உருவாக்குகிறது.
     இளமையிலிருந்தே ஒடுக்கப்பட்ட வந்த மக்கள் சமூகம் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க வன்முறை தவிர வழியில்லை என்று இளமையிலிருந்தே உணர்கிறார்கள்.
     அடக்குமுறையாளர்கள் உலகை இரண்டு படுத்துகிறார்கள். தங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி என வாழ்க்கை நலன்களைப் பிரித்து விடுகிறார்கள். இந்த பிரிவினையைக் கவனித்தால்தான் விடுதலைக்கான தேவை எப்படி உருப்பெறுகின்றன என உணரலாம். இந்த வேறுபாட்டை போலீசும், இராணுவமும் பாதுகாக்கிறது. அவர்கள் இல்லாமல் இந்த கூறுபட்ட வாழ்க்கை முறை தாக்குப்பிடிக்காது. சுரண்டுகிறவனை சுரண்டப் படுகிறவனிடமிருந்து பொலீசும் இராணுவமே காப்பாற்றுகிறது. இதுவே அடக்குமுறைச் சமூக அமைப்பு. இது அமைதியை நிலைநாட்டும் அமைப்பாக சுரண்டப்படுகிறவனின் வீட்டினுள் வன்முறைக்கும் அமைதியின்மைக்கும வழி செய்கிறது. ஆட்சியாளர்களை ஆளப்படுவனுக்கு எதிராக துருவமாக்குகிறது. இதனால் இருவரிடையிலேயும் உடன்பாட்டுக்கு இடமே இல்லை.
     அன்றாட வாழ்வில் வன்முறையை உபயோகித்து மக்களை அடக்கி வந்த அதே வன்முறை, அடக்கப்பட்டவர்களினால் விடுதலைப் போராக உருமாற்றமடைகிறது. அடக்கு முறையாளர்களால் சுரண்டப்படும் மக்கள் எவ்விதமான உயர்ந்த மதிப்பீடுகளையும் கொண்டவர்கள் அல்ல என்றும் மிருகங்கள் என்று சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தச் சித்தரிப்பு அடக்கப்பட்ட மனிதனுக்கு சிரிப்பூட்டும் சித்தரிப்பு. தங்களை மிருகங்களாகக் கருதி பிரயோகிக்கப்படுகிற அடக்குமுறையின் வன்முறையினை அவன் ஆட்சியாளன் மீதே திருப்பிவிடக் காத்திருக்கிறான்.
     எனவே அடக்குமுறையாளர்கள் பேசும் சகோதரத்துவம் அவனது அன்றாட வாழ்வைப் பொறுத்தவரை அர்த்தமற்றது. அடக்குமுறையாளன் சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசினால் அடக்கப்பட்டவன் சக்தியை உருவுகிறான். பேச்சளவில் ஒன்றும் செய்கையில் வேறு ஒன்றுமாக அடக்குமுறையாளன் நடந்து கொள்வதே அதன் காரணம்.
     வாழ்க்கையின் அடிப்படை உரிமைகளைப் பறிகொடுத்த மக்களின் ஒரே நோக்கம் தாம் பறிகொடுத்த நிலங்களைப் பெறுவதே. அவர்கள் தங்களிடமிருந்து அதைப் பறித்தவனுடன் சகோதரத்துவ உறவு கொள்ளமாட்டார்கள். பறிக்கப்பட்ட நிலம் திரும்பப் பெறப்பட வேண்டும். இதுதான் அடக்கப்பட்டவனது ஒரே நோக்கம். இதை உணராமல் சமாதானம் பற்றிப் பேசும் அறிவு வாதம் அர்த்தமற்றது.
     சமாதானத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் பெயர் பெற்றவர்களாகவும், நிலத்தைப் பறி கொடுத்த மக்கள் சாமான்யர்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்த முகம் தெரியாத மக்கள் இழந்த நிலம் என்ற இறைமை அவர்களை வன்முறை என்ற முகாமுக்கு இட்டுச் செல்கிறது. இதனால் சரித்திரம் அவர்களுக்கு ஒரு முகத்தைக் கொடுக்கிறது. வன்முறை என்ற மதிப்பீட்டை வலுவிழக்க வைத்து மக்களைப் பொதிமாடுகளாக்குகிற மதிப்பீடுகள் துகள்களாகின்றன. அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் நேரில் காண்பது எதை? அவர்களை எளிதாக கைது செய்யலாம். கொல்லலாம், சீர்குலைக்கலாம் என்பதைத்தான். சமாதான இந்த அனுபவங்களை மக்கள் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமாதானவாதிகளின் போதனையாகும்.
     எல்லா மனிதர்களும் சமமானவர்கள்என்ற போதனையைத்தான் வன்முறையினைக் கைக்கொள்ளும் மக்கள் செயல்படுத்துகிறார்கள். தங்களை அடக்கியாள்கிறவர்களும் தாங்களும் சமமானவர்கள் என்றால் அடக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் இருக்க முடியாது. எனவே வெளிப்படையான ஒரு போலிக் கட்டுப்பாடு தான் வன்முறையினால் சிறகடிக்கப்படுகிறது.

     நிலமும், உணவும் தேவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு அவை கிடைப்பதற்கான வழிமுறைகளைக் கொண்டு வருவது தான் அறிவு ஜீவிகளின் சித்தாந்தமாக வேண்டும். மக்களுக்கு இவை கிடைக்காமல் தடையிடுகிற எதுவுமே அடக்கப்பட்ட மக்களினுள் இருக்கிற அறிவுவாதிகள் உணர்ந்து கொள்கிறார்கள்.
     அடக்கப்பட்டவன் எப்போதுமே அடக்குமுறையாளனால் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டிருப்பான். ஆனால் தான் குற்றவாளியல்ல என்பது அடக்கப்பட்டவனுக்குத் தெரியுயும். அவன் தரம் குறைந்தவனுமல்ல. அவன் மீது ஆதிக்கம் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. பொலீஸ், இராணுவம் ஆகியவற்றின் கெடுபிடிகள் அவனை அடக்குகிற அதே சமயத்தில் உள்ளூர அவனை வன்முறைக்கும் தயார்படுத்துகின்றன.
     அசையாதேஎன்ற கட்டளை தாக்குஎன்ற தூண்டுதலாகவே உருமாறுகிறது. அடக்கப்பட்டவனை விழிப்படைய வைத்து வன்முறைக்கான தயார்நிலையை உருவாக்குகிறது. இறுதிப் போராட்டத்தை ஒத்திப்போட முடியாது என்ற நிலை எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் தடையே தடையினை மீறுவதற்குத் தூண்டுகோலாகும் என்பது விதி. 

போடா ஒம்போது

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு எங்கள் தெருவில் இருக்கும் 1200 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவை காணச் சென்றிருந்தேன். பல வருடங்களாக நடத்தப்படாமல் நின்று போயிருந்த தெப்பத் திருவிழா கடந்த ஆண்டு முதல் மறுபடியும் தொடங்கியிருக்கிறது.

சிறுவயதுகளில் தெப்பம் குளத்தில் மிதந்து செல்வதைக் காண்பது வியப்பும், விந்தையுமானதொரு அனுபவத்தைத் தந்திருக்கிறது. எதையுமே தன்னிச்சையாக அனுபவித்து, ரசிப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லை. அதுபோன்ற மனோநிலையுடன் மாலை 5 மணிக்குச் சென்று குளத்தருகில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தெப்பம் கட்டும் வேலை காலை முதல் நடந்து கொண்டிருக்கிறது.
மொழிக்கவர்ச்சி காரணமாக வார்த்தைகள் எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்று அறிந்து கொள்வதில் கடந்த சில வருடங்களாக எனக்கு ஆர்வமும், வசீகரமும் இருந்தததால் அது சார்ந்து பல புத்தகங்களை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். காலையில் ‘பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி‘யில் தெப்பம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடி, ‘புணை‘ அல்லது ‘மரக்கலம்‘ என்பதே பொருள் என அறிந்தேன். ஆனால் தெப்பம் மரங்களை மட்டும் பிணைத்துக் கட்டப்படவில்லை. காலமாற்றத்திற்கேற்ப பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்களை ஒன்றோடொன்று கயிற்றினால் இறுக்கி கூடவே மரக்கட்டைகளையும் சேர்த்து தெப்பம் செய்திருந்தார்கள்.

பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வண்ணக்கலவையாக காட்சியளித்தது. குளத்தைச் சுற்றிலும் சிறுவர்கள் கூட்டாக விளையாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். பள்ளி விடுமுறையாதலால் அவர்களின் கொண்டாட்டம் கூடுதலாயிருந்தது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவரை ஒருவர் சேட்டை செய்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் மற்றொரு சிறுவனைப் பார்த்து திடீரென ‘போடா ஒம்போது‘ என்று கத்தினான். எதற்காக சொன்னான் என்பது தெரியவில்லை. பதிலுக்கு அவன் துரத்த இருவரும் தொலைவில் ஒருவரையொருவர் விரட்டி ஓடிக் கொண்டிருந்தார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வார்த்தையை கேட்க நேரிட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த வார்த்தைப் பிரயோகமெல்லாம் இப்போது கிடையாது திருநங்கைகள் உரிய அங்கீகாரத்துடன் உலா வரத் தொடங்கியிருக்கும் காலம் இது என எண்ணிக் கொண்டிருந்தேன்.

பள்ளிக் காலங்களில் பலமுறை கேட்ட வார்த்தைதான். திருநங்கைகள் என்றாலே மனதில் இனம்புரியாத பயம் தோன்றியிருந்த காலம் அது. அப்போதெல்லாம் ‘ஒன்பது‘ ‘பொட்டை‘ ‘ரெண்டுங்கெட்டான்‘ ‘ஏழரை... ஒன்றரை‘ என பல வார்த்தைகள் புழக்கத்திருந்தது. பள்ளியில் மிகச் சாதாரணமாக இந்த வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.

எங்கள் பகுதியில் பெரும்பாலும் ரிக் ஷா ஓட்டிகளிடமிருந்துதான் இந்த வார்த்தைகள் புழக்கத்திற்கு வந்து கொண்டிருந்தன என மாணவப் பருவத்தில் நாங்களும் யூகித்திருந்தோம். திங்கட் கிழமைகளில் நடக்கும் வாரச் சந்தையில் கடைகளில் காசு கேட்க வரும் திருநங்கைகள் அனைவரும் ரிக் ஷா ஓட்டிகளுக்கு பரிச்சயமானவர்களாக இருந்தார்கள்.

சிறுவயதில் தெருச்சண்டைகளை வேடிக்கைப் பார்ப்பதிலும் தீராக்காதல் இருந்தது. ‘அவனை என்ன செய்யறேன் பாரு‘ என்று பலமுறை சொல்லி, மேற்கொண்டு எதுவுமே செய்யாமல் இருப்பவர்களையும், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இழுக்கும் போது ‘என்னை விடுடா விடுடா‘ என்று சொல்லி கத்திக் கொண்டிருப்பவர்களையும் பார்க்க உற்சாகமாயிருக்கும். திருநங்கைகளை போல பயமூட்டிய மற்றொரு சொல் ‘மாங்காத் தல‘ “சாப்பிடலைன்னா... மாங்காய்த்தலை கிட்டே பிடிச்சு கொடுத்திடுவேன்‘னு சொன்ன பிறகு பயந்து மாயமாய் உணவு உண்ட காலங்கள் உண்டு. மாங்காய்த்தலை மனிதர்களை பார்த்திருக்கிறேன், விரை போல சுருங்கிய தலையுடன், நீண்ட கழுத்தும், ஒல்லியான.. உயர்ந்த கருத்த உருவத்துடன், கோமணம் மட்டுமே ஆடையாக சற்றே கூன் வளைந்து நடந்து செல்லும் உருவம் அது. அவர்களை கல்லால் அடித்து விரட்டும் துணிச்சலான சிறுவர்களும் உண்டு. அவர்களெல்லாம் ஓணானை நூலில் கட்டி பிடிப்பது, கழுதை வாலில் பட்டாசு கட்டுவது போன்ற வீரச்செயல்களுக்காக அவரவர் வீடுகளில் விழுப்புண் பெற்றவர்கள். இப்போதெல்லாம் மாங்காய்த்தலை என்று யாருமே இல்லை. என் போன்றவர்களின் ஞாபகங்களில் இருந்து மீட்டியெடுத்தால் மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். இன்று இதை எழுதும்போது நினைவுக்கு வருகிறதே தவிர இதுநாள் வரை நானும் மாங்காய்த்தலை என்பது யார்... ஏன் அவர்கள் இப்படியிருந்தார்கள் என்று யோசித்ததில்லை.

பயமாகவும், புதிராகவும் பின்பு ஆர்வமாகவுமே இருந்த திருநங்கைகளைப் பற்றிய தெளிவு ஓரளவு வந்தது 2006ம் ஆண்டில்தான். 2006-ல் நானும் எனது நண்பர் மனோவும் சென்னை தியாகராய நகரில் இரவு 10 மணிக்கு ‘விருதுநகர் ஓட்டலில்‘ சாப்பிட்டு வெளியே வந்தோம். மிதமான போதையில் இருந்த நாங்கள் பீடா வாங்குவதற்காக அருகே இருந்த கடையில் நின்றோம். அப்போது எங்களைத்தாண்டி சிறிது தொலைவில் சென்று நின்ற காரில் தெருவோரம் நின்றிருந்த அழகான பெண் ஒருத்தி ஏறினாள். காரில் ஏறிய பெண்ணின் நடை, உடை, பாவனை வித்தியாசமாக இருந்ததால் அது பெண்ணாக இருக்க முடியாது, திருநங்கையாகத்தான் இருக்கும் என்றேன் நான். பிறகு நாங்கள் கிளம்பி விட்டோம். ஒரு மாதம் கழித்து அதே பகுதியில் நானும் நண்பர் மனோவும் வந்திருந்த போது அங்கு நின்றிருந்த ஒரு திருநங்கையைப் பார்த்தோம். அருகில் சென்று பேசினோம். அவரை நேரில் பார்த்தால் திருநங்கை என்றே கருத இயலாது. அவர் தான் பாலியல் தொழில் புரிவதாகக் கூறினார். எங்களோடு வந்து காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் பணம் தருகிறோம் என்று கூறினோம். அவரும் சம்மதித்தார். பிறகு நாங்கள் மூவரும் மது (பியர்) அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பல கேள்விகளுக்கு விடையாக தெளிவான பேச்சு ‘ஹேமா‘ என்ற அவரிடமிருந்து கிடைத்தது. தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டது பற்றியும், ஆண் உருவத்தில் நடமாடும் ‘கோத்திகள்‘ பற்றியும் விளக்கினார். மும்பை, புனே உள்பட பல பகுதிகளில் வசித்து வந்த அந்த திருநங்கை பி.ஏ., வரை படித்திருப்பதாகக் கூறினார். தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசினார். ‘தாய்‘ என்ற அமைப்பு அவர்களைப் போன்றவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறினார். இதுபோல் பாலியல் தொழில் செய்வது ஏன் என்ற கேள்விக்கு அவர் சரியான பதிலைச் சொல்லவில்லை. பெரிய மனிதர்கள், காரில் வருபவர்கள் என அவரது பாலியல் தொழில் ஹை-டெக் முறையில் இருந்தது. அவர்களின் சில நிமிட இச்சைகளைப் பூர்த்தி செய்வதன் வாயிலாக ஓரிரு மணி நேரங்களில் ஆயிரம் ரூபாய் வரை தினசரி கிடைத்து விடுவதாகவும், மாதம் ஐந்தாயிரம் ரூபாய் விடுதிக்கு செலுத்தி விடுவதாகவும் கூறினார். கடலூரைச் சேர்ந்த அவர் தனது வீட்டிற்கும் பணம் அனுப்புவதாகக் கூறினார். வேலை கிடைக்காத நிலை உள்ளதால்தான் இதெல்லாம் என்று ஜுவனற்றக் குரலில் தெரிவித்தார். பிறகு அவரிடம் கூவாகம் பற்றி கேட்டதற்கு எங்களுக்கு சித்திரை மாதத்தில் நடக்கவிருக்கும் ‘தாலியறுப்பு‘ விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அவரது அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு விடைபெற்றோம். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளவில்லை.

2007 சித்திரை மாதம் பௌர்ணமியன்று கூவாகம் சென்று என்னதான் நடக்கிறதென்று பார்த்து விடுவதென முடிவு செய்து மனோவும் நானும் புறப்பட்டோம். போகும்போதே கடுமையான மனத்தயக்கங்கள்... போகலாமா... கூடாதா... இதற்கு போய்த்தான் ஆக வேண்டுமா என்றெல்லாம் எங்களுக்குள் கேள்விகள். விழுப்புரம் நகரம் கோலாகலமாக இருந்தது. திருநங்கைகளின் நடமாட்டம் பரவலாக இருந்தது. விழுப்புரத்தைத் தாண்டியதும் கூவாகம் செல்லும் வழி கேட்டு வலது புறமாக திரும்பி பயணித்தோம். எதிரில் வளையல், பொட்டு விற்பவர்கள் தள்ளுவண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். கூவாகத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று அவர்களிடம் வழி கேட்ட போது, ஒரு வாரமாக திருவிழா நடந்து முதல் நாள் இரவோடு முடிந்து விட்டது என்றார்கள். எங்களுக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது. வந்ததற்கு கோவில் அருகிலாவது சென்று பார்த்து விட்டு வரலாமென, ஊருக்குள் திரும்பும் மண் சாலையில் பயணித்தோம். தண்ணீர் பாக்கெட் உறை, பான்பராக், சாப்பிட்ட இலைகள், கற்களை முக்கோணமாக்கி அதன் மேல் பொங்கல் வைத்ததற்கான அடையாளமாக கரி என குப்பையாகக் காட்சியளித்தது. மிகவும் சிறிய ஊர். கோவிலும் சிறியதுதான். கோவில் அடைக்கப்பட்டிருந்தது. பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம். விழுப்புரத்தை வந்தடைந்ததும், ஏற்கனவே எங்களுக்குப் பரிச்சயமான திருநங்கை ஹேமாவையாவது பார்க்க முடியுமா என யோசித்து அலைபேசியில் தொடர்பு கொண்டோம். தொடர்பு கொள்ள இயலவில்லை. பிறகு, அவர் கூறியிருந்த விடுதியின் பெயரை விசாரித்து செல்ல முடிவெடுத்து ‘ஆண்டவர் லாட்ஜ்‘ எங்குள்ளது எனக்கேட்டு, பாண்டிச்சேரி செல்லும் சாலையை அடைந்து ஆண்டவர் லாட்ஜிற்கு சென்று சேர்ந்தோம்.

‘ஆண்டவர் லாட்ஜ்‘ வழியெங்கும் திருநங்கைகள் கூட்டமாக நிரம்பியிருந்தது. அந்தச் சூழலில் நாங்கள்தான் வினோதப் ஜீவன்களாக ஆகியிருந்தோம். விடுதியின் வாசலை நாங்கள் அடைந்ததும் எங்களை நான்கைந்து பேர் சூழ்ந்து கொண்டு யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டனர். நாங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கும் திருநங்கையின் தோழர்கள், அவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் வேறேதும் கேட்காமல் இரண்டாவது மாடியின் ஒரு அறை எண்ணைச் சொல்லி போகச் சொன்னார்கள். அந்த விடுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகளை காண நேரிட்டது.

படிகளில் ஏறும் போதே ஒவ்வொரு அறையும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. மனதில் பயம் கலந்த உணர்வுடன், சென்றோம். குறிப்பிட்ட அறையில் நாங்கள் தேடி வந்த திருநங்கை இல்லை, வெளியே சென்றிருந்தார். வேறு நான்கு திருநங்கைகள் இருந்தனர். திருநங்கை ஹேமாவை தேடி வந்ததையும், கோவில் வரை சென்று திரும்பி வந்ததையும் கூறியதும் நட்பாக பேசினார்கள்.

அங்கு இருந்தவர்களில் ஒரு திருநங்கை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சரளமாகப் பேசினார். மாலினி என்ற பெயர் கூறிய அவர் சேலத்தை சொந்த ஊராகக் கொண்டவர். ஹைதராபாத்தில் கணிணி சார்ந்த பணி புரிவதாகக் கூறிய அவர் கூவாகம் திருவிழா நடைபெறும் பத்து நாட்கள் மட்டும் பெண் உடையில் இருப்பதாகச் சொன்னார். அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு தான் ஒரு திருநங்கை என்பது தெரியாது என்றார்.

சமூகத்தின் மீதான அவர்களது பயம், ‘நிர்வாணம்‘ (அறுவை சிகிச்சை) செய்து கொள்வதில் ஆர்வமிருந்தாலும், இருத்தல் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதால் பல நேரங்களில் ‘கோத்தி‘யாகவும், கூவாகம் வந்தால் மட்டும் பெண்ணாகவும் இரட்டை வேட வாழ்க்கை வாழ்வது என பல விஷயங்களைப் பற்றி பேசினார் மாலினி. அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளுக்கு வடிகாலாகவே வருடத்திற்கொருமுறை கூவாகம் வந்து செல்வதாக கூறிய அவர், இந்த சந்தோஷத்திற்கு இணையான சுகம் வேறெதிலும் இல்லை என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு அம்மா (அவரும் திருநங்கைதான்) இருக்கிறார்கள். ‘எல்லோரையும் தாய்தான் பிரசவிக்கிறாள், நாங்கள் ‘ரீத்து‘ செய்து எங்களுக்கான தாயையே பிரசவித்துக் கொள்கிறோம்‘ என்றார்.


நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடுதியை விட்டு கீழிறங்கி இரவு 7.30 மணிக்கு வந்தோம். அருகிலிருந்த பாருக்கு செல்லலாம் என்று மாலினி கூறியதும், அவருடன் அவரது குருவும் கூட வந்தார். சுமார் 60 வயதிருக்கும் அவருக்கு... ‘பியர்‘ அருந்தியதும், ‘வாழ்க்கையில் பல சுகதுக்கங்களை அனுபவித்திருக்கிறேன். எங்களைப் போல வாழ்வு யாருக்கும் வரக்கூடாது‘ என்றெல்லாம் சுய இரக்கத்துடன் பேசினார்.

தெருவெங்கும் விழாக்கோலமாக இருந்தது. பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். மாலினியிடம் ‘இவ்வாறு உடல் தொடர்புகள் வைத்துக் கொள்வதால் உடல்நலக் கேடுகள்‘ என்றதற்கு... ‘தனியார் தொண்டு நிறுவனங்களும், அரசும் வழங்கும் ஆணுறை மற்றும் ‘ஜெல்‘ போன்றவற்றை பயன்படுத்துவதில் சமீபகாலமாக அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, வேறு வழியில்லாமல்தான் இதைச் செய்கிறார்கள்‘ என்றார். பாலியல் தொழிலே புரியாத பலரும் அங்கிருந்தார்கள்.
பெரும்பான்மை திருநங்கைகள் பெண்கள் என்றே நம்பிவிடக் கூடிய அளவிற்கு அழகுடையவர்களாக இருந்தார்கள். சில சிறுவயதுப் பையன்களையும் அங்கே காண முடிந்தது. இன்னதென்று விவரிக்க முடியாத மன உணர்வுடன், அவர்களிடமிருந்து விடைபெற்றுத் திரும்பினோம்.


திருநங்கைகளுக்காக நாம் இரக்கப்பட்டும், இயல்பூட்டத்துடன் நடந்து கொண்டாலும் இதுவரை அவர்களுக்காக, சிறு பண உதவிகள், அவர்களைப் பற்றி எழுதி நாம் பிரபலமாதல் என்பது தவிர்த்து வேறென்ன நாம் என்ன செய்திருக்கிறோம் ?

‘போடா ஒம்போது‘ என்ற சிறுவனின் வார்த்தையை கேட்ட பிறகு இந்தக் கேள்விதான் என்னைத் துரத்தியது. திருநங்கைகள் பற்றிய தெளிவானதொரு பார்வையாவது ஏற்படுத்தியிருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. நாம் படிக்கிறோம், எழுதுகிறோம், பேசுகிறோம், பரிதாபப் படுகிறோம்... இதையேதான் செய்து கொண்டிருக்கிறோம்.

திருநங்கைகள் பற்றிய திருநங்கையே எழுதிய முதல் புத்தகம் ‘உணர்வும் உருவமும்‘. திருநங்கை ரேவதி தொகுத்து எழுதியது. (அடையாளம் வெளியீடு) (2006). அதன் பிறகு வெளியானது ‘நான் (சரவணன்) வித்யா‘ திருநங்கை ‘லிவிங் ஸ்மைல் வித்யா‘ எழுதியது. (கிழக்கு பதிப்பகம்) (2007). அடுத்ததாக, ‘எஸ்.பாலபாரதி‘ எழுதிய ‘அவன் – அது = அவர்கள்‘ (தோழமை வெளியீடு) (2008)
கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று புத்தகங்கள் திருநங்கைகள் பற்றி வெளிவந்துள்ளது. (நானறிந்த வகையில்)

தாய்லாந்து சென்றிருந்த போது, அங்கு பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் திருநங்கைகளை பணிக்கு வைத்திருந்ததைக் கண்டேன். (அவர்களை அங்கு ‘Ladyboy’ என அழைக்கின்றனர்) இங்கு ஏன் அத்தகையதொரு சூழல் உருவாகவில்லை. நாம் என்னதான் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் மக்களிடையே சரியான புரிதலற்ற சூழலில் நமது செய்கைகள் கேலிக்குறியதாக ஆகிவிடக்கூடாது. திருநங்கைகளும் நம்மில் ஒருவர்தான் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மீதான நமது வக்கிரப் பார்வைகளையும், எள்ளலையும் கைவிட்டு அவர்களுடன் அணுக்கமான சூழலை உருவாக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் திருநங்கைகளுக்கு தகுந்த பணியிடங்களை அளிக்க முன்வர வேண்டும். இதற்கான ஆரம்பத்தை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசு செயல்படுத்தி திருநங்கைகள் வாழ்வை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இப்படிப் பல ‘வேண்டும்‘ இருக்கிறது. அரசு சார்ந்த அங்கீகாரங்கள், சலுகைகள் வழங்கப்படுவதன் வாயிலாக பொதுமக்களிடம் திருநங்கைகளைப் பற்றிய சரியான புரிந்துணர்வு ஏற்படும். ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘நடராஜபுரம்‘ என்ற இடத்தில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ‘கண்ணாடி கலைக்குழு‘ என்ற பெயரில் அங்கிருக்கும் திருநங்கைகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும், திருநங்கைகள் என்பதற்காக அவர்களுக்கான கல்வி மறுக்கப்படக்கூடாதெனவும், அத்தகைய நிலை இருப்பது குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் குறிப்பிட்ட அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

ஆஷா பாரதி, பிரியா பாபு உள்ளிட்ட திருநங்கைகள் கூட்டாக இணைந்து தமிழ்நாடு அரவாணிகள் சங்கத்தின் சார்பில் தொடுத்த பொதுநல வழக்கின் பலனாக இன்று ‘மூன்றாவது பாலினம்‘ என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இதன் பிரதிபலனாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு, வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நிகழ்வில் இது முக்கிய நகர்வு.

ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தின் சோஹாபூர் தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட்டு ‘ஷப்னம் மௌஸி‘ என்ற திருநங்கை 2000-த்தில் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் மத்தியப் பிரதேசம் ‘கட்னி‘ நகரின் மேயராக ‘கம்லா ஜான்‘ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2002-ல் ‘கருவுறும் தகுதியற்றவர்‘ என்பதால், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதியில் ‘ஷப்னம் மௌஸி‘யை உயர்நீதி மன்றம் தகுதியிழப்பு செய்துவிட்டது. 2005-ம் ஆண்டில், திருநங்கைகளை என ‘E’ (Enuch) பதிந்து கடவுச்சீட்டு வழங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.

எல்லாம் சரி... நாம் என்ன செய்யப்போகிறோம்.
1.திருநங்கைகள் என்பவர்களும் நம்மில் ஒருவர்தான் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தல்.


2.இயன்றவரை திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு வழங்கவும், பணியிலமர்த்தவும் முன்வருதல்.


3.திருநங்கைகளின் கலை, இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.


4.குழந்தைகளிடம் திருநங்கைகளை சராசரி மனிதர்களாக பாவிக்க பழக்குதல்.


இதுபோன்ற செயல்கள் மட்டுமே திருநங்கைகளைப் புரிந்துணர்ந்த நமது செய்கைகளை அர்த்தப்படுத்துவதாக அமையும்.

- பொன். வாசுதேவன் 

Monday, February 7, 2011

படைப்பு அடிமைகளும், அகச்சுதந்திரமும்




கலையின் இலட்சியம், வாழ்வின் இலட்சியம் ஒவ்வொரு மனிதனிலும், உலகிலும் உள்ள சுதந்திரம், பொறுப்புணர்வு ஆகியவற்றின் அளவை அதிகமாக்குதல் மட்டும்தான்.

- ஆல்பஃர் காம்யூ

வழக்கம்போலவே கடந்த ஆண்டுகளில் கண்ட நிறைகளையும், குறைகளையும் மனதில் ஏற்படுத்தியபடி புது வருடம் வந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதாரச் சுரண்டல் பற்றியெல்லாம் கவலைப்படுவதால் ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை என்பது சாசுவதமான உண்மை. அதே சமயம் இலக்கிய உலகில் படைப்புச் சூழல் உத்வேகத்துடன் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.

அகிலம் சார்ந்த எழுத்துக்களின் புதிய அறிமுகங்களும், புதிய தத்துவ நீட்சிகளும் இல்லாத வறட்சியான நிலை தெரியாத வண்ணம் பொதித்து வைத்திருப்பதும், அதையொட்டிய கருத்தியல்கள் எழுப்பப் படாமல் இருப்பதும் ஒரு குறைதான். அதிகாரங்களை எதிர்த்து கேள்வியெழுப்பு வதிலும், அதிகாரத்திற்கு ஆதரவாக குடை பிடிப்பதிலுமான நோக்க நுண்ணரசியல் ஒன்றேதான் என்று படுகிறது. இலக்கிய வாதிகள் சமூக அறம் சார்ந்து கேள்விக்குள்ளாக்குவது, ஒழுக்க நெறிகளைப் பேசுவது இவ்விரண்டுக்குமான மூலநோக்கம் எது வென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு சினிமா, பொது மக்கள், அரசியல், ஆன்மீகம் என பல்வேறு மட்டங்களில் சமாதான நிரப்பிகள் தேவைப் படுவது போல இலக்கியத்திலும் தேவைப் படுகிறது. இதன்பொருட்டே, அதிகார எதிர்ப்புக்குரல்களும், ஆதரவுக் குரல்களும் இலக்கிய வெளியிலிருந்து எழுந்து கொண்டே யிருக்கிறது. இதற்கு பலிகடாக்கள் ஆவது படைப்புலக அடிமைகள்தான்.

பெண்ணியம், தலித்தியம் என்பதிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடவில்லை. பெண்ணியம், தலித்தியம் இரண்டையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான சிரமப் பெரும் முயற்சிகளுக்கு இணையாக, அதை நசுக்குவதற்கான உளிகளும் நேரிடை யாக, மறைமுகமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றது. தர்க்க ரீதியாகவோ, மாற்றுக் கருத்தியல்கள் வழியாகவோ இது சாத்திய மாகும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அறிவுத்தளத்தில் இயங்கு பவர்களின் மனமாற்றம் ஒன்றே இவ் விஷயத்தில் புத்தாக்கம் ஏற்படுத்தும். ஆனால் இலக்கியச் சூழலில் சங்கிலியால் பிணைக்கப் பட்ட அரசியல் அடிமைகள் இருக்கும்வரை இது சாத்தியமில்லை.

இன ஓடுக்குமுறை பகிரங்கமாக தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு, கொடூர வாழ்க்கைச் சூழல் என்பது சாதாரணமான ஒன்றுதான் என்பதான கருத்தாக்கம் ஏற்பட்டு விட்டது. இன ஒடுக்குமுறை அதிர்ச்சிகளை ஒரு உணர்வுகள் மரத்துப்போய் ஒரு செய்தியாக மட்டுமே அணுகும் பழக்கம் சமீபாக ஏற்பட்டுள்ளது. எதையொட்டியும் கேள்வியோ மறுப்போ எழுப்பாது அடி பணிந்து செல்கிற இந்த மனோநிலை வருங்கால வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும் ஒரு சவாலாகவே இருக்கும்.

தற்போதைய சூழலில் தன்னைத்தானே பேணிக்கொள்வதிலும், தனக்கு உகந்ததை மட்டுமே ஈணுவதிலும் மட்டுமே அக்கறை கொண்ட சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது சிக்கலான ஒன்று. அகவன்முறைகள் எழுத்திலும், பேச்சிலும் தொடர்ந்து நீடித்து வருவதும் மனக்கட்டமைப்புகள் மீதான ஒரு அவநம்பிக்கை ஏற்படுத்துவதாகே உள்ளது.

மன அழுத்தங்களற்ற சுதந்திர வெளியில் செயல்பாடுகள் அமையும் சூழல் ஏற்படும் போது மட்டுமே உன்னதமும், அற்புதமும் நிகழக்கூடும். கட்டுப்பாடுகளற்று எதையும் அறிவுசார்ந்த சிந்தனையுடன் தீர்மானிக்கும் சுதந்திரம் ஒன்று மட்டுமே எல்லாவற்றுக்கும் தீர்வாகும்.

*

- பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname