Tuesday, July 28, 2009

இனவரைவியலும் தமிழ்ப் புனைவுகளும்

 

செஞ்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெ.இராதாகிருஷ்ணன், செஞ்சி தமிழினியன், செந்தில்பாலா உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பலர் ஒன்றிணைந்து "நறுமுகை" என்ற சிற்றிதழையும், "குறிஞ்சி வட்டம்" (சமூக கலை இலக்கியக் கூடல்) என்ற பெயரில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர். செஞ்சி தமிழினியன் எழுதிய "ராக்காச்சி பொம்மை" மற்றும் "சொப்புக்கடை" என்ற இரு கவிதை நூல்களும், இன்னும் சில நூல்களையும் "நறுமுகை" வெளியிட்டுள்ளது.

000

 

"குறிஞ்சி வட்டம்" சமூக கலை இலக்கியக் கூடலின் 42-வது நிகழ்வாக கடந்த 27.7.09 அன்று செஞ்சி ஏ.என்.ஏ. சிற்றரங்கில் "இனவரைவியலும் தமிழ்ப் புனைவுகளும்" என்ற தலைப்பில் கருத்தரங்கும், கலந்துரையாடலும் நடைபெற்றது. தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழகத்தின் மிக முக்கிய சமூகவியல் ஆய்வறிஞர் முனைவர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நானும், தூறல்கவிதை ச.முத்துவேலும் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் மிக முக்கியமான சமூகவியல் அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் (1943). தூத்துக்குடி வ.ஊ.சி. கலைக்கல்லூரியில் 1967 முதல் 2001 வரை, 34 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கல்லூரிப் பேராசிரியர் என்ற அடையாளத்தைத் தாண்டி ஒரு சமூகவியல் ஆய்வாளராக அவரது பணி குறிப்பிடப்படவேண்டியது. நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு, மானுடவியல் துறைகளில் ஆழ்ந்த புலமையோடு பல தனித்துவமான ஆய்வுகளைப் படைத்தவர்.

நா.வானமாமலையின் மாணவர் என்ற அடிப்படையில் இன்னமும் கள ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவர் தமிழக நாட்டுப்புற பாடல்கள் களஞ்சியம் 10 தொகுதிகளும், தமிழக நாட்டுப்புற கதைக் களஞ்சியம் 10 தொகுதிகளும் வெளியிட்டுள்ளார்.

கல்வெட்டுக்கள், பட்டயங்கள், இலக்கியங்கள், பயணக்குறிப்புகள், தொல்லியல் சான்றுகள், நாணயங்கள், அரசு ஆவணங்கள் மட்டுமின்றி மக்களின் வாய்மொழி வழக்காறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மாற்று வரலாற்றை / மக்கள் வரலாற்றை எழுதி வரும் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், நா.வானமாமலையின் ஆராய்ச்சி, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய ஆய்வு இதழ்களின் ஆசிரியக்குழு உறுப்பினர்.

இடதுசாரி கருத்தியலின் அடிப்படையில் தமது ஆய்வுகளினால் தமிழில் புதிய திறப்புகளைச் செய்து புதிய சமூக மானுடவியல் ஆய்வாளர்களுக்கு வழகாட்டியாக விளங்குகிறார்.

"இனவரைவியலும், தமிழ்ப் புனைவுகளும்" என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் தமிழ் புனைவுகளில், குறிப்பாக தமிழ் நாவல்களில் இனவரைவியல் (Ethnography) எவ்வாறு எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி கருத்துரை வழங்கினார்.

தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய ‘பஞ்சும் பசியும்‘ எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித்தீ‘, ராஜம் கிருஷ்ணனின் ‘குறிஞ்சித்தேன்‘ இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்‘ ஆகிய நாவல்களில் பேசப்பட்டிருந்த இனவரைவியல் குறித்து குறிப்பிட்டார். விரிவான கருத்துரையும் அதையொட்டி கேள்வி பதில் வகையிலான கலந்துரையாடலும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தவர்களை நறுமுகையின் சார்பில் பேராசிரியர் ஜெ.இராதாகிருஷ்ணன் வரவேற்றார். இடையிடையே கவிதைகளும் வாசிக்கப்பட்டது. கவிஞர் செந்தில்பாலா நன்றியுரை கூறினார். நிறைவானதொரு நிகழ்வாக இருந்தது.

000

(ஆ.சிவசுப்ரமணியன் பற்றிய குறிப்புகள் நறுமுகையால் வழங்கப்பட்டவை)

000

பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடத்தக்க சில படைப்புகள் :

  1. பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வுரை
  2. அடிமை முறையும் தமிழகமும்
  3. வ.ஊ.சி.யும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும்
  4. ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும்
  5. மந்திரம் சடங்குகள்
  6. பின்னி ஆலை வேலை நிறுத்தம் 1921
  7. வ.ஊ.சி. ஓர் அறிமுகம்
  8. மகளிர் வழக்காறுகள்
  9. தமிழ் அச்சுத் தந்தை அன்ட்ரிக் அடிகளார்
  10. அடித்தள மக்கள் வரலாறு
  11. தமிழகத்தில் அடிமை முறை
  12. நாட்டார் வழக்காற்றியல் அரசியல்
  13. கிறித்தவமும் சாதியும்
  14. பஞ்சமனா பஞ்சையனா
  15. கோபுர தற்கொலைகள்
  16. கிறித்தவமும் தமிழ்ச்சூழலும்

குறுநூல்கள்

  1. எந்தப்பாதை
  2. தர்க்காக்களும், இந்து இஸ்லாமிய ஒற்றுமைகளும்
  3. பிள்ளையார் அரசியல்
  4. சமபந்தி அரசியல்
  5. பண்பாட்டு அடையாள போராட்டங்கள்
  6. நாட்டார் சமயம்
  7. மதமாற்றத்தின் மறுபக்கம்
  8. விலங்கு உயிர்பலி தடைச்சட்டத்தின் அரசியல்
  9. புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள்

பதிப்புகள்

  1. பூச்சியம்மன் வில்லுப்பாட்டு
  2. தமிழக நாட்டுப்புற பாடல் களஞ்சியம் (10 தொகுதிகள்)
  3. தமிழக நாட்டுப்புற கதைக் களஞ்சியம் (10 தொகுதிகள்)
  4. புனித சவேரியாரின் கடிதங்கள்

000

நறுமுகை அமைப்பின் ஒருங்கிணைப்பில் நாவல் குமாரகேசன் நூல்கள் வெளியீட்டு விழா 2.8.09 காலை 9.30க்கு சென்னை தேவநேயப்பாவாணர் மைய நூலக சிற்றரங்கில் நடைபெற உள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம்.

விவரங்கள் அழைப்பிதழில்....

narumugai narumugai1

தொடர்புகளுக்கு :

நறுமுகை, 29/35, தேசூர்பாட்டை, செஞ்சி. பேச : 9486150013

000

“அகநாழிகை“ பொன்.வாசுதேவன்

Tuesday, July 21, 2009

வாழ்வை சுவாரசியப்படுத்தும் விருது…

amu seyyathu நண்பர் அ.மு.செய்யது சுவாரசிய பதிவர் விருது அளித்திருந்தார்.

அவருக்கு என் நன்றி.

aa gnansekaran நண்பர் ஆ.ஞானசேகரன் அவர்களும் சுவாரசிய பதிவர் விருது எனக்கு அளித்திருந்தார்.

அவருக்கும் என் நன்றி.

senthazhal ravi இவ்விருதை ஏற்படுத்தி பதிவுலகில் எழுதுவபர்களை ஊக்கப்படுத்தும்

நண்பர் செந்தழல் ரவி அவர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.

==================================================================================

எனக்களிக்கப்பட்ட விருதினை சக பதிவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

award_interesting 

1. உயிரோடைலாவண்யா

uyirodai 

2. இணைய நண்பர்களுக்காக – ஸ்ரீ

sri 

3. சிதறல்கள்தீபா

deepa 

4. பக்கோடா பேப்பர்கள்  விதூஷ்

vidhoosh 

 5. இலக்கியா – குடந்தை அன்புமணி

kudanthai 

 6.  தமிழ்த்துளி  தேவன்மாயம்

devanmayam

==================================================================================

uyirodai4

// அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் //

“அகநாழிகை“ பொன்.வாசுதேவன்

 

Friday, July 17, 2009

உப்பு போட்டுதான் சாப்பிடுகிறோமா…?

Lions International என ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் உலகளாவிய சேவை இயக்கமான பன்னாட்டு அரிமா சங்கத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக சேவைப் பணியில் உடனிருக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருந்து வருகிறேன். 2007-ம் ஆண்டில் ‘மாவட்டத் தலைவர் – தமிழ்ப் பண்பாடு‘ என்ற பொறுப்பை ponmalarஎனக்களித்தார்கள்.

தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் பற்றிய செய்திகளை பண்பாட்டியல் சார்ந்து, நான் ஏற்கனவே வாசித்ததில் இருந்து தொகுத்து ‘பொன் மலர்‘ என்ற தலைப்பில் நான்கு பக்க தகவல் பிரதியாக பிரசுரித்து லயன்ஸ் சங்கத்தின் 5000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வினியோகித்தேன்.

‘தமிழர் மதம்‘ மறைமலையடிகள், ‘தமிழர் பண்பாடு‘ வானமாமலை, ‘பண்பாட்டு அசைவுகள்‘ தொ.பரமசிவன் என நான் விரும்பி வாசித்த பலரின் புத்தகங்களிலிருந்து இருந்து எடுத்தாளப்பட்டுள்ள பிரதியே இது. அதையே இப்போது (வேறு ஏதும் எழுத வக்கின்றி) உங்களுடன் பதிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

பண்பாடும் கலாச்சாரமும்

culture நமது கலாச்சாரம், பண்பாடு, மரபு, நெறிமுறைகளை இன்றைக்குள்ள புது வேகத்திற்கேற்ப பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் அனைவரின் கடமை. இவ்வாறு இப்பணியைத் தொடர்ந்து காக்க வேண்டியவற்றைக் காத்து சுழல் (Cyclic) நடவடிக்கையாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக வேண்டும்.

பண்பாடு என்ற சொல் விரிந்த பொருளுடையது. பல அறிஞர்கள் இதற்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கி செழுமைப்படுத்தியுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஒரே சூழலில் தொடர்ந்து வாழ்ந்ததின் விளைவாய் கற்றுக் கொண்ட மொழி, கலை, இலக்கியம், அறிவு, சிந்திக்கும் முறை, பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள் உள்ளிட்ட அனைத்தும் பண்பாடு என்கின்றனர்.

உணவு, உடை, திருமணம்செய்கின்ற முறை, இறந்தவர்களை அடக்கம் செய்யும் சடங்கு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு முறையும் இதில் அடங்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பண்பாட்டின் வரையறைக்குள் வராத எதுவும் வாழ்வில் இல்லையென்று கூறலாம்.

தமிழ் பண்பாடு

culture3 தமிழ் பண்பாட்டை வெகுஜனப் பண்பாடு – செவ்வியல் பண்பாடு மற்றும் நாட்டார் பண்பாடு என்று பிரித்துப் பார்க்கின்ற முறைமை ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. ஒரே பண்பாடுள்ள மனித இனக்குழுவை நாட்டார் என்று அழைக்கிறார்கள். (நாடார் அல்ல) இவர்களிடம் புழங்குகிற அல்லது புழங்கிய பாடல்கள், நிகழ்கலைகள், வாய்மொழி இலக்கியங்கள், பழமொழிகள், சொலவடைகள், நாட்டார் தெய்வங்கள், சடங்குகள், சிறு தெய்வ வழிபாடுகள் போன்றவற்றை உற்று நோக்குவதன் மூலம் தமிழர் வாழ்வியலின் அடிப்படை அடையாளங்கள் சிலவற்றையும் நம்மால் கண்டு கொள்ள முடியும். வாய்மொழி இலக்கியங்களில்தான் மக்களின் உண்மையான ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கோபங்கள் எல்லாம் பட்டுத் தெறிக்கின்றன.

சடங்குகளின் தொகுப்புதான் மதம் என்பார்கள். ஆனால் மதம் சாராத கணக்கிலடங்கா சடங்குகள் தமிழ் மக்கள் வாழ்வில் இருக்கின்றன. இவற்றில் சில கால மாற்றத்தால் வீரியம் இழந்துள்ளன. புதிய சடங்குகளும் சில உருவாகியுள்ளன. ஆனால் எல்லா சடங்குகளிலும் மரபும், மூட நம்பிக்கையும் பின்னிப் பிணைந்துள்ளன.

உணர்வும் உப்பும்

மனித குல வரலாற்றில் உப்பிற்குத் தனி இடம் உண்டு. மனிதன் நாகரீக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றது போல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவம் உடையதுதான். அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.

BVCAK6TRKPCAK8V9Q2CA3GBZ1ACAX507HICAFPIGA7CA7W0USOCAFZL4H5CAB4QK3ICAEZIURLCA0HLYCOCAH3KZJKCAC2PO3OCATLB6OXCAP7N5PUCABJ5QA0CAOKH0T6CAIDZ40ZCAUDGV73CA01WFU8 உப்பு என்ற சொல்லுக்கு சுவை என்பதே முதற்பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்தவை. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பிற்கு வெள்ளுப்பு என்று பெயர்.

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்), உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால் தான் சம்பளம் (சம்பா+அளம்) என்ற சொல் பிறந்தது. ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்ததே.

உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தவரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்வதன் குறியீடாகவே ஒருவர் இறந்த எட்டாவது நாளில் இறந்தார்க்கும் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்றளவும் நம் சமூகத்தில் உள்ளது. உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாயாகவும் கருதப்படுகிறது. உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு பேரளம், கோவளம், என அரசர்களின் பெயரைச் சூட்டும் வழக்கமும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளது.

தமிழர்களின் உறவுப் பெயர்கள்

culture2 பழந்தமிழரின் உறவுப் பெயர்கள் இடம், மண உறவு முறை சார்ந்தே தோன்றியுள்ளது. உறவுப்பெயர்கள் பொதுவாக விளிப்பெயராகவே விளங்குகின்றன. அம்மை, அப்பன், மாமன், அக்கன், தாத்தன், ஐயன் ஆகிய பெயர்கள் அம்மா, அப்பா, மாமா, அக்கா, தாத்தா, ஐயா என இன்றும் வழக்கில் உள்ளன.

‘தம்+அப்பன்‘ என்பது மருவி ‘தகப்பன்‘ என்று ஆனது. அண்ணனைக் குறிக்கும் ‘தம்+அய்யன்‘ என்பது ‘தமையன்‘ எனவும், ‘தம்+பின்‘ என்ற சொல் ‘தம்பி‘ எனவும் வழங்கப்படுகிறது.

தாய், தந்தை என இப்பொழுது வழங்கி வரும் சொற்களின் மூலவடிவம் ஆய், அந்தை என்பதே. ‘தாய்‘ என்பது ‘தாயம்‘ (உரிமை) என்ற சொல்லின் பொருளான உரிமையுடையவள் என்ற பொருளில் அழைக்கப் படுகிறது.

‘ஆயின் ஆய்‘ ‘ஆயா‘ என்று அழைக்கப்படுவதும் இன்று வழக்கத்தில் உள்ளது. ‘தன்+ஆய்‘ என்பது ‘தாய்‘ ஆனது. அண்ணன் மனைவி அண்ணியாவது போல மாமன் மனைவி மாமி ஆகியுள்ளது. அம்மையுடன் பிறந்தவனை குறிக்கும் சொல்லாக ‘அம்மான்‘ விளங்குகிறது. மைத்துனன், மைத்துனி என வழங்கும் சொற்கள் மைதுன (பாலியல்) உறவின் அடிப்படையில் வந்ததாகும்.

தமிழர் வீரம்

war மனிதனின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரு வம்சத்தின் வெற்றியையோ, புகழையோ நிர்ணயிக்கும் அளவுகோளாக வீரம் விளங்கிருப்பது தெரியவரும். ஏனென்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதனின் ஆற்றல் அவனுடைய உடலாற்றலை வைத்துதான் அளக்கப்பட்டது.

உலகின் புகழ் வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொள்ளம் அமைத்து கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடும், உலகின் ஒவ்வொரு இனமும் வீர விளையாட்டுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன.

ஐம்புலன்களையும் அடக்கி உடலையும் மனதையும் ஒரு கட்டுக் கோப்புக்குள் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர் காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும்.

“வாளோடு முன்தோன்றி மூத்தக்குடி“ என்னும் செவ்விய கூற்று தமிழ் இனத்தை ஒரு வீரப்பரம்பரையாகவும், தமிழ் மண்ணை வீரத்தின் விளை நிலமாகவும் சித்தரிப்பதாகும். தற்காப்புக் கலையில் தமிழ் இனம் தழைத்தோங்குகிறது. என்பதற்கு சங்க நூல்கள் தொட்டே தடயங்கள் கிடைக்கின்றன. “முதுமரத்த முரண்களரி வரிமணல்“ என்ற பட்டினப்பாலை குறிப்பு ஒன்று தமிழனின் போர்த்தொழில் பற்றிய குறிப்புகளைத் தருகிறது.

சொல்வதைச் சொல்லும் தமிழ்ச்சொற்கள்

speak பொதுவாக சொல்லுதல் என்னும் பொருளினை பின்வரும் பழந்தமிழ்ச் சொற்கள் குறித்தாலும், கூர்ந்து நோக்குங்கால் நுட்பமான பொருட்சிறப்பினை தருவதாகவும் இருக்கின்றன.

கூறுதல் – கதைத்தல் – கத்துதல் – கரைதல் - குறித்தல் – இயம்புதல் – உளருதல் - உரைத்தல் - ஓதுதல் – சாற்றுதல் - செப்புதல் – சொல்லுதல் – நவிலுதல் – பன்னுதல் – பகருதல் – பிதற்றுதல் – பினாத்துதல் – பீற்றுதல் – புகலுதல் – புலம்புதல் – புகழுதல் – பேசுதல் – பொழுதல் – போற்றுதல் - மாறுதல்- முழங்குதல் – மொழிதல் – வலித்தல் – விள்ளுதல் – விடுத்தல் - விளம்புதல்.

பழந்தமிழக பொன் நகைகள்

jewellary நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் அணிமணிகள் செய்யும் வினைத்திறம் மிக்க பொற்கொல்லர்கள் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்களும், ஆடலரசி மாதவி அணிந்திருந்த மாசறு பொன் நகைகளும் நமக்குச் சொல்லுகின்றன. அவற்றில் சிலவற்றின் பெயர்களைக் காண்போம்.

அரியகம், கண்டிகை, கணையாழி, குதம்பை, குறங்குசெறி, சதங்கை, சவடி, சரப்பள்ளி, சங்கவளை, சூடகம், சூடாமணி, செம்பொன்வளை, செழுநீர், தூமணிக்கோவை, தொய்யகம், தோள்வளை, நவமணிவளை, நுண்மைச்சங்கிலி, நூபுரம், பவழவளை, பாடகம், பாதரசம் (கால்கொலுசு) புல்லகம், பூண்ஞான்ஆரம், மரகதத்தாள்செறி, மாணிக்கமோதிரம், முத்தாரம், முடக்குமோதிரம், மணிமேகலை, வலம்புரி, வாளைப் பகுவாய் மோதிரம், விரிசிகை, வீரச்சங்கிலி.

நோய் தணிக்கும் வாய்

yoga “நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்” (குறள் 948) என்கிறது வள்ளுவம்.

“கூற்றை உதைக்க வேண்டுமானால் காற்றைப் பிடிக்கும்

கணக்கறிய வேண்டும்” என்கிறது திருமந்திரம் (571)

நோயின்றி வாழ்வதற்கு பிரணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதே இதன் பொருள்.

மனிதனின் மூச்சுக் காற்றின் இயக்கத்தைப் பொறுத்தே வாழ்நாள் நீடிப்பும், குறைவும் அமையும். இன்னின்ன நாளில் இன்னின்ன நாடி வழியாகப் பிராணன் இயங்குமானால் உடல் இயல்பாக இருக்கிறது என்று அறியலாம்.

வெள்ளி, திங்கள், புதன், கிழமைகளில் இடநாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் வலநாடியின் வழியாக மூச்சு இயங்க வேண்டும். இது வாழ்நாளை நீட்டிக்கும் வழி.

மூச்சுக்காற்று எந்த அளவிற்கு மிகையாக வெளியேறுகிறதோ அந்த அளவிற்கு வாழ்நாள் குறைகிறது. எந்த அளவிற்கு குறைவாக வெளியேறுகிறதோ அந்த அளவிற்கு வாழ்நாள் கூடுகிறது.

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு சராசரியாக பதினைந்து மூச்சுகள் இழுத்து விடுகிறான். இதன்படி ஒரு நாளுக்கு 21600 மூச்சுகள் என கணக்காகிறது. இந்த அளவில் சராசரியாக மனிதன் தன் மூச்சை அமைத்துக் கொண்டால் குறைந்த அளவு நூற்றிருபது ஆண்டுகள் வாழ முடியும்.

000

சேவை என்பது பிறருக்கு செய்யும் உதவியை மட்டுமே குறிப்பதன்று. நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில் பண்பாடு குறித்த தகவல்களை அடுத்து வரும் தலைமுறையினர் அறிந்துணரும் வகையில் கொண்டு செல்வதும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்து கொண்டு சேர்ப்பதும் ஒரு வகையில் சேவைதான்.

நம் பண்பாட்டின் கூறுகள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து, உணவு, உடை, பழக்க வழக்கங்கள் இவற்றில் நாம் எவ்வாறு அடையாளமிழந்து வருகிறோம் என்பதற்கு எனது இப்படமும் சான்றாக இருக்கிறது.

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

.

Sunday, July 12, 2009

தொன்மை மிக்க தெய்யம் நடனம்

"கடவுளின் சொந்த பூமி" கேரளாவை இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். கேரளத்தின் இயற்கையும், எழிலும் அதையே உறுதிப்படுத்துகிறது.

தொன்மக் கலைகளிலும் நடனங்களிலும் கூட மிகச் சிறப்பான பெயர் கேரளாவிற்கு உண்டு. தெய்யம், கோலம் துள்ளல், பேட்டை துள்ளல், சவிட்டு நாடகம் என கிராமம் சார்ந்த பலவகை நடனக் கலைகளின் வேர்கள் இங்குதான் தொடங்கியிருக்கிறது. நடனங்களை மதத் தொடர்பான கலாச்சாரப் பின்னணியில் இழைத்து வெளிப்படுத்துகின்ற கேரள பாணி நடனப்பாங்கு நம்மை மட்டுமல்லாமல், வெளிநாட்டினரையும் வியக்க வைத்திருக்கிறது.

theyyam1 பாரம்பரிய கேரள நடன வகைகளில் ஒன்றுதான் தெய்யம். வடக்கு மலபார் பகுதி முழுவதிலும் பரவலாக நடத்தப்பட்டு வரும் பழங்கால நடனமுறை. குறிப்பாக, இந்துமத பழக்க வழக்கங்களின் அடிப்படையில் மதத்தோடு பின்னிப்பிணைந்து நிகழ்த்தப்படும் தெய்யம் நடனம், நடனமாக அல்லாமல் சடங்காகவே நினைத்து செய்யப்படுகிறது.

போராளிகளும், ஆயுதங்களும்... இதுதான் தெய்யம் நடனத்தின் மையக்கரு. குடிவழி சார்ந்த போர் வீரர்களையும், அவர்கள் உபயோகித்த ஆயுதங்களையும் வணங்கி வழிபடுவதே தெய்யம் நடனம். வரலாற்றிலும் இது பற்றிய குறிப்புகள் நமக்குக் காணக் கிடைக்கிறது.

தமிழிலும் சங்க இலக்கியத்தில் வேலன் வெறியாட்டல் என்ற பெயரில் வீரர்களை வழிபட்ட வரலாறு இருக்கிறது. இறந்த வீரர்களின் நினைவாக கற்களை நட்டு வழிபடுதல், இசைக் கருவிகளை இசைத்தும், மது அருந்தியும், இலைகளால் ஆடை அணிந்தும் என்று தொடரப்பட்ட கி.மு 500-க்கு முந்தைய பழக்கங்கள்தான் நடனக்கலையாக மெருகூட்டி செம்மைப்படுத்தின.

இந்தியாவில் வடக்கிலும்கூட திரா என்ற நடனக்கலை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்துள்ளது. தெய்யம் நடனம் போலவே நடன முறை, பாடல், உடை அலங்கரிப்பு, வீரர்கள் என அனைத்தையும் ஒப்பாகக் கொண்டிருக்கும் திரா நடனம், வீரர்களை வழிபடுவது நம் நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரம் என்பதற்கு சான்றாகிறது.

theyyam3 கர்நாடகாவின் தெற்கு கனரா பகுதியிலும் வீரர் வழிபாட்டுக்கென பழங்கால நடனமுறை ஒன்று வழக்கில் இருந்துள்ளது. பூட்டா அல்லது கோலா என்ற பெயரில் இருந்த அவ்வகை நடனக்கலை தற்போது சிறிதுசிறிதாக அழிந்துவிட்டது.

வரலாற்றுச்சான்றுகளின்படி தெய்யம் நடனம் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக தென்னிந்தியாவில் தோன்றியிருக்கிறது. கேரளத் தோட்டங்களில் பாடப்பட்டு வந்த பாடலே தெய்யம் நடனத்திலும் பாடுகின்ற பழக்கம் இருந்தது.

எந்த இலக்கியங்களிலும் இது பதியப்படாததால் வாய்வழி மூலமாகவே தலைமுறை தலைமுறையாக இப்பாடல்கள் பதிவாகியுள்ளன. பிற்காலத்தில் இவற்றின் சில பாடல்கள் பனையோலையில் பதியப்பட்டது. தெய்யம் நடனக் கலையை தற்போதும் தொடர்ந்து வருகின்றவர்களிடம் இதற்கான சான்றுகள் உள்ளன.

ஆரியர்களின் வருகைக்குப்பிறகு பிராமணரல்லாத சமூகத்தினர் குறிப்பாக, தென்னிந்தியாவில் தங்களுடைய மத நம்பிக்கைகளை புதிய வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டனர். புராணக் கதைகளும் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றன.

சிறியகுடி வம்சாவழியினர் தங்களின் குடும்ப சடங்குகளை மத வழிபாட்டோடு சேர்த்து கலவையாக்கி புதிய நம்பிக்கைகளை தங்கள் சமூகத்தினரிடையே ஏற்படுத்தினர். அவ்வழி வந்த தொண்டு கலைகளில் ஒன்றுதான் தெய்யம் நடனக்கலை.

குடிவழி வம்சங்களின் சிறுபான்மை இனத்தவர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களான வண்ணான், மாவிலன், வேட்டுவன், வேலன், மலையன் மற்றும் புலையன் போன்ற குடிமக்கள் தெய்யம் நடனத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்களாய் இருந்தனர். பிறகு தொடர்ந்த காலங்களில் கடவுள் வழிபாடு, மிருகவழிபாடு, வியாதிகள், நீத்தார் நினைவு கூறல், போர்வீரர்கள் முன்னோர்கள் வழிபாடு, சர்ப்ப வழிபாடு போன்றவற்றிற்காகவும் தெய்யம் நடனம் ஆடப்படுவது வழக்கமாகி விட்டது.

theyyam2 கதகளி, களரி, பேயாட்டு போன்ற நடனக்கலைகள் போலவே அலங்காரத்துடன் (தமிழ்நாட்டின் கூத்து, தோல் பாவைக்கூத்து போல) நிகழ்த்தப்படும் தெய்யம் நடனம் குறிப்பாக பகவதி மற்றும் விஷ்ணுமூர்த்தி, ரக்தா சாமுண்டி போன்ற கடவுள்களை வழிபட ஆடப்படுகிறது.

பகவதி கடவுளின் பெயரை ஊர்ப் பெயரோடு இணைத்து வணங்கப்படுவதால் முச்சிலோட்டு பகவதி, கன்னங்காட்டு பகவதி என ஊர்களின் பெயர் சேர்த்து எல்லா ஊர்களிலும் பரவலாக வணங்கப்படுகிறது.

தெய்யம் நடனத்தின் மற்றோரு முக்கிய அம்சம் அலங்கரிப்பு. உடல் முழுவதும் வண்ணங்களால் வரைந்து தலைக்கு தனியே வடிவமைக்கப்பட்ட கிரீடமும் செய்யப்படுகிறது. வண்ணம் பூசிக்கொள்வதிலும் பல விதங்கள் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த தெய்யம் நடன வழக்கங்களின் அலங்காரம் இன்று சிதைந்து போகாமல் தொடரப்படுவது அதன் சிறப்பு.

தெய்யம் நடனம் வழங்குதலில் தேட்டம் மற்றும் வேலாட்டம் என இரண்டு பகுதிகள் உள்ளன. ஆரம்பம் வழிபாடாக தொடங்கி இறுதியில் வீர விளையாட்டு போல் ஆக்ரோஷத்தோடு உச்ச நிலை அடைவதில் நடனம் முடிகிறது.

theyyam4 வாத்தியக் கருவிகளின் இசையும் தெய்யம் நடனத்துக்கென உள்ள பிரத்யேகப் பாட்டும், நடனமும் இணைந்து உணர்வெழுச்சி மிகுந்த ஒரு நடனமாக அமைகிறது.

தெய்யம் நடனத் திருவிழா வருடத்துக்கொரு முறை கேரள கிராமப்புறங்களில் சடங்காக நிகழ்த்தப் படுகிறது. ஒரு நாளில் தொடங்கும் நடனம் இரண்டு மூன்று என ஏழு நாட்கள் வரை கூட தொடர்வதுண்டு. தெய்யம் கேரள பாரம்பரிய நடனங்களில் ஒன்றாக பெருமையோடு கூறப்பட்டாலும் இன்று மாறி வரும் சமூகத்திற்கேற்ப சிறிது சிறிதாக சிதைந்து வருகிறது.

பராமரிக்கவும், தொடரவும் ஆட்களில்லாமல் வெறும் வேர்களோடு மட்டும் நிற்கிற கேரளாவின் தெய்யம் நடனக்கலை மட்டுமின்றி நாடு முழுவதும் வழக்கொழிந்து வரும் இதுபோன்ற பல நடனக்கலைகளுக்கு புத்துயிர் அளித்து பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கும் உண்டு.

“அகநாழிகை” பொன்.வாசுதேவன்

Monday, July 6, 2009

ஆத்மாநாமின் கனவும், யாத்ராவின் எறும்பின் பயணமும்

தற்செயல் நிகழ்வுகள் பற்றி ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருமுறை நகுலனை நேரில் சந்திக்கச் சென்றிருந்த எஸ்.ராமகிருஷ்ணனிடம் நகுலன் சொன்னதன் தொடர்ச்சியாக தோன்றிய எண்ணங்கள்தான் அவை.

தற்செயலாக நடக்கும் ஏதோவொன்று நம் வாழ்வுப் பேரேட்டின் சில பக்கங்களைப் புரட்டி நம்மை மாற்றி விடுகிறது. அப்போது ஏன் அவை தற்செயல் எனப்பட வேண்டும் ?

தற்செயல் நிகழ்வு ஒன்றின் திருப்பத்தை இப்பதிவின் இறுதியில் காணலாம்.

ஆத்மாநாம் என்ற கவிஞரின் மென்மையான அதே சமயத்தில் தீவிரமான எழுத்துக்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

குறுகிய காலத்தில் தீவிர சொற்தளத்தில் செயல்பட்டு காலத்தால் அழிக்கயியலாத கவிதைகளைப் படைத்தமைக்காக இன்றும், என்றும் பேசப்படக்கூடியவர்.

அவரது மற்றுமொரு கவிதையை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.

கனவு

என்னுடைய கனவுகளை

உடனே அங்கீகரித்து விடுங்கள்

வாழ்ந்து விட்டுப்போனேன்

என்ற நிம்மதியாவது இருக்கும்

ஏன் இந்த ஒளிவு மறைவு விளையாட்டு

நம் முகங்கள்

நேருக்கு நேர் நோக்கும்போது

ஒளி

பளிச்சிடுகிறது

நீங்கள்தான் அது

நான் பார்க்கிறேன்

உங்கள் வாழ்க்கையை

அதன் ஆபாசக் கடலுக்குள்

உங்களைத் தேடுவது

சிரமமாக இருக்கிறது

அழகில்

நீங்கள் இல்லவே இல்லை

உங்கள் கனவு உலகத்தைக் காண்கிறேன்

அந்த கோடிக்கணக்கான

ஆசைகளுள்

ஒன்றில்கூட நியாயம் இல்லை

தினந்தோறும் ஒரு கனவு

அக் கனவுக்குள் ஒரு கனவு

உங்களைத் தேடுவது சிரமமென்று

நான் ஒரு கனவு காணத்தொடங்கினேன்

உடனே அங்கீகரித்து விடுங்கள்

000

senthil_001 'யாத்ரா' என்ற சமகாலத்தைய கவிஞனை வலைப்பதிவர்கள் பெரும்பாலும் அறிந்திருக்கின்றனர்.

பொங்கி வழியும் காதலும், விரக்தியின் தீராத மோகமும், தனித்தே பறந்தலையும் ஒற்றைப் பறவையின் மனநிலையும் யாத்ராவின் கவிதைக் களன்களாக இருந்திருக்கிறது.

வாசித்ததும், ஊசியால் பிணைத்துத் தைத்துவிட்டது போன்ற ஒரு நிலையில் மனம் நெருக்கமேற் படுத்திக்கொள்கிறது.

கவிமனம் நம்மையும் தொற்றிக்கொண்டு கிளைகளாகப் பயணிக்கின்ற அனுபவம் யாத்ராவின் கவிதை வாசிப்பில் நிகழ்கிறது என்பதே உண்மை. அதனாலேயே விருப்பு வெறுப்பற்ற நிலையில் யாத்ராவின் கவிதைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

எறும்பின் பயணம்

சமவெளியிலிருந்து இச்சுவரின்
காரை பெயர்ந்த பள்ளத்தாக்குகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் எறும்பாகி
நடையில் சிறு வேகம்
சிறு நிதானிப்பு
சிறு வளைவு
சக எறும்புகளோடு
விதானத்தையொட்டிய
செங்குத்துச் சுவரில் ஊறியபடி
முன் பின்னாய் திரும்பிப்பார்க்க
புலம்பெயர் அகதியாய் உணர்ந்தேன்
போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி
கவலையேதுமற்று ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
எப்படி இச்சுவரைப் பற்றி
நடந்து கொண்டிருக்கிறேனென்பது
எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது
யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்
பார்ப்போம்
ஒரேயொரு ஆசை மட்டும்
பருகுவதற்கு யாருமற்று
யுகயுகமாய் தனித்திருக்கும்
மது நிரம்பிய குவளையின்
விளிம்பில் சுற்றியபடியிருக்க வேண்டும்
ஆயுள் முழுக்க
ஊழிக் காலத்தில்
அப்படியே அதிலிறங்கி
ஜலசமாதியடைந்து விட வேண்டும்
ஜன்னல் வரை சென்று
கதவு மூடப்பட்டிருக்க
வட்டமடித்து திரும்பிக்கொண்டிருந்தனர் முன்னோர்
என்ன நினைத்தேனோ
கதவைத் திறந்து விட்டு
நானும் என் சக எறும்புகளும
ஜன்னல் விளிம்பு வழி
வெளியேறிக் கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்
பிறகு எவ்வளவு காத்திருந்தும்
என்னை வந்தடையவேயில்லை
எறும்பாகிப் போன நான்
ஒருவேளை அதற்கு
அந்த மதுக்குவளை
கிடைத்திருக்கலாம்.

000

சரி.. தற்செயல் நிகழ்வுக்கு வருவோம்.

திரும்பிய திசையெல்லாம் வாழ்வைச் சேரும் ஏதோவொரு வழியிருப்பதாய் நம்பிக்கையோடு பயணிக்கும் எறும்பினைப்போல வாழ்வில் பெருகியோடும் சகலத்தையும், ரசனையோடு வாழ்ந்து கொண்டாடும் கவித்தோழனும், மாப்பிள்ளை என்று என்னால் பிரியத்துடன் அழைக்கப்படுபவனுமான செந்தில்வேல் என்ற யாத்ராவிற்கு இன்று பிறந்த தினம்.

மற்றுமொரு தற்செயல் நிகழ்வு... இன்றைய தினம் என்றென்றைக்குமான கவிஞன் ஆத்மாநாமின் நினைவு தினம்.

யாத்ராவிற்கு....

வாசிப்பின் பிரியங்களாலும், எழுத்தின் நேசத்தாலும் வாழ்வைக் கொண்டாடிக் கழிக்க விரும்பும் எங்கள் அன்பான நல்வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

தூறல்கவிதை ச.முத்துவேல்

Saturday, July 4, 2009

நாடோடிகள் : அரிப்பும்… ஆற்றுப்படுத்தலும்

நாடோடிகள் படம் சிறப்பாக வந்திருப்பதாக வலைப்பக்களில் தொடர்ந்து விமர்சனங்கள்.. அச்சு ஊடகங்களிலும் அதன்படியே ஒரு நல்ல கண்ணோட்டம் இருந்ததால் தவறவிடாமல் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

000

na4 அரசுப் பணியில் சேர்ந்தால் மட்டுமே மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் சசிக்குமார், பி.ஏ.. அவன் மீது வெறித்தனமாக காதலில் இருக்கும் மாமன் மகள் அனன்யா.

கணிணி மையம் ஆரம்பிக்கும் முயற்சி செய்து கொண்டே, சசியின் தங்கையை காதலித்துக்கொண்டிருக்கும் சசியின் நண்பன் விஜய்.

வெளிநாட்டில் வேலைக்குப் போக விரும்பும் மற்றொரு நண்பன் பரணி.

இவர்கள் மூவரும் சசிக்குமாருடன் படித்த வகுப்புதோழன் சரவணன் காதலை நிறைவேற்றப் போராடி உதவி உடல், மன ரீதியான இழப்புக்குப் ஆளாகிறார்கள்.

பிறகு, அந்த காதலர்கள் பிரிந்ததைக் கேட்டு கொந்தளித்து அவர்களை சேர வற்புறுத்துகிறார்கள்.

படம் முடிந்து விடுகிறது.

000

‘நாடோடிகள்‘ படத்தில் ஒளிப்பதிவு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. ஒளி ஊடகத்தின் தன்மை புறத்தோற்றத்தை அப்படியே நேரில் கண்டுணர்வதான முறையில் உள்ளது.

உதாரணத்திற்கு, ஒரு காட்சியில் சிறு குன்று போலான மலை மேல் நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ஒளிப்பதிவுக்கருவி 360 கோணம் போன்றதொரு தோற்றத்தில் நகரின் முழு வடிவையும் கவர்ந்து காட்சியாக்குகிறது. மிக அழகான காட்சி. இதுபோல பல காட்சிகள்.

தமிழ் சினிமாவின் கதைக்களம் நடிகர்களைப் பிரதானமாகக் கொண்டே உருப்பெற்றுக் கொண்டிருந்த விபரீதமான காலகட்டத்தில் இயக்குநர்களின் நடிகர்களாக புதுமுகங்கள் பலரும் வரத்தொடங்கினார்கள். இவர்கள் புதியவர்களாகவும், பாசாங்கற்ற பாவனைகளை திரைப்படங்களில் வெளிப்படுத்தியது பார்வையாளர்களின் மன உத்வேகத்தை தூண்டியது. அதன் காரணமாக ரசிகமனம்சார் ஆதரவும் அவர்களுக்கு பெருமளவு கூடியது.

na3 புதியதான இயக்குநர்கள் பலரும் வாசிப்பு பழக்கத்துடனும், உலக சினிமா பரிச்சயத்துடனும் களத்தில் இறங்கி தங்கள் கிராமங்களையும், அங்கு வாழ்ந்த மக்களையும், காதலையும், விரோதத்தையும் கதைக்களனாக்கி காட்சிப்படுத்தி, ரசனையோடு இசைப்பாடலை வாங்கி தங்களை வெற்றியாளராக நிலைநிறுத்திக் கொண்டனர்.

தெளிவான திரைக்கதை ஒன்று மட்டுமே இந்த வெற்றிகளை இவர்களுக்கு சாத்தியமாக்கியது. இவ்வெற்றியைப் பெற்றவர்களில் சசிக்குமாரும் ஒருவர். இயக்குநராக ‘சுப்ரமணியபுரம்‘ தயாரிப்பாளராக ‘பசங்க‘ இரண்டு படங்களிலும் தன் திறனை வெளிப்படுத்திய இவர், நடிப்பதற்காக வந்து இயக்குநரானவர் என்று அறியப்படுகிறது.

ஆசை யாரை விட்டது ? நாடோடிகள் படத்தின் மூலம் சசிக்குமாரும் நடிக்க முயற்சித்திருக்கிறார்.

நாடோடிகள் படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி ஏற்கனவே இரண்டு படங்களைத் தந்து நம்மை சோதித்தவர். தற்போது இப்படத்தில் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுத்து நம்மை சோதித்திருக்கிறார்.

மிகவும் சராசரி இயக்குநரின் மனோபாவத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இப்படம் குறிப்பிட்டு பேசக்கூடிய படம் அல்ல. அப்போது ஏன் இப்படம் குறித்து நாம் விமர்சிக்கவோ, நன்றாக வரவில்லையே என விவாதிக்கவோ வேண்டும்.

na2 காரணம் இருக்கிறது. பொதுவாகவே இன்றைய தேதியில் மிகச்சிறந்த படமாக இது பேசப்படுகிறது. அரசியல் கட்சிக்கு ஓட்டு போடும்போது, இருக்கிற திருடனில் கொஞ்சமாக திருடுபவன் எவனோ அவனுக்கே என் ஓட்டு என்று சிலர் சொல்வார்கள். பல மோசமாக படிக்கும் மாணவர்கள் இருக்கும் வகுப்பில், சுமாராகப் படிக்கும் மாணவன் முதலிடம் பெறுவதில்லையா.. அதுபோலத்தான். திரையரங்குகளில் தற்போது ஓடும்படங்களில் நல்ல படம் இதுதான் என்று மனம் முடிவு செய்துவிட்டது.

மிக மோசமான கதையமைப்பு, அடுத்து பாடல் வரும், சண்டை வரும், வில்லனிடம் மாட்டிக்கொள்வார்கள் என்று சராசரி ரசிகன் கூட கண்டுபிடித்துவிடும் விதமாக அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள், நகைச்சுவை என்ற பெயரில் படம் முழுவதும் எல்லா காட்சியிலும் ஒரு வசனம், கஞ்சா கருப்பு செய்யும் சகிக்க முடியாத நகைச்சுவை, உடலிச்சையை காதல் என்று நண்பன் சொல்லித்திரிவதைக்கூட கண்டறியாத, காதலில் பிரிய வசதியாக வாழ்ந்த சூழ்நிலையும், பொருளாதார சிக்கலும்தான் காரணம் என்பதைக்கூட உணர இயலாத மனமுதிர்ச்சியற்ற கதாநாயகன் சசிக்குமார் இவையெல்லாம் திரைப்படத்தை பலவீனப் படுத்துகின்றன.இயல்பாக இருக்க பலமுறை முயற்சித்து, அனைவருமே நன்றாக ‘நடித்தி‘ருக்கிறார்கள்.

‘அதே கண்கள்‘ என்றொரு பழைய படம். இசையிலேயே பயமுறுத்துவார்கள். அதுபோல பின்ணணி இசையின் மூலம் பயமுறுத்த முயல்கிறார் இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு. பயத்திற்கு பதிலாக சிரிப்புதான் வருகிறது.

மாமன் மகளின் அளவில்லா நேசம், நண்பர்களின் நெருக்கம், பெற்றவர்களின் ஆதரவு என மனநெகிழ்வளிக்கக்கூடிய காட்சிகளை வைத்து மட்டுமே படத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. பக்கம் பக்கமாய் அறிவுரை கூறுகிறார் சசிக்குமார். விரைவில் இவரது குரலையும் அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு என அரைத்து தோசை வார்ப்பார்கள் என்பது நிச்சயம். டி.ராஜேந்தரை சின்னதாக மினியேச்சர் பண்ணது போலவே அவரை நினைவூட்டுகிறார் சசி. என்ன பற்களைக் கடிப்பதில்லை.

ஒரு காட்சியில் காதலர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு, “அய்யகோ... அவர்களிடம் பேருந்துக்கு பணமிருக்காதே..“ என்று உணர்வுவயப்பட்டு, கழுத்திலிருக்கும் சங்கிலி, சட்டைப்பை, பேண்ட் என தான் போட்டிருந்த ஜட்டியைத்தவிர எல்லாவற்றுக்குள்ளிருந்தும் பணத்தை பேருந்துக்குள் வீசுகிறார். மிகவும் அழகாக செய்திருக்க வேண்டிய காட்சியை சிறந்த நகைச்சுவைக் காட்சியாக்கி விட்டார் சசி. நெகிழ்வுக்குப் பதிலாக சிரிப்புதான் வந்தது.

na1 படத்தின் தேவையற்ற இரைச்சல், வாகன உபயோகம், காலம்காலமாக பழக்கத்திலிருக்கும் கதை சொல்லும் உத்தி, வில்லன் வீட்டுக்குள் நாய் இருப்பது, நகைச்சுவை என்ற பெயரில் கழுத்தறுப்பது, முக்கியமான வேலையாகச் செல்லும் வழியில் சாலையில் நின்றிருக்கும் எவளோ ஒருத்திக்கு வாகனத்தில் இடம் கொடுத்து, அவளுடன் மது அருந்தி நடனம் ஆடுவது, கதாநாயகனின் நண்பர்களுக்கு மட்டும் உடல் உறுப்பு இழப்பு, காது செயலிழப்பு, அதை வைத்து நகைச்சுவை, கதாநாயகனின் பாட்டியை சாகடித்து அனுதாபம் பெற முயல்வது என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை சமுத்திரக்கனி.

வசந்த ராகம், ரயில் பயணங்களில், ஒருதலை ராகம், பாலைவனச் சோலை காலத்துக்கதையை சற்றே நவீனப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். காதலை பிரதான மூலதனமாக கொண்டு இயங்கிவரும் தமிழ் திரைப்படச் சூழலில் எதையெதையோ சொல்லி சலித்துப் போய் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புளித்துப்போன திரைக்கதைதான் நாடோடிகள் திரைப்படம். 20 வருடத்திற்கு முன்பு வந்திருந்தால், 500 நாட்கள் வரை ஓடியிருக்கும்.

000

பரவலாக நல்ல படம் என்ற பேச்சு இருக்கிறதே என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு நாடோடிகள் படத்தைப் பார்க்கச் சென்ற எனக்கு இது ஒரு படமல்ல ; நல்ல பாடம்.

000

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

Wednesday, July 1, 2009

"வக்கத்தவன் வாத்தியான் ; போக்கத்தவன் போலீசு"

தனக்குப் பிடித்தமான ஒன்றைப் பற்றிக்கொண்டு தொங்கி அதைச் சார்ந்து தன்னசைவுகளை ஏற்படுத்துவது மனித விலங்கின் இயல்பான மனோபாவம்தான். பல நிகழ்வுகளின் வாயிலாக தொடர்ந்து பல முறை இது நிரூபணமாகிக கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் அப்படித்தான்.

கான்கிரீட் காடுகளில் வாழ நேர்ந்து விட்ட சமூக விலங்காகிப் போன மனிதன் தன்விருப்பம் சார்ந்து எது சரி எது தவறு என்பதையெல்லாம் தீர்மானம் செய்து கொள்கிறான். மனித விருப்பு வெறுப்புகளை தீர்மானிக்க செய்வது சமூக நடத்தைதான் என்பதில் சந்தேகமில்லை. ஊடகங்களின் தாக்கம் அதீதமாகிப் போய்விட்ட இன்றைய நாட்களில் நம்மின் ஒரு சதவிகித செய்கையைக்கூட நாமே முடிவு செய்வதென்பது இயலாததாய் இருக்கிறது.

குழு மனப்பான்மையுடன், எதையும் வெளிப்படையாக முன் முடிவின்றி அணுக இயலாது இயல்பிழந்த மனித மனம் தனக்கு விருப்பமற்றதான monkeysஎதையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

இதன் காரணமாக எந்த நிலையிலும் தான் சமூகத்திலிருந்து தனியனாக்கி விடப்படக்கூடாது என்ற உள்ளுணர்வு நம் மனதை இயக்க, குழும மனப்பான்மை சார்ந்தே தன் நெறிகளையும், நிகழ்த்து உளவியலையும் நம்மை கைக்கொள்ளச் செய்கிறது.

தனக்குப் பிடித்ததுதான் பிறருக்கும் பிடிக்க வேண்டும் என்ற கருத்து திணித்தலும், தான் ஏற்றதை பிறர் மறுக்க உரிமையுண்டு என்பதை ஒப்புக்கொள்ளத் திராணியற்ற எதிர்வினையாடல்களும் மனித மன ஆற்றலின் யோக்கியதையற்ற எல்லையின்மையைப் புலப்படுத்துகிறது.

உலகில் எத்தனை கருத்துண்டோ அத்தனைக்கும் சரியான எதிர் கருத்துக்களும், மாற்றுக் கருத்துகளும் உண்டு என்பதை அனுமதியாத அகச்சிக்கல் ஆபத்தானது.

அறம் – ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களை ஆதி குணத்தின்படியும், மரபணுக்களின் வழியாகவும், வாழ்ந்த சூழல் வாயிலாகவும், தன்னணுபவம் சார்ந்தும், கண்டு கேட்டவற்றின் அடிப்படையிலும் மனித மனம் அணுகுகிறது.

அறம் என்பது எப்போதும் ஒரே சீராக இருப்பது. மாறாக ஒழுக்கம் என்பது இடம், காலம், சந்தர்ப்பம் என்பதற்கேற்ப மாற்றமடையக் கூடியது.

எதிராளியின் பலவீனமான சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதென்பது மன இயல்பு. வாதத்திறமையின் மீதான நம்பிக்கையிலும் தன் கருத்தை நிலைநாட்டிக் கொள்வதில் சற்றும் சளைத்ததல்ல மனித மனம்.

பிரதி என்பது வாசிப்பவர்களின் முழு விமர்சனத்திற்கும், கேள்விக்கு உள்ளாக்கப்படவும், சொல்லாடல்களுக்கும், விவாதங்களுக்கும் உரியதுதான். படைப்பு பிறந்தவுடன் படைப்பாளி இறந்து விடுகிறான் என்பார்கள். படைப்பின் ஆக்கத்திற்கு பிறகு வாசிப்பவனின் புரிதலுக்கும், அணுகலுக்கும் உரிய பொருளாகி விடுகிறது.

ஒரு படைப்பை அணுகும் மனம் அதை முன்முடிவுகளுடனும், படைப்பாளியைப் பற்றிய தனிப்பட்ட அவதானிப்புகளுடனும், குழு மனப்பான்மையுடனும் அணுகினால் படைப்பு குறித்தான பார்வை சரியாக இருக்க முடியாது.

பிரதியை அல்லது படைப்பை பாவிக்கும் பலருக்கும் அதை அறிமுகம் செய்து கொள்கிற நோக்கில் அணுகுவதென்பது அரிதாக இருக்கிறது. பிரதி என்பதை இங்கு இலக்கியப் படைப்பாவோ, காண் ஊடக படைப்பாகவோ வேறு எவ்வாறாகவும் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு பிரதி அல்லது படைப்பு என்பதை நாவல், கட்டுரை, கவிதை அல்லது வலைத்தள பதிவு என்றே கொள்வோம்.

படைப்பை அணுகுகின்ற மனம் முதலில் தலைப்பைக் கண்டு அதை எழுதியவருடன் அடையாளப்படுத்திக் கொள்கிறது. அதன் வாயிலாக ஏற்கனவே மனதில் எழுதியவர் குறித்து பதிந்திருக்கும் கருத்துக்கள் சார்ந்து அகச்சாய்வுடன் படைப்பை அணுகுகிறது. அதன் காரணமாக அறிமுக மனோநிலையில் வாசிப்பதிலிருந்து விலகி நெறிமுகம் செய்ய முற்படுகிறது.

நெறிமுகம் என்பது பிரதியை நடுவுநிலைமையுடன் எந்த விருப்பு வெறுப்புமற்று, முன்முடிவுகளற்றும் படைப்பு வடிவத்தின் உணர் கூறுகளுக்கேற்ப விளங்கிக் கொண்டு செய்யப்பட வேண்டியது.

மாறாக முன்முடிவுகளுடனும், சமூகப் பண்பு சார்ந்தும், தன் விருப்பம் பற்றியும் படைப்பை நெறிமுகம் செய்ய முயலும் போது அதுவும் விவாதப் பொருளாகிறது.

-ooo-

post மேற்கூறிய கருத்துக்கள் நண்பர் பைத்தியக்காரன் (சிவராமன்) அவர்களின் சர்ச்சை ஏற்படுத்திய பதிவுகள் குறித்தும், அதற்கு முன் சாருநிவேதிதா மற்றும் அதன்பின் ஜ்யோவ்ராம் சுந்தர், நர்சிம் உள்ளிட்ட பதிவுலகில் தொடர்ந்த பதிவுகளை வாசித்ததன் பின்னரும் தோன்றிய எண்ணங்கள் ஆகும்.

சிவராமனின் கருத்துக்கள், சாருநிவேதிதா, நாகார்ஜுனன் குறித்தும், எனக்கு உடன்பாடான மற்றும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு.

சிவராமன் அவர்களை மிகச்சமீபமாகத்தான் நான் அறிவேன். தோழமையானவர். ஆழ்ந்த வாசிப்பு பழக்கமுடையவர் என்று அறிகிறேன்.

நாகார்ஜுனன் அவர்களை நிகழ், மார்க்சியம் இன்று, பரிணாமம், நிறப்பிரிகை, வித்யாசம், இனி, படிகள், புறப்பாடு சிற்றிதழ்களின் காலத்திலிருந்தே வாசித்திருக்கிறேன். புரியாதது போல இருந்தாலும் மீள்வாசிப்பில் பல புரிதல்களையும், தெளிவையும், அறிமுகங்களையும் தந்த எழுத்துக்கள் அவை. இன்றுவரையில் என்னுடைய சேமிப்பில் இருக்கின்ற சிற்றிதழ்கள் அவை.

சுந்தரராமசாமியின் "ஜே.ஜே. சில குறிப்புகள்" புத்தகத்திற்கு ஒரு விமர்சன எதிர்வினையாக ஒரு சிறு புத்தகத்தை டெல்லியிலிருந்து வெளியிட்ட போதிலிருந்து சாருநிவேதிதாவை அறிவேன். 'முன்றில்' சிற்றிதழின் சார்பில் நடத்தப்பட்ட '80களில் கலை இலக்கியம்' கருத்தரங்கின் போது நேரிலும் சந்தித்திருக்கிறேன். சிலமுறை தொலைபேசிகளில் பேசியது உண்டு. கடந்த ஆண்டு சாருவிற்கு இதய அறுவை சிகிச்சை நடந்த பிறகு பேசியதில்லை. உயிரோசை இணைய இதழில் எனது 'போடா ஒம்போது' கட்டுரை வெளியான பிறகு அவரிடமிருந்து என்னை நலம் விசாரித்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதற்கு பதிலிட்டதுடன் சரி. மற்றபடி சாருவை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவருடைய அனைத்து புத்தகங்களையும் வாங்கிப் படித்திருக்கிறேன்.

சிவராமன் பதிவு சார்ந்து பதிவுகளில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருமே நேர்மையாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள். ஒவ்வொருக்கும் ஒரு விஷயத்தை ஆதரிக்கவும் மறுதலிக்கவும் காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.

பதிவுலகில் எழுதுபவர்கள் அனைவருமே எதையும் எதிர்பார்க்காமல், தங்கள் நேரத்தையும், அறிவுசார் உழைப்பையும், நிதிசார் இழப்பையும் செலவு செய்துதான் எழுதுகிறார்கள். தங்கள் பதிவு பலராலும் வாசிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே பதிவுலக நண்பர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நாகார்ஜுனன், சாருநிவேதிதா இவர்களையெல்லாம் வாசித்திருக்கிறேன் என்று கூறிக்கொள்ளக காரணம் அவற்றை பதக்கங்களாக்கி தோரணமாகத் தொங்கவிட்டுக் கொள்வதற்காகவோ அல்லது நம்மை மற்றவர்கள் உயர்த்தி மதிப்பிட வேண்டும் என்றோ அல்ல.

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். அவை விவாதிக்கவும், பரிசீலிக்கப்படவும் வேண்டுமென்பதே எனது விருப்பமும். எழுதுபவர்களின் குறைந்தபட்ச அங்கீகாரமும் எதிர்பார்ப்பும் அது மட்டுமே.

-ooo-

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

நன்றி : யூத்ஃபுல் விகடன்

vdotcomlogo1

Comments system

Disqus Shortname